.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, February 28, 2010

ரகசிய கேமராக்கள்: பெண்களே ‍எச்சரிக்கை!

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறதுஎன்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றியவிழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்குபொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தகண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு

இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க ரகசிய காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு

எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

Wednesday, February 17, 2010

போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்
போரூரில் அமைந்துள்ளது சேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்ட, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 13-2-2010 அன்று இறந்த முஸ்லிம் பெண்மணியின் உடலை ஜமாத்தார்கள் அடக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறி கடந்த 15-2-2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அப்பகுதி முஸ்­ம் ஜமாஅத்தார் அனுமதியின்றி அடக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 17-02-2010 காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி­ தலைமையில் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ். எம். ஜுனைத், பி.எஸ். ஹமீது, துணைச் செயலாளர் பி.எல்.எம். யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், வட சென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கமருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் ஆகியோர் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Monday, February 15, 2010

வேலூர் ஹோட்டல்களில் எலி புழுக்கை... நெளியும் புழுக்கள்... கெட்டுப்போன சிக்கன்..!

எலி புழுக்கை... நெளியும் புழுக்கள்... கெட்டுப்போன சிக்கன்..!

''ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் வந்துசெல்லும் வேலூர் நகருக்குள் இருக்கும் பல ஹோட்டல்களின் அந்தரங்கங்கள் எல்லாம் படுநரகம்...!'' என்ற ஷாக் செய்தியை சொல்லியிருக்கிறது, வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!

கடந்த வாரம், வேலூர் மாநகராட்சியின் நகர்நல அலுவலர் பிரியம்வதா தலைமை யிலான மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய டீம், பல ஹோட்டல் களிலும் அதிரடியாக ஆய்வு செய்தது. அந்த டீம் முதலில் சென்றது, வேலூர் முழுக்க பல நடுத்தர மற்றும் உயர்தர ஹோட்டல்கள் நடத்துபவருக்கு சொந்தமான ஓர் உயர்தர ஹோட்டலுக்கு. பேருந்து நிலையம், கோயில்கள் அருகில், மாவட்ட கலெக்டர் வளாகம் அருகில் என நகரில் பல ஹோட்டல்கள் இவருடையது. இங்கெல்லாம் அனைத்து உணவுப் பண்டங்களின் ரேட் ஹை! அந்த ஹோட்டலில் உள்ள ஸ்டோர் ரூமுக்குள் அடியெடுத்து வைத்த அதிகாரிகள், அங்கு அடித்த கெட்ட வீச்சத்திலேயே திணறிவிட்டனர்.டீமில் இருந்த ஒருவர் நம்மிடம், ''அங்கு பாத்திரங் களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பருப்பு வகையறாக்களில் கறுப்புக் கலராக தென் பட்டதை கையிலெடுத்து வெளிச்சத்தில் பார்த்தபோதுதான், அது எலிப் புழுக்கை என்பதைக் கண்டு அதிர்ந்தோம். சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்ளும் கல்கண்டு உள்பட அங்கிருந்த அனைத்துப் பொருட்களிலும் எலிப் புழுக்கை நீக்கமற நிறைந்திருந்தது. கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவற்றில் சிறிய வகை வண்டுகள் ஓடியாடி விளையாடின!

'எதை மொதல்ல சரி செய்யறீங்களோ இல்லையோ... ஸ்டோர் ரூமுக்கு வெள்ளை யடிச்சி சுத்தமா வெச்சிக்கோங்க. சிலந்தி வலை பின்னி, கரப்பான் பூச்சியும், எட்டுக்கால் பூச்சி ஓடற மாதிரியா வெச்சிருப்பீங்க?' என்று சத்தம் போட்டோம். அடுத்தது, புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் இன்னொரு ஆடம்பர ஹோட்டல். காலை டிஃபனுக்குப் பிறகு மீந்த - கெட்டுப்போன தேங்காய் சட்னியை 'வேஸ்ட்' பண்ண விரும்பாமல், மதிய உணவுக்கான சாம்பாரில் கலந்து அதை சப்ளை செய்வதைக் கண்டுபிடித்தோம்! வேக வைத்த பீன்ஸ் பொரியலை ஃபிரிஜ்ஜுக்குள் வைத்து அடுத்தடுத்த வேளைக்கு பயன்படுத்துவதையும் கண்டோம். அங்கிருந்த தோசை மாவை கையிலெடுத்துப் பார்க்க... அதில் புழுக்கள் ஜோராக நெளிவதைக் கண்டு கேட்டால், 'மாவு கரைக்க யூஸ் பண்ற தண்ணியில இந்தப் புழுக்கள் இருந்துச்சோ என்னவோ' என்று ஹோட்டலில் வேலை செய்பவர்கள் அலட்டிக்காம சொன்னதைக் கேட்டு ஆய்வுக் குழுவினரே நொந்துபோயிட்டோம்..!'' என்றவர், மற்ற ஹோட்டலில் நடந்த விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்தார்.

