மதுரை : மதுரை அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில், எச்.ஐ.வி., பாதித்த பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அந்த பெண். இதுகுறித்து விசாரிக்க டீன் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து, விஜயா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி. எய்ட்ஸ் நோயாளிகளான இவர்கள், மதுரையில் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர். பெண் குழந்தை உள்ள நிலையில், விஜயா மீண்டும் கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டார். ஜன.,5 இரவு 1 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லாத நிலையில், ஆண் குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. ஆப்பரேஷன் டேபிளில் இருந்து கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை தானே வெளியே எடுத்தார். பதினைந்து நிமிடங்களுக்கு பின், அங்கு வந்த மருத்துவ மாணவி, தொப்புள் கொடியை "கட்' செய்துவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு சென்றார். "ஆண் குழந்தை பிறந்துள்ளதால், 1500 ரூபாய் தரவேண்டும்' என்று பெண் ஊழியர் லஞ்சம் கேட்டதற்கு, விஜயா தர மறுத்தார். இதனால், தொற்றுநோயாளிகளுக்கென உள்ள பிரத்யேக அறையில், அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. ஜன.,6 மதியம் 12 மணி முதல் நேற்று முன் தினம் வரை மகப்பேறு வராண்டாவில், கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தையுடன் விஜயா தங்கினார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் எல்லா வேலையும் நடக்கிறது. "உனக்கெல்லாம் எதற்கு குழந்தை. "பெட்' கொடுக்க முடியாது. வெளியேறு' என, என்னை ஊழியர்கள் துரத்தினர். இங்கு பிறந்ததற்கு ரிக்கார்டு வேண்டும் என்பதற்காக, வெளியே செல்லாமல் வராண்டாவில் தங்கினேன். எந்த ஆவணமும் இன்றி வெளியேறினால், "திருட்டுக் குழந்தை' என்று சொல்லிவிடுவர், என பயந்துதான் அங்கேயே இருந்தேன். ஆனால், நான் தலைமறைவாகி விட்டதாக, வார்டு பதிவேட்டில் குறித்துள்ளனர், என்றார்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மதுரை நெட்வொர்க் ஆப் பாசிட்டிவ் பீப்பிள் வெல்ப்பேர் சொசைட்டி அமைப்பு தலைவர் பாபு கூறியதாவது : கடந்த 2006ல் எனது மனைவிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. இன்று வரை நிலைமை மாறவில்லை. காயம்பட்ட மருத்துவமனை ஊழியரைக்கூட ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்ல, சக பணியாளர்கள் லஞ்சம் கேட்கும் நிலையில் மருத்துவமனை உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விஜயாவுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் தயங்கியுள்ளனர். இப்பிரச்னை குறித்து மதியம் நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறச் சென் றோம். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வீட்டில் தங்காமல், வெளியே தங்கியிருந்ததால் புகார் செய்ய முடியவில்லை. டீனும் அறையில் இல்லை. எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மருத்துவமனை முன்பு எய்ட்ஸ் நோயாளிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம், என்றார்.
இதுகுறித்து டீன் சிவக்குமார் கவனத்திற்கு நமது நிருபர் கொண்டு சென்றார். உடனடியாக விஜயாவிடம் விசாரித்த அவர், ""சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும்'', என்றார். மருத்துவமனையில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுக்காதவரை, இதுபோன்ற மனிதாபிமானற்ற செயல்கள் தொடரும் என்பது உண்மை.
விசாரணையின் போது அதிர்ச்சி: விஜயாவிடம் டீன் சிவக்குமார் விசாரித்துக் கொண்டிருந்த போது, இருதய நோயாளியின் உறவினர்கள் இருவர் வந்தனர். "ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்த நிலையில், ஊசி ஒன்று போட வேண்டும். அந்த மருந்து இங்கு இல்லை. வெளியே வாங்கினால் விலை 6000 ரூபாய். அந்த மருந்து எங்களிடம் உள்ளது. 3000 ரூபாய்க்கு கிடைக்கும்' என இரு நர்சுகள் லஞ்சம் கேட்டதாக புகார் கூறினர். அதிர்ச்சியடைந்த டீன், இதுகுறித்து விசாரிக்குமாறு நர்சு கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment