.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, January 18, 2010

வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன் செய்து சாதனை(!)

தமிழக முதல்வர் ஐயா கலைஞர் அவர்களே!
உங்கள் காப்பீட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்டவர் நீதி கேட்கிறார்!!
நீதி வழங்குங்கள்!!!

'கலைஞர் காப்பீட்டு' திட்டத்தை 'காலனுக்கே கல்தா கொடுக்கும் அற்புதத் திட்டம்...' என்கிறார்கள் ஆளும் கட்சியினர். ஆனால், இந்தத் திட்டத்தை பணம் காய்ச்சி மரமாக நினைக்கும் சில தனியார் மருத்துவமனைகள் செய்யும் அல்லுசில்லுகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது. மதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏழைப் பெண் ஒருவருக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன் செய்து சாதனை(!) படைத் திருக்கிறார்கள் டாக்டர்கள்.

நம்மிடம் பேசினார் பாதிக்கப்பட்ட பெண்ணான அழகுமீனாளின் கணவர் சந்திரமோகன். ''நானும் என் பொண்டாட்டியும் கட்டட வேலை பார்க்கிறோம்.

எங்களுக்கு மூணு பொண்ணுங்க வளர்ந்து நிக்குதுங்க. மூத்த பொண்ணு பிறவி ஊமை. சித்தாளு வேலையில் கிடைக்குற காசு கஞ்சிக்கே பத்தாட்டியும்கூட, பிள்ளைங்கள எப்படியாவது படிக்க வைக்கணும்னு நிறைய கனவு வெச்சிருந்தோம். ரெண்டு வருஷம் முன்னாடி என் பொண்டாட்டி பஸ்ஸில் ஏறும்போது கால் தவறி விழுந்துட்டா. அப்ப, வலது கால் மூட்டுல மடக்குன்னு சத்தம் கேட்டுச்சு. கவர்மென்ட்டு ஆஸ்பத்திரியில் காட்டுனப்ப, 'மூட்டு ஜவ்வு கிழிஞ்சிருச்சு... ஆபரேஷன் பண்ணணும்'னு சொன்னாங்க. ஆனா, பண வசதியில்லாம தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தோம். இப்ப, கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலமா ஆபரேஷன் செஞ்சுக்குறதுக் காக கடந்த 8-ம் தேதி மதுரை விக்ரம் ஆஸ்பத்திரியில என் பொண்டாட் டியை சேர்த்தேன்.

அட்மிஷன் போட்டவுடனே, 'ஆபரேஷன் மட்டும்தான் இலவசம். பெட் சார்ஜ், மருந்து செலவு எல்லாம் 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஆகும். அதுக்காக முதல்ல 5 ஆயிரம் பணத்தைக் கட்டுங்க'னு சொன் னாங்க. வேற வழியில்லாம நானும் அலைஞ்சு திரிஞ்சு கடன் வாங்கி, பணத்தைக் கட்டினேன். ஆபரேஷன் தியேட்டர்ல மூணு மணி நேரம் ஆபரேஷன் பண்ணுன டாக்டர் வெளியே வந்து, 'ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது'னு சொல்லிட்டுப் போனாரு...'' என்றவர் தொடர்ந்து,

''நாங்க உள்ளே போனோம். அப்ப அங்கே வேலை பார்க்குற ஒரு அம்மா உள்ளே வந்து, அழகு மீனாளின் கால் மேல இருந்த போர்வையை விலக்கி பார்த்துட்டு, 'அச்சச்சோ! வலது கால்ல சவரம் பண்ணிட்டு இடது கால்ல ஆபரேஷனை பண்ணிட்டாங்களே...'னு சத்தம் போட்டுச்சு. எங்களுக்கு மூச்சே நின்னுடும் போலிருந்துச்சு. பதறிக்கிட்டு ஓடியாந்த டாக்டருங்க, எங்களை வெளியே அனுப்பிட்டு திரும்பவும் வலது கால்ல ஆபரேஷன் பண்ணுனாங்க. 'அவசரத்துல தப்பு நடந்து போச்சு'னு எங்ககிட்ட ஒப்புக்கிட்டாங்க. 'எதிர்காலத்துல என் பொண்டாட்டி காலுக்கு ஏதாச்சும் பாதிப்பு ஆச்சுன்னா பொறுப்பை ஏத்துகிறோம்'னு நாங்க எழுதிக் கேட்டா, அதையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. கலைஞர் போட்ட திட்டம் கைகொடுக்குதேனு சந்தோஷமா வந்தோம். ஆனா, அரசாங்கத்துக்கு கெட்ட பேர் வர்ற மாதிரி இவங்க பண்றாங்க. எங்களுக்கு உரிய நியாயம் கேட்டு கலெக்டர்கிட்ட மனு குடுக்குறதா இருக்கோம். கலைஞர் அய்யா கவனத்துக்குப் போனா நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும்...'' என்றார் அப்பாவியாக..!

விக்ரம் மருத்துவமனையின் சார்பில் நம்மிடம் பேசிய டாக்டர் நாராயணசாமி, ''மருத்துவத் துறை விதிமுறைகளின்படி நோயாளியின் விவரங்களைப் பற்றி வெளியே சொல்லக் கூடாது. நடந்த விவரங்களை ஸ்டார் ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டோம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்...'' என்றார்.

எல்லாம் சரி... சிக்கல் இருக்கிற வலது காலை விட்டுட்டு எந்தக் குறையும் இல்லாத இடது காலில் அப்படி என்னதான் ஆபரேஷன் செஞ்சீங்க டாக்டர் சார்..?
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி ஜூவி...

No comments: