.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, June 19, 2009

நியாயவிலைக் கடைகளில் அரிசி வழங்க நிபந்தனை விதிப்பதாக பொதுமக்கள் புகார்!

ஒரு ரூபாய் அரிசி வழங்க நியாய விலைக் கடைகளில் நிபந்தனை விதிப்பதாக பொதுமக்கள் புகார்!

நியாயவிலைக் கடைகளில் சோப்பு, சேமியா வாங்கவேண்டும்! மண்எண்ணை, பாமாயில் கூடுதல் விலைக்கு விற்பனை!!


தமிழக அரசுக்கு கெட்டபெயரையும் பொதுமக்களுக்கு துரோகமும் செய்து வரும் நியாயவிலை கடைகாரர்கள், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நீதி வழங்குமா?

சென்னை, ஜூன்.18 நியாயவிலைக்க‍டைகளில் சோப்பு, சேமியா வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி வழங்குவதாகவும், மண்எண்ணை, பாமாயில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசி
ஏழை நடுத்தர மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு நியாயவிலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் பொருட்களை வழங்கிவருகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கிராமபகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.50-க்கு அனைத்து மளிகை பொருட்களும் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படுவது ஏழைகளுக்கு பயன் உள்ளதாக உள்ளது. பொதுமக்களுக்கு பயன்உள்ள இந்த திட்டங்களை நியாயவிலைகடைகாரர்கள் சரியாக செயல்படுத்துவது இல்லை என்பது அனைவரது குற்றச்சாட்டாகும்.

இப்படிப்பட்ட நியாயவிலைக் கடைக்காரர்கள் தமிழக அரசுக்கு கெட்ட பெயரையும், பொதுமக்களிடையே வெறுப்பையும் ஏற்படுத்திவருகிறார்கள்.

நியாயவிலை கடைகளுக்கு பெண்கள்தான் அதிக அளவில் செல்கிறார்கள். இவர்களை எந்த எந்த வகைகளில் ஏமாற்ற முடியுமோ அந்த வகையில் எல்லாம் அந்தக் கடைக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள்.

சோப்பு வாங்கினால்தான் அரிசி
ரூ.45 மதிப்புள்ள சோப்பு அல்லது சேமியா வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி, மண்எண்ணை தரமுடியும் என்று கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகிறார்கள்.

வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ அரிசி ரூ.15-க்கு குறைவாக கிடைப்பது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒரு ரூபாய் அரிசிக்கு கடும்கிராக்கி உள்ளது. இட்லி மாவு கடைக்காரர்கள், இடியாப்பம் தயார் செய்து விற்பனை செய்பவர்களுக்கு நியாயவிலை கடைகாரர்கள் ஒரு ரூபாய் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசியை வாங்குவதற்காக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் சென்னைக்கு படையெடுத்து வருகிறார்கள். இவர்கள் ஒரு ரூபாய் அரிசியை ரூ.4-க்கு வாங்கி ஆந்திராவில் ரூ.10-க்கு விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள்.

ரெயில் மூலம் அரிசி கடத்தல்
இவர்கள் நியாயவிலை அரிசியை ஆந்திராவுக்கு ரெயில் மூலம் கடத்திச்செல்வதாக கூறப்படுகிறது. நியாயவிலை கடைகளில் ஒரு லிட்டர் மண்எண்ணை ரூ.8.40-க்கு விற்பனை செய்யப்படுவதை கடைக்காரர்கள் முறையாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது இல்லை. கூடுதல் விலைக்கு புரோக்கர்களுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. நியாயவிலை கடைகளில் வாங்கப்படும் மண்எண்ணை ஒரு லிட்டர் ரூ.25-க்கு மேல் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். நியாயவிலை கடைகளில் உள்ள பாமாயிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் புகார் கூறப்படுகிறது.

நியாயவிலை கடைகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் புகார் மனுக்கள் எழுதிப்போட்டால் அவற்றை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். நியாயவிலைக்கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரைதான் முறையாக செயல்படுகிறது. மதியம் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சரியாக இயங்குவது இல்லை. இந்த நேரத்தில் கடைகளுக்கு சென்றால் கணக்கு பார்க்கவேண்டும் என்று கூறி பொதுமக்களை கடைக்காரர்கள் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

தமிழக அரசுக்கு கெட்டபெயரையும் பொதுமக்களுக்கு துரோகமும் செய்து வரும் நியாயவிலை கடைகாரர்கள், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நீதி வழங்குமா?

No comments: