.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, July 18, 2009

மன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

வெளிநாடுகள் பலவும் முதலாளித்துவம் மற்றும் தனியார்மயம் போன்றவற்றிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஆட்சியாளர்கள் மட்டும் அந்தத் தீமையை இந்தியாவுக்குள் முழு அளவில் கொண்டு வரத் துடிக்கிறார்கள் என எழுத்தாளர் சோலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து குமுதம் ரிப்போர்ட்டரில்அவர் எழுதியுள்ள கட்டுரை:

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மும்பை நகர மக்கள் சாலைகளுக்கு வந்து போராடினார்கள். வழியே சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்தப் போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் தலைமை தாங்கவில்லை. வாழ்க்கைச் சுமை - இதய அழுத்தம் இயல்பான போராட்டத்திற்கு வழிவகுத்து விட்டது.

என்ன காரணம்?

மின்சார விநியோகத்தை மராட்டிய அரசு ரிலையன்ஸ் போன்ற பிரதான தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த நிறுவனம் மின்கட்டணத்தை மளமளவென்று உயர்த்தியது. அதனை எதிர்த்துத்தான் மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

வேறு நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட ரிலையன்ஸ் மின் கட்டணத்தை உயர்த்துகிறது என்று மும்பை நகர மக்கள் முழக்கமிடுகிறார்கள். போராட்டம் தொடரும்.

டெல்லி தலைநகரின் மின்விநியோகமும் தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அங்கேயும் குத்தகை பெற்ற நிறுவனங்களிடம் மாநில அரசு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் விநியோகத்திற்கான குத்தகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் பலமுறை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், டெல்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இறைவனைக் கூட பார்த்து விடலாம். ஆனால், மின்சாரத்தைத் தரிசிக்க முடியாது என்ற நிலைதான்.

எனவேதான் டெல்லி நகர மக்களும் சாலைகளுக்கு வந்து போராடுகிறார்கள். மக்களின் உள்ளக்கொதிப்பு வெடிக்கும் கொதிநிலைக்கு வந்திருக்கிறது.

நான்கு நாட்களுக்குள் மின்விநியோகம் சரி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஷீலாதீட்சித் எச்சரித்திருக்கிறார். ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் டெல்லி தவிக்கிறது. மின் தடை காரணமாக தண்ணீர் விநியோகமும் முழுமையாகத் தடைபடுகிறது. எனவே, பாயத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மாதிரி தலைநகர மக்கள் தயாராகிறார்கள்.

இந்த நிகழ்வுகளெல்லாம் நடைமுறையில் நாம் காணும் வேதனைச் சித்திரங்கள். தனியார் துறையின் மகத்துவங்கள்.
ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ன சொல்கின்றன? அனைத்தும் தனியார்மயம் என்பதுதான் நாட்டின் பிரச்னைகளுக்கு சர்வரோக நிவாரணம் என்று சொல்கின்றன. அவை சீர்திருத்தங்களாக இருக்காது. நாட்டின் சீரழிவிற்கு முன்னோடியாக இருக்கும். ஆனால், அவற்றைத்தான் வேகவேகமாக மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தப்போகிறது.

ரயில்வே, நிலக்கரிச் சுரங்கங்கள், அணுமின் உற்பத்தி ஆகிய அனைத்தையுமே தனியார் துறைக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

பாதுகாப்புத் துறையிலும் தனியார் மயம்!

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், சாதனங்கள் ஆகியவை பெரும்பாலும் பொதுத்துறையில் தயாரிக்கப்படுகின்றன. இனி அந்தத் துறைகளில் அன்னிய மூலதனங்களை 49 சதவிகித அளவிற்கு அனுமதிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தம் சொல்கிறது.

தொழில்துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கலாம். பன்னாட்டு நிதி நிறுவனங்களை அனுமதிக்கலாம். பிற அன்னிய முதலீட்டு நிறுவனங்களையும் அனுமதிக்கலாம். அவர்கள் முதலீடு செய்யும் அளவிற்கு அவற்றுக்கு நிர்வாகத்திலும் பங்கு தரலாம் என்றும் அந்தச் சீர்திருத்தம் சொல்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கலாம். உணவுப் பொருள் துறையையும் அன்னிய முதலீடுகளுக்கு அர்ப்பணிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தங்கள் நீட்டோலை வாசித்துக் கொண்டே போகிறது.

கடந்த பத்தாண்டுகளில் உலகை உலுக்கிய பல சரித்திர நிகழ்வுகளை தென் அமெரிக்கா சந்தித்திருக்கிறது. அந்தக் கண்டத்தின் பலப் பல நாடுகளும் இன்றைக்கு மன்மோகன் அரசு சமர்ப்பிக்கும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவைதான். அதன் விளைவு என்ன?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நோய்கள் வாட்டி வதைத்தன. அந்த நாடுகளின் செல்வங்களை அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் நாடுகளுக்கு அள்ளிச் சென்றனர். உள்நாட்டு வணிகம் மரணப் படுக்கையில் வீழ்ந்தது.

இதனைக் கண்டு ஏழைகளோடு பழகும் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் போர்க்கோலம் பூண்டனர். அவர்களின் முன்னணிப் படையாக இடதுசாரி சக்திகள் எழுந்தன.

அன்னிய முதலீடு என்றால், அந்த நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள்தான். இதனை எதிர்த்து வெனிசுலா நாட்டில் புரட்சி வெடித்தது. கத்தோலிக்க திருச்சபையும் இடது சாரி சக்திகளும் இணைந்து போராடின. வெனிசுலாவிற்கு கியூபா கலங்கரை விளக்கமாகக் காட்சி அளித்தது.

ஆட்சி அதிகாரத்தை மக்கள் இடதுசாரி சக்திகளுக்கு அளித்தனர். அனைத்து அன்னிய கம்பெனிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

இன்றைக்கு வெனிசுலா மட்டுமல்ல, அதன் அடிச்சுவட்டில் பிரேசில், சிலி, பொலிவியா போன்ற மேலும் ஆறு நாடுகளில் இடதுசாரி சக்திகளின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. எவற்றையெல்லாம் சீர்திருத்தங்கள் என்று மன்மோகன் சிங் அரசு உடுக்கை அடிக்கிறதோ, அவையெல்லாம் நாட்டிற்குக் கேடுகள் என்று அந்த நாடுகள் கப்பலேற்றி அனுப்புகின்றன. அதன் பின்னர்தான் அந்த நாடுகளின் சாமானிய மக்கள் வாழத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே ஆட்சிக்கு வந்தவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல. இடதுசாரி எண்ணம் கொண்ட தேச பக்தர்கள். அவர்களுக்குக் கரம் கொடுப்பது கத்தோலிக்கத் திருச்சபைகள்தான்.

மன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

அங்கே வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும், தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.

நமது பாட்டன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அரசு நிறுவனங்களெல்லாம், ஆலைகளெல்லாம் புதிய ஆலயங்களாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இனி அவற்றின் பங்குகளை ஆண்டிற்கு 25000 கோடி அளவிற்கு விற்பார்களாம்.

அந்தப் பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் உழைக்கும் மக்கள் அறுபதாண்டுகளாக உருவாக்கிய நமது சொத்துக்கள். அவற்றை விற்க மன்மோகன்சிங் அரசிற்கு அதிகாரம் அளித்தது யார்?

நெய்வேலியையோ, சேலத்தையோ, திருச்சி பெல் நிறுவனத்தையோ தவணை முறையில் விற்க முன்வந்தால், அதை தி.மு.கழகம் ஆதரிக்குமா?

மேற்கு வங்கத்துப் பொதுத்துறை நிறுவனங்களை அமெரிக்கத் துரைமார்களுக்கு விற்பதை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வாரா?

தென் அமெரிக்க நாடுகள் விரட்டியடிக்கின்ற பிசாசுகளை இங்கே தேவதைகள் என்று அழைத்து வருகிறார்கள். கொடுமை.

அனைத்தும் தனியார் துறைக்கே என்பதனை மோட்சத்தின் திறவுகோலாக அமெரிக்கா சித்திரித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நமது காயகல்பப் பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் கண்களை இழந்தவர்கள் இங்கே நமது கண்களை விலைபேச வரப்போகிறார்கள். அவர்களுக்கு விரிக்கப்பட்ட பட்டுக் கம்பளம்தான் இந்திய அரசின் நிதித்துறை சீர்திருத்தங்களாகும்.

தேவையில்லாத விருந்தாளியை அழைத்தால், நமக்குத் தேவையானவற்றையெல்லாம் இழக்க நேரிடும்!, என அதில் எழுதியுள்ளார் சோலை.

1 comment:

Gokul said...

//மின் விநியோகத்திற்கான குத்தகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் பலமுறை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், டெல்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இறைவனைக் கூட பார்த்து விடலாம். ஆனால், மின்சாரத்தைத் தரிசிக்க முடியாது என்ற நிலைதான்.
//

தனியாரிடம் கொடுக்காத மின்சாரத்துறை மட்டும் என்ன வாழுதாம், பெங்களூரில் சராசரியாக மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் பகலில் மின்சாரம் கிடையாது. தனியாரிடம் கொடுத்தது தப்பில்லை, தனியாருக்கும் அரசுக்கும் போட்டி இருக்க வேண்டும், இப்போது செல் போனில் இருப்பது போல .. அப்போதுதான் மக்களுக்கு நல்லது, மொத்தமாக தனியாருக்கு அல்லது மொத்தமாக அரசுக்கோ கொடுத்து ஏகபோகமாக யாரை வாழவைத்தாலும் இதே கதிதான்.

//அரசு நிறுவனங்களெல்லாம், ஆலைகளெல்லாம் புதிய ஆலயங்களாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன.//
தலை நிமிர்ந்தது எல்லாம் தாரளமயமாக்கல் வந்த பின்புதான், அதிலும் சில நிறுவனங்கள்தான், பல நிறுவனங்கள் 80-களின் இறுதியில் தேசத்திற்கு மிகப்பெரிய செலவு வைத்து மிகப்பெரும் நஷ்டத்தில் இயங்கியவை.
//
அந்தப் பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் உழைக்கும் மக்கள் அறுபதாண்டுகளாக உருவாக்கிய நமது சொத்துக்கள்.//

முதலில் இவை எல்லாம் இன்று சொத்துக்கள் அல்ல, கடன்கள், இந்த கடன்களை எப்படி கழிப்பது என்பதே அரசுக்கு கவலையாக இருக்க முடியும், இன்று பட்ஜெட்டில் துண்டு விழும் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாயை (சுவிஸ் வங்கியில் இருக்கும் நம் அரசியல்வாதிகளின் ஒரு லட்சம் கோடி ரூபாயை வெளியே எடுக்காமல்) அடைப்பதற்கு இதுவே சிறந்த வழி.