.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, April 2, 2011

அரசியலை மாற்றுவார்களா..? இந்த அறிவுஜீவிகள்....

இவர்களாவது அரசியலை மாற்றுவார்களா..?

தேர்தல் களத்தில் அறிவுஜீவிகள்

தேர்தல் என்றாலே படிக்காதவர்களும், சினிமாக்காரர்களும், அடாவடிப் பேர்வழிகளும்தான் களம் இறங்குவார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், இந்தத் தேர்தலில் விவரமானவர்களும் நிற்கிறார்கள். இவர்கள்தான் களம் காணும் சில அறிவுஜீவிகள்...

ரவிக்குமார்: 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அறிவுத் தூண்’ என்று கருதப்படுகிறவர். இளநிலை சட்டம் படித்துவிட்டு, சிண்டிகேட் வங்கியில் 23 ஆண்டுகள் பணியாற்றி, அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர். சமீபத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'சங்க காலத்தில் அதிகார உறவுகள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்துள்ளார்.

''அரசியல் என்பது முன்பு உள்ளூர் சார்ந்ததாக இருந்தது. இப்போதோ, உலக அரசியல் வரை தெரிந்திருக்கவேண்டும். பொருளாதாரம், விவசாயம் என மக்கள் சார்ந்த எல்லாவற்றைப்பற்றியும் கூர்ந்த கவனிப்புத் தேவை. என்னைப் பொறுத்த வரை, நல வாரியங்கள் அமைப்பது, நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவது, ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்னைகள் என தொகுதி சார்ந்த மற்றும் பொதுப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து, 'சொல்லும் செயலே’ என்கிற தலைப்பில் புத்தகம் கொண்டுவந்துள்ளேன்!'' என்கிற ரவிக்குமார், 'நிறப்பிரிகை’ பத்திரிகையின் ஆசிரியராகவும், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவராகவும் இருந்தவர். 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பழ. கருப்பையா: அ.தி.மு.க​-வின் இலக்கிய அணித் தலைவர். தமிழகத்தில் கருணாநிதியை விமர்சிப்பவர்களில் முதன்மை​யானவர். 'கருணாநிதி என்ன கடவுளா?’ என்பது இவரது சமீபத்திய புத்தகம். திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தவர்.

''ஒரு நாட்டின் முதலமைச்சரால் மரியாதை செய்யப்படுவதைவிட, ஓர் எழுத்தாளனுக்கு என்ன பெருமை கிடைக்கும்? செம்மொழி மாநாட்டுச் சமயத்தில், 'தமிழ்த் தாய் வர மாட்டாள்’ என்று நான் எழுதிய கட்டுரைக்காக, அடியாட்​களை அனுப்பி என் வீட்டைச் சேதப்படுத்தி, காலை உடைத்தார்கள். காவல் துறைக்கு அடித்தவர்களைத் தெரியும். அடிக்கச் சொன்னவர்களையும் தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை!

அரசியல் வாழ்வில் போராட்டம்​தான் உயிர்நாடி! ஈழத் தமிழர்களின் விடுதலை போன்ற பல போராட்டங்​களை செய்திருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளாக, கருணாநிதி எனும் தீய சக்தியை எதிர்த்துப் போராடி வருவதும் முக்கியமானது!'' என்கிறார் பழ.கருப்பையா.

'மாஃபா’ பாண்டியராஜன்: தே.மு.தி.க-வின் விருதுநகர் வேட்பாளர். மனித வளத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் 'மாஃபா ரான்ட்ஸடட்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர். பொறியியல் படித்து, எம்.பி.ஏ. முடித்தவர்.

'மாஃபா’ அறக்கட்டளை மூலம் சென்னை, விருதுநகர், மதுரை மாவட்டங்​களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளிக் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறார். ''குழந்தைத் தொழிலாளி​யாக இருந்து, தீப்பெட்டி கம்பெனிகளில் வேலை செய்து,


பெற்ற கூலியைக்கொண்டு படித்தவன் நான். இன்று தேர்தல் என்பதே முதலீடாகிவிட்டது. இவ்வளவு போட்டுவிட்டு, பல மடங்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் அள்ளிவிட நினைக்கின்றனர். இதை மாற்றினால்தான் அரசியல் உருப்படும், நாடும் உயரும்...'' என்கிற இவர், 'யூ ஆர் அப்பாயின்டட்!’, 'ஆயிரத்தில் ஒருவன்’ என இரண்டு சுய முன்னேற்ற நூல்கள் எழுதியுள்ளார்.

கவிதைப் பித்தன்: தி.மு.க-வின் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதி வேட்பாளர். கவிஞர். ''பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இலக்கிய ஈடுபாடு. 12 வயதில் இருந்தே கவிதை எழுதுவேன். 'முரசொலி’யில் 25 ஆண்டுகளாக எழுதுகிறேன். 1982-ல் பேராசிரியர் அன்பழகனிடம் 'கவிச்சுடர்’ பட்டம் பெற்றேன். அந்தப் பெயரிலேயே 'கவிச்சுடர் கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன்.

1981-ல் புதுவை அரசாங்கம் பாரதி நூற்றாண்டு விழாவில், நடத்திய கவிதைப் போட்டியில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு வென்றேன். 1990-ல் தமிழக அரசு எனக்கு 'பாரதிதாசன்’ விருதும், 2006-ல் தமிழக அரசு, சமூக நீதிக்கான பெரியார் விருதும் வழங்கின!'' என்றார் கவிதைப்பித்தன்.

வைகைச் செல்வன்: அ.தி.மு.க-வின் அருப்புக்​கோட்டை தொகுதி வேட்பாளர். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை முடித்தவர். சட்டமும் படித்​துள்ளார். சென்​னைப் பல்கலைக்​கழகத்தில் 'இணைய இதழியல்’ என்ற தலைப்பில், முனைவர் பட்ட ஆய்வேடு அளித்துள்ளார்.

''15 நூல்கள் எழுதியுள்ளேன். 'காதல் மனப்பாடப் பகுதி’ என்ற புத்தகம் 2001-ல் ஆனந்த விகடனில், எழுத்தாளர் சுஜாதாவால் சிறந்த புத்தகமாகத் தேர்வானது. 'சில்லுக்கருப்பட்டி’ என்ற என் நூல் சாகித்ய அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. திரைப்படப் பாடல்களும் எழுதியுள்ளேன்!'' என்கிறார் வைகைச் செல்வன்.

உஞ்சை அரசன்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர். தலித் இலக்கியத்தின் முன்னோடிகளாக அறியப்படும் 10 பேரில் ஒருவர். இவர் தொடங்கிய 'மனுசங்க’ இதழ், மிகப் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது.

''2002-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்​தேன். 30 வருடங்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினேன். தலைமை ஆசிரியராகவும் 10 வருடங்கள். 2004-ல் பணியைவிட்டு, அரசியலில் பங்கெடுத்தேன். 2006-ல் சீர்காழி தொகுதியில் 3,000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றேன். மீண்டும் இந்த முறை இதே தொகுதியில் நிற்கிறேன்! ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கு அரசியல் மூலம் மட்டும்தான் நல்ல வழி பிறக்கும் என்பது எனது நம்பிக்கை!'' என்கிற இவர், 'எகிறு’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார்.

ஜவாஹிருல்லா: அ.தி.மு.க. கூட்டணியில் ராமநாத​புரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார். எம்.பி.ஏ. படித்தவர். இணையம் இந்தியாவில் அறிமுகமான காலகட்டத்தில், 'இணைய விளம்பரங்கள்’ குறித்து ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.

''25 ஆண்டுகள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தேன். 1990-ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தேன். ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்டு, சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். அரசியலில் இருந்தால்தான், மக்களுக்கு நல்ல சேவைகளைத் தர முடியும்!'' என்கிற இவர் எழுதிய நூல்களில், 'பாலஸ்தீன வரலாறு’ முக்கியமானது.

பால் பாஸ்கர்: பா.ம.க-வின் தற்போதைய திண்டுக்கல் வேட்பாளர். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். 'சுற்றுச்சூழல் கல்வி’ தொடர்பாகத் தற்போது காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். 'சுற்றுச்சூழல் புதிய கல்வி’ மாத இதழின் ஆசிரியர். 'சுற்றுச்சூழல் வழக்குகள்’, 'உச்ச நீதிமன்றத்தின் முற்போக்குத் தீர்ப்புகள்’ ஆகியவை இவரின் குறிப்பிடத்தகுந்த நூல்கள்.

''குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக 'அமைதி தொழிற்பள்ளி’ என்று ஒரு பள்ளியை நடத்தி வருகிறேன். 'அமைதி கல்வியியல் கல்லூரி’ ஒன்றையும் நடத்தி வருகிறேன். 'பசுமை இயக்கம்’ என்ற 18 மணி நேர வானொலிச் சேவையும் செய்து வருகிறேன். 18 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். 4 ஆங்கிலப் புத்தகங்கள்'' என்கிறார்.

அசன் முகம்மது ஜின்னா: ஸ்டாலின் தொடர்ந்து வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் இப்போது தி.மு.க. வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னா. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்தவர். ஸ்டாலினுக்காக ஒரு இணையத்தளம் உருவாக்கியதில் முக்கியப்பங்கு இவருக்கு இருந்தது. ஈவ் டீசிங்கில் கொல்லப்பட்ட சரிகாஷா வழக்கில் குற்றவாளிகளுக்கு பத்தாண்டு தண்டனை வாங்கிக் கொடுத்தது அரசு வழக்கறிஞராக இவரை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. தகவல் தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் போன்றவை குறித்து நிறைய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.

2004-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுக்குழு சார்பில் அமெரிக்கத் தேர்தலைப் பார்வையிடச் சென்றது. இந்தியா சார்பில் சென்ற இவர், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலின் பவுலிடம், 'இந்தியாவை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க அமெரிக்க்கா உதவ வேண்டும்’ என்று நேரடியாக இவர் கோரிக்கை வைக்க... ''இந்த இளைஞரின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்!'' என்றாராம் அவர்!

இவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் தேர்த​லுக்குப் பின் பார்ப்போம்!

- ந.வினோத்குமார்