சமூக நீதி கண்காணிப்புக்குழுவும் -சமூக சீர்திருத்த ஏற்பாட்டுக் குழுவும் அவசியம் தேவை!
கி.விரமணி
அரசின் அனைத்துத் துறைகளிலும் நடந்துவரும் பணிகளை ஆய்வு செய்ய டாக்டர் வி. சோமநாதன் அய்.ஏ.எஸ், தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
அய்ந்தாம் முறையாக முத்தமிழ் அறிஞர் மான்புமிகு கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய அளவு, சென்ற ஆண்டு தந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் 90 விழுக்காடு நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவற்றையும்கூட பலவற்றை சாதித்துக் காட்டியுள்ளார்!
இட ஒதுக்கீட்டிலும் கண்காணிப்புக்குழு தேவை!
இந்த கண்காணிப்புக் குழுபோலவே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு விழுக்காடு (மகளிர் இட ஒதுக்கீடு உள்பட) சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதற்கு ஒரு கண்காணிப்புக் குழு (Monitoring Committee) போட்டு, சமூகநீதியில் முழு நம்பிக்கையுள்ள மூவர் குழு அல்லது அய்வர் குழு என்று ஒரு குழு போட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீடு, (S.C., S.T., M.B.C., B.C) உள்பட அரசுத்துறைகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எல்லாவற்றிலும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி, அரசுக்குத் தகவல் அனுப்பிட வற்புறுத்தவேண்டும்.
எனவே, அந்த குழுவினரின் கண்காணிப்பு, மேற்பார்வை - அதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகளைச் செய்யலாம்!
அலுவலக வளாகத்துக்குள் கோயில் கட்டுவதா?
மதச்சார்பற்ற அரசு (Secular State) என்று கூவிக் கொண்டே, மாவட்ட ஆட்சியர்கள் தேர் இழுப்பது, வடம் பிடிப்பது, மாவட்ட காவல்துறை அதிகாரிகளே நெருப்பு மிதிப்பது, ஒரு குறிப்பிட்ட மதத்தின் திருவிழாவில் கலந்துகொள்வது என்பது அசல் கேலிக் கூத்தே!
இதுபற்றி கேள்வி கேட்பாரற்று உள்ளது. அதுபோலவே, காவல்துறை அதிகாரிகள் அய்யப்பன் பக்தியை அப்பட்டமாக வெளிவேஷம் போட்டுக் காட்டுவது - அத்துறை நெறிமுறை (Dress Code - Discipline) இவற்றுக்கு விரோதமானது.
இவற்றையும் இவ்வாட்சி ஒழுங்கு - நெறிப்படுத்தவேண்டும்.
பக்தி அவரவர்களின் சொந்த விஷயம்!
பக்தி அவரவர் சொந்த விஷயம். விடுமுறை போட்டுவிட்டு அந்த வேஷத்தில் இருக்கலாமே தவிர, கடமையாற்றும்போது (Duty) இப்படி இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுதலும் அவசியம், அவசியம்!
அரசுப் பணிமனைகளுக்குள் கோயில் கட்டுவதும் நிறுத்தப் படல் வேண்டும்.
சமூக சீர்திருத்தத்துறை!
சமூக சீர்திருத்தத்துறை என்ற ஒரு துறை - மூட நம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) முதலியவற்றை இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி (51-ஏ) அடிப்படைக் கடமைகளை வலியுறுத்தவும், ஒரு குழுவினரை நியமித்து அவர்கள் முதலமைச்சரின்கீழ் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயம்பற்றி வலியுறுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தி, ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சியை - சமுதாய மறுமலர்ச்சித் திட்டமாகச் செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தினால் அது இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும் என்பதால் அதை அன்புடன் வேண்டுகோளாக பகுத்தறிவாளர்கள் சார்பில் வைக்கிறோம்.
நன்றி: விடுதலை நாளிதழ்.
No comments:
Post a Comment