''ஒரு பஞ்சாபி தாபா ஹோட்டலின் கிச்சனுக்குள் சென்றபோது, நான்கு நாட்களுக்கு முன்பு வேகவைத்து அழுகிய நிலையில் இருந்த காளான் துண்டுகளை, காளான் கிரேவி கேட்டு சாப்பிடக் காத்திருந்தவருக்காக வாணலியில் போட்டு வதக்கும்போது கையும் களவுமாகப் பிடித்தோம்.

இன்னொரு ஹோட்டல் விசிட்டில், மசாலா தடவப்பட்ட நிலையில் இருந்த கோழி இறைச்சியை ஆட்கள் நடமாடும் பகுதியில் கீழே கொட்டி வைத்திருந்தார்கள்! கிச்சனுக்கு வெளியே குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்க்கவே பாவமாக இருந்தது...'' என்றார்கள்!

இது இப்படி என்றால், நடுத்தர வகை ஹோட்டல்களில் கிச்சனுக்குள் நுழையவே முடியாத அளவுக்கு கழிவு நீர் குட்டை போல நின்றதாம். கிச்சனில் வேலை செய்பவர்கள் எல்லாம் 'தமிழ்ல எங்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை சுத்தம்தான்!' என்கிற ரீதியில் காட்சியளித்தனராம். பலருக்கு தொடர்ந்து தண்ணீரில் கைகளை நனைத்துக்கொண்டே வேலை செய்து வந்ததில், கைவிரல்கள் எல்லாம் வெள்ளையாகி, தோல் உரிந்த நிலையிலும், கையுறைகள் எதுவும் அணியாமல் வேலை செய்து கொண்டிருந்தார்களாம். எல்லாவற்றுக்கும் மேலாக பல ஹோட்டல் களில், அதை நடத்துவதற்குண்டான தகுதிச் சான்றிதழே இல்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்குச் சென்ற அனைத்து ஹோட்டல்களுக்குமே நோட்டீஸ் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

நகர்நல அலுவலர் பிரியம்வதாவிடம் பேசி னோம். ''அதிரடி ஆய்வில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலூரில் உள்ள ஹோட்டல்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றவையாக இருக்கின்றன. சுகாதாரக் கேடு ஒரு பக்கம், அஜினமோட்டோ போன்ற பொருட்களை அளவுக்கு அதிகமாக உணவுப் பொருட்களில் கலந்து விற்பது ஒருபக்கம்... என பல வகைகளிலும் மோசமாக இருக்கின்றன ஹோட்டல்கள். அங்கிருந்த கெட்டுப்போன பொருட்களை எடுத்துவந்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். சம்பந்தப்பட்ட எல்லா ஹோட்டல்களுக்கும் நோட்டீஸ் முறையாக அனுப்பப்பட்டிருக்கிறது. பரிசோதனை முடிவு வந்தபிறகு, அந்த ஹோட்டல்களுக்கு சீல் வைப்பதற்குண்டான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்! மேலும், அனைத்து ஹோட்டல்களுக்கும் சுகாதாரமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம்!'' என்றார்.

இந்த விசிட்டில் இன்னொரு விஷயமும் சொல்வதற்கு இருக்கிறது! வேலூர் மாநகராட்சி மேயரான ப.கார்த்திகேயனுக்கும் சொந்தமாக 'பேபி ரெசிடென்சி' என்ற உயர்தர ஹோட்டல், வேலூரின் பிரதான பகுதியில் இருக்கிறது. அதிரடி சோதனை செய்த சுகாதார குழு, மேயரின் ஹோட்டல் பக்கம் எட்டிப் பார்க்குமா என்ன!

இந்த நிலைமை வேலூரில் மட்டும்தானா இருக்கும்? நேர்மையான, அதிரடியான சோதனையை மாநிலமெங்கும் சி.பி.ஐ. ரெய்டு ரேஞ்சுக்கு ஒரேநாளில் திடீரென நடத்தினால் எல்லா குட்டும் அம்பலமாகாதா என்ன? அரசு அதைச் செய்யுமா... அல்லது, பாராட்டு விழா கொண்டாட்டங்களுக்கு ஹோட்டல் அதிபர்களிடம் நிதி வாங்கியே திருப்தி அடைந்துவிடுமா?

ஹோட்டலுக்குப் போகிற ஒவ்வொரு மனிதனும், காசைக் கொடுத்து தன் ஒட்டுமொத்த உயிரையும் அங்கே நம்பி ஒப்படைக்கிறான் என்பதை மறந்துவிடக்கூடாது!
நன்றி: ஜூவி.
- டி.தணிகைவேல்
படங்கள்: எம்.ஆர்.பாபு

Wednesday, February 10, 2010

‘Who Killed Karkare’ நூல் வெளியிடப்பட்டுள்ளது!

அறிவுப்பூர்வமான ஒரு வெடிகுண்டு!

தொகுப்பு: மின்சாரம்
‘Who Killed Karkare’ நூல் வெளியிடப்பட்டது


இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்க-வேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல _ இந்து மதப் போர்வையில் மதங் கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!

பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் என்று மார்தட்டி-னால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.

அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு _ முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!

தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்-கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்-துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்-கின்றன.

இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது _ நிருவாக வர்க்கம் இருக்கிறது.

இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.

நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. _ காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.

ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்-தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்-பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மை-களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.

மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.

குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.

இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணி-யாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.

இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்-கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணு-வத்-தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள்.

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.

நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவா-வாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்-கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.

இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவா-வாதிகளின் ஏற்றப் பாட்டாகும்.

அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அத-னைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்-திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.

இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசு-ரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திட-வெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அர-சமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.

இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்-தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.

4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கை-யாக அது உருவாக்கப்பட்டு இருந்தது.

அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.

இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?

ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்-களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்-பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!

திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள்_ காவல்துறை அதிகாரி கர்கரேயை.

அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளி-வந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளி-வந்துவிட்டது.

அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.

336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250_க்கு அளிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் பேராசிரியர் பி.ஆர். அரங்கசாமி, தணிக்கையாளர் ஆர். இராமச்சந்திரன், அப்துல் காதர், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், புதுச்சேரி மு.ந. நடராசன் முதலியோர் பெற்றுக்கொண்டனர்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார்.

பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது.

இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலை-முறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.

பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் அமீர் அன்சாரி அவர்-கள்-கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.

திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.

வி.டி. ராஜஷேகர் ஷெட்டி

தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வருபவருமான பெங்களூரு வி.டி. ராஜஷேகர் அவர்கள் தம் உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:

இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.

இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த-போதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். மவுண்ட் ரோடு மகா-விஷ்ணு-வான இந்து ஏடே, தான் வெளியிட்ட மலரில் பெரியார் அவர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும்-போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.

அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.

முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.

இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள்.

முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் _ இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?

இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.

அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.

கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்-பிட்டார். (உரை முதல் பக்கம் காண்க). எஸ்.எம்.முஷ்ரிஃப்

நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்-புரையாகக் கூறியதாவது.

நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. இந்தப் பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான பெரியார் ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் (கைதட்டல்).

இதனை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?

மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்-கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்-டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டு-பிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.

அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படு கொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.

நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.

காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.

எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!

பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும்.

பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.

தென்சென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.

இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுற்றது. மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குப் பலதரப்பட்ட மக்களும் கூடியிருந்தனர்.
நன்றி :விடுதலை

Saturday, February 6, 2010

முத்துப்பேட்டையை மீண்டும் கலவரமாக்கிய பா.ஜ.க.! கைக்கூலியாகும் காவல்துறை?

முத்துப்பேட்டையில் சங்பரிவார அமைப்புகளால் திட்டமிட்டு கலவரங்கள் உண்டாக்கப்படுவதும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் வருடா வருடம் வன்முறையை தூண்டி வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை சீண்டி வருகின்றன.

கடந்த டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு நாளையொட்டி தமுமுக சார்பிலும் சமுதாய அமைப்புகளின் சார்பிலும் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. ஆயிரக்கணக்கில் திரண்ட சமுதாய அமைப்புகளின் எழுச்சியைப் பார்த்து வன்மம் கொண்ட பா.ஜ.கவினர் வன் முறையை தூண்டும் விதமாக பேசி யதாக சொல்லி தமுமுகவினர் மீது புகார் அளித்தனர். உடனடியாக செயல்பட்ட காவல்துறை கண்டன உரை நிகழ்த்திய தமுமுக மாநில உலமா அணிச் செயலாளர் மௌலவி யூசுப். எஸ்.பி. அவர்கள் மீது வழக்குகள் போட்டது. மேலும், டிசம்பர் 12லிம் தேதி லிபரான் கமிஷன் அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சொல்லி கலவர நாயகன் ஹெச்.ராஜாவை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா தமுமுகவையும், முஸ்லிம் களையும் கேவலமாக பேசியுள்ளார். தரக்குறைவாகவும் மதமோதலை தூண்டும் வகையிலும் பேசிய ராஜா 'அடுத்த வருடம் முத்துப்பேட்டையில் டிசம்பர் 6 போராட்டம் நடத்தினால் அவர்களை அதே இடத்தில் வெட்டிப் புதைப்போம்' என்றார். ராஜாவின் அராஜகப் பேச்சை பதிவு செய்த தமுமுக வினர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் அளித்தனர்.

பா.ஜ.க வின் புகாருக்கு உடனடியாக செயல்பட்ட காவல்துறை தமுமுகவின் புகார் மனுவை கூட இழுத்தடித்து பதிவு செய்தது. ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில் முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது தாவூத் என்பவர் வியாபார விஷயமாக முத்துப்பேட்டையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலுள்ள பேட்டை என்ற பகுதிக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அவரை வழிமறித்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் பேட்டை சிவா என்பவன் தலைமையிலான கும்பல் தாவூதை அடித்து அவருடைய செல்போன் பணம் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு அனுப்பிவிட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாவூத் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் முத்துப்பேட்டை காவல்நிலைய எஸ்.ஐ. ஆனந்த தாண்டவம், சிவா மீதெல்லாம் கேஸ் போட முடியாது. என்று மிரட்டியுள்ளார். பின்னர் தமுமுகவின் தலையீட்டின் பேரில் புகாரை பதிவு செய்த போலீஸ் இதுவரை சிவா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஆந்திரமடைந்த பேட்டை சிவா கடந்த 28-1-2010 அன்று தனது வாகனம் தாக்கப்பட்டதாகவும், தாக்கியது முஸ்லிம்கள் தான் என்றும் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளான். பின்னர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த கூலிப்படைகள் மற்றும் சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு என் வண்டியை தாக்கிட்டானுங்க, துலுக்க நாய்களை வெட்டுடா என்று செல்போனில் ஆணையிட பேட்டையில் குடியிருக்கும் சுமார் 30 முஸ்லிம் குடும்பங்களை சூறையாட கிளம்பின வன்முறை மிருகங்கள்.

சங்பரிவார கும்பல்கள் தங்களை தாக்க வருகின்ற செய்தியை அறிந்த பேட்டை முஸ்லிம்கள் முத்துப்பேட்டையிலுள்ள சமுதாய அமைப்பினருக்கும், ஜமாத்தார்களுக்கும் தகவல் அளித்தனர். செய்தியறிந்து முத்துப்பேட்டையில் இந்து முஸ்லிம் இளைஞர்கள் திரள ஆரம்பித்தனர். ஆனால் அதே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்பரிவார் ரவுடிகள் பேட்டையிலிருந்த முஸ்லிம்களின் கடைகளை அரிவாள், கோடாரி, இரும்பு கம்பிகளால் உடைத்து நொறுக்கினர். ஷரீப் என்பவரது கடை நாசமாக்கப்பட்டது. மேலும் முத்துப் பேட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டினர். இச்செய்தியால் ஆவேசமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் பேட்டையை நோக்கி திரண்டு வர அதுவரை அமைதி காத்த போலீஸ் இரு தரப்பையும் தடியடி நடத்தி விரட்டியடித்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை ரோடு செம்படவன் காடு மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் மனார் ஸ்பேர்பார்ட்ஸ் கடைக்கு பின்புறம் இருந்த கொட்டகைக்கும், பக்கத்திலிருந்த குடோன் ஒன்றுக்கும் தீ வைத்த காவிக் கும்பல் பழைய பேருந்து நிலையத்தில் இந்து சகோதரர் ஒருவருக்கு சொந்தமான காய்கறிகடையையும் தீயிட்டு கொளுத்தியது.

தீயிட்டு கொளுத்திய காவிக்கும்பல் இந்துக் கடையை முஸ்லிம்கள் எரித்து விட்டதாக வதந்தியை பரப்பியது. இதனால் கலவரம் பல இடங்களிலும் பரவ ஆரம்பிக்க அப்போது தான் இயங்கத் தொடங்கிய காவல்துறை உடனடியாக காவலர்களை கொண்டு வந்து குவித்தது.

டி.ஐ.ஜி. கரன்சின்ஹா, திருவாரூர் மாவட்ட எஸ்.பி. பிரவீன் குமார் அபிநவ் உட்பட நான்கு மாவட்ட எஸ்.பிக்கள் முத்துப்பேட்டையில் முகாமிட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இதுவரை முஸ்லிம்கள் தரப்பில் சிராஜுத்தீன், சாஹுல்அமீது, ஷேக் தாவூத், வாஸிம் கான், அயூப்கான், சையத் அலி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

இதில் வாஸிம் கானுக்கு பதினேழு வயது மட்டுமே ஆகிறது. ஆனால் சங்பரிவார் தரப்பில் இதுவரை 7 பேரை மட்டுமே கைது செய்த காவல்துறை மீதி நபர்களை தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறது.

இது தொடர்பாக முத்துப்பேட்டை நகர காவல் ஆய்வாளர் சமரசத்திடம் பேசினோம். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். இரு தரப்பிலும் கைதுகள் நடந்திருக்கின்றன. என்று கூறிய ஆய்வாளரிடம், பேட்டை சிவா கார் தாக்கப்பட்டது. உண்மையா? காரை தாக்கியவர்கள் யார்? அவர்களை கைது செய்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து போனை துண்டித்து விட்டார்.

கலவரத்துக்கு காரணமான கார் தாக்குதல் சம்பவம் பற்றி பேச ஏன் காவல்துறை மறுக்கிறது?

வாகனத்தை தாக்கியதாக பொய்யான புகாரை கூறி அதன் மூலமாக திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய பா.ஜ.க மாவட்ட செயலாளர் பேட்டை சிவா மற்றும் கருப்பு(எ) முருகானந்தம் ஆகியோர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?


தொடர்ந்து காவல்துறை காவிக்கும் பலுக்கு முட்டுக் கொடுத்து வருகின்றது. இப்போக்கு முத்துப்பேட்டையை இன்னொரு கோவையாக உருவாக்கி விடக்கூடாது என்பது தான் நடுநிலையாளர்களின் எண்ணம். காவல்துறை சிந்தித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

Thursday, February 4, 2010

உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமுமுக மறியல்

வேலூர், பிப். 2: வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆண்டுகளாக 10 உருது ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதையொட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டு தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது:

வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. உருது வழியில் போதனை செய்ய இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியுடன் சேர்த்து தமிழகத்தில் 3 உருது பள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளன.

தஞ்சாவூர், மதுரையில் இயங்கி வந்த உருது பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 12 ஆண்டுகளாக பள்ளி நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உருதுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 800 பேர் உருது பயில்கின்றனர். இவர்களுக்கு 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்வழி, ஆங்கில வழி பயிலும் 600 மாணவ, மாணவிகளுக்கு 32 ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

மறியல் போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ரிஷாதி, மாநில துணைச் செயலாளர் தருமபுரி ஒய்.சாதிக்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.நாஸிர் உமரி, வேலூர் மாநகரத் தலைவர் கே.எம்.சதகத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் பங்கேற்ற 5 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீஸப்ர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.