.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

தாய்க்கழகம் அழைக்கிறது... சமுதாயமே திரண்டு வா

தாய்க்கழகம் அழைக்கிறது சமுதாயமே திரண்டு வா...!

சமுதாயக் கண்மணிகளே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நீங்களெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இக்கடிதத்தை வரைகிறேன். அடர்த்தியான பணிகளின் காரணமாகவும், தொடர்ச்சியான பயணங்களின் காரணமாகவும் எழுத முடியவில்லை.


ஆனால், அதே காரணத்தை இப்போதும் சொல்ல முடியாதல்லவா...! வரலாற்று திருப்புமுனைக்காக நீங்களெல்லாம் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது உங்களையெல்லாம் உற்சாகப்படுத்துவது எங்களின் அவசிய பணியல்லவா...!


பிப்ரவரி 7 எப்போது வரும்? நமது தலைவர்களையும் சொந்தங்களையும் ஒருசேர தாம்பரத்தில் காணும் நிமிடங்கள் எப்போது மலரும்? என்றெல்லாம் நினைத்து நினைத்து பூரிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் உங்களைக் காணும் பேராவலில் நாங்களும் உள்ளோம்.


கண்மணிகளே...


1995ல் நாம் தமுமுகவை தொடங்கிய போது இவ்வளவு தூரம் பயணிப்போம் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? எத்தனை சிறைகள், எத்தனைக் கொடுமைகள், அத்தனைகளையும் எதிர் கொண்டு... புயலை உரசி, இடிகளை உள்வாங்கி இன்று இமயமாய் உயர்ந்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.


இந்த இயக்கத்திலே, சமுதாய நீரோட்டத்திலே இணைந்ததற்காக எவ்வளவு எதிர்ப்புகளை எதிர்கொண்டோம் என்பதை எண்ணிப் பார்க்கின்றபோது இதையெல்லாம் நாம்தான் நிகழ்த்தி னோமோ என்ற ஆச்சரியம் மேலிடு கிறது.


எல்லாம் வல்ல இறைவனல்லவா நம்மை இயக்கியிருக்கிறான்!!


குடும்பத்தைப் பகைத்தவர்கள், முதலாளிகளை எதிர்த்தவர்கள், இயக்கப் போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக வேலையை இழந்தவர்கள், வெளிநாட்டு வாய்ப்புகளை பறிகொடுத்தவர்கள், அரச வன்முறைகளால் உடல் காயங்களைப் பெற்றவர்கள் என்று தியாகிகளின் பாசறையாய் தமுமுக இருக்கிறது.


அதனால்தான் நம்மை யாராலும் அழிக்க முடியவில்லை. அழிக்க நினைத்தவர்கள் பின்னாளிலே நம்மை வளர்க்க முனைந்தார்கள். நம்மை வளைக்க நினைத்தவர்கள் அது முடியாததால் நம்மோடு அரசியல் அணியிலே இணைந்தார்கள். அல்லது தம்மையும் இணைத்துக் கொண்டார்கள். ஆம், வரலாற்றை அதன் போக்கில் அல்ல, நமது போக்கிலே வடிவமைத்த திறமை நமக்கு உண்டு. அல்ஹம்துலில்லாஹ்!


13 ஆண்டுகளாக நாம் ஆற்றிய பணிகள் தமிழகத்தில் எவரும் செய்யாதது. செய்ய முடியாததன்றோ...!

  • அவசர ரத்த தான சேவையில் முதல் நிலை

  • 54 ஆம்புலன்ஸ்களோடு உயிர் காப்பு பணி

  • மரங்களை நட்டு சுற்றுச் சூழலை பாதுகாத்தல்

  • கல்வி உதவிகள், விழிப்புணர்ச்சி கருத்தரங்குகள் என நாம் ஆற்றிய, ஆற்றி வருகின்ற பணிகள் முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது.


தனிமைப்படுத்தப்பட்ட நமது சமுதாயத்தை, தரணி போற்றும் வகை யில் தகுதி கொண்டதாக மாற்றியமைத்த சாதனை நமது இயக்கத்தையே சாரும்.

கண்மணிகளே...


ஒடுக்கப்பட்ட நமது குரலை நாம் நடத்திய போராட்டங்கள் வீரியமாய் ஒலிக்கச் செய்தன. அதன் விளைவு தீர்க்கப்படாத நமது பிரச்சினைகள் தீர்வுக்கு வந்தன.

  • 1999ல் வாழ்வுரிமை மாநாடு

  • 2004ல் தஞ்சை பேரணி

  • 2007ல் டெல்­ பேரணி

இவையெல்லாம் உரிமைப் போரில் நாம் பதித்த வரலாற்றுத் தடங்கள். இதை எண்ணி எண்ணி சமுதாயம் அகமகிழ்கிறது.


உச்சக்கட்டமாக நமது இலட்சியக் கோரிக்கைகளில் முதன்மையானதாக தமிழக அளவிலான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதம் என்ற அளவிலே நாம் வெற்றிகரமாக, இந்த சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுத்த போது நம்மை இந்த சமுதாயம் மார்போடு அணைத்ததை நாம் கண்டோம், களித்தோம்.


நாம் அரியணை ஏற்றிய திமுக அரசிடம் வாக்குகளை கொடுத்து உரிமையைப் பெற்றோம். சமுதாயத்திற்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நிம்மதி கிடைத்தது.


அப்போதுதான் சமுதாயத்தின் அறிவு ஜீவிகளிடமிருந்து மட்டுமே வந்த ஒரு கோரிக்கை மக்கள் மன்றத்திடமிருந்தும் நமக்கு வந்தது.


நேரடி அரசியலில் இறங்காமலேயே வெற்றிகளைக் குவிக்கும் தமுமுக, ஏன் மார்க்க, சமுதாயப் பணிகளோடு அரசியல் பணியையும் கையிலெடுக்கக் கூடாது என்ற அந்தக் கேள்வி நூற்றுக்கணக் கிலே எழும்பி, அது ஆயிரம், லட்சம் என்று நம்மை உலுக்கியது.


ஜமாஅத்துகள், சங்கங்கள் பெயரில் நமக்கு உரிமையான நிர்பந்தங்கள் வேறு! பொது நிகழ்ச்சிகளில் நம்மைச் சுற்றி முற்றுகை வேறு! இப்படி சமுதாய நிர்பந் தங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமே பட்டாசு சப்தங்களாய் வெடித்தன.


அதன்பிறகே ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற பொதுக்குழுவிலே அரசியல் கட்சியை உருவாக்கும் முடிவுக்கு நமது சமுதாயக் கண்மணிகளாகிய நீங்கள் ஒப்புதல் வழங்கினீர்கள்.


பலகட்ட ஆய்வுகள், பலதரப்பட்ட ஆலோசனைகளை உள்வாங்கி நமது தலைமை நிர்வாகக்குழு நிதானமாய் திட்டங்களைத் தீட்டியது.

  • நமது உயிரோட்டமாய், ரத்த ஓட்டமாய் இருக்கும் தமுமுகவின் இன்றைய பணிகளுக்கு பாதிப்பு வரக் கூடாது.

  • நமது மார்க்க பணிகளுக்கு ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது.

  • சமரசமற்ற போராட்டங்களில் வீரியம் குறையக் கூடாது. என்ற எண்ணங்களின்படி தமுமுக அதே வீரியத்தோடு அதே பாதையில் பயணிக்கும். அதன் அரசியல் அமைப்பாக மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறோம் என அறிவித்தோம்.

நமது இந்த முடிவை சர்க்கரைப் பொங்கலாய் சமுதாயம் வரவேற்றது. இயக்கவாதிகளோ சர்க்கரைக் கிடங்கில் விழுந்த தேனியின் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.


நமது அடிப்படை லட்சியங்களில், கொள்கைகளில் சமரசம் கூடாது. அதற்கு தமுமுக இயங்குவதுதான் நல்லது. துணையாக அரசியல் கட்சி மலரட்டும் என்ற அவர்களது எண்ணங்களை தலைமை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.


கண்மணிகளே...


டிசம்பர் 7, 2008 அன்றுதான் ''பணிகளைத் தொடங்குக..'' என்று அறிவிப்பு கொடுத்தோம். ஜனவரி 4, 2009 அன்று திருச்சியில் கூடிய பொதுக்குழுவுக்குப் பின்னர் பணிகள் சூடுபிடித்தன.


இன்றோ, தமிழகத்தில் நமது விளம்பரங்களே இல்லாத இடங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு கழகத்தின் போர் வீரர்களாகிய நீங்கள் (தொண்டர்கள்) அசத்தி விட்டீர்கள்.


டிஜிட்டல் பேனர்கள் என்ன? சுவர் விளம்பரங்கள் என்ன? வகைவகை யான துண்டுப் பிரசுரங்கள் என்ன? வண்ண சுவரொட்டிகள் என்ன? இப்படி என்ன.. என்ன... என்ன... என்று எண்ணி பெருமூச்சு விடுமளவுக்கு பல வடிவ விளம்பரங்களைப் பார்க்கும் நண்பர்கள் எங்களுக்கு தொலைபேசியிலே தெரிவிக்கும் போது நாங்களெல்லாம் இறைவன் புகழைப் பாடி அவனையே துதிக்கிறோம்.


இப்படிப்பட்ட தொண்டர்கள், தோழர்களை, ஊழியர்களை எங்களுக்குத் தந்த இறைவனைத்தானே நாம் போற்ற முடியும்!


உங்கள் அளவுக்கு இல்லாவிடிலும் தலைமையின் சார்பிலே நாங்களும் விளம்பரங்களை செய்கிறோம், நாளிதழ்கள், வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள் என பரபரப்பை கூட்டியிருக்கிறோம்.


என்ன இருந்தாலும் உங்களோடு எங்களால் ஓரளவுக்குத்தானே போட்டி போட முடியும்?


கண்மணிகளே...


நேரமில்லை, ஓய்வில்லை, உறக்க மில்லை. ஓடிக்கொண்டே உழைக்கிறோம், உழைத்துக் கொண்டே ஓடுகிறோம். வாகனங்களிலேயே உறங்குகிறோம். சிறிது ஓய்வெடுக்கிறோம்.


எல்லாம் சமுதாயத்திற்காக... சமுதாய நலனிற்காக... இதற்கான கூ­லி நமக்கு இறைவனிடம் இருக்கிறது என்பதை மட்டும் மறவாதீர்கள்.


பேருந்து, வேன், கார் என முன் பதிவுகள் தொடங்கி நாட்களாகி விட்டது. கோவை மாவட்டம் சார்பில் வாகனங்கள் மட்டுமின்றி ''மனிதநேய எக்ஸ்பிரஸ்'' என்ற பெயரில் வாடகை ரயிலையே பிடித்து விட்டார்கள்.


இனி பதிவு செய்வதற்கு பேருந்துகளே இல்லையாம். கவலையுடன் புகார் கூறுகிறார்கள் தொண்டர்கள்.


கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.


வாகனங்களின் எண்ணிக்கையும் மக்களின் வருகைப் பதிவும் நாமே எதிர் பார்க்காத வகையில் பிரமிப்பூட்டுகிறது. ஜனவரி 3 அன்று செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகள் அளித்த பட்டியலை ஒப்பிடும் போது அது பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் உங்களின் அயராத உழைப்புதான் என்பதில் ஐயமில்லை, ஐயமில்லை.


கண்மணிகளே...


மக்கள் ஒன்றை புரிந்த கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் குரல் கொடுக்க நேர்மையான, துணிச்சலான பிரதிநிதிகள் தேவை. இப்போது அந்த வெற்றிடத்தை வெற்றி இடங்களாக மாற்றும் ஆற்றல் தமுமுகவிற்கே உண்டு என உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தான் மக்கள் வெள்ளமாக திரளப் போகிறது. சென்னையின் நுழைவாயிலாம் தாம்பரம் திணறப் போகிறது.


கண்மணிகளே...


வாகனங்கள் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தால் வாகனங்கள் கிடைக்க வில்லையே என்ற உற்சாகம் கலந்த புலம்பலும் நமது காதில் விழுகிறது. எது எப்படியோ... புறப்பட தயாரானவர்கள் யாரும் வராமல் தவறிவிடக் கூடாது. நெல்மணிகளை அள்ளுவது போல் அவர்களை யெல்லாம் அணைத்து, இணைத்து திரட்டிவருவது உங்கள் பொறுப்பாகும்.


கண்மணிகளே...


இக்கடிதத்தைப் படிக்கும் போது நமது ஆயத்தப் பணிகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என கருதுகிறேன்.


வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தாங்கள் கலந்துகொள்ள முடிய வில்லையே... என அங்கலாய்க்கிறார்கள். அவர்களுக்காகவே நமது கழக இணையதளத்தில் மாநாட்டு நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம். அது அவர்களது ஆவலை ஏக்கத்தை ஓரளவாவது போக்கும் என்று நம்புவோமாக.


நமது பணியில் அணியில் எப்போதும் பேராதரவாக இருக்கும் ஜமாஅத்தார் களை மறவாமல் அழைத்து வாருங்கள். பெண்களை பாதுகாப்போடு கூட்டி வாருங்கள். மாணவர்களையும் இளைஞர் களையும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அது இயல்பாகவே திரளக்கூடியது.


வாருங்கள், வாருங்கள். சமுதாய எழுச்சியால் பேரின்பத்தோடு பங்கெடுக்க ஓடி வாருங்கள் என்று வீடு வீடாகச் சென்று கடைசி நேர பணிகளை கச்சித மாக நிறைவேற்றுங்கள். வரும்போது வாகனங்களின் வேகத்தில் போட்டா போட்டி வேண்டாம் என்றும் இங்கே அக்கறையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.


கண்மணிகளே...


தஹஜ்ஜத் தொழுதுவிட்டு அல்லது சுப்ஹு தொழுதுவிட்டு மாநாட்டின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் கண்மணிகள் ஏராளம். அல்லாஹ்வின் உதவியும், திருப்தியும்தான் நமக்கு வலுவான உதவியாக இருக்க இயலும். மாநாடு வெற்றி பெறுவதற்கு, நமது ஒற்றுமை மேலும் வ­மைப் பெறுவ தற்கும், நமது இலட்சியத்தை அடை வதற்கும் தஹஜ்ஜத், சுபுஹு உட்பட ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ் விடம் கையேந்துவோம்.


கண்மணிகளே...


மடலை நிறைவு செய்கிறேன். ஒன்றை மட்டும் கூறிவிட்டு கடைசியாக ஒரே வரி, ஒற்றை வரி. அதுதான் நமது அழைப்பின் முகவரி என்ற அளவில் ஒன்றை பிரகடனப்படுத்துங்கள்.


அஃது ''தாய்க்கழகம் அழைக்கிறது... சமுதாயமே திரண்டு வா...'' என்பதாகும்.

அன்புடன்

எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

No comments: