.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, January 4, 2010

ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று தானா? மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்திற்கு தமுமுக தலைவர் கண்டன கடிதம்

புதுடெல்யில் கடந்த டிசம்பர் 23 அன்று நடைபெற்ற மத்திய உளவுத்துறையின் 22வது ஐ.பி. என்டோமென்ட் சொற்பொழிவின் போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார். இந்த உரையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய கடிதம்:

சமீபத்தில் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) கூட்டத்தில் வெறுக்கத்தக்க தீவிரவாதத்தை புனித ஜிஹாதிற்கு இணையானது என்று தாங்கள் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக மோசமாக புண்படுத்தியுள்ளது. ஜிஹாத் என்பது ஒரு போராட்டம் தான். ஆனால் அது யாருக்கு எதிராக எந்த நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜிஹாத் என்பது பொய்மைக்கும் அநீதிக்கும் எதிராக தொடுக்கப்படும் போராட்டம் ஆகும். ஆனால் இந்த போராட்டம் வன்முறை வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

உங்கள் உரையில் சிலுவை யுத்தங்களை பாரம்பரிய போர்கள் என்றும் ஜிஹாதை நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் யுத்தம் என்றும் நீங்கள் வேறுபடுத்தி பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் ஆகிய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசுகளுக்கு இடையே அச்சமூகங்களின் ஆட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற முழுமையான யுத்தங்களாகும். முஸ்லிம்கள் இது போன்ற நிலையில் நடைபெறும் யுத்தங்களில் பங்குக் கொள்ளும் போது தான் அதனை ஜிஹாத் என்றழைக்க இயலும். இது போன்ற யுத்தங்களில் பங்குக் கொள்ளும் நிலையிலும் கூட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள் மட்டுமல்லாது வழிப்பாட்டு ஸ்தலங்கள், நீர்நிலைகள், பயன் தரும் தாவரங்களை கூட எந்த காரணத்திற்காகவும் தாக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவான போர் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இறைவனோ அவனது இறுதித்துப்தர் முஹம்மது (ஸல்) அவர்களோ பயங்கரவாதச் செயல் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடவில்லை. உண்மையில் போர் நடைபெறும் நிலையில் கூட அதில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது உட்பட எவ்வித பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுவடுவதையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உரையில் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளது மூலம் இஸ்லாம் கூறும் ஜிஹாத் கோட்பாடு குறித்த உங்கள் மனநிலை தெளிவற்றது என்பது வெளிச்சமாகியுள்ளது. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆனால் முழு பொறுப்புடன் நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதச் செயல் ஈடுபடும் முஸ்லிம் ஒருவரை முஸ்லிம் என்றே சொல்ல இயலாது. எனெனில் அமைதியை நிலைநாட்டும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.. அதன் பொருளும் அமைதி என்பதாகவே அமைந்துள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் கும்பல்களுக்கு தாங்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளதாக கூறிக் கொள்ள எவ்வித உரிமையும் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீவிரப்போக்கை கைவிடுமாறு போதித்துள்ளார்கள். தீவிர போக்குத் தான் கடந்த கால சமூகங்கள் அழிந்ததற்கான கரணமாக இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சில முஸ்லிம் கும்பல்கள் தீவிரவாதச் செயல் ஈடுபட்டால் அவர்கள் இறைவனது உத்தரவிற்கு முரணான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றே கருதப்படும். இத்தகைய போக்கை நியாயப்படுத்துபவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். எனெனில் இவை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முரணாகவும் வெறுக்கத்தக்க பாவங்களாகவும் அமைந்துள்ளன. நீதியின் அடிப்படையிலும், பொறுமையுடனும். நிலைகுலையா தன்மையுடனும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.. நியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு இணையானது என்று திருக்குர்ஆன் வயுறுத்துகின்றது. மனித உயிர் மிக புனிதமானது என்ற இஸ்லாத்தின் இந்த அடிப்படை தத்துவத்தை புரியாத நிலையில் தான் பயங்கரவாதிகள் தங்கள் செயல்களை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் பயங்ரவாதச் செயல்களை மிக வெறுக்கத்தக்கது என்றும் அதில் ஈடுபடுபவர்களை மிக மோசமான குற்றவாளிகள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எதார்த்தமான உண்மைகள் இப்படியிருக்க நீங்கள் ஐ.பி. அதிகாரிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை எங்கள் சமூகத்திற்கு பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கும் இடையிலான உறவையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சூழல் நீங்கள் வெளிப்படுத்திய உண்மைக்கு புறம்பான கருத்தை நீங்கள் திரும்பப் பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாஅத்தே இஸ்லாமி, 'ஷரிஅத் பாதுகாப்பு குழு போன்ற முஸ்லிம் அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

No comments: