.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, June 29, 2009

நிர்வாண சாமியாரிடம் ஆசி (?)பெரும் மத்திய மந்திரி

நிர்வாண சாமியாரிடம் ஆசி பெரும் சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள்?!
இவர்களின் கையில் தேசம்?

Sunday, June 28, 2009

நூதன மோசடி: விபச்சாரத்திற்கு ஆண்கள் தேவை! சி.பி.சி.ஐ.டி., தீவிர விசாரணை

"ஆண் விபசாரம்' தொடர்பாக, கோவை மற்றும் சென்னையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "பெண்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தேவை' என "எஸ்.எம்.எஸ்' அனுப்பி, எண்ணற்ற இளைஞர்களிடம் உறுப்பினர் கட்டணம் வசூலித்த ஆசாமிகள் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கேளிக்கை விடுதிகளும், ஆபாச நடன "பார்'களும், நூதன விபசாரமும் போலீசாரின் கண்காணிப்பை மீறி கலாசாரச் சீரழிவை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த அழிவுக் கலாசாரம் மெல்ல, மெல்ல தமிழகத்திலும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. சென்னை, கோவை நகரங்களிலுள்ள சில பிரபல ஓட்டல்களில் "ஆபாச நடன பார்கள்' செயல்படுகின்றன. அரசியல், அதிகார உயர்பீட தலையீடுகள் காரணமாக, நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடக்கும் கலாசாரச் சீரழிவு கூத்துகள் போதாது எனக்கூறி, ஆண்களை விபசாரத்துக்கு அனுப்பும் நூதன தொழிலையிலும் சிலர் துவக்கியுள்ளனர். "Mச்டூஞு ஞுண்ஞிணிணூtண் ண்ஞுணூதிடிஞிஞு' என்ற பெயரில் சென்னை, கோவை நகரிலுள்ள நபர்களின் மொபைல் போ னுக்கு தொடர்ச்சியாக "எஸ்.எம்.எஸ்'கள் வருகின்றன.அதில், "வசதி படைத்த பெண்கள் கணவரை பிரிந்தும், இழந்தும் தவித்து வருகின்றனர்; அவர்களுக்கு "சேவை' செய்ய நீங்கள் தயாரா? "ஆம்' என்றால் உடனடியாக இந்த மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளுங்கள்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த எண்களை தொடர்பு கொண்டதும், எதிர் முனையில் பேசுபவர் "நீங்கள் எந்த மாநிலம்?' ஆங்கிலத்தில் கேட்கிறார்."தமிழகம்' என்றதும், தமிழில் சரளமாக பேசும் அந்நபர், "மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை, நீங்கள் "சேவை' செய்ய வேண்டியிருக்கும்; நீங்கள் வசிக்கும் நகர் எது?' என கேட்கிறார். "கோவை' என்றதும், இங்குள்ள பிரபல ஓட்டல்களின் பெயர்களை வாசிக்கும் அவர், "உங்களது மொபைல் போன் எண்களை, எங்களிடம் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்திருக்கும் சில பெண்களிடம் கொடுப்போம்; அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு ஓட்டலுக்கு "பிக்-அப்' செய்து அழைத்துச் செல்வர்; மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சேவைக்கு ஏற்ப நீங்கள் சம்பாதிக்கலாம்; அதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியது; உறுப்பினர் சேவைக் கட்டணமாக வங்கி கணக்கில் (தனியார் வங்கி பெயர், கணக்கு எண் விவரம் தெரிவித்து) 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என்கிறார். "பணம் செலுத்திய விவரம் எமக்கு கிடைத்ததும், உங்களுக்கான "பணி' துவங்கும்' என்கிறார். இந்நபர்களின் பேச்சை உண்மையென நம்பி, கோவையைச் சேர்ந்த சிலர், தனியார் வங்கியில் பணம் செலுத்தி இழந்தனர்.

"வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக் கருதி, போலீசில் புகார் செய்யாமல் தவிர்த்து விட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும், போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட "எஸ்.எம்.எஸ்' அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் "சிம்கார்டு' உரிமையாளரின் முகவரி, வங்கிக் கணக்கு துவக்கியவரின் முகவரியை சேகரித்தபோது, மகாராஷ்டிர மாநிலம், மும்பை, தாதர் பகுதியில் மோசடி நபர்கள் செயல்படுவது அம்பலமானது. மேலும், தனியார் வங்கியில் பலரும் செலுத்திய பணம், தாதரிலுள்ள ஏ.டி.எம்., மையத்தில் எடுக்கப் பட்டதும் தெரியவந்தது. எனினும், யாரும் புகார் தராததால், நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் தவிர்த்து விட்டனர்.தமிழகத்தில் இதுபோன்ற மோசடி அதிகரித்து வருவதை அறிந்த உள்துறை செயலகம், ரகசிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டுள்ளது. மோசடி நபர்களின் மொபைல் போன் எண்கள், வங்கி கணக்குகளை சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், சென்னை மற்றும் கோவையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் செயல்படும் மோசடி கும்பலுடன், தமிழக நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இஸ்லாம் மதத்துக்கு நான் எதிரானவளா? திலகவதி ஐபிஎஸ் விளக்கம்


அண்மைக்காலத்தில் நடந்துவரும் சில கொலைகளின் பின்னணி சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன. சென்னையில் பள்ளிப்பருவத்தில் காதலில் ஈடுபட்ட யாஸ்மின் என்ற பெண்ணை அவரது தந்தை சலீமே குத்திக் கொன்றார். அதுபோலவே சேலம் மாவட்டத்தில், மகன் விஜயகுமார் சம்பாதித்து வருவதை அவரது அப்பா நடேசன் குடிப்பதற்காக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் நடேசனை விஜயகுமார் கொன்று போட்டார். இச்செய்திகளை "மகளைக் கொன்ற அப்பன் அப்பனைக் கொன்ற மகன்'’என்ற தலைப்பில் ஜூன் 6 தேதியிட்ட நக்கீரனில் வெளியிட்டிருந்தோம்.

ரத்த உறவுகளுக்குள்ளேயே கொலை வெறி தாண்டவமாடுவது தொடர்பான சமுதாயக் காரணங்கள் மற்றும் உளவியல் காரணங்கள் பற்றி கருத்து தெரிவித்த திலகவதி ஐ.பி.எஸ், "பெற்றோர் முடிவுக்கு எதிராக காதலில் ஈடுபடும்போது, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக பெற்றோரே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்த சம்பவம் புதிதானதல்ல' என்று சொல்லியிருந்ததை வெளியிட்டிருந்தோம்.

திலகவதியின் கருத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடமிருந்து கடிதங்கள், தொலை நகல்கள், மின்னஞ்சல் வாயிலாக எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. அன்பையும் அமைதியையும் வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கத்தில் கொலைக்கு இடமேயில்லை என வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களையும் தொலை நகல்களையும் அனுப்பியுள்ளனர்.

""எந்த உயிரையும் அநியாயமாகக் கொல்லுமாறு இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. ஒரு ஆத்மாவின் ரத்தம் எப்போது பூமியில் சிந்தப்படவேண்டும் என்பதை படைத்த இறைவன் தெளிவாகச் சொல்லியுள்ளான். "எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ (ஒரு கொலையைத் தடுக்கும் விதத்தில்), அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்' என்கிறது திருமறை. யாரோ ஒரு தனி மனிதன் செய்ததை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாம் மீதும் பழி சுமத்துவதா?''’என கேட்டிருக்கிறார் ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் பி.எஸ்.சாதிக்.

""அரபு நாடுகளில் இத்தகையக் கருணைக் கொலைகள் சர்வசாதாரணமானது எனக் கூறியிருப்பது உண்மையெனில், கடந்த ஓராண்டில் குடும்ப கவுரவத்திற்காக கருணைக் கொலை செய்த அரபுகளின் எண்ணிக்கையைத் தந்திருக்க வேண்டும். மேலும், அரபுநாடுகள் இஸ்லாத்தின் குத்தகைதாரர்கள் அல்ல. அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் இஸ்லாமியர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதுமில்லை. அரபு நாடுகளில் நடப்பவை அனைத்துமே இஸ்லாமிய செயல்பாடுகள் என ஒருவர் கருதுவாரேயானால் அவர் தவறான புரிந்து கொள்ளலில் இருக்கிறார் என்றே அர்த்தம்.'' என்கிறார் மின்னஞ்சலில் கருத்தைப் பதிவு செய்திருக்கும் அபுசுமைய்யா.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) மாநிலத் துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, ""அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடைபெறுகின்றன என்பதற்கு அணுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகம் காலத்திற்கு முந்தைய அறியாமைக்கால அரபுகள் பெண் குழந்தைகளைச் சாபக்கேடாக நினைத்து உயிருடன் புதைத்து வந்தார்கள். இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு, பெண் குழந்தைகளை இறையருளின் அடையாளமாய் போதித்தார்கள். இரு பெண் குழந்தைகளைச் சிறப்பாக வளர்த்தவர்களுக்கு சுவர்க்கம் உறுதி என்று நவின்றார்கள். உண்மை இவ்வாறிருக்க, பெற்ற பிள்ளையைக் கொல்வது அந்த மதத்திற்குப் புதிதானதல்ல என்ற திலகவதியின் கருத்து கண்டனத்திற்குரியது.

இரண்டு கொலைகள் நடந்திருக்க, அதில் ஒன்றை மட்டும் மதத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது அறிவுநாணயமுள்ள செயலா? தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருந்தாலும் அவர்களைக் கொல்வது ஒரு ஷத்ரியனின் கடமை என கிருஷ்ண பரமாத்மா போதித்தது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது. 19 வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையைக் கொன்றது இந்து மதத்திற்குப் புதிதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சமூக ஒற்றுமைக்கு உதவும்'' என விரிவாக கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் எதிர் வினைகள் குறித்து திலகவதி ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்...

""சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் மனித ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கட்டுப்பாடு உடைய ஒரு தந்தையாக இருந்திருப்பார். தான் மிகவும் அன்பு வைத்திருக்கும், பாசம் வைத்திருக்கும் தன் மகள், குடும்ப கௌரவத்துக்கு இழுக்கு வரும்படி நடந்துவிட்டாளே என்கிற வேகத்தில் யாஸ்மினை கொலை செய்திருக்கலாம்.

