.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, April 16, 2012

கல்பாக்கம் கடலில் எரிமலை! அலட்சியம் காட்டும் இந்திய அணு சக்தித் துறை!!

எச்சரிக்கும் சர்வதேச அணு சக்திக் கழகம்!
அலட்சியம் காட்டும் இந்திய அணு சக்தித் துறை!!

Thanks to: ஃபைஸல். கீற்று.காம்.

கல்பாக்கத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமம் பரமன்கேணி. இவ்வூர் குப்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் 40 படகு களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கூட்டாக மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கரையிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலை வில் கடற்பரப்பில் நங்கூரம் பாய்ச்சி தங்களது படகுகளை நிறுத்தி, வலையை வீசிவிட்டு டைம் பாஸூக்காக பாடல்களைப் பாடிக் கொண்டு நேரத்தை கடத்திக் கொண்டிருந்தனர்.

அவர்கள் நிலை கொண்ட இடத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் கடலுக்குள்ளிருந்து புகை மண்டலம் மேலெ ழும்ப.. அதனை பீதி கலந்த ஆச்சர்யத்தோடு அந்த மீனவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அப்புகையினூ டாக தீப்பிழம்புகள் கடலிலிருந்து மேல் நோக்கி எழுந்திருக்கிறது.

இக்காட்சியைக் கண்ட மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து கரையை நோக்கி ஓடுவதற்கு தங்களது படகுகளை இயக்கிக் கொண்டிருந்த நேரத்தில் கடற்பரப்பில், ஏறக்குறைய அவர்களைச் சுற்றி நீர்க்குமிழிகள் வெளிப்படத் துவங்கியுள்ளன.

kalpakkam_620

சற்று நேரத்திற்கெல்லாம் அம்மீனவர்களின் கை, கால், உடம்பு என அவர்களது உடல் முழுவதிலும் சூடான நீர்த் துளிகள் பட... பட்ட இடத்தில் உடனடியாக கொப்புளங் கள் கிளம்பியுள்ளன.

தங்களின் படகுகளை இயக்கிய அவர்கள் கரையை நோக்கி வேகமாக வந்தபடியே ஊர் மக்களுக்கு மொபைல் கள் மூலம் தகவல் சொல்ல... அவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தபோது ஒட்டுமொத்த ஊர் மக்களும் கதறியவண்ணம் கரையில் திரண்டிருந்தனர்.

கடலலைகள் கரையைத் தொட்டுச் சென்ற இடங்களில் சில பகுதிகளில் மணல் கருகியிருந்ததைப் பார்த்துள்ள னர் ஊர் மக்கள். இந்தச் செய்தி பெரிய அளவில் மீடியாக்களுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ எட்டவில்லை. ஊர் மக்களுக்கும் இதன் தீவிரம் புரியாத தால் சில நாட்கள் அவர்களும் அமை தியாகி விட்டனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல நாட் கள் கழிந்த நிலையில் ஏரியாவாசிகள் சிலரால் கடைத் தெருக்களில் மேற் கண்ட சம்பவம் தொடர்ந்து பேசப் பட்டு புதுப்பட்டினத்தில் வசிக்கும் தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமதுக்கு தெரியவர... அணு உலைக்கு எதிரான சிந்தனை கொண்டிருக்கும் அவர், பரமன்கேணி மக்களை நேரடி யாகச் சந்தித்துப் பேசி சம்பவத்தை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்.

அப்துல் சமது மூலம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கும், சமூக ஆர்வ லர்களுக்கும் இத்தகவல் தெரிய வந்தி ருக்கிறது. "கல்பாக்கத்திற்கு அருகி லுள்ள கடல் பகுதியில் எரிமலையா?' என்ற செய்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தவர்கள் மத்தியில் கவலை யையும், கொந்தளிப்பையும் ஏற்படுத் தியுள்ளது.

நாம் பரமன்கேணி மக்களி டத்தில் விசாரித்தபோது... சம்ப வம் நடந்தது உண்மைதான். கட லில் புகை எழும்பியதையும், தீப் பிழம்பையும் பார்த்தோம் என ஊர்ஜிதம் செய்யும் அவர்கள், (தனி செய்தியைக் காண்க!) “இது குறித்து அருகிலுள்ள கூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அங்கிருந்து இரண்டு காவலர்கள் வந்து கடற் பகுதியை பார்வையிட்டு விட்டுச் சென்றனர். ஆனால் அதன் பின் எந்தவித விசாரணையும் மேற் கொள்ளப்படவில்லை...'' என்கின் றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அணு உலைகளால் ஏற் படும் விளைவுகள், ஆபத்துகள் குறித்து பிரச்சார இயக்கம் நடத்தி வரும் கல்பாக்கம் டாக் டர். வி. புகழேந்தி, டாக்டர் ரமேஷ் ஆகியோருக்கும் பரமன் கேணி கடல் பரப்பில் நிகழ்ந்த சம்பவம் குறித்த செய்திகள் தாமதமாகவே கிடைத்துள்ளன. அதன் பின் இவர்களும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக் கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து விஷயத்தை சொல்லியிருக்கி றார்கள்.

இதற்கிடையில், சில தினங்க ளுக்கு முன் கல்பாக்கம் புதுப் பட்டினம் பகுதியில் அணு உலைக்கு எதிரான விழிப்புணர் வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மீனவப் பிரதிநிதிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர், தமு முகவின் அப்துல் சமது, சமூக ஆர்வலர் டி.எஸ்.எஸ். மணி ஆகி யோர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் பரமன்கேணி மீன வர்கள் கடலில் பார்த்த காட்சி களை "லைவ்' ஆக சொல்லியிருக் கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந் தப் பிரச்சினை வெகுஜன மக்க ளையோ, அரசாங்கத்தையோ சென்றடையாததை அறிந்த ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர், உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அனைத்து மட்டத்திலும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செ(ô)ல்லப்பட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். மீடியாக்களில் இந்தச் செய்தி ஏனோ வெளியிடப்பட வில்லை. கல்கி இதழைத் தவிர!

இந்தத் தகவலை அரசல்புரச லாக அறிந்து பாண்டிச்சேரியிலி ருந்து செய்தியாளர்கள் சிலர் வந்து விசாரித்து விட்டுச் சென்ற தாக கூறுகின்றனர் பரமன்கே ணிவாசிகள்.

கடலோரக் காவல் படைக்கோ, இந்திய அணு சக்தி துறைக்கோ, மத்திய, மாநில அரசுகளுக்கோ இந்தத் தகவல் தெரியுமா? தெரிந்தும் அவை கண்டு கொள்ளாமல் இருக்கின்ற னவா என்பது தெரியவில்லை. ஆனால் பாண்டிச்சேரிக்கு கிழக்கே கல்பாக்கத்திற்கு தென் கிழக்கில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடி யில் உறங்கும் எரிமலை இருக்கி றது என்று கடந்த 11-05-2011ல் சர்வதேச அணு சக்தி கழகம் வெளியிட்டுள்ள - Volcanic Hazards in site Evacuation for nuclear installations என்ற ஆய்வு நூலில் அது குறிப் பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணு சக்தி துறைக்கோ நாற்பது ஆண்டு காலமாக தமிழகத் தில் இயங்கி வருகின்ற கல்பாக் கம் அணு உலை நிர்வாகத் திற்கோ இது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது என்கின்ற னர் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர்.

தமிழகத்தில் இருக்கும் கல் பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்திற்கும், இந்திய அணு சக்தி துறைக்கும் மட்டும் இந்தத் தகவல் தெரியவில்லையே தவிர, உலகிலுள்ள விஞ்ஞானிகளுக்கும், எரிமலை குறித்த ஆய்வாளர் களுக்கும், அணு சக்தி கழகத் திற்கும் இந்தத் தகவல் தெரிந்தே இருக்கின்றன.

kalpakkam_621

அதனால்தான், கல்பாக்கம் அருகே கடல் பகுதியில் இருக்கும் எரிமலையினால் என்னென்ன பாதிப்புகள் கல்பாக்கம் அணு உலைக்கு ஏற்படும்? அந்த பாதிப் புகளிலிருந்து எப்படி பாதுகாத் துக் கொள்ளலாம்? அதற்கான வழிமுறைகள் என்னென்ன என் பதை நிலவியல், கடலியல், கால வியலின் அடிப்படைகளில் ஆரா யும்படி சர்வதேச அணு சக்திக் கழகம் பொதுவாக அறிவுறுத் தியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகி 10 மாதங்கள் கடந்த நிலையிலும் இந்திய அணு சக்தித் துறை இது பற்றி சிறிய அளவிலும் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

கல்பாக்கம் - பாண்டிச்சே ரிக்கு இடைப்பட்ட கடல் பகுதி யில் கடந்த காலங்களில் பூகம்பம் ஏற்பட்டிருக்கின்றன. 1971ல் 4.3 ரிக்டர் அளவிலும், 1988ல் 2.4 ரிக்டர் அளவிலும் 2001ல் 5.5 ரிக் டர் பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன.

2001ல் நிகழ்ந்த பாண்டிச்சேரி பூகம்பம் அட்சரேகை, தீர்க்க ரேகை புள்ளியில் 11.98 வடக்கு, 80.22 கிழக்கில் பாண்டிச்சேரியி லிருந்து கடலில் 40வது கிலோ மீட்டரில் வெடித்துள்ளது.

இந்தத் தகவலை 2002ம் ஆண்டு பூகம்பம் மற்றும் எரி மலை குறித்த ஆய்வை மேற் கொண்ட ஜி.பி.எஸ். மூர்த்தி, ஏ.எஸ். சுப்பிரமணியம், கே.எஸ். ஆர். மூர்த்தி, ஷர்மா ஆகியோர் கொண்ட ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மூர்த்தி குழுவினரின் இந்த ஆய்வு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் சீஜ் என்பவர் volcanolive.com என்ற தனது இணைய தளத்தில் வெளி யிட்டிருக்கும் ஒரு செய்தியுடன் பொருந்திப் போகிறது.

ஜான் சீஜ், எரிமலை குறித்த தொழில்முறை ஆய்வாளர். உல கெங்கும் இருக்கும் எரிமலை களை நேரில் சென்று ஆய்வு களை மேற்கொண்டு அவற்றை ஆராய்வதும், தகவல்களை திரட்டுவதும், டாக்குமெண்டரி படங்களாக எடுப்பதும், அதனை இணைய தளத்தில் பதிவெற்றுவதுமாக இருப்பவர்.

இவரது வலைதளத்தில் 1757ல் அட்ச/தீர்க்க ரேகைப் புள்ளி 11.75 வடக்கு, 80ஏ.75 கிழக்கில் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 156 கி.மீ. தென் கிழக்கிலும் (அதாவது கல்பாக்கம், மரக்காணத்திற்கு இடைப்பட்ட கடல் பகுதியில்) எரிமலை வெடித்ததாக ஆவணம் இருக்கிறது என்று பதிவு செய்தி ருக்கிறார்.

சாதாரணமாக "இந்தியாவில் எரிமலை' என்ற தலைப்பில் இணைய தளத்தில் தேடினால் பல தகவல்கள் கிடைக்கின்றன. இதுபோன்ற தகவல்களின் அடிப் படையில், கல்பாக்கம் அணு உலைக்கு ஏற்படவிருக்கும் பாதிப் புகள் குறித்த முன்னெச்சக்கை நடவடிக்கைகளை அணு உலை நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருப்பது ஏன் என்று புரிய வில்லை.

மே மாதம் 2011ல் சர்வதேச அணு சக்திக் கழகம் வெளியிட் ஆய்வு நூல் குறித்த செய்தி அறிந்த கல்பாக்கம் டாக்டர் புகழேந்தி, டாக்டர் ரமேஷுடன் இணைந்து கல்பாக்கத்திற்கு அருகில் கடல் பகுதியில் எரிமலை இருப்பது தொடர்பான ஆய்வுத் தகவல்களைத் திரட்டி "கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலைகளும்' என்ற தலைப்பில் அற்புத மான நூலைத் தொகுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட் டுள்ளார். படிக்கும்போதே பீதி யில் நம்மை அப்படியே உறைய வைக்கிறது இந் நூல்.

கல்பாக்கத்தை அடுத் துள்ள கடல் பகுதியில் கடந்த காலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள், அப்பகுதியின் நிலவியல் அமைப்பு, நில பிளவுகள், இந்த நிலப் பிளவுகளில் ஏற் படும் நிலவியல் மாற்றங்கள், நிகழ்வுகள் அனைத்தும் கல் பாக்கம் அணு உலைகளோடு எப்படித் தொடர்பு கொண் டிருக்கின்றன; டிசம்பர் 2004ல் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக கல்பாக்கத்திலி ருந்து வேதாரண்யம் வரை யுள்ள தென் கிழக்கு கடற் கரைப் பகுதிகள் அதிக பாதிப் புக்குள்ளானது ஏன்? தானே புயலின்போது இப்பகுதிகள் பாதிப்படைந்தது ஏன்? என்பது உள்ளிட்ட ஏராளமான காரணங் களையும், ஆய்வு முடிவுகளையும் முன் வைக்கிறது இந்நூல். (இந்நூலின் முக்கியப் பகுதிகளை தனிச் செய்தியாக காண்க)

இந்நூலின் பிரதிகளையும், கல்பாக்கம் அணு உலை தொடர் பான பல்வேறு தகவல்களையும் திரட்டி அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார் டாக்டர் புகழேந்தி.

இரண்டு டாக்டர்கள் இவ்வ ளவு தகவல்களை திரட்டி யிருக்கும்போது கல்பாக் கம் அணு மின் நிலையமோ, இந்திய அணு சக்தி துறையோ இதுபோன்ற தகவல்களை திரட்டாமல் இருக்குமா? என்று கேள்வி யெழுந்தால் அது நியாய மான கேள்விதான்! ஆனால் இந்தத் தகவல் களை அணு சக்தித் துறை சீரியசாக எடுத் துக் கொண்டிருந்தால் தான் கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பு - மக்களின் பாதுகாப்பு குறித்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை எப்பொழுதோ எடுத்திருக்குமே!

பொதுவாக புயல், பூகம்பம், சுனாமி, நெருப்பு எரிமலை போன்ற இயற்கை யின் அபாயங்களால் அணு உலைகள் பாதி க்கப்பட வாய்ப்பு உள் ளது என்று அனைவ ருக்குமே தெரியும். இதனைக் கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு கட்ட மைப்புகளை உறு திப்படுத்தவும், மக்க ளின் பயத்தை போக் கும் வகையில் பாதுகாப்பு உத்திரவாதங்களை வெளிப்படையாக மேற்கொள்ள வும் வேண்டியது அரசு மற்றும் அணு சக்தி துறையின் பொறுப்பு. இதனைத்தான் சர்வதேச அணு சக்தி கழகம் அறிவுறுத்துகிறது.

ஆனால் இதனை கண்டு கொள்ளாத மத்திய அரசு அணு உலைகளை பாதுகாப்பற்ற நிலையில்தான் வைத்திருக்கிறது என்பதே அணு உலை எதிர்ப் பாளர்களின் கருத்தாக உள்ளது.

இவர்கள் கண்மூடித்தனமாக அணு உலையை எதிர்ப்ப தில்லை. எங்களது அறிவுப்பூர்வ மான, ஆய்வு ரீதியான கேள்வி களுக்கு பதில் சொல்லி பாது காப்பை உறுதிப்படுத்துங்கள் என்பதுதான் அணு உலை எதிர்ப்பாளர்களின் கோரிக்கை யாக உள்ளது.

ஆனால், அரசாங்கத்தின் தொடர் பதிலோ "அணு உலை பாதுகாப்பானது' என்று விட் டேத்தித்தனமாகவே உள்ளது.

ஜப்பான் நாட்டின் புத்த பிக்குவான டாடா ஷி நிஷிமுரா அணு உலை குறித்து சொன்ன கருத்து இந்திய அரசுக்கு பொருத்தமா கவே உள்ளது.

“இது பாதுகாப்பானது. ஆனால் இதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். அத னால்தான் கவலைப்பட வேண்டியிருக்கிறது!'' என்கிறார் டாடா ஷி நிஷிமுரா

அன்று கடலில் என்ன நடந்தது?

கடலில் புகை மூட்டம் கிளம்பியதை நேரடியாகப் பார்த்த பரமன்கேணி குப்பம் மீனவர்களும், கரையிலிருந்து பார்த்த மீனவப் பெண்களும் தரும் தகவல்கள் இவை...

ரொம்ப தூரத்தில் அந்தப் புகை கிளம்பியது. எத்தனை கி.மீ. தூரம் என்று தெரியாது. பல மைல்களுக்கு அப்பால் அது உருவாகி இருக்கலாம். அது நெருங்கி வந்தபோது பெரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்தப் புகை எங்களுக்கு நேர்புறத்திலிருந்து தொலைவில் கரையை நோக்கி சென்றது. நாங்கள் படகுகளைக் கூட விட்டு விட்டு ஓடி வந்து விட்டோம்.

எங்கள் படகுகளின் நங்கூரங்கள் கீழே இருந்து தானாகவே மேல் நோக்கி கிளம் பியது. மோட்டார் பம்ப் போட்டு தண் ணீர் இறைத்தால் எப்படி தண்ணீர் பீய்ச்சி அடிக்குமோ அப்படி கடலிலிருந்து மேல் நோக்கி தண்ணீர் பீய்ச்சியடித்தது. இது ஆழ்கடலில் (தொலைவில்) இன்னும் வேகமாக இருந்திருக்கும்.

kalpakkam_530

இந்தப் புகை பல கிலோ மீட்டருக்கு அப்பால் கிளம்பியிருக்கும். ஏறக்குறைய 10-15 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து எங்களை நோக்கி நகர்ந்து வருவதாக இருந்தது. கடற் பரப்பில் கப்பல் கள் பல கி.மீ. அப்பால் சென்றால் கூட நம் கண்களுக்கு தெரியும். அதனால் கப்பல் புகை விடுகிறது என நினைத்தோம். ஆனால் அது நெருங்கி வந்து பிரம்மாண்டத்தை காட்டி யபோதுதான் பயந்து ஓடினோம். நெருப்பு கக்கித்தான் அது புகையாக மாறியிருக்கிறது.

அந்தப் புகை மண்டலம் நெருங்கி வர வர நெருப்பு மழைபோல் எங்கள் மேல் முத்து முத்தாக நீர்த்துளிகள் விழுந்தன. அவை பனியனை யும் தாண்டி உடலில் கடும் சூடாக இறங் கின.

நாங்கள் கடலில் இருந்தபோது தேவ் என்ற மீனவர் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். அவரது முதுகில் தீக் கொப்புளங்கள்போல் உரு வானது.

எங்களுக்கு (மீனவப் பெண்கள்) கடலிலிருந்து தகவல் வந்ததும் வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நின்று பார்த் தோம். கடல் மீது பெரும் புகை மண்டலம் ஒன்று எழுந்து நகர்ந்து வருவதைப்போல் இருந்தது. இதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளை வாழ்நாளில் பார்த்ததில்லை.

கரைப்பகுதியில் கருப்பு நிற சிறு கற்கள் தென்படுகின்றன. முன்பு இப்படிப் பார்த்ததில்லை.

எப்போதும் பசுமையாக இருக்கும் பரமன்கேணி குப்பத்தின் கடற்கரைப் பகுதி தானே புயலின்போது கூட வெள்ளை யாகத்தான் இருந் தது. ஆனால் இந்த சம்பவத்திற் குப்பின் இப் போது இக்கடற்க ரைப் பகுதி சாம்பல் நிறமாக மாறி இருக்கிறது.

இந்தப் பகுதி யில் நிலக்கரி போன்று வரிவரியான வடிவம் கொண்ட கருப்பு கற்கள் அவ்வப்போது கரை ஒதுங்குவ தைப் பார்க்க முடிகிறது. இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை.

அதிர்வுகளை ஏற்படுத்தும் நூல்!

‘கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்' என்ற தலைப்பிட்டு டாக்டர் புகழேந்தி, டாக்டர் ரமேஷ் ஆகியோர் ஆய்வுத் தகவல்களை திரட்டி நூலாகத் தொகு த்திருப்பது... அணு உலை ஆபத் துகளுக்கு எதிரான இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வு என்றே சொல்ல வேண்டும். ஆச்சர்யம் கலந்த அதிர்ச் சிகரமான ஆய்வுத் தகவல்களை முன் வைத்து மனதில் அதிர்வுகளை ஏற் படுத்துகிறது இந்நூல்.

இந்நூலிலிருந்து சில முக்கிய பகுதிகள் :-

* கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து சென்னை மாநகரமானது 45-60 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரி 75 கி.மீ. தூரத்திலும், காஞ்சிபுரம் 59 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளன என்பதை மனதில் கொண்டால் பிரச்சினையின் அவசரத்தை புரிந்து கொள்ள முடியும். ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலைய விபத்திற்குப் பிறகு 210 கி.மீ. தொலைவி லுள்ள டோக்கியோ நகரின் குடிநீரையும், அங்குள்ள தாய்மார்களின் பாலையும் அணுக்கதிர்கள் மாசுபடுத் தியுள்ளன என்பதை நினைவில் நிறுத்தினால் நம்முன் உள்ள பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

* கடலூருக்கும் பாண்டிச்சேரிக்குமிடையே கடந்த டிசம்பர் 30ம் தேதி கரையைக் கடந்த "தானே' புயலால் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு பாதிப்புகள் இல்லை என்று அணுமின் நிலைய நிர்வா கம் அறிக்கை வெளியிட்டது. ஆயினும் அணுமின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பி.எஃப். பி.ஆர். என்கிற அணு உலைக்காக கடல் நீர் எடுக்கும் அமைப்பு கடுமையான பாதிப்புக்குள்ளானதாக உறு திப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. இது தவிர, அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடலூர் கிராமம் என்ற குப்பத்தில் கடல் அரிப்பைத் தடுக்க கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட 7 அடி உயர தடுப்புச் சுவரை தகர்த்தெறிந்து விட்டுச் சென்றிருக்கிறது தானே புயல்.

* 1757ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி பாண்டிச் சேரி கடலுக்கு அருகே எரிமலை ஒன்று வெடித்தது. இதனால் கடலில் புதிதாக தீவு ஒன்று உருவானது என்ற தகவல் volcanolive.com என்ற இணைய தளத்தில் பதிவாகியுள்ளது. அமெரிக்கா வின் ஸ்மித்úஸôனியன் இன்ஸ்டிடியூட் என்ற எரிம லைகளை ஆய்வு செய்யும் அமைப்பு Global Volcanism Program என்ற திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆயிரம் வருடங்களுக்குள் வெடித்த எரிமலைகள் குறித்து இணைய தளத்தில் பட்டியலிட் டுள்ளது. இதில் பாண்டிச்சேரி கடல் பகுதியில் வெடித்த எரிமலையினால் தற்காலிக தீவு உருவான தாகவும் இந்த எரிமலைக்கு 0305-01 என்ற அடையாள எண்ணையும் கொடுத்திருக்கிறது இந்த அமைப்பு.

* 1773ல் எட்மண்ட்பர்க் என்றபிரஞ்சு மாலுமி முதல் முறையாக The Annual Register என்ற பெயரில் தொகுத்திருக்கும் ஆவணத்தில், பாண்டிச்சேரியில் கடல் எரிமலை வெடித்ததை நேரில் கண்ட பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர் ஒருவர் "ஹேக்' நகரில் உள்ள தனது நண்பருக்கு எழுதிய கடிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பாண்டிச்சேரியிலிருந்து நாங்கள் புறப்பட் டோம். அப்போது கடலில் மேற்பரப்பில் தீ ஜுவாலை கள் வெடித்துக் கிளம்பின. கடலின் ஆழத்திலிருந்து எரிமலைக் கற்களும் பிற எரிபொருட்களும் உமிழ்ந்து எறியப்பட்டன. இதனால் 15 கி.மீ. அப்பால் 5 கி.மீ. நீளமும், அகலமும் கொண்ட தீவு ஒன்று கடலில் இருந்து மேலெழும்பியது. வெடித்துக் கிளம் பிய எரிபொருட்கள் மிகுந்த உயரத்தில் பறந்தன. இடியைப் போன்றும், பீரங்கிகள் வெடிப்பதைப் போன்றும் மிகப் பெரும் சப்தங்கள் கேட்டன. மேகம் போன்ற புகையும், வெளியில் எரியப்பட்ட மணலும் கடலின் மேற்பரப்பை ஆக்கிரமித்தன.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த கப்பல் மாலுமிகளே இந்த நிகழ்வை முதன் முதலில் பார்த்தனர். இதனை மிகப்பெரிய நீர்க்குமிழி என்றே அவர்கள் கருதினார் கள். அதற்கு அருகில் கப்பலைச் செலுத்தினார்கள். அப்போது அவர் களை கடலிலிருந்து வெடித்துக் கிளம் பிய தீ எதிர்கொண்டது.

எரியும் கந்தகத்தின் நெடி அவர்க ளைச் சூழ்ந்தது. கடற்பரப்பு முழுவதிலும் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் கப்பலை அவர்கள் வேறு திசையில் செலுத்தத் துவங்கியபோது லாவாக் கற்கள் அவர்கள் மீது கொட்டத் துவங் கின. திணறிய அவர்கள் கரை வந்து விட்டது என நினைத்தனர். ஆனால் கரை போல காட்சியளித்த அது புகையாகவும், தீயாகவும் மேலெழுந்து மறைந்து போனது. அப்படி மேலெழுந்த புகை திடீரென மணல் மழையாக கொட்டத் துவங்கியது. கப்பலின் மேல் தளம் முழுவதும் இந்த மணலுக்குள் புதைந்து போனது. (பரமன்கேணி மீனவர்கள் கடலில் பார்த்த புகை மண்டலத்தோடு இதனை இணைத்துப் பாருங்கள்).

* 1964ம் ஆண்டு இந்திய கடலியல் ஆய்வுக் கப்பலான ஐசந ஓஐநபசஅ தனது 15வது ஆய்வை மேற்கொண்டு, பாண்டிச்சேரிக்கு அடுத்து இருக்கும் கடல் தரையில் 800 மீட்டர் ஆழம் கொண்ட கணவாய்களும், 700 மீட்டர் உயரம் கொண்ட மலையும் இருப்பதைக் கண்டறிந்தது.

* கல்பாக்கத்திலிருந்து வேதாரண் யம் வரையுள்ள கடல் பகுதியில் காந்த தன்மையின் அளவு மாறுபட்டும், குறை வாகவும் இருக்கின்றன. பாண்டிச்சே ரிக்கு வடக்கிலும், காரைக்காலுக்குத் தெற்கிலும் உள்ள பகுதிகளின் காந்தத் தன்மையும், இவை இரண்டிற்கும் இடையில் இருக் கும் பகுதியின் காந்தத் தன்மையும் தொடர்பற்று உள்ளது. இந்தப் பகுதி நிலவியல் ரீதியில் பதட்டம் கொண்ட பகுதியாக உள்ளது.

* கல்பாக்கம் வேதாரண்யம் நிலப் பிளவில் காணப்படும் மிகக் குறைந்த காந்த அளவிற்கு காரணம் இப்பகுதியில் கடல் தரையிலிருந்து 68 கி.மீ. ஆழத்தில் பிதுங்கி எழுந்திருக்கக் கூடிய ஒரு அமைப்புதான். இதுதான் உறங்கும் எரி மலைப் பகுதி. இதில் ஏற்படும் நிலவியல் மாற்றங்கள் கல்பாக்கம் அணு உலை யின் கீழாக செல்லும் நிலப் பிளவுகளு டன் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கின் றன.

* மகாபலிபுரத்திற்கு அருகிலுள்ள பாலாறு முகத்துவாரப் பகுதியின் நிலப் பிளவானது ஆழம் கூடியதாக உள்ளது. பாலாறு முகத்துவாரப் பகுதியிலும், மகாபலிபுரம் பாறை அடித்தளத்திலும் பூமியின் ஆழத்தில் வித்தியாசமான பொருட்கள் ஊடுறுவியுள்ளன. இது நிலவியல் ரீதியாக சிக்கல் நிறைந்த பகுதி என கே.எஸ்.ஆர். மூர்த்தி ஆய்வுக் குழு சொல்கிறது. இந்த நிலப்பிளவுகள் கல்பாக்கம் அணு உலைகளினூடாக அவற்றின் கடல் நீர் குழாய்களினூடாகச் செல்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

* கல்பாக்கம் அணுமின் நிலையத்தி லிருந்து தென்கிழக்கிலுள்ள தரைப் பகுதி பதற்றம் நிறைந்தது. கல்பாக்கத்தி லிருந்து கடல் பகுதியில் 35 கி.மீ. தென் கிழக்கில் தொடங்கும் இந்தப் பகுதி (அதாவது மரக்காணம், பாண்டிச் சேரி, தரங்கம்பாடி கடல் பகுதி) எரிமலை செயல்பாட்டோடு தொடர்புடையது.

* மரக்காணம், பாண்டிச்சேரி, தரங் கம்பாடி கடல் பகுதிக்கும் 400 கி.மீ. தென்மேற்கில் அமைந்துள்ள திண்டுக் கல் கம்பம் பள்ளத்தாக்கிற்கும் நிலவி யல் ரீதியாக தொடர்பு இருக்கிறது. மரக் காணம் - திண்டுக்கல் மாவட்டம் தேவா ரத்தை இணைக்கும் நிலப்பிளவுக்கும், பாண்டிச்சேரி - கம் பத்தை இணைக் கும் நிலப் பிளவுக் கும் இடையிலுள்ள பகுதி குழிந்து போய்க் கொண்டி ருக்கிறது.

* 2001 செப்டம் பர் 25 அன்று 5.5 ரிக்டர் அளவில் ஏற் பட்ட பூகம்பம் பாண் டிச்சேரிக்கு கிழக்கில் 40 கி.மீ. தூரத்தில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற் பட்டது. இந்த பூகம்ப மானது நிலப் பகுதி யிலிருந்து கடல் பகு தியில் நீளும் மோயாறு பவாணி ஆத்தூர் நிலப் பிளவில்தான் நிகழ்ந்தது. பாண்டிச்சேரி கடலூர் கடல் தரையின் பள்ளத்தாக்குகளும், மலைகளும், மோயாறு, காவிரி, கம்பம் பிளவுகளால் உருவாக்கப்பட்டவை. அதனால்தான் இப்பகுதிகள் புயல் பாதிப்புகளுக்கு அதிகமாக இலக் காகின்றன.

* மரக்காணம், பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளில் கடலில் உள்ள கடல் கண வாய்கள் சுனாமி அலையின் உயரத்தை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங் காற்றுகின்றன. பாலாறு கடல் கணவா யானது (மரக்காணம் கடல் பகுதி) சுனாமி அலைகளை தடுத்து நிறுத்தி அதன் சக்தியைக் கூட்டி விடுகிறது. இதனால் சுனாமி அலைகளின் உயரம் அதிகரிக்கிறது. (2004ல் ஏற்பட்ட சுனா மியின்போது இந்தப் பகுதிகளில்தான் அலைகள் உயரமாக எழும்பின. சென்னையில் 5 மீட்டர், மகாபலிபுரத்தில் 5.5 மீட்டர், மரக்காணத்திற்கு அடுத்த நொச்சிக்குப்பத்தில் 6.5 மீட்டர், பாண்டி பெரிய காலாப்பட்டில் 5.9 மீட்டர், கடலூ ரில் 3.8 மீட்டர் என உயர்ந்தது. இதில் நொச்சிக்குப்பத்தில்தான் அலைகளின் உயரம் அதிகம்!

மகாபலிபுரத்தை தாக்கிய சுனாமி அலைகளின் உயரம் அதிகரிக்கக் கார ணம், நொச்சிக்குப்பம் - பெரிய காலாப் பட்டுக்கு அடுத்து(ள்ள கடல் பகுதியில்) அமைந்துள்ள பாலாறு கணவாய்தான். இந்தக் கடல் கணவாயானது செங்குத் தாகவும் குழிந்தும் உள்ளது.

ஆழமான இந்தக் கணவாயால் தடுக்கப் படுவதன் காரணமாக சுனாமி அலைகள் கூடதல் சக்தியைப் பெற்று சதுரங்கப்பட்டினத்தையும் (கல்பாக் கம்), மகாபலிபுரத்தையும் அவை வேகமாக அடை கின்றன.

* மகாபலிபுரம் கல்பாக்கம் கடற்க ரையில் ஆண்டுதோறும் 55 செ.மீ. அள விற்கு கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதன் படி 1500 ஆண்டுக்கு முன் இன்றுள்ள கடற்பகுதியிலிருந்து 800 மீட்டர் தூரத் திற்கு அப்பால் கடல் இருந்திருக்கும்.

* கல்பாக்கம் அணுமின் நிலையத் திற்கு தெற்கில் வடகாவிரிப் படுகை என் றழைக்கப்படும் மரக்காணம் - பாண்டிச் சேரி கடல் பகுதி அமைந்துள்ளது. 1757ல் வெடித்ததாகக் கூறப்படும் எரி மலை இந்தப் பகுதியில்தான் அமைந் துள்ளது. நிலவியல், காலவியல், கடலியல்ரீதியில் இது பதற்றம் நிறைந்த பகுதி.

* கல்பாக்கத்திலிருந்து வேதாரண் யம் வரையுள்ள கடலோரப் பகுதியில் பூமியின் ஆழத்திலிருந்து நில மோலோ டிற்குள் சுமார் 22-24 கி.மீ. உயரத்திற்கு எரிமலை பொருளானது வடக்கு - தெற்காக பிதுங்கி மேலெழும்பியுள்ளது என்ற தகவலை 1992ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட நிலவியல் ஆய்வு தெரி விக்கிறது. 1757ல் வெடித்த எரிமலை இந்தப் பகுதியில் வடக்கு தெற்காக நீளும் பிளவில்தான் அமைந்துள்ளது.

* கல்பாக்கம் அணு உலை திட்ட வளா கத்தில் பூகம்பத்தை கண்காணிக்கும் பூகம்பமானி (சீஸ்மோகிராஃப்) இல்லை. 2001 பாண்டிச்சேரி பூகம்பத்திற்கு பின் பூகம்பமானி நிறுவப்பட்டது. ஆனால் 2004ம் ஆண்டு கல்பாக்கத்தை சுனாமி தாக்கியபோது "பேட்டரி சார்ஜ்' இல்லாத தால் பூகம்பமானி இயங்கவில்லை.

* கல்பாக்கம் அருகேயுள்ள பாலாற் றுப் பள்ளம் சுனாமியின் வேகத்தை கூட்டக் கூடியது. இங்கிருந்து பத்தே நிமிடத்தில் சுனாமி அலைகள் அணு உலையை நெருங்கி விடும்.

- இதுபோன்று இன்னும் பல்வேறு ஆய்வுகளையும், ஆதாரங்களையும் முன் வைத்து எச்சரிக்கை மணி அடிக் கிறது இந்நூல்.

ஆனால் கல்பாக்கம் அணு உலை நிர்வாகமோ முன்னுக்குப் பின் முர ணான தகவல்களை அளிப்பது, குளறுப டிகள் நிறைந்த ஆய்வுகளை ஆதாரமா கக் காட்டுவது, அதோடு பாதுகாப்பு எச்சரிக்கை தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல், இருந்தால் அவை இயங்கா மல் இருப் பது - இவையெல்லாம் அணு உலை மீதான மக்களின் நம்பிக்கையை தகர்ப்பதா கவே உள்ளது.

பாதிப்பு ஏற்பட்டால்...

கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 10 ஆயிரம் ச.கி.மீட்டரில் சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. 1986ல் சோவியத் ஒன்றியத்தில் நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்து அங்கு 10 ஆயிரம் ச.கி. மீட்டர் நிலப்பரப்பை வெகுவாக பாதித்தது. 2011ல் ஜப்பானின் புகுஷிமாவில்

நிகழ்ந்த அணு உலை விபத்து 6,400 ச.கி.மீட்டர் பரப்பளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி அமைந்துள்ள 10 ஆயிரம் ச.கி.

மீட்டர் நிலப்பரப்பில் செர்னோபிலைக் காட்டிலும் 50 மடங்கு மக்கள் வாழ்கின்றனர். புகுஷிமாவை சுற்றியுள்ள 6,400 ச.கி. மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களைக் காட்டிலும் கல்பாக்கத்தை சுற்றி 6,400 ச.கி.மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிகை 5 மடங்கு அதிகமாகும். இந்நிலையில் கல்பாக்கம் அணு உலை விபத்து ஏற்பட்டால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை!

அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட்டம்!

கடந்த 15ம் தேதி மைலாப்பூரில் உள்ள பெரியார் திராவிடர் கழக சென்னை மண்டல அலுவலகத்தில் அணு உலை எதிர்ப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பரமன்கேணி சம்பவம் மற்றும் கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, மக்களிடத்தில் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகள், பிரச்சார யுக்திகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிரான வலுவான கட்டமைப்பை உருவாக்கு வதென்றும் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மீன வர் பேரவையின் கபடி மாறன், கடலோரப் பாதுகாப்பு இயக்கத் தின் ஜெயக்குமார், தமுமுக பொதுச் செயாளர் அப்துல் சமது, ஐஎன்டிஜே தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மாநிலச் செயலாளர் அபு ஃபைஸல், சமூக ஆர்வலர் டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்ட வர்களும் அணு உலை எதிர்ப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!


அடிமைத்தளையை வேரோடும் வேரடி மண்னோடும் 1433 ஆண்டுகளுக்கு முன்பே தகர்ந்தெரிந்த மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். அந்த இஸ்லாம் முழுமையடையப்பட்டு உலகமுழுதும் பரவ காரணமான அரபுமண்னில் அடிமைத்தனத்தின் வாடை இன்னும் வீசுவது மனித ஆர்வளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் சவாலாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைத்தரணியிலிருந்து தனது 20வது வயதில் 400 ரியால் சம்பளத்திற்கு வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவிற்கு வந்துள்ள சகோதரி மும்தாஜ் பேகம் என்பவர், அவர் வந்து 10 மாதங்கள் மட்டும் சம்பளம் பெற்றுள்ளார். அதன் பின் சம்பளமும் இல்லை, அவரை ஊருக்கும் அனுப்பவில்லை. 20 வருடங்களாக சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த இடைப்பட்ட 20 வருட காலத்தில் அவரது தந்தை சாலிஹா சகாப் தாயார் சாகிரா பீவி ஆகியோர் மரணமடைந்த செய்தி கிடைத்தும் அந்த ஸ்பான்சர் அந்த சகோதரியை தனது நாட்டிற்கு அனுப்பவில்லை. சகோ மும்தாஜ் பல முறை வீட்டை விட்டு ஓடி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தும் பலன் இல்லை. இதோ அனுப்பி விடுகிறேன் என்று காவல் நிலையத்திலிருந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவர். இப்படியே 20 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வந்த அந்த சகோதரியைப் பற்றிய தகவல் தமுமுகவோடு சமுதாயப்பணியில் இணைந்து செயலாற்றும் கேரளாவைச் சேர்ந்த சகோதரர்களின் pleaceindia என்ற அமைப்பிற்கு தகவல் கிடைக்க உடனே தமுமுகவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

எப்பவும் போல் இந்த புகாரை எடுத்துக் கொண்டு இந்தியத் தூதரகம் சென்றோம். சில நேரங்களில் சில வேலைகள் எளிமையாக முடிந்து விடும் சில நேரங்களில் அதற்குரியமுறையில் அணுக வேண்டி வரும். அந்த வகையில் இந்த வழக்கிலும் நமது அணுகுமுறையை வித்தியாசமாக கடைப்பிடிக்க வேண்டி வந்தது. இந்தப் புகாரை கொண்டு சென்றவுடன் வழக்கம் போல் "எங்களால் என்ன முடியுமோ அதைச் செய்கிறோம்" என்ற பதிலே கிடைத்தது. இறைவன் உதவியால் இந்த வழக்கில் சாதிக்கவேண்டும் என்று தமுமுக களத்தில் இறங்கியது. முறையாக மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். டிப்லோமெட் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் கையாளப்பட்டது.

மனித உரிமை ஆணையம், கவர்னரேட், காவல்துறை உயர் அதிகளாரிகள் போன்ற அனைத்து துறைகளிலும் முறையிட்டு உரிய நடவடிக்கை்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

மண்டல தமுமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தூதரகத்திலிருந்து டாக்டர் முஹம்மது அலீம் தலைமையில் தூதரகக்குழு ஹைல் சென்று முகாமிட்டு அடிமையாக சிக்கித்தவித்த சகோதரி மும்தாஜ் மீட்கப்பட்டு அவரது ஸ்பான்சர் கைது செய்யப்பட்டார். 70 ஆயிரம் ரியால் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சகோ மும்தாஜூக்கு 19 ஆண்டுக்கான இக்காம அடிக்க வேண்டி உள்ளதால் அதன் பணிகளும் அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் இருந்ததால் காலாவதி ஆகிவிட்டபடியால் அதன் பணிகளும் இன்றும் சில பேப்பர் வேலைகளும் பாக்கி இருப்பதால் அவைகள் முழுமையாக முடிந்தவுடன் இன்ஷா அல்லாஹ் ஒருவார காலத்தில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாயகத்தில் தற்போது அவருக்கு இருக்கும் அவரது ஒரே உறவினரான சித்தி சதிரா அவர்களை தமுமுக, சவூதி அரேபியா மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனி தொடர்பு கொண்டு விபரங்களை தெரியப்படுத்தி உள்ளார் மிகுந்த மகிழ்ச்சி அடைத்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே......

இந்த மீட்புப்பணியில் பெரிதும் உதவிய இந்தியத் தூதுவர் மரியாதைக்குறிய ஹாமித் அலி ராவ் தூதரக அதிகாரிகள் டாக்டர் முஹம்மது அலீம், சகோதரர் விவேகானந்தன் மற்றும் காவல்துறை லெப். கர்ணல். பஷீர் அஹமது அல் அன்ஸி மற்றும் மனித உரிமை ஆணைய அதிகாரிகளுக்கு மத்திய மண்டல தமுமுகவின் சார்பாக முறையே நன்றிக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய மண்டல தமுமுகவின் பணிகளில் இந்தப் பணி மேலும் ஒரு மணிமகுடமாகும். .. .. .. . . எல்லாப்புகழும் இறைவனுக்கே...

ஹூஸைன்கனி, ரியாத்.