.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, May 24, 2009

மத்திய அமைச்சர்கள் பற்றிய விபரம்

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பற்றிய விபரம்

மன்மோகன் சிங்: 2வது முறையாக பிரதமராகியிருக்கும் இவர் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பதவிக்கு வந்த முதல் பிரதமர் இவர்தான். 1991ம் ஆண்டு முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். மத்திய அரசின் வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.

திட்டக் கமிஷன் துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பஞ்சாப், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர்.

சிறந்த பொருளாதார மேதையாக பாராட்டப்படுபவர். நரசிம்மராவ்தான் இவரை தனது நிதியமைச்சராக நியமித்து இந்தியாவின் பொருளாதாரப் பாதையை மாற்றி அமைக்க முக்கிய காரணம்.

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான மன்மோகன் சிங்குக்கு குர்சரன் கெளர் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

பிரணாப் முகர்ஜி: 73 வயதான பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தார். காங்கிரஸ் அமைச்சரவைகளில் பல்வேறு முக்கிய இலாகாக்களை வகித்து உள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ‘ராஷ்டிரிய சமாஜ்வாடி என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். பிறகு அதை தாய் கட்சியான காங்கிரசுடன் இணைத்தார்.

சரத்பவார்: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர். இது வரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வி அடையாதவர். 1999ல் சோனியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி காங்கிரசில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கியவர். ஆனால், 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் மத்திய அமைச்சரானார்.

ஏ.கே.அந்தோணி: எளிமையானவர், கை சுத்தமானவர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர். கேரள முதல்வராக பதவி வகித்தவர்.

ப.சிதம்பரம்: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கானாடு காத்தானில் கடந்த 1945ம் ஆண்டு பிறந்த ப.சிதம்பரம் வக்கீலாக பணியாற்றியவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த 1984ம் ஆண்டு முதல் 7 முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானவர். மத்திய அமைச்சரவையில் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

மம்தா பானர்ஜி: மேற்கு வங்க மாநிலத்தில் 1955ம் ஆண்டு பிறந்த மம்தா, கல்லூரியில் காலடி எடுத்த வைத்த காலத்திலேயே அரசியலிலும் காலடி வைத்தார்.

1979-80ல் மாநில காங்கிரஸ் மகளிரணி செயலாளராக இருந்தார். 1984ம் ஆண்டு ஜாதவ்போர் தொகுதியில் சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்த போதுதான் மம்தாவை எல்லாருக்கும் தெரிந்தது. நரசிம்மராவ் அரசில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். 1997ம் ஆண்டில் காங்கிரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். கடந்த 1998, 99ம் ஆண்டு பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார்.

கிருஷ்ணா: 77 வயதான கிருஷ்ணா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மைசூர் மகாராஷ்டிரா கல்லூரியில் பட்டம் பெற்ற அவர் பெங்களுர் அரசு சட்டக் கல்லூரியில் வக்கீல் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேல் படிப்பு படித்தார். 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார். அப்போது காவிரி நடுவர் மன்ற ஆணையை நிறைவேற்ற தவறியதற்காக உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை பெற்றார். மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்து உள்ளார்.

குலாம் நபி ஆசாத்: காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் 1990ம் ஆண்டு நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்தவர்.அப்போது 21 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தையும் தோற்கடித்தவர் ஆசாத். காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது, கூட்டணி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால் பதவியை ராஜினாமா செய்தார்.

சுசில் குமார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர். சட்டம் பயின்ற இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

வீரப்ப மொய்லி: 69 வயதாகும் வீரப்ப மொய்லி, கர்நாடக முதல்வராக கடந்த 1992 முதல் 95ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்த கமிட்டியின் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிஷனின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லி, முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார்.

ஜெய்பால் ரெட்டி: ஆந்திர மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் மட்கல் கிராமத்தில் 1942ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பிறந்தவர் ஜெய்பால் ரெட்டி. காங்கிரசில் சேர்ந்த அவர் 1969 முதல் 1984ம் ஆண்டு வரை 4 முறை கல்வாகுர்த்தி தொகுதி எம். எல்.ஏ. ஆக இருந்துள்ளார். 1997-98ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்பு வகித்தார். பிறகு மன்மோகன் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசில் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக பணியாற்றினார். மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலம் செவலா தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேசம் வேட்பாளரை 19,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி.யாகியுள்ளார்.

கமல்நாத்: தொடர்ந்து 8 வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்நாத், இதற்கு முன் வர்த்தக துறை அமைச்சராக பதவி வகித்தார். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டவர். இதற்கு நிலம் எடுப்பதில் அரசுக்கு சிக்கல் எழுந்தபோதும் நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

வயலார் ரவி : கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 1937 ம் ஆண்டு பிறந்த வயலார் ரவி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தார். 1967 ம் ஆண்டு கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1971 ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள சிறயங்கில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1982 ம் ஆண்டு கேரள உள்துறை அமைச்சராக இருந்த அவர், முதல்வர் கருணாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1986 ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.
1994 மற்றும் 2003 ல் மாநிலங்களவை உறுப்பினரான அவர், மன்மோகன் அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

மீரா குமார்: மறைந்த துணைப் பிரதமர் ஜகஜீவன்ராமின் மகள். 1973ம் ஆண்டில் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். ராஜிவ் கேட்டு கொண்டதால் அரசியலில் நுழைந்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தார்.கவிஞர், ஓவியர், விளையாட்டு வீராங்கனை, சமுக சேவகி என் பல தரப்பிலும் பெயர் பெற்ற மீரா குமாரின் கனவர் மஞ்சுள் குமார், உச்ச நீதிமன்ற வக்கீலாக உள்ளார்.

முரளி தியோரா: 72 வயதான முரளி தியோரா பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தவர். சர்ச்சைக்குரிய அந்த இலாகாவை தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகித்த முதல் மத்திய அமைச்சர் இவர்தான். காங்கிரசுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்.

கபில் சிபல்: சிறந்த சட்ட நிபுணரான கபில் சிபல், வக்கீல்தான் தனது தொழில் என்றும், அரசியல்வாதியானது விபத்து என்றும் அடிக்கடி கூறுவார். ஜெயலலிதா, லாலு பிரசாத் உட்பட பல முன்னணி அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் அவர்களுக்கு சார்பாக வாடியுள்ளார். 1998ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் சிபல், 2004ம் ஆண்டு டெல்லி சாந்திசவுக் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பணியாற்றினார். இப்போது அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அம்பிகா சோனி: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அம்பிகா சோனிக்கு வயது 66 ஆகிறது. 1975ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்த அவர், 1976 முதல்-88 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு மிக நெருக்கமானவராக இருந்த அம்பிகா சோனி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். மன்மோகன் அமைச்சரவையில் சுற்றுலா அமைச்சராக இருந்தார்.

பி.கே. ஹான்டிக்: அசாம் மாநிலத்தை சேர்ந்த 74 வயது பிஜாய் கிருஷ்ணா ஹான்டிக். 1980ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

1991 முதல் தொடர்ந்து 6வது முறையாக ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஐ.மு. கூட்டணி அமைச்சரவையில் முதல் முதலாக ராணுவ இணை அமைச்சர் ஆனார். 2006ம் ஆண்டு முதல் ரசாயனத் துறை இணை அமைச்சராக பணியாற்றிய அவரிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

ஆனந்த் சர்மா: 56 வயதான ஆனந்த் சர்மா, இமாசலப் பிரதேசத்தை சேர்ந்தவர். சட்டத்தில் பட்டம் பெற்றவர். மாணவர், இளைஞர் இயக்கங்களை முன்னின்று நடத்தியவர். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். நீண்ட காலம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தார். கடந்த அமைச்சரவையில் வெளியுறவு இணை அமைச்சராக பணியாற்றினார். இப்போது காபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.

ஜோஷி: ராஜஸ்தான் மாநிலத்தில் 6 மாதத்துக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சொந்த தொகுதியான நத்வாராவில் போட்டியிட்டு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவர் ஜோஷி. இப்போது நடந்த மக்களவை தேர்தலில் பில்வாரா தொகுதியில் போட்டியிட்டு 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ. வேட்பாளரை தோற்கடித்தார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் 59 வயது சி. பி. ஜோஷி ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர். ராஜஸ்தான் மாநிலத்தில் 1998ம் ஆண்டு கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கல்வி, கிராம வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர்.

No comments: