.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, May 29, 2015

மியான்மர்: பர்மாவில் நடப்பது என்ன? ஆய்வுக் கட்டுரை.

மியான்மர்: பௌத்த பயங்கரவாதம் ஒரு கட்டுக்கதை அல்ல..! 

- இக்வான் அமீர்



சில ஆண்டுகளுக்கு முன் தி மியான்மர் போஸ்ட் பத்திரிகை ஒரு செய்தியை முகப்பு பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அக்.14 அன்று ‘பஆனின் மாய் பவுங்கில்’ நடந்த கூட்டத்தைப் பற்றிய செய்தி அது. கூட்டத்தை நடத்தியவர்கள் ‘கரென் ரிலிஜியஸ் புரொடொக்ஷன் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்பினர்.இதில் என்ன விசேஷம்? என்று கேட்டால்.. அந்தக் கூட்டத்தில் 100 பேருக்கும் மேலாக புத்த பிட்சுகள் கலந்து கொண்டதுதான்!

அதில் ‘பாஆன்’ பெருநகரத்து மாநகராட்சி முதன்மை நிர்வாகிகள் ஒன்பது பேர் கலந்து கொண்டது இன்னும் முக்கியமானது.
சாதாரண நேரத்தில் இத்தகைய கூட்டங்கள் யாருடைய புருவங்களையும் உயர்த்தாது. ஆனால், இனவாத மோதலின் அதி தீவிரப் போக்கு பர்மிய சமூகத்தில் தலைவிரித்தாடும் அசாதாரண சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பர்மிய மக்களின் பாதுகாப்பு அமைப்பு என்று சுயமாக தன்னை அழைத்துக் கொண்ட இந்த அமைப்பு அந்தக் கூட்டத்தில் சில முக்கியமான சட்டங்களை இயற்றியது. அதில் குறிப்பாக ஒரு நான்கு சட்டங்கள்.. கட்டளைகள் முக்கியமானவை. அவை:
• பர்மிய முஸ்லிம்களுக்கு பெளத்தர்கள், வீடுவாசல்களையோ, தோட்டம் துறவுகளையோ.. விற்கவோ அல்லது வாடகைக்கோ.. குத்தகைக்கோ விடக்கூடாது.• பௌத்தப் பெண்கள் ஒரு காலும் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.• பெளத்த சமயத்தவர்கள்தான் பெளத்த கடைகளில் பணிக்கமர்த்தப்பட வேண்டும்.• எக்காரணத்தைக் கொண்டும்.. பௌத்தர்கள் முன்னின்று தங்கள் பெயரால்.. முஸ்லிம்களுக்கு சொத்துப்பத்துக்களை நிலம், நீசுகளை வாங்கித் தரவே கூடாது. இதை மீறுபவர்கள் கடுந் தண்டனைக்கு ஆளாவார்கள்.

இந்தக் கட்டளைகளை ‘பஆங்’ நகரம் முழுவதும் துண்டறிக்கைகளாய் வீடு தோறும் விநியோகம் செய்யப்பட்டன. அந்நகருக்கு வந்திருந்த கரென் பிரதமக்கும், மக்களவைத் தலைவர், மாநில உள்துறை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவருடன் வந்திருந்த மற்ற அரசு பிரதிநிதிகளுக்கும் இவை விநியோகம் செய்யப்பட்டன.

நாளேட்டின் முகப்பில் வெளியான இந்தச் செய்தியை ‘தென் சென்’ அரசாங்கம் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. இத்தனைக்கும் அந்த அரசாங்கம்தான் முற்போக்கு அரசாங்கம் என்றழைக்கப்படுகிறது.மியான்மர் நாட்டின் மற்றொரு அங்கமான சொந்த சமூகத்துக்கு.. முஸ்லிம்களுக்கு எதிரான இனதுவேஷங்களை அது கண்டு கொள்ளவேயில்லை என்பதே இதன் பொருள். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்பது இதன் செய்தியாகும்.
இனவெறிப்பிடித்த பௌத்த துறவிகளுக்கும், அவர்கள் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாதத்துக்கும் அரசு ஆதரவு தருகிறது என்று பொருள்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரசு எதிர்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு இது.புன்முறுவலுடன் சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் காட்சித் தரும் தலாய் லாமாவுக்கு கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக! இனி தலாய் லாமா கையில் ஜபமணிக்கு பதிலாக அரிவாள் மற்றும் வெடிபொருட்களை எடுத்துக் கொண்டு திரியலாம். பயங்கரவாதி என்று நெற்றியில் வெளிப்படையாக ஒட்டிக் கொண்டு சொற்பொழிவாற்றலாம்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் சிறுபான்மை இனமாக இருக்கும் பௌத்தர்கள் கொடுமைப்படுத்ததுகிறார்கள். அவர்களின் விடுதலைக்காகப் போராடும் மகானாகவே தலாய் லாமா முன்னிறுத்தப்படுவது மட்டுமே மேலை நாடுகளுக்குத் தெரியும். இந்த நினைப்பில்தான் அவை தலாய் லாமை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகின்றன.

உண்மையில், 50 விழுக்காடுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கம்போடியாவைச் சேர்ந்த சாம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை யாரும் கண்டுக் கொள்வதாயில்லை. மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் அரகான் – ராகின் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் அரசாங்கம் மற்றும் பயங்கரபவாத பௌத்த துறவிகளால் கொல்லப்பட்டு இனசுத்தகரிப்புச் செய்யப்படுவதை உலகில் யாரும் சட்டை செய்வதாய் இல்லை.


கம்போடியா பௌத்த நாடாக வேண்டும் என்ற வெறியில் கமெர் ரோக் முஸ்லிம்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். நம் கண்ணெதிரே அண்டை நாடான இலங்கையில் இதே இனவெறிதான் தலைவிரித்தாடுகிறது. அங்கு தமிழர்களும், தமிழ் முஸ்லிம்களும் பௌத்தவர்கள் அல்லாதவர் என்று முத்திரைக் குத்தப்பட்டு இனவொழிப்புக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தாய்லாந்தும் இதற்கு விதிவிலக்கல்ல. தாய் முஸ்லிம்களும், பயங்கரவாத பௌத்த இனவெறியர்களின் தீவிரவாதத்துக்கு ஆளாகி பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இரண்டாம் உலக மகா போரின் போது தீவிரவாத பௌத்த இனவெறியர்கள் கொண்ட ஜப்பானிய ராணுவத்தால் மலேசியாவிலும், பர்மாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள் மறக்க முடியாதவை.

பேரரசர் ‘ஹிரோ ஹிடோ’ தனக்குத் தானே பௌத்தம் மற்றும் தாய் சமயங்களின் தலைவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதும் ஒரு தனி வரலாறு.திபெத், சீனா, கொரியா, ஜப்பான், மங்கோலியா, இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பௌத்த இனவெறித் தீவிரவாதிகள் நடத்திய அட்டுழியங்களை தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட நூலை வாசிக்கலாம்: ‘BUDDHIST WARFARE’, co-edited by Michael Jerryson and Mark Juergensmeyer, Oxford University Press (2009)பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவொழிப்பு தேசிய அளவிலான ஒரு திட்டம் என்று திட்டவட்டமாக கூறலாம். நாட்டின் பௌத்த பிட்சுகள் அனைவரும் கலந்து பேசி ஒட்டு மொத்தமாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலான ‘National Project’ – என்கிறார் மலேசியாவின் பன்நூலாசிரியரும் எழுத்தாளருமான டாக்டர் ஹபீப் சித்திகீ.

அதனால், ஆரம்பத்தில் குறிப்பிட்ட கரென் பௌத்தர்கள் சம்பந்தமாக நாளேட்டில் வெளிவந்த செய்தி விஷய ஞானம் உள்ளோருக்கு அவ்வளவாக வியப்புத் தராது.‘கரென் ஹீயூமன் ரைட் குரூப்ஸ்’ மே, 2002 இல், வெளியிட்ட ஒர் அறிக்கையில், ‘DKBA’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் – ‘தி டெமாக்ரடிக் கரென் புத்திஸ்ட் ஆர்மி’, அரசு ஆதரவு கூட்டணி, 1994-95 இல், கட்டமைக்கப்பட்டது. இது உருவானதன் நோக்கம், கரென் மாநிலத்தின் பாபுன் மாநகரின் முஸ்லிம் வீடுகளை ஒன்று விடாமல் தரைமட்டமாக்கி விட வேண்டும். அந்த இலக்கை அவர்கள் அடையவும் செய்தார்கள்.

கரென் மாநிலத்தின் பாபுன் மாநகரின் முஸ்லிம் குடியிருப்புகள் ஒன்றுவிடாமல் இடிக்கப்பட்டு தரைமட்டமாயின. இதற்காக பெரிய பெரிய புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன. முஸ்லிம் வீடுகள் மட்டுமல்லாமல் அவர்களின் வழிபாட்டுத்தலமான மசூதியும் இடிக்கப்பட்டது. இத்தனை அக்கிரமங்களையும் செய்துவிட்டு புதிதாக பௌத்த குடியிருப்புகளை முஸ்லிம்களே கட்டித் தர வேண்டும். அதற்காகும் மொத்த செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

பஆன் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் சொல்கிறார்: “நாங்கள் 50 க்கு 60 அடியில் ஒரு பெரிய மசூதியைக் கட்டியிருந்தோம். அதன் முகப்பில் அழகான மினாராக்கள் வேறு. இரண்டு மாடிகள் கொண்ட அழகான மசூதி அது. அவர்கள் ‘DKBA’ யினர் திரண்டு வந்து பெரிய பெரிய புல்டோசர்களைக் கொண்டு வந்து மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டார்கள்.

எங்கள் கண்ணெதிரே இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட மசூதி இடித்து தரைமட்டமாவதை ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் சோகமாய் பார்த்துக் கொண்டிருந்தோம். இடிபாடுகளை அவர்கள் அகற்றும்போது, அமர்ந்திருந்த எங்களிடம் ‘Ma Auye Leh Ka la’ (கருப்பு (இந்திய) விபசாரிகளுக்குப் பிறந்தவர்களே!) என்று திட்டினார்கள். பள்ளிவாசலை இடித்த அதே இடத்தில் புத்த ஆலயத்தை நிறுவினார்கள். நாடற்ற கருப்பர்களே (இந்தியர்களே!), நீங்கள் இனி இங்கிருக்க முடியாது. உடனே இங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்தார்கள்.

புத்தர் கோயிலைக் கட்டும் போது அதற்கான கல்லையம், மண்ணையும் எங்களைக் கொண்டே சுமக்க வைத்தார்கள். கட்டுமான செலவுக்காக 2 லட்சம் கியாட் தொகையை (சுமார் 17 லட்சம் ரூபாய்) உடனுக்குடன் கட்டச் சொன்னார்கள். அப்படி கட்டாவிட்டால்.. எங்கள் அனைவரையும் கொன்றுவிடப் போவதாக சொன்னார்கள். புத்த பிட்சுகளில் ஒருவன் இப்படி சொன்னான்: “இதோ பார்! நான் உறையிலிருந்து வாளை உருவி யாரையம் கொல்லாமல் உறைக்குள் இதுவரை போட்டதே இல்லை. என்னை வாளை உருவ வைத்துவிடாதே!”

கிராமவாசிகளான நாங்களோ ஏழை – பாழைகள்! உயிருக்குப் பயந்து எங்களிடமிருந்த எல்லவற்றையும் கொடுத்து உயிர்களைக் காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு!”

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பழைய சம்பவம் ஒன்றை மற்றொருவர் பகிர்ந்து கொள்கிறார்: ஏப்ரல் 10, 2000- இல், நடந்தது இது. ‘சல்வென்’ ஆற்றின் கிழக்குப் புறம் அமைந்துள்ள கிராமம்தான் ‘’டி கிவ் போ’. 500 முஸ்லிம்களின் குடியிருப்புகள் கொண்ட கிராமம் இது. DKBA இன் தலைமையகம் அமைந்துள்ள மேயிங் கி நாகு விற்கு தென் கிழக்கில் அமைந்திருந்ததுதான் துரதிஷ்டம்.
மாலையில், பயங்கரமான ஆயுதங்களுடன் படைதிரண்டு வந்த DKBA பௌத்த பயங்கரவாதிகள் பள்ளிவாசலின் இமாமை (குருவை) அடித்து, உதைத்து பள்ளிக்கு வெளியே இழுத்து வந்தனர். பதைபதைப்புடன் நின்றிருந்த எங்கள் கண் முன்னாலேயே பள்ளிவாசலை புல்டோசரால்.. இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். எங்கள் பெண்டு பிள்ளைகளோட கதறி அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு.

அவர்கள் வந்த வேலை முடிந்ததும் DKBA யின் தலைவன் எங்களை நோக்கி வந்தான். பயத்தால் வெளிறி போய் நின்றிருந்த எங்களிடம் வந்தவன் துப்பாக்கியை எங்கள் தலைகளில் அழுத்தியவாறே சொன்னான்: “Ka La (இந்திய) நாய்களே, நாளை நாங்கள் இங்கே திரும்பி வரும்போது, உங்கள் முகத்தை நான் பார்க்கக்கூடாது. இந்த இடம் Ka La (இந்தியர்களின் –கருப்பர்களின்) நாடல்ல. கருப்பர்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை. நீங்கள் வணங்கும் கண்ணுக்குத் தெரியாத அல்லாஹ் இதோ இனி நான்தான்! உங்களின் கடவுளான – அல்லாஹ்வான நான் சொல்வதையே இனி நீங்கள் கேட்டாக வேண்டும். என்ன புரிகிறதா?”- என்று மிரட்டலானான்.

இனி நீங்கள் அனைவரும் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். சைவ உணவுகளை உண்ண வேண்டும். அல்லாஹ்வை வணங்குவதை கைவிட்டு புத்தரையே வணங்க வேண்டும்.
கடைசியாக அவன் இப்படி சொன்னான்: “நீங்கள் இங்கிருக்க விரும்பினால்.. நீங்கள் அனைவரும் மதம் மாறி புத்தரை வணங்க வேண்டும்!”

கடைசியில் பாட்டன்- முப்பாட்டன் காலத்துக்கு முன்னிருந்து அந்த மண்ணில் வசித்துவந்த மண்ணின் மைந்தர்கள் அந்த கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வேண்டி வந்தது.
ஆம்..! அந்த 500 முஸ்லிம் குடும்பங்களும் அந்த மண்ணில் வாழ்ந்த தடயமே தெரியாமல் மௌன அழுகையுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேற வந்தது.

செவ்குன் கிராமவாசி 2001-இல், நடந்த சம்பவம் ஒன்றை பீதியுடன் நினைவு கூர்கிறார்: “எங்கள் வீடுவாசல்களை, நிலபுலன்களை பிடுங்கிக் கொண்ட BKBA ராணுவத்தினர், கிராமத்துக்குள்ளேயே ஒரு முகாம் அமைத்தார்கள். மசூதி இடித்த இடத்தில் பெளத்த கோயிலைக் கட்டிக் கொண்டனர். எங்கள் முப்பாட்டன் காலத்துக்கும் முன்னிருந்து நாங்கள் உழுதுவந்த செழுமையான சமதள நிலத்து வயல்களை அபகரித்துக் கொண்டனர். எங்கள் கண்முன்னாலேயே அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மற்றும் கரும்பை அறுத்துச் சென்றார்கள்!”செவ்குன் கிராமம் நூறு முஸ்லிம்களின் இருப்பிடம். குடியிருப்புகளுக்கு எதிரே அமைந்திருந்தது அழகிய மசூதி – வழிபாட்டு ஸ்தலம். பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த BKBA பெளத்த பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் குடியிருப்புகளை இடிக்க ஆரம்பித்தார்கள். பள்ளிவாசலை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். மசூதி இருந்த இடத்தில் வழக்கம் போல பௌத்த மடத்தைக் கட்டினார்கள். முஸ்லிம்களின் குடியிருப்புகள் இருந்த இடத்தில் சாலையை அமைத்தார்கள்.

சொந்த நாட்டிலேயே அகதிகளான முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார்கள். சொற்பமான சிலர் வேறு இடங்களில் குடியேறினார்கள். அதே கிராமத்தில் இருக்க இடமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சிலர்.
மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் வாழும் முஸ்லிம்களின் உண்மை நிலை இதுதான்.இதில் குறிப்பாக பர்மாவின் கெரென் மாநிலம் பாஸிஸ பௌத்த தீவிரவாதிகள் மூட்டிவிட்ட இனதுவேஷங்களால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

புத்தர் போதித்தது அகிம்சையா? அல்லது நரவேட்டையா? என்று திரும்பவும் பௌத்த வரலாறுகளை மறு பரீசிலனை செய்ய வேண்டியிருக்கிறது. அன்பு-அகிம்சை என்று சொல்லிக் கொண்டே பௌத்த பிட்சுகள் நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போல மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறர்கள் அங்கே அன்றாடம் அடிமைகளைவிட மோசமான நிலையில்தான் முஸ்லிம்கள் வாழ வேண்டி உள்ளது.

இறைவழிபாடுக்கு முற்றிலும் தடை. சமய நெறிகளுக்கு எதிரான அவமானம். இதெல்லாம் பர்மிய முஸ்லிம்கள் அன்றாடம் பறிகொடுத்து வரும் மனித உரிமைகள். அவரவர்க்கு பிடித்த உணவு உண்ணவும் தடை. 2000 லிருந்து மியான்மரில் இறைச்சியை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. இறைச்சி சாப்பிட்டது ஊர்ஜிதமானால்.. அவர்கள் 5 ஆயிரம் கியாட் அதாவது 42 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும். இறைச்சிக்காக அறுக்கப்பட்டது ஆடாக இருந்தால்.. அதை பயன்படுத்தியவருக்கு 10 ஆயிரம் கியாட்டிலிருந்து (84 ஆயிரம் ரூபாய்) .50 ஆயிரம் கியாட்வரை (4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். மாடாக இருந்தாலோ ஒரு லட்சம் கியாட் (8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும்.

மீனை உணவாக எடுத்துக் கொண்டாலும் அவருக்கும் இதே நிலைதான்; அபராதம்! மீன் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் பயங்கரவாத புத்த பிட்சுகளிடம் மாட்டிக் கொண்டு அந்த அரக்கர்களின் காலடியில் விழுந்த கதறி அழுது பாவமன்னிப்புப் பெற்ற சம்பவங்களும் ‘டேக் வெஹ் பு’ கிராமத்தில் நடந்துள்ளன.KHRG மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் இது பதிவாகியுள்ளது.
முஸ்லிம்கள் மீன்களை வேட்டையாடக் கூடாது. யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் மீன் வேட்டையாடி சிக்கிக் கொண்டால்..அவர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அந்தத் தண்டனை அடி-உதையாக இருக்கலாம். புத்த பிட்சுவின் காலில் விழுந்து கதறி அழுது பாவமன்னிப்பு கேட்பதாகவும் இருக்கலாம். இத்தனையும் நடந்தும் கூட மீன்பிடித்தல் குற்றத்துக்காக 5 ஆயிரம் கியாட் (42 ஆயிரம் ரூபாய்) அபராதம் செலுத்தியவர்களும் உண்டு.மீன் பிடித்த குற்றவாளி பணிந்து போகவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு 30 ஆயிரம் கியாட் (2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. அப்படி அபராதம் செலுத்தாதவர்கள் மரண தண்டனை விதிக்கப்படும் உச்சக் கட்ட உத்திரவும் உண்டு. அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போரின் பதிவுகள் இவை.2000 லிருந்து மியான்மரில் இறைச்சி உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றாடம் அரங்கேறும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பயங்கரவாதம் SPDC அரசுக்குத் தெரியாமல் நடக்கும் ரகசியம் அல்ல. ஏனென்றால்.. இந்த சம்பவங்கள் எல்லாம் அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் முன்னிலையில்தான் நடக்கின்றன.
அரசு அதிகாரிகள் ஒருநாளும் BKBA பௌத்த தீவிரவாதிகளைக் கைது செய்து முஸ்லிம்களின் உயிர் உடமைகளை பாதுகாத்ததாக இதுவரையும் வரலாறு இல்லை.தாய்லாந்தில் பௌத்த துறவிகள் எவ்வாறு முழு ஆயுதபாணியாக ஒரு ராணுவ வீரனைப் போல துப்பாக்கி சகிதமாக நடமாடகிறார்களோ அது போன்ற நிலைதான் பர்மாவிலும்.

பௌத்தத் துறவிகள் பௌத்தம் அல்லாத மக்களிடம் இன துவேஷங்களைக் காட்டி வரும் மரபு ஒரு நீண்ட நெடிய பாரம்பர்யம் கொண்டது. அது வரலாற்றுப் பூர்வமானது கூட.

உலகின் மிகவும் மோசமாக கொடுமைக்குள்ளான சிறுபான்மை இனம் என்று ஐ.நா. மன்றத்தால் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் ரோகின்ய பர்மிய முஸ்லிம்கள். இவர்கள் வாழும் ராகின் மாநிலம் மேற்கு மியான்மரில் அதாவது மேற்கு பர்மாவில் உள்ளது. மூன்று மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட இந்த மாநிலம் மேற்கில் வங்கக் கடலை எல்லையாகக் கொண்டது. இங்கு பெரும்பான்மை இனமாக பௌத்தர்கள் வாழ்கிறார்கள்.


 அரகான் பகுதியில் வாழும் ரோகின் இன முஸ்லிம்களின் துன்பம்-துயரங்கள் இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறன. மார்ச் 18, 1942-இல், சுமார் 5 ஆயிரம் முஸ்லிம்கள் கொடுரமான முறையில் ராகின் தேசியவாதிகளால் ‘மின்பா’ மற்றும் ‘மொரோ ஹாங்’ பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தத் துயர சம்பவத்துக்குப் பிறகு இவர்கள் மீது பர்மிய அரசால் இழைக்கப்படும் அநீதிகள் – அடக்குமுறைகள் தொடர் கதைகளாயின. இவர்களுக்கு சட்ட ரீதியான குடியுரிமைகளைத் தர அரசாங்கம் மறுத்துவருகிறது.ஐ.நா.மன்றத்தின் அகதிகளுக்கான முதன்மை ஆணையரின் கூற்றுப்படி,• பர்மிய முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். • அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒடுக்கப்படும்.• கல்வி கற்கும் உரிமையோ அல்லது சொத்துரிமையோ மறுக்கப்படும் என்பதுதான் பர்மிய அகதிகள் என்ற சொல்லுக்குப் பொருளாகும்.

ஒரு அரசாங்கமே தன் குடிமக்களுக்கு எதிராக நடத்தும் இத்தகைய அராஜகப் போக்கை சகிக்க முடியாமல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷ்கும் இன்னும் 24 ஆயிரம் பேர் மலேசியாவிற்கும் தங்களைக் காத்துக் கொள்ள தப்பிச் சென்று விட்டார்கள். இன்னும் பலர் தாய்லாந்துக்கு புகலிடம் தேடிச் சென்றுவிட்டார்கள். ஆனால், தாய்லாந்தோ, பங்களாதேஷோ இவர்களை இன்முகத்துடன் வரவேற்று அடைக்கலம் அளிக்கவில்லை.

பங்களாதேஷ், அகதிகளாக வந்துள்ள ரோகின்ய முஸ்லிம்களை திரும்பவும் அழைத்துக் கொள்ளம்படி பர்மிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. தாய்லாந்தோ அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. அது இன்னும் ஒருபடி மேலே சென்று குழந்தை பெண்கள் சகிதமாக நீர்வழியாக அகதிகளாக வருவோரை கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் தடுத்து நிறுத்துகிறது. அத்துடன் பலவந்தமாக அப்படகுகளை இடித்து நீரில் மூழ்கடிக்கும் முயற்சிகளில் இறங்கிவருகிறது.சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ (Human Rights Watch) பர்மிய அரசு ரோகின்ய முஸ்லிம்களை கொத்தடிமைகளாக மாற்ற வற்புறுத்தி வருகிறது!’ – என்ற தகவலையும் தருகிறது. இப்படி மாற மறுப்போரை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்குவதாகவும் முஸ்லிம்களின் ஏழு வயதுக்குட்பட்ட சின்னஞ்சிறுவர்கள் கூட இத்தகைய கொத்தடிமை சிறார் குழுக்களில் இடம் பெற்றுள்ள அதிர்ச்சிகரமான தகவலையும் தொடர்ந்து தருகிறது.


‘வாட்டர்லூ’ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ‘முஹம்மது எல்மஸ்ரி, ‘தி எகிப்தியன் கெஸட்டுக்கு’ எழுதும்போது, ரோகின்ய முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாகவே பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருவதை சுட்டிக் காட்டுகிறார். இந்த மக்கள் மீது தனியாக வரி விதிக்கப்படுவதாகவும், பலவந்தமாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகவும், அவர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதாகவும், திருமண நேரங்களில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் குறிப்பிடுகிறார். ரோகின்ய முஸ்லிம்கள் வலுக்காட்டாயமாக சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் இராணுவ முகாம்களில் கீழ்நிலைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையும் வருத்தத்தோடு எழுதுகிறார். தனது சொந்த குடிமக்களிடம் பர்மிய அரசு காட்டும் பாரபட்சத்தை, முஸ்லிம்களை பர்மிய அரசு நடத்தும் மிக மோசமான நிலையை சர்வதேச அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.

