.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, June 28, 2009

இஸ்லாம் மதத்துக்கு நான் எதிரானவளா? திலகவதி ஐபிஎஸ் விளக்கம்


அண்மைக்காலத்தில் நடந்துவரும் சில கொலைகளின் பின்னணி சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன. சென்னையில் பள்ளிப்பருவத்தில் காதலில் ஈடுபட்ட யாஸ்மின் என்ற பெண்ணை அவரது தந்தை சலீமே குத்திக் கொன்றார். அதுபோலவே சேலம் மாவட்டத்தில், மகன் விஜயகுமார் சம்பாதித்து வருவதை அவரது அப்பா நடேசன் குடிப்பதற்காக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் நடேசனை விஜயகுமார் கொன்று போட்டார். இச்செய்திகளை "மகளைக் கொன்ற அப்பன் அப்பனைக் கொன்ற மகன்'’என்ற தலைப்பில் ஜூன் 6 தேதியிட்ட நக்கீரனில் வெளியிட்டிருந்தோம்.

ரத்த உறவுகளுக்குள்ளேயே கொலை வெறி தாண்டவமாடுவது தொடர்பான சமுதாயக் காரணங்கள் மற்றும் உளவியல் காரணங்கள் பற்றி கருத்து தெரிவித்த திலகவதி ஐ.பி.எஸ், "பெற்றோர் முடிவுக்கு எதிராக காதலில் ஈடுபடும்போது, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக பெற்றோரே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்த சம்பவம் புதிதானதல்ல' என்று சொல்லியிருந்ததை வெளியிட்டிருந்தோம்.

திலகவதியின் கருத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடமிருந்து கடிதங்கள், தொலை நகல்கள், மின்னஞ்சல் வாயிலாக எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. அன்பையும் அமைதியையும் வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கத்தில் கொலைக்கு இடமேயில்லை என வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களையும் தொலை நகல்களையும் அனுப்பியுள்ளனர்.

""எந்த உயிரையும் அநியாயமாகக் கொல்லுமாறு இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. ஒரு ஆத்மாவின் ரத்தம் எப்போது பூமியில் சிந்தப்படவேண்டும் என்பதை படைத்த இறைவன் தெளிவாகச் சொல்லியுள்ளான். "எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ (ஒரு கொலையைத் தடுக்கும் விதத்தில்), அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்' என்கிறது திருமறை. யாரோ ஒரு தனி மனிதன் செய்ததை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாம் மீதும் பழி சுமத்துவதா?''’என கேட்டிருக்கிறார் ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் பி.எஸ்.சாதிக்.

""அரபு நாடுகளில் இத்தகையக் கருணைக் கொலைகள் சர்வசாதாரணமானது எனக் கூறியிருப்பது உண்மையெனில், கடந்த ஓராண்டில் குடும்ப கவுரவத்திற்காக கருணைக் கொலை செய்த அரபுகளின் எண்ணிக்கையைத் தந்திருக்க வேண்டும். மேலும், அரபுநாடுகள் இஸ்லாத்தின் குத்தகைதாரர்கள் அல்ல. அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் இஸ்லாமியர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதுமில்லை. அரபு நாடுகளில் நடப்பவை அனைத்துமே இஸ்லாமிய செயல்பாடுகள் என ஒருவர் கருதுவாரேயானால் அவர் தவறான புரிந்து கொள்ளலில் இருக்கிறார் என்றே அர்த்தம்.'' என்கிறார் மின்னஞ்சலில் கருத்தைப் பதிவு செய்திருக்கும் அபுசுமைய்யா.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) மாநிலத் துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, ""அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடைபெறுகின்றன என்பதற்கு அணுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகம் காலத்திற்கு முந்தைய அறியாமைக்கால அரபுகள் பெண் குழந்தைகளைச் சாபக்கேடாக நினைத்து உயிருடன் புதைத்து வந்தார்கள். இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு, பெண் குழந்தைகளை இறையருளின் அடையாளமாய் போதித்தார்கள். இரு பெண் குழந்தைகளைச் சிறப்பாக வளர்த்தவர்களுக்கு சுவர்க்கம் உறுதி என்று நவின்றார்கள். உண்மை இவ்வாறிருக்க, பெற்ற பிள்ளையைக் கொல்வது அந்த மதத்திற்குப் புதிதானதல்ல என்ற திலகவதியின் கருத்து கண்டனத்திற்குரியது.

இரண்டு கொலைகள் நடந்திருக்க, அதில் ஒன்றை மட்டும் மதத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது அறிவுநாணயமுள்ள செயலா? தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருந்தாலும் அவர்களைக் கொல்வது ஒரு ஷத்ரியனின் கடமை என கிருஷ்ண பரமாத்மா போதித்தது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது. 19 வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையைக் கொன்றது இந்து மதத்திற்குப் புதிதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சமூக ஒற்றுமைக்கு உதவும்'' என விரிவாக கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் எதிர் வினைகள் குறித்து திலகவதி ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்...

""சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் மனித ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கட்டுப்பாடு உடைய ஒரு தந்தையாக இருந்திருப்பார். தான் மிகவும் அன்பு வைத்திருக்கும், பாசம் வைத்திருக்கும் தன் மகள், குடும்ப கௌரவத்துக்கு இழுக்கு வரும்படி நடந்துவிட்டாளே என்கிற வேகத்தில் யாஸ்மினை கொலை செய்திருக்கலாம்.

சலீமை பொறுத்தவரை அவர் மனநலம் பாதிக்கப் பட்டவரோ, சைக்கோவோ, கொலைவெறி கொண்ட மிருகமோ அல்ல. தன் மகள் யாஸ்மின் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கிறார். இவ்வளவு பாசமானவர் கொஞ்சம் அமைதியாக, அன்பாக பேசி தன் மகளுக்கு புரிய வைத்திருந்தால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்காது'' என்பதுதான் என் கருத்து.

அரபு நாடுகள் மற்றும் சில மேற்கத்திய நாடுகளில் ஐர்ய்ர்ன்ழ் ஃண்ப்ப்ண்ய்ஞ் (கௌரவக் கொலைகள்) நடந்திருப்பதை ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகளின் அறிக்கைகள் வெளிப்படுத்தி யிருக்கின்றன. அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடக்கின்றன என்பது என் சொந்தக் கருத்தல்ல, அது நான் படித்த விஷயம் அவ்வளவுதான்.

பாசத்துக்குரிய மகளைக் கொன்று குற்றவாளியாக நிற்கும் தனிப்பட்ட சலீமை பற்றி நான் சொன்ன கருத்துகள் மத ரீதியாக தொடர்புபடுத்தப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கின்றன. நான் சொன்ன கருத்தை மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய தில்லை. நான் இஸ்லாம் மதத்திற்கு எதிராக இல்லை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்கிறார் திலகவதி ஐ.பி.எஸ்.

சில வருடங்களுக்கு முன்பு, ""நபிகள் நமக்குச் சொன்னவை'' என்ற தலைப்பில் நபிகள் நாயகத்தின் கருத்துகளை.... எளிமையான மொழியில் நூலாக்கியிருக்கிறார் திலகவதி ஐ.பி.எஸ். என்பதையும் இங்கே குறிப்பிடுகிறார்கள் அவரின் நண்பர்கள்.

-சகா
படம் : ஸ்டாலின்

நன்றி: நக்கீரன்

1 comment:

Anonymous said...

அவர் வேண்டுமென்றே(காழ்ப்புணர்வில்) கூறியிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம்.அவர் தெரியாமல் கூறியிருந்தால் அவருக்கு இஸ்லாமைப்பற்றி எடுத்து கூறுவது நம்முடைய கடமை.