.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, November 11, 2009

6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

லண்டன்: வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.
இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.
அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட பாவிகளா.. !: கர்கரேவின் புல்லட் புரூப் உடை மாயம்!! Karkare's Bullet Proof Jacket goes missing.


மும்பை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே அந்த சம்பவத்தின்போது அணிந்திருந்த புல்லட் புரூப் உடை காணாமல் போய்விட்டது.

இந்த புல்லட் புரூப் உடை தரமற்றதாக இருந்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அது காணாமல் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை மகாராஷ்டிர மாநில அரசும், காவல்துறையும் மூடி மறைக்க முயன்றதையடுத்து இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தி்ன் கீழ் விளக்கம் கேட்டு மனு செய்துள்ளார் கர்கரேவின் மனைவி கவிதா.

மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே தான் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியவர்.

இந்த வழக்கில் அவர் நடத்திய ஆழமான விசாரணையால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான பெண் துறவி பிரஞ்யா சிங் தாக்கூர், சாமியார் பான்டே, ராணுவ அதிகாரி உள்பட பல இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக அவரை பாஜக, விஎச்பி, சிவசேனா, ஆர்எஸ்எஸ் ஆகியவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார் ஹேமந்த் கர்கரே. தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்த ஆரம்பித்த அடுத்த 15வது நிமிடத்தில் தானே துப்பாக்கியுடன் களமிறங்கியவர் கர்கரே.

தரக் குறைவான புல்லட் புரூப் உடையை முதலில் அணிய மறுத்தவர், பின்னர் ஜூனியர் அதிகாரிகள் நிர்பந்தித்தால் அதை அணிந்து கொண்டு காமா மருத்துவமனையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி முன்னேறினார். ஆனால், மூன்று குண்டுகள் அவரது புல்லட் புரூப் உடையைத் துளைத்ததில் அதே இடத்தில் பலியானார்.

ஆனால், அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது புல்லட் புரூப் இல்லை. அதை யார் கழற்றினார்கள் என்றும் தெரியவில்லை. அவர் அதை அணியவே இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறினர்.

ஆனாலும் அவர் அதை அணிந்திருந்த நிலையில் தான் அதை குண்டுகள் துளைத்ததாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த உடைகளை வாங்கிய அதிகாரிகள், இந்த உடைகள் கொள்முதலுக்குக் காரணமாக இருந்த அரசியல்வாதிகளும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை உருவானது.

இந் நிலையில் தான் கர்கரே அணிந்திருந்த அந்த புல்லட் புரூப் உடையே காணாமல் போக செய்யப்பட்டுள்ளது.

அந்த உடை எங்கே என்று கேட்டு ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா காவல்துறை அலுவலகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அலைந்தும் விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்தே ஆர்டிஐ சட்டப்படி (தகவல் அறியும் உரிமை சட்டம்) அந்த உடை எங்கே என்று கேட்டு 3 மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு நேற்று முன் தினம் அவருக்கு காவல்துறை தலைமையகத்திடமிருந்து பதில் வந்துள்ளது. அதில், அந்த உடையைக் காணவில்லை என்று சர்வசாதாராணமாக பதில் தரப்பட்டுள்ளது.

இத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்த கவிதா, தொடர்ந்து கூறுகையில்,

மகாராஷ்டிர காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவிலிருந்து விலகிவிட என் கணவர் திட்டமிட்டிருந்தார். காவல் துறையை விட்டு விலகிவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ விரும்பினார்.

அவருடன் 28 ஆண்டுகள் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தவள் நான். திடீரென ஒருநாள் அவர் இல்லை என்றாகிவிட்டது. அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டாலும் அவரது நினைவு ஒரு கணமும் என்னை விட்டு அகலவில்லை, அகலாது. அவரது மறைவை இன்னும் என்னால் ஏற்க முடியவில்லை.

கைது செய்யப்பட்ட தீவிரவாதி கசாபுக்கு இன்னும் தண்டனை தரப்படவில்லை. நீதிமன்றத்தில் நடக்கும் இழுத்தடிப்புகளைப் பார்த்தால் கோபமாக வருகிறது. சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இன்னும் விசாரணையா.. இந்நேரம தீர்ப்பு வந்திருக்க வேண்டாமா?.

தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்துவதாக தகவல் வந்தவுடன சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் அப்படியே விட்டுவிட்டு கையில் தனது ஷூக்களை எடுத்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்... நான் போன் செய்தபோது.. நன்றாக இருக்கிறேன் என்றார். அது தான் அவரிடம் நான் கேட்ட கடைசி வார்த்தை.

நள்ளிரவில் டிவியில் பார்த்துத் தான் அவர் காயமடைந்ததை அறிந்து அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு ஓடினேன். அங்கு அவரது ஜூனியர்கள் அழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடனேயே எனக்கு எல்லாம் புரிந்து போய்விட்டது. அவர் இல்லை என்ற உணர்வு என்னை ஆக்கிரமித்தபோது நான் சுயநினைவை இழந்தது இன்னும் எனக்குள் நிழலாடுகிறது.