பல்லண்டுகளாக பர்மிய அரசாலும், பெளத்த தீவிரவாதிகளாலும் துன்பங்களை அனுபவித்துவரும் ரோகின்ய முஸ்லிம்களுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் உரத்துக் குரல் எழுப்பி வருகின்றன.மே, 2009-இல், ‘ஹீயுமன் ரைட்ஸ் வாட்சின்’ ஆசியாவுக்கான இணை இயக்குனர் ‘எலைன் பெர்ஸன்’ ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, ‘அசோசியேஷன் ஆப் சவுத் ஏசியன் நேஷன்ஸ்’ (ASEAN) என்ற அமைப்பு பர்மிய அரசின் செயல்களைக் கண்டிக்க வேண்டும்.

உலக நாடுகள் அதன் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது அவர், பர்மிய அரசாங்கம் ரோகின்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார். ஆனால், பர்மிய அரசோ அவர்களை தன் சொந்த குடிமக்கள் என்ற அந்தஸ்தைக் கூட தர மறுப்பதை சுட்டிக் காட்டி வேதனைப்பட்டார். ஏற்கனவே துன்பத்துக்கு மேல் துன்பங்களை அனுபவித்து வரும் பர்மிய முஸ்லிம்கள் தற்போது மீண்டும் அலை அலையான அடக்குமுறைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
ஐ.நா.மன்றத்தின் ஓர் அறிக்கையின் படி, தற்போது நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வெறிக்கு பலியாகி அகதிகளானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரம்வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதை துல்லியமாக கணக்கிடும் சாத்தியமில்லை.

ராகின் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் கிட்டதட்ட 9 ஆயிரம் முஸ்லிம்களின் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன; எரிக்கப்பட்டுள்ளன. இது பர்மிய நாட்டின் மனித உரிமை மீறலுக்கான ஒரு படி பின்னடைவு என்கிறது சர்வதேச மனித உரிமை ஆணையகமான ஆன்மெஸ்டி இண்டர் நேஷனல்!
'தி ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேஷன்’ (OIC) பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்துள்ளது.பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சம்பந்தமான உண்மைத் தகவல்கள் கசிந்துவரும் நிலையில் ‘டைம்ஸ் துருக் நியூஸ் ஏஜென்ஸி’ சமீபத்தில் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்தள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை மேற்கத்திய ஊடகங்கள் வாய்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.. செவிடர்களாய்.. ஊமைகளாய், குருடர்களாய் …!

பல்வேறு தலைப்புகளில் புத்தம் புதிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை கட்டம் கட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பானது அன்றி வேறில்லை. தங்கள் ஊடகங்களைப் போலவே, மேற்கத்திய நாடுகளும் பார்வையிழந்தோரின் நிலையிலேயே உள்ளன.
அமெரிக்கத் தேர்தல்களில் இரண்டாவது முறையாக வெற்றிவாகைச் சூடிய அதிபர் ஒபாமா முதன் முறையாக பர்மாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

உலகமே தலையில் வைத்துக் கொண்டாடிய ஜனநாயகப் போராளி, பர்மிய அரசியல் நாயகி, ஆங் சென் சுகி தனக்கு நோபல் பரிசு அளிக்க நார்வேயில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவர் அடக்கி ஒடுக்கப்படும் பர்மிய முஸ்லிம்களைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பர்மாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சம்பந்தமாக மூச்சுகூட விடவில்லை. ஜனநாயகப் போராளிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்த சம்பவம் இது.

மனசாட்சி மிக்க உலக மக்கள் இன வெறியால் படுகொலைச் செய்யப்படும் பர்மிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது அவர்களின் தார்மீகக் கடமையும்கூட. பெயர்தாங்கிகளாக சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக உள்ள நிலையில் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.

நன்றி: Mr. Pamaran.