.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Wednesday, November 11, 2009

6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

லண்டன்: வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.
இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.
அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, June 12, 2009

மாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது! பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை.

வெயிலில் நிற்க வைப்பது, தலையில் குட்டுவதற்கு தடை
மாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது
பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை


சென்னை, ஜூன்.12 மாணவர்களை அடிப்பது, வெயிலில் நிற்கவைப்பது, தலையில் குட்டுவது போன்ற எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

65 வகையான புகார்கள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 4,200 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 1,600 அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 70 லட்சம் மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள்.

இப்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் பெற்றோர்களிடம் இருந்து வந்துள்ளன. மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை வசூலிக்கப்படுகிறது, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை வெயிலில் நிற்க சொல்லி தண்டனை கொடுக்கிறார்கள், பிரம்பால் அடிக்கிறார்கள், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்&2 சான்றிதழ் வாங்கும்போது மாற்று சான்றிதழ் வழங்கும்போது மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது உள்பட 65 வகையான புகார்கள் வந்துள்ளன.

சுற்றறிக்கை

ஏற்கனவே மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் என்று அரசாணை இயற்றப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மீறியும் மாணவர்கள் அடிக்கப்படுகிறார்கள் என்று புகார் வந்துள்ளதால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நன்கொடை- குற்றம்
எந்த ஒரு மாணவரையும் அடிக்கக்கூடாது. வெயிலில் நிற்கவைத்தல், முதுகில் செங்கலை சுமக்க வைத்தல், தலையில் குட்டுதல் உள்ளிட்ட எந்த ஒரு தண்டனையையும் கொடுக்கக்கூடாது.

பள்ளியில் உள்ள வேலைகளை மாணவர்களை கொண்டு செய்யக்கூடாது. மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வாங்கக்கூடாது. அது குற்றமாகும். மேலும் மாற்று சான்றிதழ் கொடுக்கும்போதும் பணம் வாங்கக்கூடாது. பள்ளிகளில் மேற்கண்ட எந்த குற்றமாவது நடக்கிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை

திருச்சியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலித்ததால், அதே போல எந்த பள்ளியிலும் வசூலிக்கக்கூடாது என்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

Sunday, May 31, 2009

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா? இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?
இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, May 29, 2009

வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போகாமல் பள்ளி வளாகத்திலேயே பதிவு செய்யலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போகாமல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை, பள்ளி வளாகத்திலேயே பதிவு செய்யலாம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை, மே.28 பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றதை, வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு போகாமல் பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

8.22 லட்சம் மாணவர்கள்.....
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவரத்தினம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது.

தமிழகத்தில் 2008-09 கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்புத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகள் வெளியாகி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் எந்தெந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்யலாம் என்ற விபரம், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு, மாநிலம் முழுவதும் 100 மையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2008-09ம் கல்வியாண்டில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 272 மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் அண்மையில் வெளியாகி, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படவுள்ளது.

பள்ளி வளாகத்திலேயே பதிவு
இவர்கள், தாங்கள் தேர்ச்சி பெற்றதை பதிவு செய்வதற்காக, மாவட்டத் தலைநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செல்வதற்காக போக்குவரத்துச் செலவினையும், கால விரயத்தையும், கூட்ட நெரிசல் போன்ற இடர்பாடுகளையும் தவிர்க்கும் பொருட்டு மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு முதல், மாணவர்கள் தாங்கள் பயின்று மதிப்பெண் சான்று பெறும் பள்ளிகளின் வளாகத்திலேயே பதிவு செய்து கொள்ள கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றுடன் மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, மாற்றுச் சான்று ஆகியவற்றினை சரிபார்த்து, தலைமை ஆசிரியரின் முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, பள்ளியின் மொத்த விண்ணப்பப் படிவங்களை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு வார காலத்துக்குள் வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 14, 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல் அதிகாரி.

சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலைத் தடுக்கத் தவறிய காவல் துறை!

ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?


என் நெஞ்சு எரிகிறது! அறிஞர் அண்ணா சொன்னது இது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடுமை அது.


தஞ்சை தரணியில் கீழ் வெண்மணி கிராமத்தில் கூடுதலாக கூலி கேட்டுப் போராடிய ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, அவர்கள் குடிசை வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.அந்தச் செய்தி கேட்டு முகம் கருத்து, வெட்கத்தால் நாணி, தலை குனிந்த முதலமைச்சர் அண்ணா கீழ் வெண்மணி நோக்கி புறப்படத் தயாராக இருந்தபோது அவரிடம் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் அந்நிகழ்வு குறித்து கருத்துக் கேட்டார்.


வெறுமையுடன் அவரைப் பார்த்த அண்ணா, “எனது ஆட்சியிலா இது நடைபெறுகிறது? என் நெஞ்சு எரிகிறது” என்று கூறினார் என்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியதைக் கேட்டுள்ளோம். அந்த நிலைதான் நமது நாட்டு மக்கள் பலருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் - அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போலவே - பதறியிருக்கும்.


படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.


ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.


பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.


கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.


இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.


தலைவர்களைக் கேவலப்படுத்திய மாணவர்கள்! நடந்த வன்முறை நம்மை பதறச் செய்தது என்றால், இந்த நிகழ்வுகளுக்கான காரணம் நம்மை வெட்கித் தலைகுனியச் செய்வதாக உள்ளது.

இக்கல்லூரி மாணவர்கள் சிலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை கொண்டாடுவதற்கு அச்சடித்த அழைப்பிதழில், தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் உள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ பெயரை தவிர்த்திருத்தனராம்.


அவரது பெயரை ஏன் தவிர்த்தீர்கள் என்று மற்ற சில மாணவர்கள் கேட்க, சாதி ரீதியாக அவர்களுக்குள் புகைச்சல் ஏற்ப்பட்டதாம். அதுவே இந்த அளவிற்கு ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு வித்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.


இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் மோதல் நாம் அறியாததல்ல. கிராமத்தில் வாழும் மக்களுக்கு படிப்பறிவிருக்காது, சிந்திக்கவும் தெரியாது, சிந்திக்க நேரமும் இருக்காது.


ஆனால் மாணவர்களுக்கு? அதுவும் சட்டம் படிக்கவந்த மாணவர்களுக்கு தெரியாதா இவ்விரு தலைவர்களும் யாரென்று? இதுதான் வருத்தமளிக்கும் ஆச்சரியம்.


நமது நாட்டின் சட்ட மேதை, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர், இன்றளவும் இந்த அளவிற்கு நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்று, கருத்துரிமை சுதந்திரம் பெற்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறோம் என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்பது கூட புரியாதா? தெரியாதா?


தான் சார்ந்த சமூகம், உடலுழைப்பின் மூலம் சமூக வாழ்விற்கு தனது பங்களிப்பை முழுமையாக செலுத்திய பின்பும் உரிமை மறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படுவது ஏன் என்று குரல் எழுப்பி, அதற்காக தன் வாழ் நாள் முழுவதும் போராடி, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றத் தலைவர்களுக்கும் புரியவைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தை அவர்களும் நுகரச் செய்ய வழி செய்தவரல்லவா அம்பேத்கர்? அவருடைய பெயரை தவிர்ப்பதற்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆழமான கருத்தாடல்களை படித்தவர்களா இவர்கள்? அப்படித் தெரியவில்லை.


சாதியத்தின் பிடி அந்த அளவி்ற்கு இவர்களுடைய சிந்தனையை கட்டிப்போட்டிருக்கிறது என்றால், இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி நாளை நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெற்றுத் தருவார்கள்? அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் சட்டம் ஏது? சட்டத்தின் ஆட்சி ஏது? இந்த இரண்டு தலைவர்களும் ஏதோ சாதியத்திற்காகப் போராடி உயிரைத் துறந்தவர்கள் போலல்வா இருக்கிறது இவர்களின் வெறியும் செயலும்.


சரி அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.


விலகுமா இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?