அவர் ஒரு நல்ல கணவர், நல்ல தந்தை, ஜூனியர்களுக்கு ஒரு நல்ல ரோல் மாடல், சவால்களை விரும்பும் பர்சனாலிட்டி என்றார் கவிதா.

Tuesday, November 10, 2009

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.


இரவு 11-1 மணி உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும். திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும்.

சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி(வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லாமேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை.

2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லாமேரி தொடர்பு கொண்டால் எதிர்முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது. அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என
கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார்.

கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா-மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார். இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும்-
கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார்.

நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள். பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர்.

ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார். அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது.

நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார்.

எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு. ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது. கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு
அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி.

காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் திருச்சி பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

Sunday, November 8, 2009

ரியாத் மண்டல த.மு.மு.க நிர்வாகிகள் தேர்வு


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மக்கள் பணியை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செய்து வரும் அதே வேலையில், கடல்கடந்தும் தமது மனிதநேயப் பணிகளை பரந்து விரிந்து செய்து வருகின்றன. அயல் தேசங்களில் பணியாற்றும் நமது சகோதரர்கள் தமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின் காரணமாக தான் பாணியாற்றும் தேசங்களில் இருந்துகொண்டே மனிதநேயப்பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். நமது இரு கண்களும் ஒன்றோடு ஒன்று சந்தித்ததில்லை ஆனால் தனது கடமையிலிருந்து ஒரு போதும் தவறியதில்லை. தமுமுக தலைமையின் வழிகாட்டுதலில் அயல் நாடுகளிலும் தமுமுகவின் கிளைகள் பரந்து விரிந்து செயல்பட்டு மனிதநேயப் பணிகளில் முத்திரை பதித்து வருகின்றன.
அந்த வகையில் சவூதி அரேபிய – தலைநகர் ரியாத் மத்திய மண்டல த.மு.மு.கவின் பொதுக்குழு கடந்த 06-11-2009 அன்று கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மௌலவி ஜமால் உமரி அவர்கள் கிராஅத் ஓத, மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

முதலாக மண்டல நிர்வாகத்தின் கணக்குகள் வாசிக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யவிருப்பதை முன்னிட்டு பொருப்பிலிருந்த மண்டல நிர்வாகிகள் தமது பொருப்புகளிலிருந்து ராஜினாமா செய்து விடுப்புப் பெற்றனர்.


உணவு இடைவேளைக்குப் பின், கிழக்கு மண்டலத்திலிருந்து பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் தேர்தல் அதிகாரிகளாக வருகை தந்திருந்த மவுலவி அலாவுதீன் பாகவி, சகோதரர் அப்துல் காதர், சகோ இஸ்மாயில், சகோ நூருதீன் ஆகியோரின் முன்னிலையில் மத்திய மண்டல த.மு.மு.கவிற்கான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழுவிற்கு வருகை தந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் மத்திய மண்டல நிர்வாகிகளை தேர்தல் முறையில் தேர்வு செய்தார்கள். அதில் மண்டலத் தலைவராக மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனுரைச் சேர்ந்த மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்கள் மண்டலத் தலைவராகவும். இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த எம். முஹம்மது ஹூஸைன் கனி அவர்கள் மண்டல பொதுச் செயலாளராகவும். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சகோ ஜர்ஜிஸ் அஹமது அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனையில் மத்திய மண்டலத்தின் துணைத் தலைவராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கே. பி. முஹம்மது அவர்களையும், துணைச் செயலாளராக புதுக்கோட்டை மாவட்டம் மீ-மீசலைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மது அவர்களையும் தேர்வு செய்தனர்.

அல் கஸ்ஸாவிலிருந்து வருகைபுரிந்திருந்த சிறப்புப் பேச்சாளர் மவுலவி அலாவுதீன் பாகவி அவர்களின் உரைக்குப் பின் தாயகத்திலிருந்து த.மு.மு.கவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும் இணையம் வழியாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறப்புரையாற்றினார்கள் தங்களது உரையில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து தொடர்ந்து மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபடவும் அதற்கு உறுதுணையாக மற்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளின் ஏற்புரைக்குப்பின், பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு கிழக்கு மண்டல த.மு.மு.க தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் பதில் அளித்தார்கள். இறுதியாக சகோ. நூர் முஹம்மது நன்றி உரையாற்ற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.

இப்பொதுக்குழுவில் நூற்றி ஜம்பதிற்கும் மேற்பட்ட த.மு.மு.க உறுப்பினர்கள் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இப்பொதுக் குழுவை த.மு.மு.க மத்திய மண்டல தொண்டரணியினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகத்தின் பணிகள் சிறக்க துவாச் செய்தவர்களாக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமுதாயப் பணியின் கடமைகளை உணர்ந்தவர்களாக விட்டபணிகளைத் தொடர வெற்றிக்களிப்புடன் களைந்து சென்றார்கள்...