.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, July 17, 2008

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்பட வேண்டும்?

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்பட வேண்டும்?

பேரா.டாக்டர்எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

Source: http://tmmk.in/news/999765.htm


நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளுவதற்கு முதுகெலும்பாக செயல்பட்ட இடதுசாரி கட்சிகளின் உறவை உதறித் தள்விட்டு அமெரிக்கா வுடன் அணுசக்தி தொடர்பான உடன் பாட்டைச்செய்து கொள்ள மன்மோகன் சிங் அரசு துணிந்து உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சி பறிப்போனாலும் பரவாயில்லை, அமெரிக்காவுடன் அணு உடன்பாட்டைச் செய்தே ஆக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உடும்பு பிடி பிடித்துள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் உடன்பாடு நாட்டு நலனுக்குப் பெரிதும் உதவக் கூடியது என்று பிரதமரும் காங்கிரசாரும் வாதிட்டு வருகிறார்கள். வரும் ஜூலை 22ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத் தில் நடைபெறும் தருவாயில் அமெரிக்கா வுடனான, 123 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உடன்பாடு எவ்வாறு நாட்டின் நலனுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.


123 உடன்பாடு என்றால் என்ன?


அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் 123வது பிரிவிற்குப் பிற நாடுகளுடன் ஒத்துழைப்பு என்று தலைப்பிடப்பட்டுள் ளது. அமெரிக்க அரசு பிற நாடுகளுடன் அணு சக்தி தொடர்பான உடன்பாடு செய்து கொள்வதற்கு முன்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்புக் குறித்து ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்த 123வது பிரிவு விதிக்கின்றது. இத்தகைய ஒப்பந்தம் தான் 123 ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகின்றது. சுமார் 25 நாடுகளுடன் அமெரிக்கா இந்த 123 உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.


அமெரிக்க அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பிரிவு பிற நாடுகளுக்கு அணு தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்வதைத் தடைச் செய்துள்ளது. இந்தத் தடையில் இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிப்பதற்காக ஹைட் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த ஹைட் சட்டத் தின் அடிப்படையில் தான் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான அணு ஆற்றல் தேவைகளை நிறைவுச் செய்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு வழிவகை செய்வதற்காக 123 உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 123 உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு முன்பாக இந்தியா இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். 123 உடன்பாட்டின் அடிப்படையில் இந்தியாவில் அமையும் ஆக்கப்பூர்வமான அணு உலை நிலையங்களின் பாதுகாப்புத் தரம் குறித்து முதலாவதாக சர்வதேச அணு ஆற்றல் முகமையுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். இதற்கு அடுத்ததாக என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் அணுபொருட்கள் ஏற்றுமதி நாடுகளுடனும் ஆக்கப்பூர்வ அணு உலைகளுக்கு தேவைப்படும் யுரேனியம் போன்ற எரிப்பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். சர்வதேச அணு ஆற்றல் முகமை மற்றும் என்.எஸ்.ஜி.யுடன் உடன்பாடு செய்து கொண்ட பிறகு தான் அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான 123 உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும். அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அணு வர்த்தகம் தொடங்கும். அணு உலை, அணு ஆற்றல் தொடர்பான தொழில் நுட்பம், அணு எரிப்பொருட்கள் முதலியவற்றை இந்தியா இறக்குமதிச் செய்து கொள்ளலாம்.


123 உடன்பாட்டை ஏன் எதிர்க்க வேண்டும்?


1,இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அமெரிக்கா கட்டுப்படுத்தும்


நாம் மேலே குறிப்பிட்டவாறு இந்தியாவுடன் அணு ஆற்றல் தொடர்பான 123 உடன்பாட்டை மேற்கொள்வதற்கு வசதியாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹைட் சட்டம் 2006ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் இந்தியாவுடன் அமெரிக்கா அணுஆற்றல் உடன்பாட்டை மேற்கொள்ள இயலாது. ஹைட் சட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தச் சட்டத்தின் முழுப் பெயர் ஹென்றி ஜே ஹைட் அமெரிக்க - இந்திய அமைதிக்கான அணு ஆற்றல் ஒத்துழைப்புச் சட்டம் 2006 ஆகும். இந்த உடன்பாட்டிற்கும் நமக்கும் தொடர்பில்லை, இந்த உடன் பாடு நம்மைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கூறி வருகின்றார்கள். ஆனால் இந்த ஹைட் சட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. .


இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்களான எச். என். சேத்னா, எம். ஆர். சீனிவாசன், பி.கே. அய்யங்கார், அணு ஆற்றல் கட்டுப் பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆய்வு நடுவத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.கே. பிரசாத், இந்தியா அணு ஆற்றல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குனருமான வை. எஸ். ஆர். பிரசாத், இந்திரா காந்தி அணு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிளேசிட் ரொட்ரிக்ஸ் ஆகிய இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட்டாக வெயிட்டுள்ள அறிக்கையில் ஹைட் சட்டம் இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுடனான அணு உடன்பாடு குறித்து எழுப்பப்பட்ட அச்சங்களுக்கு பதில் அளிக்கும் போது அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக ஹைட் சட்டம் அமைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உதாரணமாக இந்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நிறைவேற்றினால் உடனடியாக 123 உடன்பாடு முடி விற்குக் கொண்டு வரப்படும். இந்த உடன் பாட்டின் அடிப்படையில் அமெரிக்காவிடமிருந்து பெற்ற அனைத்துக் கருவிகளையும் பொருட்களையும் இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். திடீரென்று நமது நாட்டில் உள்ள அணு உலைகளுக்கு எரிபொருள் நிறுத்தப்பட்டால், மாற்று எரிபொருட்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டிருந்தன. ஆனால் இந்த ஹைட் சட்டத்தில் இதற்கு வாய்ப்பே இல்லாத வகையில் விதிகள் இயற்றப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் அது நமது நாட்டிற்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். இறக்குமதி செய்யப் பட்ட அணு உலைகளுக்கு எரிபொருள் இல்லாமல் நாம் பெரும் அவதிப் படுவோம்.


இவ்வாறு பல உதாரணங்களை எடுத்துக் காட்டி ஹைட் சட்டம் நமது நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதை மிகத் தெவாக நமது விஞ்ஞானிகள் தோலுரித்துக் காட்டியுள்ளனர்.


ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1947ல் மீண்ட இந்தியாவை அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் ஹைட் சட்டம் அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. இந்தச் சட்டத்தின் படி ஹைட் சட்டத்தின் விதி முறைகளை இந்தியா எவ்வாறு கடை பிடித்து வருகின்றது என்பது குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபர் அறிக்கை தரவேண்டும்.


இந்தியாவின் வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கையிலும் குறுக்கிடும் வகையில் ஹைட் சட்டம் அமைந்துள்ளது. ஈரான் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் கொள்கைகளுக்கேற்ப இந்தியாவின் கொள்கை அமைய வேண்டும் என்று இச்சட்டம் நிர்பந்திக்கின்றது. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கு இசைந்தவாறு இந்தியாவின் கொள்கையும் அமைந்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் விதிக்கின்றது. இந்த அடிப்படையில் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு முன்பாகவே அமெரிக்காவின் எடுபிடியாக இந்தியா மாறிய நிகழ்வும் நடைபெற்று விட்டது. இதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் வெளிப் படையாகவும் அறிவித்து விட்டது. சர்வதேச அணுஆற்றல் முகமையில் அமெரிக்காவின் கட்டளையை ஏற்று இந்தியா ஈரானுக்கு எதிராக வாக்களித்தது. அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழுக் கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய உறுப்பினர் ரிச்சார்ட் லாகர், 'இந்தியாவுடன் நமது உறவை மேம்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பாதுகாப்பு ரீதியான பயன்களை நாம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். கடந்த செப்டம்பரிலும் இந்த ஆண்டு பிப்ரவரியிலும் சர்வதேச அணுஆற்றல் முகமையில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இது தனது பாரம்பரிய வெளியுறவு கொள்கைகளை மாற்றி அமைக்க இந்தியா தயாராகிவிட்டதை வெளிக்காட்டியுள்ளது. என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


அமெரிக்காவின் ஏவலாளாக சர்வதேச அரங்கில் இந்தியா மாறியுள்ளது மட்டுமில்லாமல், நேரு, சாஸ்திரி, இந்திரா உள்ட்ட காங்கிரஸ் பிரதமர்கள் பின்பற்றி வந்த அணிசேரா கொள்கையை மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் கைகழுவியுள்ளதை இது வெட்டவெச்சமாக்கியுள்ளது.


இவ்வாறாக ஹைட் சட்டம் இந்தியா வின் தனித்தன்மைக்கும், இறையாண் மைக்கும் வேட்டு வைக்கிறது.


2. 123 உடன்பாடு இந்தியாவின் சுயமரியாதைக்கு எதிரானது


ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப் படுத்தாது என்று காங்கிரசார் கூறி வருகின்றார்கள். ஆனால் 123 உடன் பாட்டின் 2.1 பிரிவு மிகத் தெளிவாக ஹைட் சட்டமும் பிற அமெரிக்க சட்டங்களும் இந்த உடன்பாட்டிற்கும் பொருந்தும் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது.


அணுவியல் ரீதியான தீண்டாமையை சர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை அனுபவித்து வந்தது 123 உடன்பாடு மூலமாக இது முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று இந்த உடன்பாட்டை ஆதரிப்போர் கூறி வருகின்றார்கள். ஆனால் 123 உடன்பாட்டின் பிரிவு 5.2 அதிமுக்கியமான அணு தொழில் நுட்பத்தை இந்தியா பரிமாறிக் கொள்வதைத் தடைச் செய்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுடைய அணு எரிபொருட்களை இந்தியா பயன்படுத்துவது அமெரிக்க சட்டத்தின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படும். எனவே அணுவியல் ரீதியான தீண்டா மையில் இருந்து நாம் விடுபட்டு விட்டோம் என்று கூறுவது வெற்று முழக்கம் தான்.


123 உடன்பாட்டின் 6 (3) பிரிவு அணுக்கழிவுகளை மீள்சுழற்சி செய்து பயன்படுத்துவது குறித்துக் குறிப்பிடுகின்றது. இந்த மீள்சுழற்சி செய்வதற்கான வசதிகளைச் செய்து அத்தகைய ஏற்பாடு மற்றும் முறைமை குறித்து இரு தரப்பு உடன்பாடு செய்து கொண்ட பிறகு முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிடுகின்றது. இது குறித்து இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் என்ன நேரிடும் என்பது பற்றி 123 உடன்பாடு மவுனமாக உள்ளது. வேறு வார்த்தைகல் சொல்ல வேண்டு மெனில் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் நமது நாட்டின் உரிமையை அமெரிக்காவே முடிவுச் செய்யும்.


123 உடன்பாட்டின் 14.9 பிரிவின் படி அசாதாரணச் சூழ்நிலைகள் (இவை என்ன என்பது விவரிக்கப்படவில்லை) காரணமாக மீள்சுழற்சி செய்வதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடு மற்றும் முறைமையை அமெரிக்கா நிராகரிக்க முடியும் என்று குறிப்பிட்டு ஒரு தலைப்பட்சமாக அமெரிக்காவிற்கு அதிகாரம் வழங்குகின்றது. ஆனால் இந்த (123) உடன்பாட்டை இந்தியா உடனடியாக முறித்துக் கொள்ள இயலாது. அமெரிக்காவிற்கு ஒரு ஆண்டு கால அளவுடைய தாக்கீட்டை (நோட்டிஸை) இந்தியா அளிக்க வேண்டும். உடன்பாட்டை முறித்துக் கொள்வதற்கான காரணத்தையும் இந்தியா அளிக்க வேண்டும். அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையும் நடத்த வேண்டும். பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் உடன்பாட்டை முறித்துக் கொள்ள அனுமதி கோரும் உரிமை மட்டுமே இந்தியாவிற்கு உண்டு.


14.3 பிரிவின்படி அமெரிக்கா உடன்பாட்டின் விதிமுறைகளை முறித்து விட்டது என்று மட்டும் கூறி விலகிக் கொள்ள முடியாது. வியன்னா நடை முறை அல்லது உடன்பாடு சட்டங்கள் அல்லது சர்வதேச அணுஆற்றல் முகமையின் ஆளுநர்கள் குழுமம் ஆகியவை வகுத்துள்ள நெறிமுறை களுக்கு உட்பட்டு அமெரிக்கா உடன்பாட்டின் விதிமுறைகளை மீறி விட்டது என்று நிரூபித்து விட்ட பிறகு தான் இந்த உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ள இயலும்.


15 வது பிரிவின் படி உடன்பாட்டின் விதிகள் குறித்த விளக்கம் அல்லது செயல்பாடு குறித்துப் பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும். இது குறித்து எழும் சர்ச்சைகள் குறித்து மத்தியஸ்தர் அல்லது நீதிமன்றம் நாட இந்தியாவிற்கு உரிமை கிடையாது.


16.2 பிரிவு இந்த உடன்பாடு 40 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறுகின்றது. ஆனால் இந்த உடன் பாட்டின் முன்னோடியாக சர்வதேச அணுஆற்றல் முறைமையுடன் இந்தியா செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் காலவரம்பின்றி இந்தியா பின்பற்ற வேண்டும் என்று விதியாக்கப் பட்டுள்ளது.


123 உடன்பாட்டில் சொல்லப்படா விட்டாலும் கூட இந்தியாவின் எதிர்கால அணுஆற்றல் வளர்ச்சி முயற்சிகளுக்கு இந்த உடன்பாடு ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதிக்கின்றது. மார்ச் 2, 2006ல் ஒத்துக்கொள்ளப்பட்டு, மார்ச் 7, 2006ல் நமது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரிவு திட்டத்தின்படி ஆக்கப்பூர்வமான அணுஆற்றல் நிலையம் என்பது இராணுவத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் இதனை இந்தியாவே அடையாளம் காணும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் உருவாக்கப்படும் அனல் மின் உலைகள் மற்றும் துரித அணு உலைகல் எவை ஆக்கப்பூர்வம னவை என்பதை முடிவுச் செய்யும் உரிமை இந்தியாவிற்கே உண்டு என்று இந்த உடன்பாட்டில் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்க வெளியுறவு குழு கூட்டத்தில் பேசிய புஷ் நிர்வாகத்தின் சார்பாக 123 உடன்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த நிக் பர்ன்ஸ், இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாகும் அனைத்து துரித அணு உலைகள் அனைத்துப் பாதுகாப்பு விதிமுறை களுக்கு கீழ் வரும் என்றும் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்குள் இந்தியா வில் உள்ள 90 முதல் 95 சதவிகித அணு உலைகள் அனைத்தும் முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் (அதாவது அமெரிக்காவின் கண்காணிப் பின் கீழ்) வந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். பர்ன்ஸ்சின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா இதுவரை பதில் அக்கவில்லை.


எனவே 123 உடன்பாடு நமது நாட்டின் சுயமரியாதையை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.


3, சர்வதேச அணுஆற்றல் முகமையிடம் சரணாகதி


அமெரிக்காவுடன் 123 உடன்பாட்டைச் செய்வதற்கு முன்பாக சர்வதேச அணுஆற்றல் முகமையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் நகலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலைப்பதற்கு முதுகெலும்பாக விளங்கிய இடதுசாரி கட்சிகள் கேட்டப்போ தெல்லாம் அதனை தருவதற்கு மன்மோகன் சிங் அரசு மறுத்துவிட்டது. ஆனால் அமெரிக்க இணைய தளங்கல் இந்த உடன்பாட்டின் நகல் பிரசுரிக்கப்பட்டு அது சாமானிய இந்தியர்களுக்கு இணையம் வழியாக கிடைத்த பிறகு இந்திய அரசு அதனை வெயிட்டது. இது ஒரு பெரும் வெட்கக்கேடு,


அணுஆற்றல் முகமையுடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன் பாடும் இந்தியாவின் தனித்தன்மையை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது. அணுஆற்றல் முகைமையுடன் செய்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாட்டின் முகப்புரையில் இந்தியாவின் அணுஉலைகளுக்கு வாக்களிக்கப்பட்ட எரிபொருட்களை அளிப்பதற்கு அணுபொருள் ஏற்றுமதி நாடுகள் மறுத்து விட்டால் இந்தியா தகுந்த முறையில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தின் விதிமுறைகல் இது குறித்து எதுவும் குறிப்பிட்டப்படவில்லை. முகப்புரையில் குறிப்பிடபட்டுள்ளது சட்டமாகாது. சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகல் இருந்து இந்தியாவின் அணுஉலைகளுக்கு எப்போது விதிவிலக்கு அளிக்கப்படும் என்பதை இந்த ஒப்பந்தத்தின் 32வது பத்தியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. 1. இந்தியாவும் சர்வதேச அணுஆற்றல் முகமையும் கூட்டாக ஒப்புக்கொண்டால் 2. இந்த உலைகள் அணுஆற்றல் தொடர்பான பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே குறிப்பிட்ட அணு உலைகள் சர்வதேச முகமையின் பாதுகாப்பு கட்டுப்பாட்டின் வளையத்தில் இருந்து விலகும். இந்த விதிமுறை என்ன உணர்த்துகின்றது? நமது அணு உலைகள் அணு ஆற்றலை தயாரிக்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்த பிறகு அதுவும் சர்வதேச அணுஆற்றல் முகமை அந்த நிலைக்கு சான்று வழங்கிய பிறகு தான் அது பாதுகாப்பு விதிமுறைகலிருந்து விலகும்.


சர்வதேச முகமையுடன் செய்துக் கொள்ளப்படும் உடன்பாட்டில் எழும் சர்ச்சைகள் குறித்து அதன் ஆளுநர் குழுமம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்று இந்த உடன்பாட்டில் கூறப் பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் நிலை சரியானதாக இருந்தாலும், அதற்கு மாற்றமாக ஆளுநர் குழுமம் தீர்ப்பு வழங்கிவிட்டால், இந்தியாவிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் பிரச்சனை கொண்டுச் செல்லப்பட்டு இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். ஈரான் விவகாரத்தில் இவ்வாறு ஏற்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அணுகழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்ய ஈரானுக்கு உரிமை உண்டு என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிலைப்பாடு எடுத்த போதினும், அமெரிக்காவின் தூண்டுதல் பேரில் இப்பிரச்சனையை சர்வதேச அணுஆற்றல் முகமை பாதுகாப்பு குழுமத்திற்கு எடுத்துச் சென்றது.


இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அணுஆயுதம் இல்லாத நாடு என்ற தகுதியை அளிக்கின்றது. இது பிரதமர் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நாம் உருவாக்கியுள்ள அணுஉலைகளை சர்வதேச அணு ஆற்றல் முகமையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அதே நேரத்தில் அணுஆயுத ஆய்விற்காக இந்த உலைகல் நாம் எதுவும் செய்ய இயலாது. ஆனால் இந்தியாவிற்கு அணுஆயுத நாடு தகுதி அளிக்கப் பட்டிருந்தால் அவ்வாறு செய்ய முடியும்.


சர்வதேச அணுஆற்றல் முகமையுடன் செய்து கொள்ளும் உடன்பாடு ஹைட் சட்டம் மற்றும் 123 உடன் பாட்டின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை. நாம் இறக்குமதி செய்யும் அணு உலைகளை காலங்காலமாக சர்வதேச கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகின்றது இந்த உடன்பாடு. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கு முரணாக இந்தியா செயல்பட்டால் உடனடியாக இந்த அணுஉலைகளை நிரந்தரமாக மூடி விடும் ஆபத்தும் உள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை செய்வது மூலம் மன் மோகன் சிங் அரசு நாம் பெற்ற சுதந் திரத்தை அடகு வைத்து அந்நியருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கும் செயலில் ஈடுபடடுள்ளது.

4.இந்தியாவின் எரிசக்தி தேவையை 123 உடன்பாடு நிறைவேற்றுமா?


இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாடு அவசியம் தேவை என்று உடன்பாட்டின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றார்கள். ஆனால் அமெரிக்கா வுடன் அணுஆற்றல் உடன்பாடு மேற்கொண்ட பிறகு அதன் காரணமாக இந்தியாவில் அணுமின் நிலையங்கள் இயங்கத் தொடங்கினாலும் இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவைகளில் 9 சதவிகிதத்தைக் கூட அது பூர்த்தி செய்யாது. இது எந்த வகையிலும் நமது எரிசக்தி தேவை பரிபூரணமாகிவிடும் என்ற பாதுகாப்பு உணர்வை நமக்கு அளிக்காது.


இந்திய அரசின் அணுஆற்றல் துறை நமது உள்நாட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தி 2040ல் 1 லட்சம் மெகவாட் மின்சக்தியையும், 2050ல் 2 லட்சத்திற்கும் அதிகமான மெகவாட் மின்சக்தியையும் நம்மால் தயாரிக்க முடியும் என்று கணித்துள்ளது. இவை முழுக்க முழுக்க நமது சொந்த அணுஆற்றல் உற்பத்தி திட்டத்தைப்பயன்படுத்திக் கிடைக்கும் மின் சக்தியாகும். உண்மை இவ்வாறு இருக்கும் போது பெரும் பொருட் செலவில் தமது நாட்டின் தன்மானத்தை அடகு வைத்து அமெரிக்காவுடன் அணுஆற்றல் உடன்பாடு தேவையா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.


இது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகல் தயாராகும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு அனல் மின்நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலை யத்தை அமைப்பதற்கு ஆகும் செலவை விட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளைக் கொண்டு இயங்கும் நிலையத்தை உருவாக்க செலவு மும்மடங்கு அதிகமாக இருக்கும்.


நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களும், எரிவாயுவை அடிப் படையாகக் கொண்டு இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களும் எதிர்கால இந்தியாவின் மின் தேவையை நிறை வேற்றப் போதுமானவை. இவற்றுடன் சொந்தக் காலில் நின்று மூன்று கட்டங்களாக உருவாக்கத் திட்டமிட்டுள்ள அணுஆற்றல் நிலையங்களும், குறைந்த செலவில், அந்நிய நாட்டிற்கு தன் மானத்தை அடகு வைக்காமல் நமது தேவையைப் பூர்த்தி செய்யும். ஆனால் அமெரிக்க எஜமானர்கன் உத்தரவை மன்மோகன் சிங் எப்படி மீறுவார்? இதன் காரணமாகத் தான் பாகிஸ்தான் வழியாக ஈரானில் இருந்து இயற்கை வாயுவை குழாய் மூலமாகக் கொண்டு வரும் திட்டத்தை அவர் கிடப்பில் போட்டுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால் மத்திய ஆசியா, மேற்காசியா மற்றும் தெற்காசியாவில் ஒரு எரிசக்தி பாதுகாப்பு வளையம் உருவாகி விடும். அமெரிக்காவிற்கு இது எரிச்சலாக இருப்பதால் ஈரான்/பாகிஸ்தான்/இந்தியா குழாய் எரிவாயு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் தான் அந்நாட்டு அரசின் அனைத்துக் கொள்கைகளையும் வகுக்கின்றன. தற்போது இந்தியாவுடனான அணுஉடன் பாடு வர்த்தக நிறுவனங்கன் நலன் களை மேம்படுத்துவதற்காகவே வகுக்கப் பட்டுள்ளது. இதற்காக ஆட்சியாளர் களை இந்த நிறுவனங்கள் தங்கள் வளைக்குள் கொண்டு வருகின்றன. மன்மோகன் சிங் அவர்கள் தனது அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை, அமெரிக்காவுடன் உடன்பாட்டைச் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதற்கான சூட்சுமம் இது தான். செறியூட்டப்பட்ட யுரேனியத்தையும், அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்த பிறகு கிடைக்கும் புளுட்டோனியத்தையும் இந்தியாவின் தலையில் கட்டுவதற்கும், இந்தியாவில் நிறுவப்படும் அணுமின் நிலையங்கல் இருந்து கொளுத்த லாபத்தைப் பெறுவதற்கும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் வாயைப்பிளந்து கொண்டு ஆவலுடன் காத்திருக்கின்றன. லாபத்தைப் பெறுவது மட்டுமின்றி இந்தியாவின் கொள்கைகளையும் நிர்ணயிக்கும் உரிமையைப் பெறுவதினால் தான் உடனடியாக இந்த உடன்பாட்டை நிறைவேற்ற அமெரிக்கா அவசரப்படுகின்றது. தனது எஜமானின் அவசரத்தை விட அதிக அவசரத்தை மன்மோகன் சிங் காட்டுவதைப்புரிந்து கொள்ள முடிகின்றது.


அணுஆற்றலை அடிப்படையாகக் கொண்ட மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது சிக்கனமானது அல்ல. அணுஆற்றல் நிலையங்களை அமைப்பதும், நிர்வகிப்பதும். பிறகு அவற்றைச் செயல் இழக்க வைப்பதும் பெரும் பொருட்செலவைத் தரக்கூடியவை என்பதையெல்லாம் தற்போதைய ஆட்சியாளர் எண்ணிப்பார்ப்பதில்லை.


ஆணுஆற்றல் மாசற்றது, விலை குறைவானது என்று சொல்லப்படுவது உண்மை அல்ல. உயிருக்கு உலைவைக்கும் பல மாசுக்களை அணுஉலைகள் வெளியேற்றுகின்றன. அணுஆற்றலுக்கு மாற்றாக மின் உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் வளமான வழிகள் உள்ளன. சூரிய சக்தி, காற்றலைகள், ஆறுகள் போன்றவற்றை முழுமையாகப் பயன் படுத்தினால் நமது தேவைகளை நிறை வேற்ற முடியும். அத்தகைய திட்டங் களை நிறைவேற்றுவதற்கு இந்திய நலனை மட்டுமே நெஞ்சில் ஏந்தி நிற்கும் ஆட்சியாளர்கள் வரவேண்டும்.

ஜூன் 25 அன்று மரணமடைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் மஹ்முத் பனாத்வாலா சாஹிப் அவர்கள் அமெரிக்காவுடனான அணுஆற்றல் ஒப்பந்தத்தை எதிர்த்துப் பத்திரிகை அறிக்கை வெüயிட்டார்.

ஆயிரக்கணக்கான பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ள பனாத்வாலா சாஹிப்பின் கடைசி பத்திரிகை அறிக்கையில் 'அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ள உள்ள அணுஆற்றல் தொடர்பான ஒப்பந்தம் எங்கள் கட்சிக்கு (முஸ்லிம் லீக்) உடன்பாடுடையது அல்ல. புஷ் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய தேற்றங்களுக்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் மறைந்த தங்கள் தலைவரின் கடைசி விருப்பத்திற்கு மாற்றமாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மன் மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க முடிவுச் செய்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக முஸ்லிம் லீக் இருந்து வருகின்றது. முஸ்லிம் லீக் கட்சியின் ஒரே உறுப்பினராக மக்களவையில் இருக்கும் இ. அஹ்மது மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ளார். பனாத்வாலாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் இவர் பதவி விலக வேண்டும். மக்கள் நலனை விடச் சுயநலனே மேலானது என்ற கொள்கையின் காரணமாக பனாத்வாலாவின் கடைசி விருப்பத்தைவிட இந்தியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்கா உடன் செய்யும் உடன்பாடே மேலானது என்று முடிவுச் செய்து முஸ்லிம் லீக் மன்மோகன் சிங் கட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க முடிவுச் செய்துள்ளது.


(பேராசிரியர் காதர் மைதீன் மக்களவையில் திமுக உறுப்பினராக இருக்கிறார். தற்போது பனாத்வாலாவின் மரணத்திற்குப் பிறகு இவர் முஸ்லிம் லீக் கட்சியின் தற்காலிகத் தலைவராக இருக்கிறார். இவராலும் பனாத்வாலாவின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. திமுகவின் கொறடா போடும் உத்தரவிற்குக் கட்டுப்பட்டே இவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க இயலும்)

நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்யும் இஸ்ரேல்!

ஈரான் ஏவுகணைச் சோதனை நடத்தியவுடன் பீதியில் அலறும் அமெரிக்கா தனது கள்ளப்பிள்ளை ஈஸ்ரேலிடன் உள்ள பேரழிவு ஆயுதங்களைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?
- HUSSAINGHANI

ரான் மீது தாக்குதல் நடத்த தயாராகுங்கள்' என, தனது கள்ளக்குழந்தையான இஸ்ரேலை புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது.

எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரான் கடந்த வாரம் நீண்ட தூர மற்றும் நடுத்தர ரகத்தைச் சேர்ந்த 9 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவிச் சோதனை நடத்தியுள்ளது. இவை நீண்ட தூர மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் ஆகும். உலகின் 40 சதவீத எண்ணைக்குழாய்கள் செல்லும் ஈரானின் ஹோர்மஸ் ஜலசந்திப் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சஹாப்-3 ரக ஏவுகணை, 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இதில் 1 டன் வெடிபொருளை பொருத்தி அனுப்பலாம். இதன் மூலம் இஸ்ரேல், துருக்கி, அரேபிய வளைகுடா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியநாடுகள் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

இந்த ஏவுகணைச் சோதனை குறித்து ஈரான் விமானப்படை தலைமை கமாண்டரான ஜெனரல் ஹூஸைன் சலாமி கூறுகையில் சமீபகாலமாக எங்களது எதிரிகள் ஈரானை மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடியாக எங்களது வல்லமையைக் காட்டும் சோதனை இது. எங்களை யாரேனும் தாக்கினால், எண்ணைக் குழாய்கள் செல்லும் நீர் வழிப் பாதையை மூடி விடுவோம்.

பதிலுக்குத் தாக்கும் திறமையும் எங்களுக்கும் உள்ளது. எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர். எங்களது விரல்கள் டிரிக்கரில்தான் எப்போதும் உள்ளன. எந்த சமயத்திலும் தாக்கக்கூடிய வகையில் ஏவுகணகைளை தயார்நிலையில் வைத்துள்ளோம் என்று கூறினார்.

இதனிடையே ஈரானின் இந்த ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகுங்கள்' என, தனது கள்ளக்குழந்தையான இஸ்ரேலை புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணுஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு முழு ஆதரவு தரப்படும் என்றும் புஷ் கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கும்படியும் இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளார். இருந்தாலும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகளை அந்தப் போரில் ஈடுபடுத்த மாட்டோம் என்றும் அத்துடன், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை, இஸ்ரேல் படைகள் பயன்படுத்தவும் அனுமதிக்கமாட்டோம் எனறும் அமெரிக்க ராணுவ அமைச்சக அதிகாரிகள் அறிக்கைகள் பறக்கவிட்டுள்ளனர்.

ஈரான் ஏவுகணைச் சோதனை நடத்தியவுடன் பீதியில் அலறும் அமெரிக்கா தனது கள்ளப்பிள்ளை ஈஸ்ரேலிடன் உள்ள பேரழிவு ஆயுதங்களைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?

இஸ்ரேலிடம் இருக்கும் மிகக் கொடுரமான பேரழிவு ஆயுதங்கள் ஈரானுக்கு மட்டுமல்ல எல்லா அரபுநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இஸ்ரேல் இருக்கிறது. எகிப்தின் ஒரு பகுதியையும், லெபனானின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அதுதான் வேதகாலம் சொல்லும் தங்கள் புனித பூமி என்று இஸ்ரேல் பஞ்சாங்கங்களைப் புரட்டுகிறது. இன்றைக்கு அந்த நாடு அமெரிக்காவின் நிழலில் இருக்கிறது. உலகம் அந்த நாட்டை அங்கீகரித்து விட்டது.

ஆனால், தங்கள் கண்முன்னே பறிபோன தங்கள் தாய்பூமியை மீட்பதில், இஸ்ரேலைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாட்டு இளைஞர்கள் துடியாய் துடிக்கிறார்கள். பறிபோன நாட்டை மீட்க போராடுபவர்களுக்குப் ‍பெயர் தீவிரவாதிகள். அராஜகமாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலியர் ராணுவவீராகள் என்று ஊடகங்கள் ஊலையிடும். அதையும் உலக மக்கள் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலிடம் 54க்கும் அதிகமான அணுகுண்டுகள் இருக்கின்றன. அவைகளை அந்த நாடே உற்பத்தி செய்ததா? அமெரிக்கா கொடுத்து உதவியதா? இதுவரை ஆயிரத்து முப்பத்துநான்கு முறை அமெரிக்கா அணுகுண்டுச் சோதனை செய்திருக்கிறது. அதில் இஸ்ரேலுக்காகவும் சோதனை செய்திருக்கிறதா? இப்படி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. உறுதியாக, அந்தக் குண்டுகள் அரபு நாடுகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும். இந்த நிலையில், ‘அணுகுண்டு ஆபத்து, அதனைச் செய்யாதே பரிசோதிக்காதே ராசா’ என்று ஈரானுக்கு மட்டும் புத்திமதி சொல்வது எந்த வகையில் நியாயம்?

ஈரான், அணு ஆயுத வல்லரசாக உருவாவதை உலகநாடுகள் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில், இஸ்ரேல் அணு ஆயுத வல்லரசாக இருக்கிறதே? எவ்வளவு பெரிய அழிவு ஆயுதங்களை இஸ்ரேல் உற்பத்தி செய்கிறது என்பதனை, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களே அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில், அண்டையிலுள்ள லெபனான் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. ஒரு மாத காலம் யுத்தம் நடத்தியது. அந்த யுத்தத்தில் கந்தகக் குண்டுகளை வீசி மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய குண்டுகளை வியட்நாம் மீது முன்னர் அமெரிக்கா வீசியது. இப்போது லெபனான் மீது இஸ்ரேல் ஏவியிருக்கிறது. கடுகளவு கந்தகம் உங்கள் உடம்பில் பட்டால் என்னவாகும்?
அந்த இடம் அப்படியே வெந்து போகும். வேதனையால் துடித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆறாத காயங்களோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். சக்தி வாய்ந்த அந்த அழிவு சக்திகளை குண்டுகளாகச் செய்து, லெபனான் மீது இஸ்ரேல் வீசியிருக்கிறது.
எவ்வளவு பெரிய கொடுமை? ரொம்ப ரகசியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த இந்த உண்மையை, இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவாகல்ஆன் என்ற அம்மையார் அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். அதனை இஸ்ரேல் அமைச்சர் ஜேக்கப் எடரி ஒப்புக்கொண்டிருக்கிறார். விஞ்ஞானத்தின் வேக வளர்ச்சி, இஸ்ரேலை வேதாள உலகச் சக்ரவர்த்தியாக்கியிருக்கிறது.

கந்தகக் குண்டுகள் செய்வதை சர்வதேசச் சட்டம் தடை செய்யவில்லை. ஆகவே, அந்தக் குண்டுகளைச் செய்து, லெபனான் மண்ணின் மீதும் மக்கள் மீதும் வீசினோம் என்று இஸ்ரேல் வக்கிரவாதம் பேசியது.

இறக்கும் வரை மனிதனைத் துடிக்கவிடும் இத்தகைய குண்டுகள், அப்போது உருவாக்கப்படவில்லை. ஆகவே, சர்வதேசச் சட்டம் அதனை அன்றைக்குத் தடை செய்யவில்லை. அம்மையார் ஜகாவா என்ன கேள்வி எழுப்பினார்? ‘பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதியில் மீண்டும் மீண்டும் குண்டுபோட்டீர்கள். போர் மரபுகளுக்குப் புறம்பாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே குண்டு போட்டீர்கள். அந்தக் குண்டுகளெல்லாம் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட நாசகார ஆயுதங்கள். அவைகளின் அழிவு சக்திகளைக் கணக்கிட, மக்கள் குடியிருப்புக்களையே நாசமாக்கினீர்களா?’ என்று அந்த அம்மையார் கேட்டார். ‘கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா?’ என்றார். காஸாப் பகுதியில் வீசப்பட்ட நவீன ஆயுதங்களைப் பற்றிக் கேட்டால், ‘புதிதாய் செய்த கந்தகக் குண்டுகளை லெபனான் மீது வீசி, சோதித்துப் பார்த்தோம்’ என்று அமைச்சர் பதில் சொன்னார்.
எங்கே விழப்போகிறோம் என்று தெரியாத இடியைப்போல, லெபனான் மீது இஸ்ரேல் வீசிய கந்தகக் குண்டுகள் விழப்போகும் இலக்குத் தெரியாது மக்கள் குடியிருப்புக்கள் மீதே மழையாய்ப் பொழிந்தன. கந்தகத் தீயில் மக்கள் துடியாய்த் துடித்தனர். இது என்ன புதிய அழிவு ஆயுதம் என்று புரியாது தவித்தனர். அவைகளெல்லாம் இஸ்ரேல் ராணுவப் பாசறை உருவாக்கிய கந்தகக் குண்டுகள் என்பதனை இப்போது இஸ்ரேலே தெரிவித்திருக்கிறது.
உலகம் வியப்பால் முகம் சுளித்து நிற்கிறது.
லெபனான் மீது கந்தகக் குண்டுகளை மட்டும் வீசவில்லை. கொத்துக் கொத்தான குண்டுகளையும் வீசியிருக்கிறது. இது இன்னொரு வகையான அழிவு ஆயுதம். ஒரே குண்டு வெடித்து, அதிலிருந்து ஐம்பது, நூறு குண்டுகள் சிதறும். அவைகளும் வெடிக்கும். அதன் அழிவு பயங்கரமாக இருக்கும்.
மரபுகளுக்கு விரோதமான ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று லெபனான் யுத்தத்தின்போதே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவைகளை அன்று இஸ்ரேல் மறுத்தது. அதன்பின் ஒப்புக்கொண்டது.

இன்றைக்கும் இஸ்ரேல் வம்புச்சண்டைக்குப் போகிறது.

இஸ்ரேலோடு ஒப்பிடும்போது, எல்லா இஸ்லாமிய நாடுகளும் நிராயுதபாணிகள்தான்.

இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் உள்ளன. எந்த இஸ்லாமிய நாட்டிலும் அணுகுண்டு இல்லை.

மிகப் பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது.

எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை.

தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரால், லெபனான் மீது இஸ்ரேல் படையெடுக்கிறது. சிரியா மீது படையெடுக்கிறது. எல்லை தாண்டி அதன் ராணுவம் செல்கிறது. விமானக் குண்டுவீச்சுக்கள் நடைபெறுகின்றன.

இன்றைக்கு இஸ்ரேலின் ஆயுத வலிமை என்ன? வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏவுகணைகளையும் ஏவுகணைச் சாதனங்களையும் விற்பனை செய்திருக்கிறது. அதற்காக அன்றைய அதிகாரபீட அரசியல் பிரமுகர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை கையூட்டு அளித்திருக்கிறது.

இப்போது இலங்கையும் அங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறது. இப்படி ஒரு சின்னஞ்சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கே ஆயுதம் விற்கும் அளவிற்கு வலிமை பெற்றிருக்கிறது. அத்துடன், அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது. ஆனால், அதற்குப் பக்கத்தில் உள்ள ஈரான் அணு ஆயுதச் சோதனை செய்தால், உலகச் சமாதானத்திற்கே உலை வைக்கிறது என்கிறார்கள். என்ன நியாயம் இது??

எந்த நாடும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாது. இருக்கின்ற அணுகுண்டுகளை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அதனை விடுத்து, இஸ்ரேலுக்கு ஒரு நியாயம். அதன் அண்டை நாடுகளுக்கு ஒரு நியாயம் என்று அநியாயம் பேசக் கூடாது.
அணுகுண்டுகளைவிட ஆபத்தான கந்தகக் குண்டுகளையும், அக்கினிக் குண்டுகளையும் இஸ்ரேல் தயாரிக்கிறது. அதனைத் தயக்கமின்றி பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் வீசுகிறது. அந்தக் குண்டுகள் நாளை வளைகுடா மண்ணிலும் வீசப்படலாம்.
அணுகுண்டு, மனித இனத்தை நொடிப்பொழுதில் அழித்துவிடும். ஆனால், கந்தகக் குண்டுகளும் அக்கினிக் குண்டுகளும் மரிக்கும் வரை மனித இனத்தை உயிரோடு போராட வைக்கும். ஐ.நா. மன்றமும் உலக சமுதாயமும் என்ன செய்யப்போகிறது? மவுனம் தான் பதிலா???

Sunday, July 13, 2008

அமெரிக்காவில் வேலையிழந்து வறுமையில் தவிக்கும் லட்சக்கணக்கானோர்...

வேலையிழந்து வறுமையில் தவிக்கும் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள்

ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.


சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.


ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.


கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.


ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.


இன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000 கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.


1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.


இந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர். ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.


நமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை ""பிரட் லைன்'', ""சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.


1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன.
அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும். ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் "பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும்? பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.


அரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.


அமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.


ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ""கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது. மறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது.

Friday, July 11, 2008

அடுத்தடுத்து ஈரான் ஏவுகணைச் சோதனை! எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர்.

அடுத்தடுத்து ஈரான் ஏவுகணைச் சோதனை
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.


எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர்.



Iran Missiles
வாஷிங்டன்: நேற்று ஏவுகணைச் சோதனை நடத்திய ஈரான் இன்று 9 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி சோதனை நடத்தியுள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஈரானின் ஏவுகணைச் சோதனகளை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த சோதனைகள் மூலம் அமெரிக்க நகரங்களையும், இஸ்ரேலையும் தாக்கும் வல்லமை தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானின் ஹோர்மஸ் ஜலசந்திப் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நீர் வழிப் பாதையில்தான் உலகின் 40 சதவீத எண்ணைக்குழாய்கள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது)

ஈரானின் இந்த அடுத்தடுத்த சோதனைகளால் கச்சா எண்ணையின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

ஏவுகணைச் சோதனை குறித்து ஈரான் விமானப்படை தலைமை கமாண்டரான ஜெனரல் ஹூசேன் சலாமி கூறுகையில், எதிரிகளுக்கு எதிரான எங்களது வல்லமையைக் காட்டும் சோதனை இது. சமீபகாலமாக எங்களது எதிரிகள் ஈரானை மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு இது பதிலடி.

எங்களை யாரேனும் தாக்கினால், எண்ணைக் குழாய்கள் செல்லும் நீர் வழிப் பாதையை மூடி விடுவோம். பதிலுக்குத் தாக்கும் திறமையும் எங்களுக்கு உள்ளது.

எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர்.

எங்களது விரல்கள் டிரிக்கரில்தான் எப்போதும் உள்ளன. எந்த சமயத்திலும் தாக்கக்கூடிய வகையில் ஏவுகணகைளை தயார்நிலையில் வைத்துள்ளோம் என்றார்.

இன்று நடந்த ஏவுகணைச் சோதனையில் மொத்தம் 9 ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளன. அனைத்துமே நீண்ட தூர மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் ஆகும்.

இதில் சஹாப்-3 ரக ஏவுகணை, 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இதில் 1 டன் வெடிபொருளை பொருத்தி அனுப்பலாம்.

இதன் மூலம் இஸ்ரேல், துருக்கி, அரேபிய வளைகுடா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

அமெரிக்கா கடும் கண்டனம்:

ஈரானின் ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றன.

இனிமேலும் சோதனை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் நடந்து கொள்வதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட்கேட்ஸும் எச்சரித்துள்ளார்.