சலீமை பொறுத்தவரை அவர் மனநலம் பாதிக்கப் பட்டவரோ, சைக்கோவோ, கொலைவெறி கொண்ட மிருகமோ அல்ல. தன் மகள் யாஸ்மின் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கிறார். இவ்வளவு பாசமானவர் கொஞ்சம் அமைதியாக, அன்பாக பேசி தன் மகளுக்கு புரிய வைத்திருந்தால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்காது'' என்பதுதான் என் கருத்து.

அரபு நாடுகள் மற்றும் சில மேற்கத்திய நாடுகளில் ஐர்ய்ர்ன்ழ் ஃண்ப்ப்ண்ய்ஞ் (கௌரவக் கொலைகள்) நடந்திருப்பதை ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகளின் அறிக்கைகள் வெளிப்படுத்தி யிருக்கின்றன. அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடக்கின்றன என்பது என் சொந்தக் கருத்தல்ல, அது நான் படித்த விஷயம் அவ்வளவுதான்.

பாசத்துக்குரிய மகளைக் கொன்று குற்றவாளியாக நிற்கும் தனிப்பட்ட சலீமை பற்றி நான் சொன்ன கருத்துகள் மத ரீதியாக தொடர்புபடுத்தப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கின்றன. நான் சொன்ன கருத்தை மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய தில்லை. நான் இஸ்லாம் மதத்திற்கு எதிராக இல்லை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்கிறார் திலகவதி ஐ.பி.எஸ்.

சில வருடங்களுக்கு முன்பு, ""நபிகள் நமக்குச் சொன்னவை'' என்ற தலைப்பில் நபிகள் நாயகத்தின் கருத்துகளை.... எளிமையான மொழியில் நூலாக்கியிருக்கிறார் திலகவதி ஐ.பி.எஸ். என்பதையும் இங்கே குறிப்பிடுகிறார்கள் அவரின் நண்பர்கள்.

-சகா
படம் : ஸ்டாலின்

நன்றி: நக்கீரன்

Saturday, June 27, 2009

தலைநகர் டெல்லியில் 400ஆண்டு பழமைவாய்ந்த மசூதி இடிப்பு.

400ஆண்டு பழமைவாய்ந்த மசூதி இடிப்பு!
மசூதி இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் - டெல்லி விரிவாக்கத் துறையினரின் அத்துமீறிய செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

புது டில்லி: 26-06-2009 இந்திய தலைநகரமான டெல்லியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

மெஹ்ரோளியிலுள்ள திபியாவாலி என்ற பெயரில் அறியப்படும் மசூதியை டெல்லி விரிவாக்க துறையும் காவல்துறையும் இணைந்து இடித்தது.

நேற்று மாலை நான்கு மணியளவில் மசூதியை இடிப்பதற்கான எஸ்கவேட்டரும் மற்ற உபகரணங்களுமாக அப்பகுதிக்கு வந்த டெல்லி விரிவாக்கத் துறையினர், மசூதியின் மேற்பகுதியையும் சுவர்களையும் இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்படும் செய்தியறிந்து அப்பகுதியில் கூடிய முஸ்லிம்கள், மசூதியை இடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையின் உதவியுடன் மசூதி இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரிவாக்கத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக காவல்துறை லத்திசார்ஜ் நடத்திக் கூட்டத்தை விரட்டியது.

சட்ட விரோதமான ஆக்ரமிப்பு என்ற பெயர் கூறி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலத்திலேயே இம்மசூதியினை இடிப்பதற்கு முயற்சி நடந்தது. அதனை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தடுத்து நிறுத்தியிருந்தார். இப்பிரச்சனையைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

மசூதி இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இம்மசூதி புராதன கட்டிடங்களின் பட்டியலில் உள்ளதாகும்.

மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லி விரிவாக்கத் துறையினருடன் ஆலோசனை நடத்தப்படும் என வக்ஃப் போர்ட் செயலர் சவுதரி மதீன் அஹமது கூறினார். அதிகாரிகளின் அத்துமீறிய இச்செயல் சட்ட விரோதமானது என மசூதியின் நிர்வாக கமிட்டி தலைவர் மவுலானா முஹம்மது தல்கா கருத்து கூறினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

மர்மமான முறையில் குவைத்தில் இறந்தவரின் விசாரணைக்கும் - ஊதியம் மற்றும் இழப்பீடு கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்குமா?

மர்மமான முறையில் குவைத்தில் இறந்த தமிழக வாலிபர் -
உதவ மறுக்கும் இந்தியத் தூதரகம்
.

மர்மமான முறையில் இறந்தவரின் விசாரணைக்கும் - அவரது ஊதியம் மற்றும் உரிய இழப்பீடும் பெற்று அவரது குடும்பத்தாருக்கு கிடைக்க தமிழ அரசு துரித நடவடிக்‍கை எடுக்க முன்வருமா?

நன்றி :தினமலர்திருநெல்வேலி : குவைத்தில் மர்மமான முறையில் இறந்த தமிழக வாலிபரின் உடல், ஐந்து மாதங்களாக சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் திருநகரை சேர்ந்த முகம்மது சம்சுதீன் மகன் சமீர்ஷெரீப் (31). இவரது மனைவி பாத்திமாவின் சகோதரர் உஸ்மான்அலி குவைத்தில் டிரைவராக பணிபுரிவதால், சமீர்ஷெரீப்பை டிரைவர் பணிக்கு 2008 அக்டோபரில் குவைத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ராபியா என்னுமிடத்தில் ஹாலித் என்பவரின் வீட்டில் சமீர் ஷெரீப் பணியில் சேர்ந்தார்.


உஸ்மான்அலியும் அதே பகுதியில் வேலைபார்த்தாலும், ஹாலித்தின் கெடுபிடியால் சமீரை அடிக்கடி சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. டிரைவர் பணி மட்டுமல்லாது, வீட்டை சுத்தம்செய்வது உட்பட பல பணிகளை ஓய்வில்லாமல் செய்ய சமீர் பணிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜன., 12ம் தேதி உஸ்மான்அலி, சமீரை பார்க்க சென்றபோது அவர், "ஜன., 10ம் தேதி இறந்து விட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடம் உஸ்மான் விசாரித்தார். சம்பவத்தன்று வீட்டில் தகராறு நடந்ததாகவும் சமீர் அடித்துக்கொலை செய்யப்பட்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். "ஹாலித் குவைத்தில் அரசாங்க பணியில் இருப்பதால் அவர் சொல்வதைத்தான் அங்குள்ள அதிகாரிகள் கேட்கிறார்கள் எனவும் தமது மைத்துனரின் மர்மசாவு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை,' என உஸ்மான் தெரிவித்துள்ளார்.


குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள், "உடலை வேண்டுமானால் வாங்கிச்செல்லுங்கள், அல்லது இங்கேயே புதைத்துவிடுங்கள்; ஹாலித் மீது எந்த நடவடிக்கையையும் எதிர்பாராதீர்கள்,' என அறிவுரை கூறியுள்ளனர். ஐந்துமாதங்களாக சமீரின் உடல் குவைத் பிணவறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை பார்க்க உஸ்மான் அலி அனுமதிக்கப்படவில்லை. அவர் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளார். சமீர்ஷெரிப்பின் மர்ம மரணம் குறித்து உறவினர்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவரின் உடலையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீர் இறந்த ஹாலித்தின் வீட்டில் 2004, 2005 ஆண்டுகளில் ஆந்திராவை சேர்ந்த ஒரு டிரைவரும், வீட்டுப்பணிப்பெண்ணாக வேலைபார்த்த இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

Friday, June 26, 2009

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி த.மு.மு.க. ஆர்பாட்டம்

சென்னையை அடுத்த ஆலந்தூர் மண்டித் தெருவில் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி த.மு.மு.க. நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பெண்கள் உட்பட பெரும் திரலானோர் கலந்து கொண்டனர்.

Thursday, June 25, 2009

அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பாடும் அம்பத்தூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பாடும் அம்பத்தூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என தினமும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்லும் அம்பத்தூர் ரயில்வே கேட் எந்த நேரமும் மூடியே கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் செல்பவர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். சில நேரங்களில் தண்டவாளத்தை கடக்க முயலும்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க இங்கு சுரங்கப்பாதை அமைத்துத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Wednesday, June 24, 2009

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்.

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-ன் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்

சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.


முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Tuesday, June 23, 2009

நக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

நக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின்
முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து
சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமுமுக அறிவிப்பு!

முஸ்லிம்களுக்கு எதிரான விஷமக் கருத்தை வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சென்டரல் மெமோரியல் ஹால் எதிர் புறம் இன்ஷா அல்லாஹ் (24-06-09 புதன்கிழமை மாலை 4.மணியளவில்) நடைபெறுகிறது.

கலகவதி ஆகலாமா திலகவதி!

நக்கீரன் 20.06.2009, தேதியிட்ட இதழின் முகப்புக்கட்டுரையான ‘மகனைக் கொன்ற அப்பன், அப்பனைக் கொன்ற மகன் குற்றப்பின்னணி என்ற கட்டுரையில் (பக்-7) காவல்துறை அதிகாரியும், இலக்கியவாதியுமான திருமதி திலகவதியின் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் கருத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதால் இவ்விளக்கத்தை எழுதுகிறோம்.

”குடும்பகௌரவத்தைக் காப்பாற்ற பெற்றோர்களே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல” என்று கருத்துகூறியுள்ளார் திலகவதி.

அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடக்கின்றன என்பதற்கு அனுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக கௌரவக்கொலைகள் நடக்கின்றன என்பது அபத்தமான அவதூறு.

‘சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல’ என்ற நச்சுக்கருத்தை திலகவதி போன்ற நல்லிலக்கியவாதி வெளிப்படுத்துவது வேதனைக்குரியது.

இஸ்லாம் மார்க்கம் இத்தகைய கொலைகளை கொள்கையளவில் அங்கீகரிப்பது போன்ற தோற்றத்தை திலகவதி ஏற்படுத்துகிறார்.

”இது அமைதி மார்க்கம் இதில் எவ்விதமான நிர்பந்தமும் கிடையாது” என்கிறது திருக்குர்ஆன். இறைக்கட்டளையையே நிர்பந்தப்படுத்தி ஒருவரை ஏற்கச் செய்ய இஸ்லாம் அனுமதிக்காத போது. தன்கருத்துக்கு ஒவ்வாத பிள்ளையைக் கொல்வதற்கு எப்படி அனுமதிக்கும்?

பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகத்திற்கு முந்திய காலத்தில் அறியாமைக்கால அரபுகள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள். பெண் குழந்தைகளை சாபக்கேடாகக் கருதினார்கள்.

இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு பெண்குழந்தைகளை இறைஅருளின் அடையாள்மாய் போதித்தார்கள். இருபெண் குழந்தைகளை சிறப்பாக வளர்த்தவருக்கு சுவர்க்கம் உறுதி என்று நவின்றார்கள்.

திருக்குர்ஆனின் 81 வது அத்தியாயத்தின் 8,9 வசனங்கள் பெண் சிசுக்கொலை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றன.

குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களில்லை என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் இப்படி ஏராளமான சான்றுகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

உண்மை இவ்வாறிருக்க பெற்ற பிள்ளையையக் கொல்வது அந்த மதத்திற்குப் புதிதானது இல்லை என்ற திலகவதியின் கருத்து வன்மையான கண்டனத்திற்குரியது.

”சொந்தப்பிள்ளையை அல்ல அநியாயமாக எந்த ஒரு மனித உயிரை எவர் கொன்றாலும் அவர் உலக மக்கள் அனைவரையும் கொன்றவர் போலாவார். ஒரு மனித உயிரை வாழவைத்தவர் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” என்று திருக்குர்ஆன் போதிக்கிறது. இத்தகையக் கட்டளைகளைக் கொண்டுள்ள மார்க்கத்தை கொலைகளை அங்கீகரிக்கும் மதமாக திலகவதி சித்தரித்துள்ளார்

காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தனிவாழ்வில் ஒழுங்கீனமானவராக இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரும் அப்படிப்பட்டவர்களே என்று கூறமுடியுமா?

மகளின் மீது அதீதபாசம் வைத்திருந்த ஒருவர் தன் கண்முன்னால் மகள் சீரழிவதை சகிக்க முடியாமல். வெறியோடும் அறிவீனத்தோடும் செய்த கொலைக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போட்டதே முதலில் தவறு. இந்தக் கொலையை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. குற்றச் சம்பவத்தையும், அதைச் செய்தவர்களின் மதத்தையும் இணைத்துப் பார்ப்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே நடக்கிற கருத்தியல் வன்கொடுமை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். இரண்டு சம்பவங்கள் நடந்திருக்க, ஒரு சம்பவத்திற்கு மட்டும் மதத்தை முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயலா? ‘

மஹாபாரதத்தில், ‘என் உறவுகளை பதவிக்காக நான் கொல்லமாட்டேன்’ என்று அர்ஜுனன் மறுக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருத்தாலும் அவர்களைக் கொலை செய்வது ஒரு ஷத்ரியனின் கடமை என்று போதிக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. இது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது.

பத்தொன்பது வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையான நடேசனைக் கொன்றுள்ளதற்கு கீதையை ஆதாரம் காட்டி தந்தையைக் கொல்வது இந்துமதத்திற்குப் புதியதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப்போடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் சமூக ஒற்றுமைக்கு உதவும். திலகவதி தன்கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Friday, June 19, 2009

நியாயவிலைக் கடைகளில் அரிசி வழங்க நிபந்தனை விதிப்பதாக பொதுமக்கள் புகார்!

ஒரு ரூபாய் அரிசி வழங்க நியாய விலைக் கடைகளில் நிபந்தனை விதிப்பதாக பொதுமக்கள் புகார்!

நியாயவிலைக் கடைகளில் சோப்பு, சேமியா வாங்கவேண்டும்! மண்எண்ணை, பாமாயில் கூடுதல் விலைக்கு விற்பனை!!


தமிழக அரசுக்கு கெட்டபெயரையும் பொதுமக்களுக்கு துரோகமும் செய்து வரும் நியாயவிலை கடைகாரர்கள், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நீதி வழங்குமா?

சென்னை, ஜூன்.18 நியாயவிலைக்க‍டைகளில் சோப்பு, சேமியா வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி வழங்குவதாகவும், மண்எண்ணை, பாமாயில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசி
ஏழை நடுத்தர மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு நியாயவிலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் பொருட்களை வழங்கிவருகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கிராமபகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.50-க்கு அனைத்து மளிகை பொருட்களும் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படுவது ஏழைகளுக்கு பயன் உள்ளதாக உள்ளது. பொதுமக்களுக்கு பயன்உள்ள இந்த திட்டங்களை நியாயவிலைகடைகாரர்கள் சரியாக செயல்படுத்துவது இல்லை என்பது அனைவரது குற்றச்சாட்டாகும்.

இப்படிப்பட்ட நியாயவிலைக் கடைக்காரர்கள் தமிழக அரசுக்கு கெட்ட பெயரையும், பொதுமக்களிடையே வெறுப்பையும் ஏற்படுத்திவருகிறார்கள்.

நியாயவிலை கடைகளுக்கு பெண்கள்தான் அதிக அளவில் செல்கிறார்கள். இவர்களை எந்த எந்த வகைகளில் ஏமாற்ற முடியுமோ அந்த வகையில் எல்லாம் அந்தக் கடைக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள்.

சோப்பு வாங்கினால்தான் அரிசி
ரூ.45 மதிப்புள்ள சோப்பு அல்லது சேமியா வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி, மண்எண்ணை தரமுடியும் என்று கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகிறார்கள்.

வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ அரிசி ரூ.15-க்கு குறைவாக கிடைப்பது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒரு ரூபாய் அரிசிக்கு கடும்கிராக்கி உள்ளது. இட்லி மாவு கடைக்காரர்கள், இடியாப்பம் தயார் செய்து விற்பனை செய்பவர்களுக்கு நியாயவிலை கடைகாரர்கள் ஒரு ரூபாய் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசியை வாங்குவதற்காக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் சென்னைக்கு படையெடுத்து வருகிறார்கள். இவர்கள் ஒரு ரூபாய் அரிசியை ரூ.4-க்கு வாங்கி ஆந்திராவில் ரூ.10-க்கு விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள்.

ரெயில் மூலம் அரிசி கடத்தல்
இவர்கள் நியாயவிலை அரிசியை ஆந்திராவுக்கு ரெயில் மூலம் கடத்திச்செல்வதாக கூறப்படுகிறது. நியாயவிலை கடைகளில் ஒரு லிட்டர் மண்எண்ணை ரூ.8.40-க்கு விற்பனை செய்யப்படுவதை கடைக்காரர்கள் முறையாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது இல்லை. கூடுதல் விலைக்கு புரோக்கர்களுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. நியாயவிலை கடைகளில் வாங்கப்படும் மண்எண்ணை ஒரு லிட்டர் ரூ.25-க்கு மேல் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். நியாயவிலை கடைகளில் உள்ள பாமாயிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் புகார் கூறப்படுகிறது.

நியாயவிலை கடைகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் புகார் மனுக்கள் எழுதிப்போட்டால் அவற்றை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். நியாயவிலைக்கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரைதான் முறையாக செயல்படுகிறது. மதியம் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சரியாக இயங்குவது இல்லை. இந்த நேரத்தில் கடைகளுக்கு சென்றால் கணக்கு பார்க்கவேண்டும் என்று கூறி பொதுமக்களை கடைக்காரர்கள் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

தமிழக அரசுக்கு கெட்டபெயரையும் பொதுமக்களுக்கு துரோகமும் செய்து வரும் நியாயவிலை கடைகாரர்கள், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நீதி வழங்குமா?

Thursday, June 18, 2009

தருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடை தொட்டியில் எலும்புக்கூடு

தருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடை தொட்டியில் எலும்புக்கூடு வந்தது எப்படி?


மயிலாடுதுறை, ஜூன் 17- தருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடையில் எலும்புக்கூடு கிடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை கட்டும் பணி, கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே ஆள்நுழைவு தொட்டிகள் (மேன் ஹோல்) கட்டப்பட்டுள்ளது. இதில் தருமை ஆதீனம் மடத்தின் பின்புறம் உள்ள தொட்டிக்குள் எலும்புக்கூடு கிடப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்.ஐ. சின்னையன் மற்றும் போலீசார் சென்று தொட்டியில் கிடந்த எலும்புக்கூட்டின் பாகங்களை சேகரித்தனர். பின்னர் அவை தடயவியல் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எலும்புக்கூடு கிடந்த இடத்தில் ரோஸ் கலர் நைலக்ஸ் சேலை கிடந்தது. இதனால் இறந்தது பெண்ணாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, எலும்புக்கூடாக கிடந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டரா என்று பல கோணங்களில் விசாரிக்கின்றனர். தடயவியல் நிபுணர்கள் அறிக்கை வந்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Wednesday, June 17, 2009

பி.பி.சி தமிழோசையில் த.மு.மு.க தலைவரின் நேர்காணல்

எகிப்தில் ஒபாமாவின் உரை
தமுமுக தலைவரின் கருத்து (பிபிசி தமிழோசை)


குறிப்பு: தீபம் தொலைக்காட்சியில் ஜூன் 17 புதன் கிழமை காலை லண்டன் நேரம் 7 30 மணிக்கு த.மு.மு.க தலைவரின் நேர்காணல் நேரலையில் காணத்தவராதீர்கள்.
Monday, June 15, 2009

எழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம்

எழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம்

- நமது நிருபர்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்
ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.


சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் தமுமுக
உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.

ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.

ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.

இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.

லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.
-நமது நிருபர்

பிரிட்டனில் தொடர்து வரும் தமுமுக தலைவர் நிகழ்சிகள்

ஜுன் 13 அன்று லண்டன் இஸ்லாமிக் தாவா சென்டர் ஆண்டு விழா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குக் கொள்கிறார்

ஜுன் 14 லண்டன் கிரேடன் பள்ளிவாசலில் ஆங்கிலத்தில் இஸ்லாத்தில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஜுன் 15 லண்டன் கிரேடன் பள்ளிவாசலில் தமிழக சகோதர்களுடன் கலந்துரையாடல்

ஜுன் 21 அன்று பிரான்ஸ் நாட்டில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் கருத்தரங்கில் பங்குக் கொள்கிறார்
(தொடர்புக்கு அன்சாரி 00 33 612 581419)

Saturday, June 13, 2009

த.மு.மு.க தலைவரின் லண்டன் பயணம்

லண்டனில் த.மு.மு.க தலைவரின் உரை
லண்டனில் உள்ள இஸ்லாமிய அழைப்பு பணி மையம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் நாளை 13-06-2009 மாலை 7 மணியாளவில் உரையாற்றவுள்ளார்கள்.


தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

Friday, June 12, 2009

மாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது! பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை.

வெயிலில் நிற்க வைப்பது, தலையில் குட்டுவதற்கு தடை
மாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது
பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை


சென்னை, ஜூன்.12 மாணவர்களை அடிப்பது, வெயிலில் நிற்கவைப்பது, தலையில் குட்டுவது போன்ற எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

65 வகையான புகார்கள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 4,200 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 1,600 அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 70 லட்சம் மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள்.

இப்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் பெற்றோர்களிடம் இருந்து வந்துள்ளன. மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை வசூலிக்கப்படுகிறது, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை வெயிலில் நிற்க சொல்லி தண்டனை கொடுக்கிறார்கள், பிரம்பால் அடிக்கிறார்கள், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்&2 சான்றிதழ் வாங்கும்போது மாற்று சான்றிதழ் வழங்கும்போது மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது உள்பட 65 வகையான புகார்கள் வந்துள்ளன.

சுற்றறிக்கை

ஏற்கனவே மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் என்று அரசாணை இயற்றப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மீறியும் மாணவர்கள் அடிக்கப்படுகிறார்கள் என்று புகார் வந்துள்ளதால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நன்கொடை- குற்றம்
எந்த ஒரு மாணவரையும் அடிக்கக்கூடாது. வெயிலில் நிற்கவைத்தல், முதுகில் செங்கலை சுமக்க வைத்தல், தலையில் குட்டுதல் உள்ளிட்ட எந்த ஒரு தண்டனையையும் கொடுக்கக்கூடாது.

பள்ளியில் உள்ள வேலைகளை மாணவர்களை கொண்டு செய்யக்கூடாது. மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வாங்கக்கூடாது. அது குற்றமாகும். மேலும் மாற்று சான்றிதழ் கொடுக்கும்போதும் பணம் வாங்கக்கூடாது. பள்ளிகளில் மேற்கண்ட எந்த குற்றமாவது நடக்கிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை

திருச்சியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலித்ததால், அதே போல எந்த பள்ளியிலும் வசூலிக்கக்கூடாது என்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

Monday, June 8, 2009

அரசு கல்லூரி விரிவுரையாளர் கட்ஆப் விபரம் இணையத்தில் வெளியீடு

அரசு கல்லூரி விரிவுரையாளர் கட்ஆப் விபரம் இணையத்தில் வெளியீடு


நெல்லை, ஜூன் 8-தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும¢ அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு நெல்லை உட்பட முக்கிய நகரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், கணிதம், பொருளியல், மனையியல், அரசியல் அறிவியல், சமஸ்கிருதம், இதழியல், மேலாண்மையியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான கட் ஆப் விவரம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திலும் பொது பிரிவினர், பிற்பட்டோர், பிற்பட்டோர் (முஸ்லிம்), ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஊனமுற்றோர் என இன சுழற்சி வாரியாக கட் ஆப் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 1:5 என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

நேர்முகத்தேர்விற்கான கடிதங்கள் அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்கு பின்னர் தகுதி, திறமையின் அடிப்படையில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Thursday, June 4, 2009

முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றுள்ளார்.

பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றுள்ளார்.

அவருக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
இந்திய பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அனைத்துக் கட்சி தலைவர்கள்
பாராளுமன்றத்தின் சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் முயற்சி செய்தனர். எனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீரா குமாரை சபாநாயகராகவும், பா.ஜனதாவை சேர்ந்த கரிய முண்டாவை துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பாராளுமன்றம் கூடியதும் மீரா குமாரை சபாநாயகராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை சோனியா முன் மொழிந்தார். அது போல, அவை முன்னவரும் மத்திய மந்திரியுமான பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாடி), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), லாலு பிரசாத் (ராஷ்டிரிய ஜனதா தளம்), சரத்பவார் (தேசியவாத கங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), டி.ஆர்.பாலு (தி.மு.க.) என அனைத்து கட்சி தலைவர்களும் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.

தந்தை அமர்ந்த இருக்கை
அதைத் தொடர்ந்து மீரா குமாரை சபாநாயகராக்கும் தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. இந்திய பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீர்மானம் நிறைவேறியபோது முன் வரிசையில் மீரா குமார் அமர்ந்து இருந்தார்.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அத்வானி மூன்று பேரும் அவரை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது அனைத்து எம்.பி.க்களும் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் மீரா குமாரை வாழ்த்தி பேசினர்.

மீரா குமாரின் தந்தையும் முன்னாள் துணை பிரதமருமான ஜெகஜீவன் ராம் பாராளுமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்துள்ளார். 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் 7வது, 8வது பாராளுமன்ற தொடக்கத்தில் அவர் தற்காலிக சபாநாயகராக அவர் செயல்பட்டார். தந்தை ஜெகஜீவன் ராம் அமர்ந்த இருக்கையில் தற்போது மீரா குமார் அமர்ந்துள்ளார்.

பிரதமர், அத்வானி பாராட்டு
மீரா குமாரை பாராட்டி பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘‘பாராளுமன்ற சபாநாயகராக மீரா குமார் பதவியேற்று இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். தூதரக அதிகாரியாக, மத்திய மந்திரியாக 25 ஆண்டுகால எம்.பி.யாக அவர் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. அந்த அனுபத்தை கொண்டு சபாநாயகராக சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரது தந்தையுடன் (ஜெகஜீவன் ராம்) நான் பணியாற்றி இருக்கிறேன். அவரை போலவே மீரா குமாரிடமும் அறிவு, சிந்தனை, அனுபவம் ஆகியவை உள்ளன‘‘ என்றார்.

மீரா குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் அத்வானி கூறுகையில், "பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்திச் செல்வதற்கு மீரா குமாரின் நீண்ட கால பொது வாழ்க்கை அனுபவங்கள் கை கொடுக்கும் என்று நம்புகிறேன்" என்றார். அதைத் தொடர்ந்து பிற கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகர் மீரா குமாரை பாராட்டி பேசினர்.

பிற கட்சி தலைவர்கள்
மதசார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய மந்திரியுமான சரத் பவார், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சிவசேனா எம்.பி. சந்திரகாந்த் கெய்ரே, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, தெலுங்கு தேசத்தை சேர்ந்த நாகேஸ்வர ராவ், அகாலிதளத்தை சேர்ந்த ரதன் சிங் அஜனாலா உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்தினர்.

தி.மு.க. சார்பாக பேசிய முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. சார்பாக பேசிய முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையும், "மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும்" என வலியுறுத்தினர்.
டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘முதல் பெண் சபாநாயகரை தேர்ந்தெடுத்ததன் மூலமாக பெண்கள் மசோதாவை நிறைவேற்றுவதற்கான சரியான அறிகுறி தென்படுகிறது. இந்தியாவில் உள்ள தலித் மக்களுக்கும் நல்ல செய்தி கூறப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்றத்திலேயே 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்‘‘ என்றார்.

தம்பித்துரை பேசும்போது, "பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும்" என்று உறுதி அளித்தார்.

சபாநாயகர் மீரா குமார் உரை
இறுதியாக ஏற்புரையாற்றிய மீரா குமார், "இந்திய பாராளுமன்றத்தின் 57 ஆண்டுகால வரலாற்றில் ஒரு பெண் சபாநாயகரான வரலாற்று நிகழ்ச்சி நடந்துள்ளது. கணேஷ் வாசுதேவ் முதல் சோம்நாத் சட்டர்ஜி வரை முன்பு இருந்த சபாநாயகர்களின் வழிப்படி இந்த பதவிக்கான மரியாதையை காப்பாற்றுவேன். அவையில் அனைத்து கட்சியினருக்கு உரிய வாய்ப்பு அளிப்பேன் என உறுதி அளிக்கிறேன். எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவோ, ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ ஒரு போதும் நடுநிலையை தவற மாட்டேன்" என்று கூறினார்.

மேலும் தனது உரையில், 58 பெண் எம்.பி.க்கள் (மீரா குமார் தவிர) தேர்வு செய்யப்பட்டு இருப்பதையும் 302 எம்.பி.க்கள் புதியவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் ராஜ்ஜியம்
ஏற்கனவே, நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகராகவும் ஒரு பெண் (மீரா குமார்) தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் முழுக்க பெண்கள் ராஜ்ஜியம் அமலுக்கு வந்துள்ளது.
இது மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 59 பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மந்திரி சபையிலும் 28 வயதான அகதா முதல் கணிசமான பெண்கள் உள்ளனர்.

வாழ்க்கை குறிப்பு
முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளாக 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் மீரா குமார் பிறந்தார். 1973-ம் ஆண்டு முதல் தூதரக அதிகாரியாக பணியாற்றிய மீரா குமார், 1985-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். உத்திர பிரதேச முதல் மந்திரி மாயாவதி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை தேர்தலில் தோற்கடித்து இருக்கிறார்.

ஐந்து முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள அவர், 1999-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். ஸ்பானிஷ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சட்டம் முடித்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாகவும் பதிவு செய்துள்ளார். அவரது கணவர் மஞ்சுள் குமார், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது. மீரா குமார் தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.