கிரீஸ் நாட்டில் செயல்படும் உலக பொறியியல் விஞ்ஞான அமைப்பின் சார்பில் சீனா சாங்காய் நகரில் கடந்த 10ம் தேதி முதல் 12 வரை உலக அளவிலான விமானம் மற்றும் ராக்கெட் வடிவமைப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது. அமெரிக்கா உட்பட 105 நாடுகளை சேர்ந்த 135 இன்ஜினியரிங் துறை வல்லுனர்கள், 35 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவிலிருந்து பங்கேற்ற மூன்று பேரில் ராமநாதபுரம் செய்யதம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவரான செய்யது சுல்த்தான் அலாவுதீன் இடம்பெற்றிருந்தார். இவர் "விமான, ராக்கெட் இன்ஜின் இயக்கத்தில் செயல்திறன் மேம்பாடு பற்றிய கம்ப்யூட்டர் மூலம் திரவ இயக்கவியல் ஆய்வு' என்பது குறித்த கட்டுரையை சமர்ப்பித்தார். இந்த கட்டுரையை சிறந்த படைப்பாக தேர்வு செய்த உலக பொறியியல் விஞ்ஞான அமைப்பு, செய்யது சுல்த்தான் அலாவுதீனுக்கு கவுரவ உறுப்பினர் அந்தஸ்து வழங்கியது.
இவர் கூறுகையில், "சர்வதேச கருத்தரங்கில் எனது கட்டுரை சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஜப்பான் ஹொக்கைடோ பல்கலை., மற்றும் சீனா வான்லி பல்கலை., முழு கல்வி உதவித் தொகையுடன் கூடிய மேற்படிப்பு வழங்க முன்வந்துள்ளது.
பிரிட்டன் யுனிவர்சிட்டி பிரஸ் என்ற நிறுவனம் ஆய்வு படைப்பை சர்வதேச இதழில் வெளியிட முடிவு செய்துள்ளது' என்றார். சாதனை படைத்த மாணவரை கல்லூரி செயலாளர் சின்னத்துரை அப்துல்லா, கல்லூரி முதல்வர் முகமது செரீப், பேராசிரியர்கள் செல்வக்குமார், ராஜசேகர் பாராட்டினர்.
நன்றி: தினமலர் - 28 ஜனவரி 2009
ராமநாதபுரம், டிச. 18: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான கருத்தரங்கில் படைப்புகள் சமர்ப்பித்து தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி முடிய நடைபெற்ற கருத்தரங்கில் உலகம் முழுவதிலும் இருந்து 64 நாடுகளைச் சேர்ந்தோர் சுமார் 900-க்கும் மேற்பட்ட படைப்புகளை சமர்ப்பித்தனர். இவற்றில் 300 மட்டும் இறுதிப் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டன.
இறுதிப் போட்டிக்காக தேர்வான கட்டுரைகளை ஆய்வு செய்த நடுவர் குழுவினர் சிறந்த படைப்பாக ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் படைப்புகளைத் தேர்வு செய்தனர்.
செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பயிலும் எலெக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் ஏ.அகமது மொய்தீன், எம்.பாலநாகராஜன் ஆகிய இருவரது கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டது.
இவர்களுக்காக கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு முதல்வர் முகம்மது ஷெரீப் தலைமையும் துணை முதல்வர் எம்.பெரியசாமி முன்னிலையும் வகித்தனர். செயலர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
அவர் பேசியது:
மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு இரு மாணவர்களுக்கும் போட்டியில் பங்கேற்க தேவையான நிதியை கல்லூரியே ஏற்றது. இனி வரும் காலங்களில் இது போன்ற சாதனைகளை நிகழ்த்துவோருக்கு நிதி உதவி உள்பட அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
வரும் ஜனவரி மாதம் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த 4 ஆம் ஆண்டு மாணவர் செய்யது சுல்தான் அலாவுதீன் உலக அளவில் நடைபெற உள்ள ராக்கெட் வடிவமைப்பு பற்றிய தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்க சீனா செல்வதாகவும் தெரிவித்தார்.
துறைத் தலைவர்கள் ஜி.மகேந்திரன், எஸ்.ராஜசேகர் உள்பட கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment