.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, June 27, 2009

மர்மமான முறையில் குவைத்தில் இறந்தவரின் விசாரணைக்கும் - ஊதியம் மற்றும் இழப்பீடு கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்குமா?

மர்மமான முறையில் குவைத்தில் இறந்த தமிழக வாலிபர் -
உதவ மறுக்கும் இந்தியத் தூதரகம்
.

மர்மமான முறையில் இறந்தவரின் விசாரணைக்கும் - அவரது ஊதியம் மற்றும் உரிய இழப்பீடும் பெற்று அவரது குடும்பத்தாருக்கு கிடைக்க தமிழ அரசு துரித நடவடிக்‍கை எடுக்க முன்வருமா?

நன்றி :தினமலர்திருநெல்வேலி : குவைத்தில் மர்மமான முறையில் இறந்த தமிழக வாலிபரின் உடல், ஐந்து மாதங்களாக சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் திருநகரை சேர்ந்த முகம்மது சம்சுதீன் மகன் சமீர்ஷெரீப் (31). இவரது மனைவி பாத்திமாவின் சகோதரர் உஸ்மான்அலி குவைத்தில் டிரைவராக பணிபுரிவதால், சமீர்ஷெரீப்பை டிரைவர் பணிக்கு 2008 அக்டோபரில் குவைத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ராபியா என்னுமிடத்தில் ஹாலித் என்பவரின் வீட்டில் சமீர் ஷெரீப் பணியில் சேர்ந்தார்.


உஸ்மான்அலியும் அதே பகுதியில் வேலைபார்த்தாலும், ஹாலித்தின் கெடுபிடியால் சமீரை அடிக்கடி சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. டிரைவர் பணி மட்டுமல்லாது, வீட்டை சுத்தம்செய்வது உட்பட பல பணிகளை ஓய்வில்லாமல் செய்ய சமீர் பணிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜன., 12ம் தேதி உஸ்மான்அலி, சமீரை பார்க்க சென்றபோது அவர், "ஜன., 10ம் தேதி இறந்து விட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடம் உஸ்மான் விசாரித்தார். சம்பவத்தன்று வீட்டில் தகராறு நடந்ததாகவும் சமீர் அடித்துக்கொலை செய்யப்பட்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். "ஹாலித் குவைத்தில் அரசாங்க பணியில் இருப்பதால் அவர் சொல்வதைத்தான் அங்குள்ள அதிகாரிகள் கேட்கிறார்கள் எனவும் தமது மைத்துனரின் மர்மசாவு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை,' என உஸ்மான் தெரிவித்துள்ளார்.


குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள், "உடலை வேண்டுமானால் வாங்கிச்செல்லுங்கள், அல்லது இங்கேயே புதைத்துவிடுங்கள்; ஹாலித் மீது எந்த நடவடிக்கையையும் எதிர்பாராதீர்கள்,' என அறிவுரை கூறியுள்ளனர். ஐந்துமாதங்களாக சமீரின் உடல் குவைத் பிணவறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை பார்க்க உஸ்மான் அலி அனுமதிக்கப்படவில்லை. அவர் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளார். சமீர்ஷெரிப்பின் மர்ம மரணம் குறித்து உறவினர்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவரின் உடலையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீர் இறந்த ஹாலித்தின் வீட்டில் 2004, 2005 ஆண்டுகளில் ஆந்திராவை சேர்ந்த ஒரு டிரைவரும், வீட்டுப்பணிப்பெண்ணாக வேலைபார்த்த இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

No comments: