.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, July 15, 2009

பொக்கிஷம் என்ற பெயரில் ஒரு விஷம்! வருகிறது இன்னொரு கலவர திரைப்படம்.


நன்றி -இனியவன்


இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை. தெரிவிக்கவும் முயலுவதில்லை.

சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள் (உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை, அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள் (ஈரானிய திரைப்படங்கள்) எடுக்கப்பட்டுள்ளன. எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.

அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம். படத்தின் கதை இதுதான். நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் நதிராவி ற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை.இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.

மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசினர்.நல்ல வேளையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).

ஏற்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல்,ரகசிய திருமணம் செய்தல்,கடற்கரைகளில்,பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும். பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.

தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது.

3 comments:

Cable சங்கர் said...

படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருக்கிறது என்று ஏதாவது தெரியுமா..? அப்படி ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் சென்சார் ஒன்று இருக்கிறது.. சும்மா முஸ்லிம் பெண்களை இந்து காதலிப்பதாய் கதையிருந்தால் உடனே ஊர்ல இருக்கிற எல்லா முஸ்லிம் அமைப்புக்கு போட்டுக் காட்டித்தான் படத்தை எடுக்க வேண்டும் என்றால் இது அக்கிரம்.. சும்மா ப்ளாக் இருக்கிறது என்பதற்காக எதையும் தெரியாமல் எழுதக்கூடாது.. அப்படி ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் படம் வெளியான பிறகு போராடவும்.. அது தான் ஜனநாயக முறை.

சத்ரியன் said...

வணக்கம் தோழரே, தங்களின் கருத்து பரிசீலிக்கப்பட வேண்டியதுதான். ஆனால்,ஒரு திரைப்படம் மட்டுமே சமூகத்தில் தாங்கள் குறிப்பிடுவது போல் தாக்கங்களை ஏற்படுத்துமாயின் " பம்பாய் " படத்தைப் 90 விழுக்காட்டு இந்து/இஸ்லாம் மக்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. அப்படி பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ இளைஞர்/இளைஞிகள் (காதல்) கலப்புத் திருமணம் செய்திருக்க வேண்டும்.குறிப்பிட்டு சொல்லும் அளவில் அப்படி எதுவும் நடந்து விடவில்லை.

ஆக, திரைப்படம் இதுவரை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே நம் (இந்து/இஸ்லாம்) மக்களால் கருதப்படுகிறது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

ஓரேயொரு கேள்வி. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தான் மதங்களை மையப்படுத்தியே நாம் வாழப்போகிறோம்?

ஓடிப்போய் திருமணம் என்பது, நமது இலக்கியங்களில் "கந்தர்வ கல்யாணம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆக, அதுவும் நமது மரபுகளில் ஒன்றுதான்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்