மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து!
ஓட்டுச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் கட்சிகள்!!
நடைபெற்ற 15வது மக்களவை தேர்தலில் ஆளுங்கட்சியினரின் பண பலம், படை பலம், அதோடு தொழில்நுட்ப முறைகேடுகள் என்று ஜனநாயகப் படுகொலைகள் படு ஜோராக அரங்கேறியது.ஓட்டுச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் கட்சிகள்!!
கடந்த தேர்தல் காலங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் கோளறு என்றும் எந்தச் சின்னத்திற்கு போட்டாலும் ஒரே சின்னத்திற்கு பதிவாகிறதென்றும் அறிக்கைகள் விடுவார் அதோடு சரி... அந்த அறிக்கைகளை கிண்டல் செய்து பத்திரிக்கைகள் "ஜெயலலிதாவின் அதே புலம்பல்கள்" என்று கட்டம் கட்டி செய்திகள் வெளியிடும் அதோடு முடிந்தது அந்த தொழில் நுட்ப தில்லுமுல்லுகள்.
அதே போன்று இப்போது நடைபெற்ற 15வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போதும் பத்திரிக்கையாளர்களுக்கு நேர்காணல் அளித்த ஜெயலலிதா புகார் தெரிவித்தார் ஆனாலும் அது பெரிய அளவில் கொண்டு செல்லப்படவில்லை.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்த மே 16ம் தேதி மாலை நமக்குக் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களின் எண்ணிக்கையின் அளவை விட பல மடங்கு குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவித்ததே அவர்களின் திருட்டுத் தனம் வெளியாக காரணமாகிவிட்டது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "களாவாங்கத் தெரியாதவன் தலையாரி வீட்டில் களவாண்டான்" என்று.
உடனே மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமுமுகவின் தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ அவர்கள் "ஓட்டுச் சீட்டு முறையே மீண்டும் கொண்டுவரவேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டர்.
த.மு.மு.கவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மின்அனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மோசடிகளை மக்களுக்கு எடுத்து வைத்ததோடு பாதிக்கப்பட்ட அனைத்து கட்சித்தலைவர்களையும் தொடர்பு கொண்டு விழிப்புணர் ஏற்படுத்தினார் அதன் விளைவு நேற்று நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுவில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மோசடிகளை மருத்துவர் ராமதாஸ் செயல்முறை விளக்கத்துடன் பத்திரிக்கையாளர்களுக்கு காண்பித்தார்.
இன்று தேமுதிக சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு தடை விதிக்க கோரியும், வாக்குச்சீட்டு முறை மூலம் தேர்தல் நடத்தக் கோரியும் தே.மு.தி.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைமை நிலையச் செயலர் பி.பார்த்தசாரதி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், '' நாட்டின் 15வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் மே 13ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. சார்பில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரத்தில் வாக்குப்பதிவின் போது முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெற்றது. குறிப்பாக மத்திய சென்னை தொகுதியில் எந்த சின்னத்தை அழுத்தினாலும் ஆளுங்கட்சி வேட்பாளரின் சின்னத்திற்கு பதிவு செய்யும் வகையில் இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் விருதுநகர் தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பதிவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் தே.மு.தி.க. சின்னத்தை அழுத்தும் போது காங்கிரஸ் சின்னத்தில் லைட் எரிந்தது. பல்வேறு இயந்திரங்களில் 5 வாக்குக்கு ஒரு வாக்கு ஆளுங்கட்சி சின்னத்துக்கு பதிவாகும் வகையிலும் இயந்திரங்களில் நிரல்கள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இதேபோல் மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றன. இவ்வாறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுமொத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் புகார்கள் தெரிவித்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை இடைத்தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் தேர்தலின் போது வாக்குச்சீட்டு முறை மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கோடை விடுமுறைகால நீதிபதிகள் வி.தனபாலன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து 3 வாரத்திற்குள் பதில்தரும்படி மத்திய அரசு, தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு தாக்கீது அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment