.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, June 4, 2009

முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றுள்ளார்.

பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றுள்ளார்.

அவருக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
இந்திய பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அனைத்துக் கட்சி தலைவர்கள்
பாராளுமன்றத்தின் சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் முயற்சி செய்தனர். எனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீரா குமாரை சபாநாயகராகவும், பா.ஜனதாவை சேர்ந்த கரிய முண்டாவை துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பாராளுமன்றம் கூடியதும் மீரா குமாரை சபாநாயகராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை சோனியா முன் மொழிந்தார். அது போல, அவை முன்னவரும் மத்திய மந்திரியுமான பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாடி), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), லாலு பிரசாத் (ராஷ்டிரிய ஜனதா தளம்), சரத்பவார் (தேசியவாத கங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), டி.ஆர்.பாலு (தி.மு.க.) என அனைத்து கட்சி தலைவர்களும் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.

தந்தை அமர்ந்த இருக்கை
அதைத் தொடர்ந்து மீரா குமாரை சபாநாயகராக்கும் தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. இந்திய பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீர்மானம் நிறைவேறியபோது முன் வரிசையில் மீரா குமார் அமர்ந்து இருந்தார்.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அத்வானி மூன்று பேரும் அவரை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது அனைத்து எம்.பி.க்களும் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் மீரா குமாரை வாழ்த்தி பேசினர்.

மீரா குமாரின் தந்தையும் முன்னாள் துணை பிரதமருமான ஜெகஜீவன் ராம் பாராளுமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்துள்ளார். 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் 7வது, 8வது பாராளுமன்ற தொடக்கத்தில் அவர் தற்காலிக சபாநாயகராக அவர் செயல்பட்டார். தந்தை ஜெகஜீவன் ராம் அமர்ந்த இருக்கையில் தற்போது மீரா குமார் அமர்ந்துள்ளார்.

பிரதமர், அத்வானி பாராட்டு
மீரா குமாரை பாராட்டி பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘‘பாராளுமன்ற சபாநாயகராக மீரா குமார் பதவியேற்று இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். தூதரக அதிகாரியாக, மத்திய மந்திரியாக 25 ஆண்டுகால எம்.பி.யாக அவர் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. அந்த அனுபத்தை கொண்டு சபாநாயகராக சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரது தந்தையுடன் (ஜெகஜீவன் ராம்) நான் பணியாற்றி இருக்கிறேன். அவரை போலவே மீரா குமாரிடமும் அறிவு, சிந்தனை, அனுபவம் ஆகியவை உள்ளன‘‘ என்றார்.

மீரா குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் அத்வானி கூறுகையில், "பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்திச் செல்வதற்கு மீரா குமாரின் நீண்ட கால பொது வாழ்க்கை அனுபவங்கள் கை கொடுக்கும் என்று நம்புகிறேன்" என்றார். அதைத் தொடர்ந்து பிற கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகர் மீரா குமாரை பாராட்டி பேசினர்.

பிற கட்சி தலைவர்கள்
மதசார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய மந்திரியுமான சரத் பவார், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சிவசேனா எம்.பி. சந்திரகாந்த் கெய்ரே, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, தெலுங்கு தேசத்தை சேர்ந்த நாகேஸ்வர ராவ், அகாலிதளத்தை சேர்ந்த ரதன் சிங் அஜனாலா உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்தினர்.

தி.மு.க. சார்பாக பேசிய முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. சார்பாக பேசிய முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையும், "மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும்" என வலியுறுத்தினர்.
டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘முதல் பெண் சபாநாயகரை தேர்ந்தெடுத்ததன் மூலமாக பெண்கள் மசோதாவை நிறைவேற்றுவதற்கான சரியான அறிகுறி தென்படுகிறது. இந்தியாவில் உள்ள தலித் மக்களுக்கும் நல்ல செய்தி கூறப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்றத்திலேயே 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்‘‘ என்றார்.

தம்பித்துரை பேசும்போது, "பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும்" என்று உறுதி அளித்தார்.

சபாநாயகர் மீரா குமார் உரை
இறுதியாக ஏற்புரையாற்றிய மீரா குமார், "இந்திய பாராளுமன்றத்தின் 57 ஆண்டுகால வரலாற்றில் ஒரு பெண் சபாநாயகரான வரலாற்று நிகழ்ச்சி நடந்துள்ளது. கணேஷ் வாசுதேவ் முதல் சோம்நாத் சட்டர்ஜி வரை முன்பு இருந்த சபாநாயகர்களின் வழிப்படி இந்த பதவிக்கான மரியாதையை காப்பாற்றுவேன். அவையில் அனைத்து கட்சியினருக்கு உரிய வாய்ப்பு அளிப்பேன் என உறுதி அளிக்கிறேன். எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவோ, ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ ஒரு போதும் நடுநிலையை தவற மாட்டேன்" என்று கூறினார்.

மேலும் தனது உரையில், 58 பெண் எம்.பி.க்கள் (மீரா குமார் தவிர) தேர்வு செய்யப்பட்டு இருப்பதையும் 302 எம்.பி.க்கள் புதியவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் ராஜ்ஜியம்
ஏற்கனவே, நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகராகவும் ஒரு பெண் (மீரா குமார்) தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் முழுக்க பெண்கள் ராஜ்ஜியம் அமலுக்கு வந்துள்ளது.
இது மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 59 பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மந்திரி சபையிலும் 28 வயதான அகதா முதல் கணிசமான பெண்கள் உள்ளனர்.

வாழ்க்கை குறிப்பு
முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளாக 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் மீரா குமார் பிறந்தார். 1973-ம் ஆண்டு முதல் தூதரக அதிகாரியாக பணியாற்றிய மீரா குமார், 1985-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். உத்திர பிரதேச முதல் மந்திரி மாயாவதி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை தேர்தலில் தோற்கடித்து இருக்கிறார்.

ஐந்து முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள அவர், 1999-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். ஸ்பானிஷ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சட்டம் முடித்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாகவும் பதிவு செய்துள்ளார். அவரது கணவர் மஞ்சுள் குமார், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது. மீரா குமார் தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

No comments: