.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, May 29, 2009

வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தவேண்டும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மின்னணு வாக்குப்பதிவிற்கு பதிலாக, வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தவேண்டும்

ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.


சென்னை, மே.28 இனி நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவிற்கு பதிலாக பழைய முறைப்படி வாக்கு சீட்டுகள் முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் அ.தி.மு.க. மட்டும் 9 இடங்களை கைப்பற்றியது. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை ஆனால் தி.மு.க. கூட்டணி 28 இடங்களை பிடித்து வெற்றிபெற்றது.

பா.ம.க பொதுக்குழு கூட்டம்
கடந்த 25ம் தேதி நடைபெற்ற பா.ம.க பொதுக் குழுக் கூட்டத்திலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நடைபெறு்ம் முறைகேடுகள் பற்றி செயல்முறை விளக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு தடை விதிக்கக்கோரி தேமுதிக மனுத்தாக்கல்.
27-5 அன்று தேமுதிக சார்பில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குப் பதிவு இயந்திரத்தின் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மனிதநேய மக்கள் கட்சி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதை முதலில் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டது மனிதநேய மக்கள் கட்சிதான். தமுமுகவின் பொதுச் செயலாளர் ஹைதர்அலி அவர்கள் தொலைக்காட்சி நேர்காணலின் மூலமும் விளக்கினார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் தொடர்பு கொண்டு முறைகேடுகள் பற்றி எடுத்துரைத்தார். இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்குப் பதிவு இயந்தின் முறைகேடு பற்றி விழிப்படைந்துள்ளன அல்ஹம்மது லில்லாஹ்.


அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்
இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போயஸ்கார்டனில் இருந்து கார்மூலம் நேற்று மாலை 4 மணிக்கு தலைமைக் கழகம் வந்தார்.

ஜெயலலிதாவுக்கு வரவேற்பு
அவரை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் வரவேற்று செயற்குழு நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றனர். ஜெயலலிதா அங்கு சென்றதும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.

கட்சியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி, தோல்விகள் குறித்தும் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

வாக்குச் சீட்டுகள் தான் பயன்படுத்தப்பட வேண்டும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டு உள்ளதை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

எனவே, இனி நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவிற்குப் பதிலாக, பழைய முறைப்படி காகித வாக்குச் சீட்டுகள் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comment:

Subu said...

மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ? சாத்தியம் என்றே தோன்றுகிறது...

மென்பொருளை மாற்றுவது செய்யக்கூடியதே....

மீள்பார்வைக்கு, மீண்டும் எண்ண காகித வாக்குகள் இல்லை

மேலும் சிந்தனைகள்

http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html