வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போகாமல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை, பள்ளி வளாகத்திலேயே பதிவு செய்யலாம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
சென்னை, மே.28 பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றதை, வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு போகாமல் பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
8.22 லட்சம் மாணவர்கள்.....
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவரத்தினம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது.தமிழகத்தில் 2008-09 கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்புத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகள் வெளியாகி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் எந்தெந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்யலாம் என்ற விபரம், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு, மாநிலம் முழுவதும் 100 மையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2008-09ம் கல்வியாண்டில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 272 மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் அண்மையில் வெளியாகி, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படவுள்ளது.
பள்ளி வளாகத்திலேயே பதிவு
எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றுடன் மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, மாற்றுச் சான்று ஆகியவற்றினை சரிபார்த்து, தலைமை ஆசிரியரின் முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, பள்ளியின் மொத்த விண்ணப்பப் படிவங்களை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு வார காலத்துக்குள் வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment