.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, May 30, 2009

அடி மட்டத்திலிருந்து உயர்ந்த மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் துணை முதல்வராக திமுகவின் பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, துணை முதல்வர் சகோதரர் ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க நீதியின் குரல் சார்பாக எமது வாழ்த்துக்கையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துணை முதல்வராக பொருப்பேற்றுள்ள மு.க ஸ்டாலினைப் பற்றி...
வாரிசாக திணிக்கப்பட்டவர் என்று மு.க.ஸ்டாலின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் அடுக்கினாலும் கூட அவரது வளர்ச்சி, சாதாரண திமுக தொண்டர்களைப் போன்றதுதான்.

அதே நேரத்தில் திமுக தலைவரின் மகன் என்பதால் அவருக்கு சில நேரங்களில் சிறப்பு சலுகைகளும் கிடைத்ததும் உண்மை.

1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின். 2வது மகனுக்கு பட்டுக்கோட்டையாரின் நினைவாக அழகிரி எனப் பெயரிட்ட கருணாநிதி, 3வது மகனுக்கு ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார்.

ஒரு முறை, தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டியதில் உள்ள உள்ளார்ந்த காரணத்தை விளக்கிய கருணாநிதி,

மூத்த மகனுக்கு அவருடைய தந்தை முத்துவேலரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக முத்து என்று பெயரிட்டதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கை வீரரான புதுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக இரண்டாவது மகனுக்கு "அழகிரி" எனப் பெயர் வைத்தாகவும், சோவியத் நாட்டின் புகழ்மிக்க தலைவரான ஜோசப் ஸ்டாலின் பெயரால் மூன்றாவது மகனுக்கு ஸ்டாலின் என வைத்ததாகவும், தமிழ் மொழியின்பால் கொண்டுள்ள பற்றின் காரணமாக கடைசி மகனுக்கு தமிழரசு எனப் பெயரிட்டு மகிழ்ந்ததாகவும் கூறினார்.

பள்ளியில் ஆரம்பித்த போராட்டம்...

ஸ்டாலினின் போராட்ட வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் புரட்சியாளரின் பெயரைக் கண்டு நடுக்கமுற்று அப்பள்ளியில் பையனைச் சேர்க்க வேண்டுமெனில் அவனுடைய பெயரை மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த நிபந்தனையினைக் கேள்விப்பட்ட கருணாநிதி, பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரை மாற்ற முடியாது என்று கூறி விட்டார்.

இதையடுத்து ஸ்டாலின் அப்பள்ளியில் சேர முடியவில்லை. சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் சேர்ந்தார்.

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாக இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார். கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள்.

மதுரையில் தொடங்கிய இளைஞரணி வாழ்க்கை...

இப்படிப் படிப்படியாக இளைஞரணி அமைப்பை வளர்த்து அதை அமைப்புரீதியாக 1980ம் ஆண்டு இளைஞரணி மதுரையிலே ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு 1980ம் ஆண்டு திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

மிசாவில் அடிபட்ட ஸ்டாலின்...

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர அடி உதை விழுந்தது.

சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார்.

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது.

அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது. இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது.

அன்பழகன் வைத்த போட்டி...

புராணத்தில் ஒரு பழத்திற்காக போட்டியிட்ட பிள்ளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார்.


இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார்.

02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடைபோட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கருணாநிதி பதிலளித்தார்.

மேயரானார்...

அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை.

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு 'ஆசிட் டெஸ்ட்' வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் கருணாநிதி.

ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. கவுன்சிலர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996ம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. துப்புரவுப் பணிக்கு முன்னுரிமை அளித்தார்.

சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான ஓனிக்ஸ் நவீன முறைகளைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வந்தது. சென்னையில் மூன்று மண்டலங்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதற்காக பகிரங்க ஒப்பந்த புள்ளி மூலம் இந்நிறுவனம் தெரிந்தெடுக்கப்பட்டது. இவ்வாறு சென்னை மாநகராட்சியே குப்பைகளை அகற்றுவதில் நவீன
முறைகளைப் பயன்படுத்திய முதல் மாநகராட்சியாகும்.

மேம்பாலங்கள்...

மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிகப் பெரிய சாதனை சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டியதுதான். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெற்று 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது.

இத்தகைய சாதனைகளின் பலனாக 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெ பறித்த பதவி...

இருப்பினும் 2002ம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது.

இதன் காரணமாக, தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

முதல் முறையாக அமைச்சர்...

கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் மு.க.ஸ்டாலின்.

இதுதான் முதன் முதலாக ஸ்டாலின் ஏற்ற அமைச்சர் பதவி.

ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் ஸ்டாலின். இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து தட்டிப் பறித்தவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984ம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

நாடகத்தில் ஆர்வம்...

தந்தையைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின்.

அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.

இந்த அனுபவமே பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது ஸ்டாலினை.

1993ம் ஆண்டில் இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியருமானார். பல்வேறு தலைப்புகளில் அரசியல், திரைப்படச் செய்திகள், கதைகள் , கவிதைகள், வினா விடைகள் என அனைத்தும் அதில் இடம் பெற்றிருந்தன. 1994 ம் ஆண்டு வரை இளைய சூரியன் வெளிவந்தது.

தந்தையைப் போலவே எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இதன் பயனாக முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

நெல்லையில் இளைஞரணியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுதான் ஸ்டாலினின் அரசியல் மணி மகுடத்திற்கான முதல் அடிக்கல் எனலாம்.

சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் என்று உயர்ந்தார் ஸ்டாலின்.

அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விட, திமுகவுக்குள்ளேயே வைகோ என்ற புயலை சமாளிக்கத்தான் ஸ்டாலின் பெரும் பாடுபட்டார்.

வைகோவின் விஸ்வரூப வளர்ச்சி ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது கருதப்பட்டது. ஆனாலும் காலத்தின் கோலமாய், வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்டாலினுக்கான தடைக்கல் முற்றிலும் நீங்கியது.

வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று கூடக் கூறலாம்.

இருப்பினும் சொந்த சகோதரரான மு.க.அழகிரி இன்னொரு சவாலாக உருவெடுக்கவே மீண்டும் திமுகவுக்குள் குழப்பம். ஆனால் இதையும் கூட கருணாநிதி படுசாதுரியமாக சமாளித்தார்.

இருவருக்கும் இடையில் நிலவிய பூசலை தணித்து, இருவரையும் சேர்ந்து செயல்பட வைத்தார். அவரவர் பணியை அவரே பிரித்துக் கொடுக்க, சகோதரர்கள் இருவரும் இப்போது இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து, இயைந்து செயல்பட்டு வருகின்றனர்.

40 வயதுக்கு மேல் மதிக்க முடியாத அளவுக்கு ஒரு டிரிம்மான தோற்றம் ஸ்டாலினுக்கு. பலரையும் வியப்படைய வைக்கும் விஷயம் இது. உடற்பயிற்சியை தினசரி தவறாமல் மேற்கொள்பவர் ஸ்டாலின்.

இதுதவிர கிரிக்கெட், கம்ப்யூட்டர் கேம்ஸ், பேட்மின்டன், செஸ், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர். தந்தையைப் போலவே கிரிக்கெட் மீது தனிப் பாசம் கொண்டவர்.

மு.க.ஸ்டாலினின் இன்றைய வளர்ச்சி துணை முதல்வர் என்ற நிலையில் இருந்தாலும் கூட அவரது அடுத்த விஸ்வரூபம் என்ன என்று சொல்லாமலேயே அனைவருக்கும் தெரியும்.

No comments: