.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, June 23, 2009

கலகவதி ஆகலாமா திலகவதி!

நக்கீரன் 20.06.2009, தேதியிட்ட இதழின் முகப்புக்கட்டுரையான ‘மகனைக் கொன்ற அப்பன், அப்பனைக் கொன்ற மகன் குற்றப்பின்னணி என்ற கட்டுரையில் (பக்-7) காவல்துறை அதிகாரியும், இலக்கியவாதியுமான திருமதி திலகவதியின் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் கருத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதால் இவ்விளக்கத்தை எழுதுகிறோம்.

”குடும்பகௌரவத்தைக் காப்பாற்ற பெற்றோர்களே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல” என்று கருத்துகூறியுள்ளார் திலகவதி.

அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடக்கின்றன என்பதற்கு அனுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக கௌரவக்கொலைகள் நடக்கின்றன என்பது அபத்தமான அவதூறு.

‘சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல’ என்ற நச்சுக்கருத்தை திலகவதி போன்ற நல்லிலக்கியவாதி வெளிப்படுத்துவது வேதனைக்குரியது.

இஸ்லாம் மார்க்கம் இத்தகைய கொலைகளை கொள்கையளவில் அங்கீகரிப்பது போன்ற தோற்றத்தை திலகவதி ஏற்படுத்துகிறார்.

”இது அமைதி மார்க்கம் இதில் எவ்விதமான நிர்பந்தமும் கிடையாது” என்கிறது திருக்குர்ஆன். இறைக்கட்டளையையே நிர்பந்தப்படுத்தி ஒருவரை ஏற்கச் செய்ய இஸ்லாம் அனுமதிக்காத போது. தன்கருத்துக்கு ஒவ்வாத பிள்ளையைக் கொல்வதற்கு எப்படி அனுமதிக்கும்?

பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகத்திற்கு முந்திய காலத்தில் அறியாமைக்கால அரபுகள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள். பெண் குழந்தைகளை சாபக்கேடாகக் கருதினார்கள்.

இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு பெண்குழந்தைகளை இறைஅருளின் அடையாள்மாய் போதித்தார்கள். இருபெண் குழந்தைகளை சிறப்பாக வளர்த்தவருக்கு சுவர்க்கம் உறுதி என்று நவின்றார்கள்.

திருக்குர்ஆனின் 81 வது அத்தியாயத்தின் 8,9 வசனங்கள் பெண் சிசுக்கொலை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றன.

குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களில்லை என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் இப்படி ஏராளமான சான்றுகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

உண்மை இவ்வாறிருக்க பெற்ற பிள்ளையையக் கொல்வது அந்த மதத்திற்குப் புதிதானது இல்லை என்ற திலகவதியின் கருத்து வன்மையான கண்டனத்திற்குரியது.

”சொந்தப்பிள்ளையை அல்ல அநியாயமாக எந்த ஒரு மனித உயிரை எவர் கொன்றாலும் அவர் உலக மக்கள் அனைவரையும் கொன்றவர் போலாவார். ஒரு மனித உயிரை வாழவைத்தவர் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” என்று திருக்குர்ஆன் போதிக்கிறது. இத்தகையக் கட்டளைகளைக் கொண்டுள்ள மார்க்கத்தை கொலைகளை அங்கீகரிக்கும் மதமாக திலகவதி சித்தரித்துள்ளார்

காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தனிவாழ்வில் ஒழுங்கீனமானவராக இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரும் அப்படிப்பட்டவர்களே என்று கூறமுடியுமா?

மகளின் மீது அதீதபாசம் வைத்திருந்த ஒருவர் தன் கண்முன்னால் மகள் சீரழிவதை சகிக்க முடியாமல். வெறியோடும் அறிவீனத்தோடும் செய்த கொலைக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போட்டதே முதலில் தவறு. இந்தக் கொலையை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. குற்றச் சம்பவத்தையும், அதைச் செய்தவர்களின் மதத்தையும் இணைத்துப் பார்ப்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே நடக்கிற கருத்தியல் வன்கொடுமை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். இரண்டு சம்பவங்கள் நடந்திருக்க, ஒரு சம்பவத்திற்கு மட்டும் மதத்தை முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயலா? ‘

மஹாபாரதத்தில், ‘என் உறவுகளை பதவிக்காக நான் கொல்லமாட்டேன்’ என்று அர்ஜுனன் மறுக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருத்தாலும் அவர்களைக் கொலை செய்வது ஒரு ஷத்ரியனின் கடமை என்று போதிக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. இது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது.

பத்தொன்பது வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையான நடேசனைக் கொன்றுள்ளதற்கு கீதையை ஆதாரம் காட்டி தந்தையைக் கொல்வது இந்துமதத்திற்குப் புதியதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப்போடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் சமூக ஒற்றுமைக்கு உதவும். திலகவதி தன்கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

No comments: