.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, November 22, 2007

HAJ: ஹஜ் யாத்திரைக்கு விளம்பரம் தேவையா?

HAJ: ஹஜ் யாத்திரைக்கு விளம்பரம் தேவையா?



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை இறைவனை துதிப்பதற்கான ஒன்றாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஹஜ் யாத்தி ரைக்குச் செல்வோர் விருந்தோம்பலை நடத்தி, உறவினர்களுக்கும், ஊர்க்காரர் களுக்கும் பயண செய்தியை தெரிவிப்பார்கள். பகையாளிகளை கூட சந்தித்து தங்கள் பயணத்திற்காக பிரார்த்திக்க சொல்வார்கள்.





ஆனால், இப்போதெல்லாம் ஹஜ் பயணத்தை ஒரு விளம்பரமாகவும், புகழுக் கான ஒன்றாகவும் சிலர் பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனால் தூய எண்ணங்களோடு ஹஜ்ஜுக்குப் புறப்படும் ஹாஜிகளுக்கும் மரியாதைக் குறைவு ஏற்படுகிறது.





பள்ளிவாசல்களில் ஜும்மா தொழு கைக்குப் பிறகு பயண செய்தியை அறிவிப்பது விருந்தோம்பல் செய்வது இவையெல்லாம் குற்றமாக பார்க்கப் படுவதில்லை. யாரும் இதை விமர்சிக்கவும் மாட்டார்கள். ஆனால் சமீப வருடங் களாக நிலை மாறி வருகிறது. அரசியல் வாதிகளை அழைத்து வாழ்த் தரங்கம் நடத்துவது, ராட்சத டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ஆள் உயர போஸ்டரில் ஹஜ் பயணியின் சிரிக்கும் படம், வாழ்த்து சுவரோட்டிகள் என 'அரசியல்' வாடை வீசத் தொடங்கி யுள்ளது.





இவையெல்லாம் முற்றிலும் மார்க்கத் திற்கு விரோத மான செயல்களாகும் இப்படியெல்லாம் செய்து ஹஜ் யாத்தி ரைக்கு செல்வது அதன் நோக்கத்தை சிதைப்பதாகும். இதையெல்லாம் செய் பவர்கள் யார் என்பதை கவனித்தால் அவர்கள் இதற்கு முன்பு மார்க்கத்தை சரிவர பின்பற்றாமல் ஜும்மாவுக்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களாக இருப்பவர்கள் என்பது தான்!





பொதுவாக ஐவேளை தொழுகைப் பேணுபவர்களும், மார்க்ககத் தின்பால் ஈடுபாடு உடையவர்களும் இதுபோன்ற 'அரசியல்' கூத்துகளை நடத்துவதில்லை. சிறிய விருந்துடன் பயண செய்தியை கூறிவிட்டு புறப்படுகிறார்கள். அவர் களை ஊர் மக்களும், ஜமாத்தோடு கூடி வழியனுப்பி வைக்கி றார்கள்.





இப்படிப்பட்ட உண்மையான ஹஜ் யாத்திரீகள் பெருமைக்கும், புகழுக்கும் விளம்பரம் செய்து ஹஜ்ஜுக்கு புறப்படும் நபர் களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுமத நண்பர்களும் கூட, மக்காவுக்கு செல்வதை மரியாதை யுடன் நோக்குவார்கள். அவர்களும் தங்கள் முஸ்லிம் நண்பர்களை வழிய னுப்ப பழங்களோடும், இனிப்புகளோடும் வருவார்கள். இப்போதும் வருகிறார்கள்.





அவர்களும் கூட இத்தகைய விளம்பர பிரியர்களின் நடவடிக்கைகளினால், ஹஜ் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. இதெல்லாம் குர்ஆன் ஹதீஸ் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதை அவர்களுக்கு இதை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்.
இந்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலமாக்கள் இது குறித்து ஜும்ஆ பிரசங்கத்தில் அறிவுறுத்த வேண்டும். ஜமாத் தலைவர்கள் இதற்கு துணை புரிய வேண்டும்.





இல்லையெனில் புனிதமான ஹஜ் யாத்திரை எதிர்காலத்தில் கேலிக்குரிய தாக மாறிவிடும். இதை தடுக்காதவர்கள், நாளை மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.





இதை படிக்கும் சகோதரர்கள் துண்டு பிரசுரங்கள் மூலமாகவோ, பிரதி எடுத்தோ வினியோகித்து சமூகத்தில் தீமைகள் பரவாமல் தடுத்து நிறுத்த உதவ வேண்டும். செய்வீர்களா??

Saturday, November 17, 2007

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம் 45 நீதிபதிகளில் 5 பார்ப்பனர்கள்; மேலும் இரு பார்ப்பன நீதிபதிகளா?

நன்றி: விடுதலை


உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை, தேவை!


நவம்பர் 20 அன்று காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்
தி.க தலைவர் விடுத்துள்ள அறிக்கை

சென்னை - உயர்நீதிமன்றத்தில் தற்போது 45 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில், மேலும் இரு பார்ப்பனர் நியமனம் செய்யப்பட உள்ளனர்; இதனை எதிர்த்தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரியும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை - உயர்நீதிமன்றத்திற்கும், மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 49 ஆகும்.
இதில் தற்போது (புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகளை யும் சேர்த்து) உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. இன்னும் 4 நீதிபதிகளின் இடங்கள் காலியாக உள்ளன.

நீதிபதிகளைத் தேர்வு செய்யும் முறை

உயர்நீதிமன்ற நீதிபதிகளை, தற்போது எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்றால், கொலிஜியம் (Colligium) என்று முதல் மூன்று நீதிபதிகளே முடிவு செய்து, மாநில அரசுகளையோ, மத்திய அரசினையோ கருத்து ஏதும் கேட்காமலேயே (நிதி வேண்டுமானால் அதற்கு மட்டும் மாநிலத்தின் முதலமைச்சர், நிதியமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் அரசுக்கு நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் பெறுகிறார்கள்) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்து அனுப்புகின்றனர்!

அப்படி நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்படுகிறவர்கள் எந்தெந்த விதிகள் - தகுதிகள் காரணமாக (Norms) பரிந்துரைக்கப்படுகின் றனர் என்பதை எளிதில் எவராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த கொலிஜியம் என்ற மூத்த நீதியரசர்கள் மூவரில், ஒருவர்கூட தமிழ்நாட்டுக்காரர் அல்லர். தமிழ்நாட்டு மக்களின் - மண்ணின் மனோபாவத்தையே முற்றிலும் அறிந்துகொள்ள வாய்ப்பற்றவர்களும்கூட!

முதலாவதாக உள்ள தலைமை நீதிபதி அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தவர்.
அடுத்தவர் (பார்ப்பனர்) பிகார் மாநிலத்தினைச் சார்ந்தவர்.மூன்றாவது (பார்ப்பனர்) ஒரிசா மாநிலத்தவர்.தமிழ் தெரிந்தவர்களாகவோ, தமிழ்நாட்டையோ, அதன் சமூக நீதி வரலாற்றையோ தெரிந்தவர்களோ உள்ளவர்களும் அல்லர் இவர்கள்; தனிப்பட்ட முறையில் அந்த மூவர் மீது நமக்கு எந்த வெறுப்பும், காழ்ப்பும் கிடையாது.. அவர்களை நேரில் ஒருமுறை பார்த்ததுகூட கிடையாது!

மேலும் மேலும் பார்ப்பன நீதிபதிகளா?

அவர்கள் சமூகநீதியைப்பற்றியோ, மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் பரிந்துரை செய்தனர் - செய்கின்றனர்!

காந்தியாரைக் கொன்ற - கோட்சேவுக்குப் பயிற்சி அளித்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஷாகாவில் அரைக்கால் சட்டையோடு பயிற்சி பெற்ற ஒரு பார்ப்பன வழக்குரைஞர் - நீதிபதியாக்கப்பட பரிந்துரைக்கப்பட்டு, அது இழுபறியாக இன்னமும் இருக்கிறது - நாம் முன்பே இதுபற்றி சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.

இந்த 45 பேரில் ஏற்கனவே 5 பார்ப்பனர்கள் - அவர்கள் விகிதாச் சாரத்திற்கு இரட்டிப்பு மடங்குக்குமேல் நீதிபதிகளாக உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பார்ப்பனப் பெண் வழக்குரைஞரும் மற்றும் ஒரு பார்ப்பனரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனராம் இந்த கொலிஜியத்தால்!

பெண் வழக்குரைஞர்களில் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களே கிட்ட வில்லையா?இன்னமும் ஒடுக்கப்பட்ட சமு தாயங்களைச் சார்ந்த திறமைமிகு, வருமான வரி அதிகம் கட்டும் அனுபவமிக்க வழக்கறிஞர்கள் (பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் இருந்தும்கூட) உள்ளனரே - அவர்கள் ஏனோ பரிந்துரைப்போர் பார்வையில் படுவதே இல்லை!

பார்ப்பனர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாமா?

என்ன மீண்டும் மீண்டும் பார்ப்பனர்களையே பரிந்துரை செய் கிறீர்களே என்று எவராவது கேட்டால், அதற்கு வரும் பதில் என்ன தெரியுமா?
ஏன், எஸ்.சி.,யில் இத்தனை நீதிபதிகள் (சுமார் 10 நீதிபதிகள்) இருக்கையில், பிராமணர்கள் வரக்கூடாதா என்று சொல்லுகிறார் கள் என்ற தகவல்கள் கசிகின்றன!

என்னே கொடுமை! காலங்காலமாக அழுத்தி வைக்கப்பட்ட மக்களும், அவர்கள்மீது ஏறி இன்றளவும் குதிரைச் சவாரி செய்பவர்களும் ஒரே மாதிரி பார்க்கப்படவேண்டியவர்களா? ஒரே அளவுகோலால் அளக்கப்படவேண்டியவர்களா?

இம்மாதிரி நீதிபதிகளுக்கான பெயர்களை, அதில் உள்ளூர் மக்களை அறிந்த நீதிபதிகளுடைய கருத்தையாவது குறைந்தபட்சம் இந்த கொலிஜியம் (மூவர் குழு) தேர்வுக்குழு கேட்டறிய வேண் டாமா?அரசியல் சட்டத்தில் வற்புறுத்தப்பட்ட, சமூகநீதி வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
இதைவிட வேதனையும் வெட்கக்கேடும் வேறு உண்டா?

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் முறை
உச்சநீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளை, குறிப்பிட்ட மாநிலத்தி லிருந்து தேர்வுக்குழு பரிந்துரை செய்யும்போது, எந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்கிறார்களோ அந்த மாநிலத்தினைச் சார்ந்த நீதிபதியை (அங்கே நீதிபதியாக உள்ளவரை) (உயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனங்களில்கூட) அழைத்து கருத்துரை கேட்டு, அதற்கேற்ப பட்டியலைத் தயாரிக்கும் முறை உள்ளதாகத் தெரிகிறது.

அதையாவது இங்கே பின்பற்ற வேண்டாமா?

கண்டதே காட்சி, கொண்டதே கோலமா?

உச்சநீதிமன்றத்தில்கூட ஒரே ஒரு தமிழ்நாட்டுக்காரர்தான் தற்போது நீதிபதியாக உள்ளார். மற்ற பல மாநிலங்களிலிருந்து, 2 அல்லது மூன்று பேர் உள்ளனர். எனவே, தமிழ்நாட்டுப் பிரதிநிதி களாக உரிய தகுதியோடு உள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மைச் சமுதாய நீதிபதிகளுக்கு அங்கும் வாய்ப்பளித்தால்தானே சமூகநீதி கிடைக்கும்.

சமூகநீதி கோரி 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

இவற்றை வலியுறுத்தியும், ஏராளமான பார்ப்பன, ஆண் - பெண் நீதிபதிகளை நியமனம் செய்யப்படுவதைக் கண்டித்தும் வரும் 20.11.2007 அன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகத்தால் நடத்தப்பட உள்ளது.. ஒத்தக் கருத்துள்ள சமூகநீதியாளர்களும் கலந்துகொள்ளலாம் - கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

சென்னை 17.11.2007

தலைவர், திராவிடர் கழகம்.