.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, July 27, 2009

குடும்பங்களைக் கூறுபோடும் லேகிய டாக்டர்கள்

குறிப்பு: இந்தக்கட்டுரை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைக்காகவுமே தவிற கிளுகிளு அல்ல நமது நோக்கம். விகடனில் படித்தது நீதியின் குரல் வாசகர்களுக்காக....
________________________________________________
'இளமை இதோ இதோ!' என்று சிறகு அடித்துப் பறக்கும் பருவத்தில்தான் மனதை உருட்டிப் புரட்டும் சஞ்சல சுனாமியும் இளைஞர்களைப் பாடாய்ப்படுத்தும். சமயங்களில் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத 'உடல் இயக்கச் சிக்கல்'களை அவர்கள் மனம் திறந்து பேசுவது 'அஜால் குஜால்' வார்த்தைகளில் ஊரை ஏமாற்றும் போலி லேகிய வியாபாரிகளிடம்...

27 வயது சந்திரசேகருக்கு இளமைப் பருவத்துக்கே உள்ள விடலைப் பழக்க வழக்கங்கள் உண்டு. ஒருநாள் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்துப் பதறுகிறார். தனது திறமையைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் செல்கிறார். முதல் அனுபவம் பெரிய ஏமாற்றமாக முடிய... யோசிக்காமல் விளம்பரத்தில் வசீகரித்த வைத்தியரிடம் ஓடுகிறார். 'ஸ்பெஷல் செட்' என்று டப்பா நிறைய கேப்சூல்களைக் கொடுத்து 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார் வைத்தியர். வருடக் கணக்கில் மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வீட்டில் சந்திரசேகருக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்க, வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்துகொள்கிறார்.

அந்த லாரி டிரைவரின் மனைவிக்கு 'கணவன் தன்னைப் போதுமான அளவுக்கு திருப்திப்படுத்துவது இல்லை' என்று ஆதங்கம். கணவனை செவ்வாய்க்கிழமை அந்தக் குறிப்பிட்ட லாட்ஜுக்கு அழைத்துச் செல்கிறார். லாரி டிரைவரே மேற்கொண்டு தொடர்கிறார்... ''அந்த டாக்டர்(!) என் சம்சாரம் முன்னாடியே என்னை நிர்வாணப்படுத்திச் சோதிச்சாரு. 'உங்களுக்கு இருக்குறது சின்ன சிக்கல்தான். இதுக்கு மூணு மண்டலம் களிம்பு தடவுங்க. தூங்கப் போறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி இந்த லேகியத்துல ஒரு உருண்டை சாப்பிடுங்க'ன்னு சொல்லி 3ஆயிரம் ஃபீஸ் வாங்கிட்டாரு. வாராவாரம் செக்கிங் போக வர்ற இருந்தப்ப, என் சம்சாரம் அந்த ஆளுகூட ரொம்ப நெருக்கம் ஆயிட்டா. இப்போ என் பொண்டாட்டி என்கூட இல்லை. அதுக்குக் காரணம் அந்தப் படுபாவி. என்னை மாதிரி எத்தனையோ குடும்பங்களை அவன் சீரழிச்சு இருக்கான். வெட்கம், மானத்துக்குப் பயந்து நான் யார்கிட்டயும் சொல்லலை!''

இவர் கதை இப்படி என்றால் கொளத்தூர் மகேந்திரனுடையது வித்தியாசமானது. ''நான் சினிமாவில் லைட்மேனா வேலை பாக்குறேன். அதிக எடையை ஏற்றி, இறக்குவதால் 12 வருஷமாகவே எனக்கு முதுகுவலி. எந்த மருத்துவமும் பலன் இல்லை. அப்பதான் ஒரு சேட்டிலைட் சேனல்ல திருவாங்கூர் சித்த வைத்தியசாலை விஜயகுமாரோட நிகழ்ச்சி பார்த்தேன். அவர்கிட்ட போய் நின்னேன். 'மூணு மாசம் ட்ரீட்மென்ட். மாசம் 50 ஆயிரம் ரூபாய் ஃபீஸ். பூசணிக் காய், பாவக்காய் ஆகாது. காபி, டீ கூடாது. மது, சிகரெட் கூடவே கூடாது. தங்கபஸ்ப பவுடர்லாம் கொடுத்தாரு. மூணு மாசத்துக்குப் பிறகும் அதே நிலைமைதான். கேட்டால், 'கண்டிப்பா குணமாகும்னு நான் கான்ட்ராக்ட்ல கையெழுத்தா போட்டு ருக்கேன்!'னு எகத்தாளம் பேசுனார். நம்ம உடம்பு வாகுக்கு ஒத்துக்கலைன்னு நினைச்சு ஒன்றரை லட்ச ரூபாய் போனாப் போகட்டும்னு அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்!'' பத்திரிகை, டி.வி-க்களில் வரும் பந்தா விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, பண பண்டல்களுடன் வந்து போலி வைத்தியர்களிடம் சிக்கிச் சீரழிந்த குடும்பங்கள் எத்தனையோ!
தாம்பத்திய நிகழ்வுகளில் இயல்பான ஆரம்பக் கூச்சத் தயக்கங்களுக்குப் பயந்து பதறி, இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் தஞ்சம் புகுந்தால்... அதோகதிதான். மனைவியுடன் சிநேகமும் புரிதலும் ஏற்பட்டால் மழை மேகமாக விலகிவிடும் சிக்கல்களுக்கு அவர்களின் வைத்திய முறைகள் இருக்கின்றனவே... தங்கபஸ்பம், லேகியம், களிம்பு, அக்குளில் வைத்துக்கொள்ளும் மாத்திரை... என அஜால் குஜால் வைத்தியர்களின் வைத்திய முறைகள் அத்தனையும் விபரீத வில்லங்கங்கள். பழக்கத்தில் மறைந்துவிடக் கூடிய சின்ன பிரச்னைகளை இவர்களின் 'வைத்திய முறை'கள் விஸ்வ ரூபமாக்கி தம்பதிகளிடையே மனஸ்தாபங்களை உண்டாக்கிவிடுகின்றன.

இது போன்ற லேகிய வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த், ''எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டோம்னு சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல ஏராளமான ஆளுங்க பலரை ஏமாத்திட்டு இருக்காங்க. ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு லேகிய மருந்துகள் கொடுத்து, 'உனக்கு எல்லாம் சரியாயிடுச்சு. இனி நீ தைரியமா கல்யாணம் பண்ணிக்கலாம்'னு சொல்லி அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் பரவக் காரணமா இருக்காங்க. அவங்ககிட்ட ஏமாந்தவங்களைத் தேடிப் பிடித்து திரும்ப மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குன்னு புரியவெச்சோம். அது சம்பந்தமான டாக்குமென்ட்ரியை லோக்கல் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பியதும், அந்த லேகிய வியாபாரிகள் பக்கமிருந்து எனக்குக் கொலை மிரட்டல்கூட வந்தது. ஆனா, அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படலை.

தமிழ்நாடு முழுக்க இது மாதிரி டுபாக்கூர் போலி டாக்டர்கள் 900 பேர் இருக்காங்க. அவங்களைப் பத்தி நான் தயாரிச்சுட்டு இருக்கும் பட்டியல் தயாரானதும் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் சேர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்!'' என்றார்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் எழிலன் கூறுகையில், ''ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ட்ரன்ஸ் தேறி சைக்காலஜி, அனாடமி, பயோ கெமிஸ்ட்ரி என மருத்துவக் குழு அங்கீகரித்த பாடங்களை 4 ஆண்டுகள் படித்து 5-வது வருடம் மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவங்கள் பெற்ற பிறகே நாங்கள் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறுகிறோம். 'ராஜராஜ சோழனுக்கே வைத்தியம் பார்த்தவர் எங்கள் பாட்டன். பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பார்த்து வருகிறோம்' என்பார்கள். 'சோழனுக்கு வைத்தியம் பார்த்ததற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்டால் காதில் விழாதது போல வேறு வேலை பார்க்கச் சென்றுவிடுவார்கள்.

உடனடி நிவாரணம் தேவைப்படும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு இவர்கள் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். ஆனால், நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும் முடக்கு வாதம், பிறவி ஊனம் போன்றவற்றுக்கு வைத்தியம் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். அந்த சிகிச்சைகளில்தானே கொள்ளை கொள்ளையாகப் பணம் பறிக்க முடியும்.

தமது வீட்டில் ஒருவர் நீண்ட நாட்கள் நோய் குணம் அடையாமல் போராடினால், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றுதான் குடும்ப உறுப்பினர்களிடம் பெரும் போராட்டம் நடக்கும். எதை விற்றாவது அவரைக் காப்பாற்ற முயல்வார்கள். அந்தப் பாசத்தைப் பணமாக்கும் இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!'' என்று எச்சரிக்கிறார்.

ஒரு முறையேனும் கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியாது. அது போலத்தான் தாம்பத்யமும். ஆரம்பத் தள்ளாட்டங்கள் இதிலும் சகஜம்தான். அதைத் தம்பதிகள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். உடலின் கோளாறுகளுக்கு நிவாரணம் தேட தகுந்த மருத்துவர்களோ, நிபுணர்களோதான் பக்கபலமாக இருப்பார்கள். ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால்கூட ஏ.சி, டி.டி.எஸ், குஷன் ஸீட் என்று வசதிகளைப் பட்டியலிடுபவர்கள், தங்கள் உடல் பராமரிப்புக்கும் அத்தகைய கவனத்தைச் செலுத்துவதுதானே சரி!
நன்றி: விகடன்

2 comments:

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

மாசிலா said...

Usefull good post. Thanks a lot.