.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, December 26, 2010

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

Tuesday, September 28, 2010

திருவிடச்சேரியில் நடந்தது என்ன? ஓர் உண்மை அலசல்

ஜமாஅத் தலைவர் படுகொலை! பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு!!
திருவிடச்சேரியில் நடந்தது என்ன?

அனைத்து முஸ்லிம்களுக்கும் உயிரினும் மேலான நெறிதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம். உயிரினும் மேலான இந்நெறியை உயிர்களைப் பறிப்பதற்கான போர்வையாக்கினால் அது எவ்வளவு கொடுமை? அதுவும் புனித ரமலான் மாதத்தில் என்றால் எவ்வளவு வேதனை?

அதுவும் இறை இல்லமான பள்ளிவாசலில் என்றால் எவ்வளவு அவலம்?

மார்க்கம் என்பதை மூர்க்கம் என்று புரிந்துக்கொண்ட சில மூளைச் சலவைக்களான கும்பலுக்கும், திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி ஜமாஅத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் மோதலாகி, துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி பலர் படுகாயம் அடைவதில் முடிந்திருக்கிறது.

சம்பவத்தின் சுருக்கம் இதுதான். திருவிடச்சேரி ஜமாஅத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டி.என்.டி.ஜே.) அமைப்பினருக்கும் மோதல் இருந்து ரமலானில் இரவுத் தொழுகையை டி.என்.டி.ஜே. அமைப்பினர் ரோஸ் பாப்பா என்பவரின் வீட்டில் நடத்தி வந்துள்ளனர். ரோஸ் பாப்பா என்பவருக்கும், அவரது எதிர் வீட்டுக்கும் தகராறு இருந¢து வந்துள்ளது. இந்த வாய்த்தகராறில் ரோஸ் பாப்பாக வீட்டிற்குத் தொழுகை நடத்திவந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிலர் இவருக்கு ஆதர வாக இறங்கியுள்ளனர். இந்த பிரச்சினையின் போது ஊர் ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் சமாதானப்படுத்தியுள்ளார்.

தகராறுக்குக் காரணம்:-

ரோஸ் பாப்பா வீட்டில் தொழுகை நடத்தும் அமைப்பினர் இரவு வெகுநேரம் தங்களின் ஆஸ்தான தலைவருமானவரின் சிறப்புப் பேருரைகளையும்,சிலநேரம் குர்ஆனையும் ஒலிபெருக்கியில் ஒலிக்க வைத்துள்ளனர். ஜபருல்லாவின் சகோதரியின் குழந்தையும் (இறந்த ஹாஜி முஹம்மதுவின் குழந்தை), சகோ தரரின் ஒரு குழந்தையும் மன நிலை பாதிப்படைந்து சிகிச் சைப் பெற்று வருகின்றனர். மனநலமற்ற குழந்தைகளின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுவதால் ஒலி பெருக்கியின் சப்தத்தைக் குறைக்கச் சொன்னதும், இஸ்லாத்தைத் தூயவடிவில் பின்பற்றுவதாக நம்புவோருக்கு வெறியைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

5.9.2010 அன்று மாலை வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தோரை விலக்கிவிட்டு சமாதானப்படுத்திய ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில், ‘‘நோன்பு துறக்கும் நேரமாகிவிட்டது, பிறகு பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர ஆதரவாளரான குத்புதீனை, தனது உறவுக்காரப் பையன் என்ற உரிமையில் கொஞ்சம் குரலுயர்த்தி கண்டித்து அனுப்பியுள்ளார்.

இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களை பெருந்தன்மையாகப் பிறருக்கு மட்டும் விட்டுக் கொடுத்து விட்டு, இந்த பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுகாமல் தங்களது கோபதாபங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். குத்புதீன் தனது மைத்துனரும், திருமங்கலக்குடி பகுதியில் ஆதிகேசவன் போன்ற ஆசாமிகள் துணையோடு கட்டப் பஞ்சாயத்து செய்பவருமான ஹஜ் முஹம்மது என்பவருக்கு விவரத்தைக் கூறி, ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

கலாட்டா:-

திருமங்கலக்குடியிலிருந்து பல வாகனங்களில் வன்முறைக் கும்பல் வந்துள்ளது. வாகனங்கள் ஊருக்கு வெளியே தப்பியோட வசதியாக நிறுத்தப்பட்டு, ஒரு கார் மட்டும் பள்ளிவாசல் அருகில் வந்துள்ளது. தவ்ஹீத் கொள்கைக்கு உரம் சேர்க்க வருவது போல் அதிரடியாக நுழைந்துள்ளனர். இவர்கள் ததஜ அமைப்பினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும், தீவிர ஆதரவாளர்கள் என்பதும் அப்போது மக்களால் உறுதியுடன் கூறப்படுகிறது. 25 ரவுடிகள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் சென்ற ஹஜ் முஹம்மது, தொழுதுவிட்டு வெளியே வந்த ஊர்த் தலைவர் முகமது இஸ்மாயிலை ஓங்கி முகத்தில் குத்தியுள்ளார். ததஜ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அதற்கு முன்பாக ஜமாத்தரப்பினர் எந்த முன் ஆயத்தத்திலும் இல்லை என்பதை அவ்வூர் மக்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஜமாத் சார்பில் அடியாட்களோ ஆயுதங்களோ ஏற்பாடு செய்யாமல் சாதாரனமாகவே இருந்திருக்கிறார்கள். ததஜ தரப்பில் சொல்வது போல் ஜமாத் சார்பில் அதிரடி தாக்குதல்கள் நடந்து அதன்பிறகு ததஜ ஆதரவாளரான ஹாஜி முஹம்மது தரப்பினர் தற்காப்புக்காக சுட்டனர் என விளக்கம் அளித்திருப்பதும் மிகப்பெரிய பொய் என்பதை அவ்வூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஜமாத் தலைவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது.

அதன் பிறகு தொடர்ந்து வன்முறை கும்பலால் பள்ளி வாசல் ‘நகரா’ கிழிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் உடனே பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், வெளியூர் ரவுடிகள் பள்ளிவாசலுக்குள் வந்து தகராறு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஊர்மக்கள் பள்ளிவாசலை நோக்கி வர, இந்த கும்பலில் ஒருவர், ‘‘தலைவரை அடித்ததை மட்டும் மைக்கில் சொல்றியே, இன்னும் நிறைய நடக்கப் போவுது. அதையும் சேர்த்து சொல்’’ என்று கூறியுள்ளார். அவர்கள் கூறிய இந்த வார்த்தைகளையே ஊர் மக்கள் நம்மிடம் கூறினார்கள். இவர்கள் மிகப்பெரிய திட்டமிடலோடு வந்தனர் என ஊர்மக்கள் அடித்துச் சொல்கின்றனர். அதற்கு ஆதாரம் தான் இது என மக்கள் சொல்கிறார்கள். மேலும் துப்பாக்கியுடன் வந்ததில் இருந்தே இவர்கள் தான் வலிய வம்புக்கு வந்ததற்கான ஆதாரணம் என பலரும் கூறுகின்றனர். உடனடியாக ஊர் மக்கள் திரண்டதும் ததஜவுக்காக வந்த ஹாஜி முஹம்மது தலைமையிலான வன்முறை கும்பல் பள்ளிவாசலுக் குள் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்து வெளியே வந்து நின்றுகொண்டது. (தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க வசதியாக).

தாக்கிய அந்த நேரத்தில் சராமாரி துப்பாக்கிச் சூடு:-

இந்நிலையில் ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில் மகன் சபீருதீன் (18), ‘‘என் அத்தாவை யாருடா அடிச்சது-?’’ என்று கேட்டு, ரவுடிகள் நின்ற பக்கம் சென்றுள்ளார். மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பாசத்தில் முகமது இஸ்மாயிலும் சென்று ரவுடிக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் குத்புதீனுக்கு ஆதரவாக வந்த அடியாள் படைத் தலைவன் ஹஜ் முஹம்மது, வெறி தலைக்கேறி, முகமது இஸ்மாயிலை சுட்டுக்கொன்றான். அதைத் தடுக்க வந்த ஹாஜி முஹம்மதுவையும் சுட்டுக் கொன்றான். இவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினர் தொழுது வந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர். ஜபருல்லாவின் மைத்துனர்.

ஊர் மக்களையும் சரமாரியாக சுட்டப் படி இந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. ஊருக்குள் வந்த காரும், ரவி என்ற ரவுடியும் மக்களிடம் பிடிபட்டனர். வன்முறைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அப்பாவிகள்:-

வன்முறைக் கும்பல் தலைவன் ஹஜி முஹம்மது சுட்டதில் நசீர் முஹம்மது (30), பால்ராஜ் (55) ஹாஜாமைதீன் (45), ராமதாஸ் (45) சந்தியாகு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இச்சம்பவத்திற்கு துளியும் சம்பந்த மில்லாமல் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது. இவர்கள் எப் படி இந்த இடத்தில் வந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திருவிடைச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்து மற்றும் தலித் மக்களுக்கான பஜார் என்பது திருவிடைச்சேரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ததஜவின் முக்கிய தலைவர் பி.ஜே. கூறியிருப்பது போல் சுடப்பட்ட இந்துக்கள் ரவுடிகளோ, ஜமாத்தாரால் திரட்டி வரப்பட்ட அடியாட்களோ அல்ல. முஸ்லிம் களோடு நேசமாக பழகிய உழைக்கும் அப்பாவிகள். இவர்களுக்கு ததஜ பற்றியும் தெரியாது. ஜமாத்தாரையும் புரியாது என ஊர் மக்கள் கூறினார்கள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் மக்கள் அங்கு குவிந்தனர். தமுமுகவின் அவசர ஊர்திகளில் காயம்பட்டவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மேல்சிகிச் சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தமுமுக ஆம்புலன்சும் தொண்டர் களும் உதவியதைப் பார்த்த பத்திரிகை நிருபர்கள் சிலர், தமுமுகவினர் தாக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர்.

தமுமுக நிர்வாகிகளும் அவசர ஊர்திகளும் சம்பவம் நடந்தபிறகு, பாதிக்கப் பட்டோருக்கு மருத்துவ உதவி களைச் செய்வதற்காகவும், மேலும் வன்முறை பரவி விடா மல் தடுப்பதற்குமே அங்கு சென்றுள்ளனர்.

துப்பாக்கி ஏது ?

கொலைக் கும்பல் தலைவன் ஹஜ் முஹம்மது, சிதம்பரத்தில் அந்த இயக்கத்தினரின் துணை யோடு நீதிமன்றத்தில் சரணடைந்தான். ஹஜ் முஹம்மது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது மேலும் இரண்டு கள்ள துப்பாக்கிகள் கைப் பற்றப்பட்டன. லண்டனில் தயாரான, 150 ரவுண்டு சுடக் கூடிய துப்பாக்கியும் அதில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இத்த கைய பயங்கர ஆயுதங்களை ஓர் ஆசாமிவைத்திருப்பது போலீசாரை அதிரவைத் துள்ளது.

கொள்கைக்கு பின்னடைவு:-

இந்த பயங்கரவாதிகளின் செயல் திருவிடச்சேரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பது காலத்தின் மிகமிகக் கட்டாயமாகிவிட்ட சூழ் நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத் என உருவெடுத்துவிட்ட இவர்களின் செயல் சத்தியத்திற்காக உழைப்பவர்களுக்குப் பெரும் சோத னையை உண்டாக்கி விட்டது.

இந்நிலையில் இத்தகைய வன் முறைப் போக்கைக் கண்டிக்க வேண்டிய அதன் தலைமை தற்காப்புக்காகத்தான் ஹஜ் முஹம்மது சுட்டார், திருவிடச்சேரி ஜமாத்தார்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் தாக்க வந்தார்கள், பள்ளிவாசலுக்கு முஸ்லிமல்லாத ரவுடிகளை வைத்திருந்தனர் என்றெல்லாம் தொலைக்காட்சியில் பேசி, வன்முறைச் செயலை நியாயப்படுத்தி வருவதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர் அவ்வூர்மக்கள். நடந்து முடிந்த இந்த அட்டூ ழியம் குறித்து தமிழகம் முழு வதும் உள்ள ஜமஅத்தார்கள், உலமாக்கள் கருத்து கூறுவது என்ன வெனில் சமீப காலமாக ஆளும் திமுகவோடு ததஜவின் தலைமை நெருக்கமாக இருக்கிற காரணத்தால் கொலைக்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை இருக்காது என சந்தேகம் கொள்கின்றனர்.

சிந்திக்க வேண்டும்:-

ஏகத்துவ பிரச்சாரத்தில் கேரள முஜாஹிதீன்களும், அகில இந்திய அளவில் அஹ்லே ஹதீஸ் அமைப் பினரும், தமிழக அள வில் ஜாக், ஐ.பி.பி. உள்ளிட்ட அமைப்பினரும் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்கும் மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் கூட நட்புபாராட்டும் அளவுக்குத் தான் அவர்கள் பிரச்சாரம் இருந்து வருகிறது. முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக்கொண்டு போலி தூய்மை பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம் களையும் எதிரிகளாக கருதி அதன் வழியாக இயக்க வெறியை அப்பாவி தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழகம் முஸ்லிம் சமு தாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கு வானாக. இதைபோல ஜமாஅத்தினரும் தங்கள் தரப்பு தவறுகள் குறித்து கவலையோடு சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால் வெறி பிடித்து துப்பாக்கியை தூக்கும் அளவுக்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வாசிக்கும் ததஜ சகோதரர்கள் யார் மீதும் கோபப்படாமல் நடைபெற்ற கொடூரங்கள் நியாயம் தானா---? என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைவர் ஆறுதல்:-

திருவிடச்சேரியில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அறிந்த தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் பேரா. ஜெ.ஹாஜாகனி மற்றும் தஞ்சை (வடக்கு), திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் 7.9.2010 அன்று திருவிடச்சேரிக்குச் சென்றனர். தமுமுக தலைவரின் வருகையை முன்னதாக அறிந்த ஊர் ஜமாஅத்தினர் மற்றும் நிர்வாகக்குழுவினர், பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, நடந்த சம்பவங்களை விளக்கினர். நமது செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

பள்ளிவாசலுக்குள் ரவுடிகளை வைத்திருந்தது, தவ்ஹீத் ஜமாஅத் தினரை பயங்கரமாகத் தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த ஊர் ஜமாத்தினர், நோன்புக் காலம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இந்தப் பள்ளிவாசலில் இருந்துதான் கஞ்சி வழங்கியதாகவும், அவர்கள் இவ்வளவு மூர்க்கமாக இறங்குவார்கள் என தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினர்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் ஹாஜி முஹம்மது ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற தமுமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

திருவிடச்சேரியை ஒட்டியுள்ள விழியூர் சென்று குண்டடிபட்ட முஸ்லிமல்லாத சகோதரர்களின் வீடுகளுக்கும் தமுமுக நிர்வாகிகள் சென்று அவர்களுக்கு தமுமுக நிர்வாகிகளின் வருகையை ஒட்டி விழிதியூரில் திரளாகக் கூடிய முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள், திருவிடச்சேரி முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் காலங்காலமாக இருந்துவரும் பாசப் பிணைப்பை நெகிழ்வோடு குறிப்பிட்டனர்.

குடும்பத்தோடு வெளியூர் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி நம்பி ஒப்படைத்துச் செல்வதையும், பலநேரங்களில் முஸ்லிம்களின் கடைகள் மட்டும் சொத்துகளுக்கு பாதுகாப்பாக இம்மக்கள் சென்று இரவெல்லாம் தங்கியிருந்ததையும் தமுமுக தலைவரிடம் கூறிய இம்மக்கள், தங்களை அடியாட்கள் என்று அந்த பேரறிஞர்(?) விமர்சித்தது குறித்து வேதனை அடைந்தனர். நீங்கள் ஜமாத்தினரின் அடியாட்களாகப் போனீர்களா? என்ற கேள்விக்கு வேதனையோடு மறுத்தனர்.

குத்புதீனும் அந்த அமைப்பும்:-

குத்புனுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவர் எமது உறுப்பினருமில்லை, எமது செயல்பாடுகளில் கலந்துகொள்வதுமில்லை என்று அந்த அமைப்பின் முக்கிய தலைவர் பி.ஜே தொலைக்காட்சியில் விளக்கமளித்துள்ளார்.

நாகை மாவட்டம் ஏனங்குடி நடுப்பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள டி.என்.டி.ஜே. அலுவலகம் இந்த குத்புதீன் குடும்பத்துக்குரியது. குத்புதீன் முயற்சியினாலேயே அந்த அமைப்புக்கு அந்த இடம் கிடைத்தது என்கின்றனர் ஊர்வாசிகள். எனவே குத்புதீன், அந்த அமைப்புடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது.

திருவிடச்சேரியில் வாய்த்தகராறு ஏற்பட்டபோது அஸர் தொழுகை நேரம். அப்போது குத்புதீன் அங்கே இருந்ததால் பிரச்சினை வளர்ந்துள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக அந்த வீட்டில்தான் இரவுத் தொழுகைக்கும் வந்துள்ளார்.

இவர் தற்செயலாக நண்பரோடு வந்ததுபோல் அதன் தலைமை கூறியதும் பொய்யே.

வன்முறை இவர்களது வழிமுறை இல்லையென்றால், திருவிடச்சேரி ஜமாஅத் தலைவரும், இன்னொரு முஸ்லிமும் கொல்லப்பட்டதை இந்த நிமிடம் வரை அவர் ஒப்புக்குகூட கண்டிக்காமல் இருப்பது ஏன்?

தற்காப்புக்காக சுட்டாரா?

பள்ளிவாசலுக்கு நியாயம் கேட்க வந்த ஹஜ் முஹம்மது, தற்காப்புக்காக சுட்டதில் இருவர் பலியாகிவிட்டதாக அந்த தலைவர் கூறுகிறார்.

நியாயம் பேச வருபவர் துப்பாக்கியோடு தான் வருவாரா?

பள்ளிவாசலுக்கு துப்பாக்கி எடுத்து வருவது அவசியமா?

நபிவழியில் நடப்பதற்காக, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள் துப்பாக்கி மூலம்தான் தீர்வு கண்டார்களா?

இதற்கெல்லாம் என்ன பதில்-?

திருவிடச்சேரி மக்கள் கருத்து

முகம்மத் இக்பால் (ஜமாத் பொருளாளர்) கூறுகையில்:-

இந்த ஊரில் நாங்கள் எல்லாம் ஒத்துமையா வாழ வேண்டுமென நினைப்போம். ஆன இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் நடந்த நாளில் தவ்ஹீத் ஜமாதினர் இவ்வூரில் ஒரு வீட்டில் ரமலான் இரவு தொழுகை நடத்தி வந்தனர். அப்போது அவ்வீட்டு பெண்ணுக்கும் எதிர் வீட்டுகாரர் களுக்கும் நடந்த சிறிய பிரச்சணைக் காரணமாக கைகலப்பு நடந்தது. இதனை ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலையிட்டு சுமார் 50 அல்லது 60 பேர்களுடன் மீண்டும் வந்தனர். அப்போது ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

பிரச்சனையைப் பேச 10 பேர் வந்தா போதுமே ஏன் இத்தனை பேர் என ஜமாத் தலைவர் கேட்டார். அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினர் ‘‘இவர்கள் எங்கள் பக்கம் பேச வந்துள்ளனர்’’ என்று கூறினர். யாரும் எதிர்பார்’காத நேரத்தில் இஸ்மாயில் அவர்களை அவர்களில் ஒருவரான ஹாஜி முகம்மது மூக்கில் தாக்கினார். இதனால் ஜமாத் தலைவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பள்ளி இமாம் மைக்கில், ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு செய்தார். அறிவிப்பு செய்யும் போதே கொலையாளிகள் ‘‘இப்போது மூக்கை மட்டும் தான் உடைத்துள்ளோம் இன்னும் பாக்கி உள்ளது அதையும் மைக்கில் சொல் லுங்கள்’’ என கூறினர். இமாமின் அறிவிப்பை கேட்ட உடன் ஜமாத் தலைவரின் மகன் ஒடி வந்து ‘‘யாருடா என் அத்தாவை அடித்தது தைரியம் இருந்த இப்ப வா’’ என ஆவேசப்பட்டார். மகன் கோபத்தில் ஏதாவது செய்திடுவானோ என பயந்து அவனை சமாதானப்படுத்த பள்ளியிலிருந்து ஜமாத் தலைவர் இறங்கினார். ஒரு சில அடிகள் சென்ற உடன் இவ்வூரைச் சேர்ந்த குத்புதீனின் மச்சானாகிய ஹஜ் முகம்மது அவரை சுட்டான்.

இதுக்கு அரசியல் கட்சிகள் காரணம் என சொல்கிறார்கள் இதற்கு அதிமுகவோ திமுகவோ காரணம் இல்ல. இதற்கு குத்புதீன் தான் காரணம்.

சமா தானப்படுத்தினார். ஆனால் ஆத்திரத்திலும் கோபத்திலும் இருந்த அவர்கள் அங்கிருந்து சென்று அவர்தான் சம்பவம் நடக்க இருந்த சில மணிநேரத்துக்கு முன் ‘‘இன்னும் 2 மணிநேரத்தில் இந்த ஊரை என்ன பண்றேன் பார்’’ என சொன்னார்.

ஹாஜா மைதீன் (ஜமாத் துணைத் தலைவர்) கூறுகையில்:-

இஸ்மாயில் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் இறக்கும் நாள் வரை எல்லாரிடமும் நல்ல முறையில் நடந்துக்கொண்டார்.

இந்த பசங்க இப்படி பண்ணுறானுங்களே என்று ரொம்ப கவலைப்பட்டார். பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் இதே கவலையில் இருந்தார். எப்பவுமே நாம் அனைவரும் ஒன்றுதானே ஏன் பிரச்சனை பண்றாங்க என்று கூறி வருத்தப்படுவார். அப்படிப்பட்ட ஒருவரை எங்க ஜமாத் இப்போது இழந்துவிட்டது. சம்பவம் நடந்த நாளில் அவர்கள் 5 கார்களில் வந்து ஏற்கனவே திட்டமிட்டது போல் சிறிது தூரத்திற்கு முன்பே நிறுத்தி ஒரே ஒரு குவாலிஸ் காரிலே மட்டும் வந்தார்கள் எல்லாம் முடிந்தவுடன் அந்த கார்களில் தப்பிவிட்டனர். இது எல்லாமே முன் ஏற்பாட்டுடன் நடந்துள்ளது போல் தெரிகிறது, இதற்கு காரணமானவர்களை காவல்துறை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சுட்டுக்கொள்ளப்பட்ட ஜமாத் தலைவரின் மகன் சபீருதீன் கூறுகையில்:-

நான் பிரச்சனை என்று கேள்விப் பட்டு போனேன். அவங்க 50 பேருக்கு மேல் இருந்தாங்க அத்தாவை அடிச்சதுல மூக்குல ரத்தம் வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கியால் சுட்டாங்க. அங்கேயே அத்தா மவுத் தாயிட்டார்.

ஜபருல்லா (சுட்டு கொல்லப்பட்ட ஹாஜி முஹம்மதின் மைத்துனர்) கூறுகையில்:-

எங்களுக்கும் அவர்களும் தனிப் பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. ஜமாத்திற்கும் அவர்களுக்கும் சிறு சிறு பிரச்சணை வரும், பிறகு சரியாகிவிடும்.

என்னுடைய சகோதர மகனுக்கு சிறிது மூளை வளர்ச்சி குறைவு. அவனுக்கு அதிக சப்தம் ஒத்துக்காது. அவர்கள் எதிர் வீட்டில் ஸ்பிக்கர் போட்டு ரமலான் இரவு தொழுகை நடத்திவந்தனர். குர்ஆன் தொழுகை காரணமாக நாங்கள் எதுவும் சொல்லவில்லை. சம்பவ தினத்தில் எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் பெண் எங்கள் குடும்பத்தினரை தவறாகப் பேசி னார். இதனை பெரிது பண்ண வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ரமலான் வரை தொழுகை நடக்கட்டும், பிறகு நடத்த வேண்டாம் என சொல்லிவிட்டோம். இதையே ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்களும் கூறினார். பிறகு நோன்பு துறந்த பின் குத்புதீன் என்பவர் சமாதா னம் செய்த ஜமாத் தலைரை தரக் குறைவாகப் பேசினார். இதனை அங்கிருந்த மக்கள் ஆட்சேபனை செய்தனர். அவர்களையும் தரக்குறை கம்பு, கட்டை ஆகியவைகளை எடுத்து பொதுமக்களை தாக்கினர். இதில் மாற்று மத சகோதரர்களும் தாக்கப்பட்டனர். இந்நிலையில் குத்புதீன்என்பவர் இன்னும் 2 மணி நேரத்தில் இந்த தெருவையே தரைமட்டம் ஆக்குரென் பாரு என போனார்.

இதே போல் அடிக்கடி குத்புதீன் சொல்வது வழக்கம். எனவே இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில மணி நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து மைக்கில் ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் பள்ளிவாசலை நோக்கி ஓடினோம். கண் மூடி திறக்கும் முன் ஹஜ் முகம்மது என்பவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜமாத்

தலைவர், எனது மச்சான் ஹாஜி முஹம்மது ஆகியோர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் மாற்று மத சகோதரரும் அடங்குவர். ஒரு சிறிய விஷயத்தை பெரிய பூதாகரமாக்கி உயிர்பலி வாங்கிவிட்டனர். நானும் தவ்ஹித் சிந்தனை உள்ளவன்தான். ஜமாத் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் நாம் ஏகத்துவ கொள்கையைச் சொல்ல முடியும் என சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

எதிர்தரப்பில் அவர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கொள்கை ரீதியாக செயல்படுவதில்லை.

பிச்சை முஹம்மது (சம்பவத்தை நேரில் கண்டவர்):-

சம்பவ நாளில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஜமாத் தலைவரை ஹஜ் முகம்மது என்பவர் முகத்தில் அடித்தார். பின்பு ஜமாத் தலைவரை நோக்கி ‘‘நீ என்ன பெரிய ஆளா?’’ என கேட்டு அவரது நெஞ்சில் குத்தினார். தலைவரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ஜமாத்தினர் அவர்களை பிடிக்கும் போது அவர்கள் பள்ளியிலிருந்து கீழே இறங்கி விட்டனர்; அதன்பின்பு ஜமாத் தலைவரையும் அவருடன் இருந்தவர்களையும் சரமாரியாக சுட்டு, தயாராக இருந்த கார் களில் தப்பினர். சம்பவத்தை கேள்விப் பட்டவுடன்; தமுமுகவினர் 150க்கு மேற்பட்டோர் வந்து எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

குண்டுபாய்ந்த இந்துமத சகோதரர் ராமதாஸ் மனைவி கூறுகையில்:-

என் கணவர் மாதா கோயில் திருவிழாக்காக வசூல் செய்ய அங்கு சென்றார். அங்கு நடந்த பிரச்சனையில் அவருடைய விலாவிலும் குண்டு பாய்ந்து தற்போது தஞ்சை மருத்துவமனை ஐ.சி.யு.வில் உள்ளார். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கணவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார்.

அவரும் இப்போது மருத்துவமனையில் உள்ளதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

சின்னப்பா (சம்பவத்தை நேரில் கண்டவர்) கூறுகையில்:-

‘‘எங்க விழிதியூர் கிராமத்திலிருந்து நாங்க எல்லோரும் கடைக்கு இங்கு தான் வருவோம். எங்களுக்கு முக்கியமான கடைத் தெருவே இந்த ஊர்தான்.

எங்களுக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் எந்தப் பிரச்சணையும் இல்லை. கடைக்கு வந்த நாங்கள் ஏதோ சத்தம் கேட்டதால் அங்கு ஒடினோம்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எங்க ஊர்’காரருங்க 3 பேர் சிக்கிட்டாங்க. அவங்க இப்போ ஆஸ்பத்திரில இருக்காங்க’’.

அந்தோனி சாமி (குண்டு பாய்ந்தவரின் உறவினர்) கூறுகையில்:-

‘‘விழிதியூர் கிராமத்திலே இதுக்கு முன்னாடி இதுபோல் நடக்கவே இல்ல. இது பெரிய அநியாயம். நாங்க மாதா கோயில் திருவிழா நடத்த வசூல் செய்யப் போனோம். ஆனால் திருவிழா நடத்த வேண்டிய நாட்டாமை இருவரும் இப்போ மருத்துவமனையில் உள்ளனர்’’.
நன்றி: மதஜ

இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக? ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

மறைகளண்ட தக்லீதுகளின் உலறல்கள்.
இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக?
ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் புனித ரமலான் மாதத்தில் ஏற்பட்ட மோதலில் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே அதற்கு யார் காரணம் என்பதும் சமுதாயம் அறிந்துள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் உள்ளார். திருவிடைச்சேரியில் என்ன நடந்தது என்று சமுதாய மக்கள் அனைவரும் அறிவர். இந் நிலையில் இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திருகிறதா தமுமுக என்று ஷேக் தாவூத் என்ற மனநோயளி தனது வலைபூவில் பிதற்றியிருக்கிறார்.

திருவிடைச் சேரியில் நடந்தது என்ன என்று ஏற்கனவே தெளிவாக எழுதிவிட்ட நிலையில் மீண்டும் எழுதி நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை.

திருவிடைச்சேரியில் நடந்தது என்னவென்று அந்த ஊர் ஜமாத்தார்கள் எழுதி உள்ள கடிதம்:இனியாவது நடுநிலையோடு சிந்திக்க முன்வரட்டும்.


நடந்த சம்பவங்களின் விபரத்திற்கு:
“The clash was over offering Ramzan Taraweeh night prayers” என்று தி ஹிந்து சொல்கிறது. http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

தட் ஈஸ் தமிள், தொழுகை நடத்துவது தொடர்பாக மோதல்-2 பேர் சுட்டுக் கொலை, திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html

http://www.indianexpress.com/news/Two-killed–four-hurt-in-group-clash/678070

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100906_mosqueviolence.shtml

http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

ஊழல்... தேச அவமானம்தாய்க்கு வாங்கும் சேலையிலும்
பிள்ளைகளின் பணம்பதுக்கல்
தரமற்ற ஆடை கிழிந்ததால்
ஊரார் நகைத்து
கைகொட்டி சிரிக்க
வீதியில் நிலைகுலைந்து
தன் மானம்மறைக்க
இயலாமல் திண்டாடுகிறாள்
பெற்ற தாய்....
நன்றி -செய்யதலி

Monday, September 27, 2010

இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்

(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் -ஆசிரியர்)அயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.

கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன.

கோல்வால்கரின் பாசிச கருத்துகள்

பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு. இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.

ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'

இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.

நாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு. கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.

'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.

'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.'

பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.

ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?

அயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.

வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:

'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'

இது மட்டுமா?

டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.

பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)

பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?

திரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா?

பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா? மக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள்.

இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்!

Thursday, September 23, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்.

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.

இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

“பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!

1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.

1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த் திப்போமாக.

தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, September 20, 2010

பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திடவும்!

சமுதாயச் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளியின் தீர்ப்பு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 24ம் தேதி அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்படஉள்ளது...

தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.

இழந்த உரிமையை பெற்றுள்‍ளோம்...

வழங்கப்படும் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நீதி கேட்டு உச்சநீதி மன்றம் செல்லும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே! தேசத்தின் நலன் கருதி பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திட வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Thursday, September 16, 2010

போலீஸ் ட்ரீட்மென்ட் பிளஸ் என்கவுன்டர்

அலறும் அவஸ்தைக் குடும்பங்கள்!

மிச்சம் இருக்கும் எங்களை நிம்மதியா இருக்கவிடக்கூடாதா?

நன்றி: ஜூவி

போலீஸ் ட்ரீட்மென்ட்' என்ற வார்த்தை பல சந்தர்ப்பங்களில் நடுக்கத்தோடு உச்சரிக்கப்படும். விதம் விதமான காக்கி சித்ரவதைகளை அனுபவித்தவர்கள் ஒரே இடத்தில் கூடி அதை வாக்குமூலமாகச் சொன்னார்கள். கேட்கும்போதே நெஞ்சு நடுங்கிவிட்டது.

மதுரை ஹென்றி டிஃபேனின் 'மக்கள் கண்காணிப் பகம்' அமைப்பு, சென்னையில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்கள் மற்றும் காவல் நிலைய விசாரணை களின்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், போலீஸ் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் கலந்துரை யாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் மதுரை அருளானந்தம் பேசினார்...

''என் மச்சினன் முருகன் மீது சில வழக்குகள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம், அவனைப் பிடித்துத் தரும்படி சொல்லி என்னையும், என் மனைவி தனலட்சுமியையும் போலீஸ் நிலையம் கொண்டுபோய் டார்ச்சர் தந்தனர். ஸ்டேஷன்ல வெச்சு, பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க. நாங்க ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சு, போலீஸ்கிட்ட முருகனே பேசினான். அப்போ, 'நான் என்ன தப்பு செஞ்சேன்? எதற்காகத் தேடுறீங்க, ஏன் அவங்களை கஸ்டடியில வெச்சிருக்கீங்க?'ன்னு முருகன் கேட்டிருக்கான். போலீஸ்காரங்க, 'உன்கிட்ட சின்ன விசாரணை இருக்கு. வந்துட்டுப் போ'ன்னு கூப்பிட... அடுத்த நாள் முருகன் வந்ததும்தான், எங்களை அனுப்பினாங்க.

அடுத்த ரெண்டு நாள் அவனை அடிச்சு, உதைச்சு, சித்ரவதை செஞ்சாங்க. அவன் சுய நினைவை இழந்துட்டான்.

திடீர்ன்னு ஒரு நாள் மதுரை தெப்பக்குளத்துக்குக் கொண்டுபோய் முருகனையும் கவியரசுவையும், என்கவுன்ட்டர்னு சொல்லி சுட்டுட்டாங்க. என் மாமியார் (முருகனின் அம்மா) குருவம்மா, 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்புல இதுபத்தி புகார் கொடுத்தாங்க. அவங்க இந்த உண்மையை சொல்ல ஒரு பிரஸ்மீட் வெச்சாங்க. இந்தத் தகவல் அப்படியே பத்திரிகைகளுக்குப் போனதால், போலீஸ§க்குக் கோபம். திரும்பவும் போலீஸ் டார்ச்சர்... மனைவி தனலட்சுமியை தங்கத் தோடு திருடியதா அரெஸ்ட் பண்ணி, ஜெயில்ல போட்டாங்க. என் மாமியாரை, 'நீ உடனடியா மதுரையைவிட்டு வெளியே போ'ன்னு தொந்தரவு பண்றாங்க. முருகனைத்தான் கேட்பார் இல்லாம கொன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு மிச்சம் இருக்கிற எங்களையும் நிம்மதியா விட மாட்டேங்கிறாங்களே!''

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி கமலா: ''அவங்களை என்கவுன்ட்டரில் கொல்லப்போறதா தகவல் கிடைச்சதும் நாங்க கர்நாடக மாநிலம் பெல்லாரி பக்கம் தலைமறைவு ஆயிட்டோம். ஆனா, எப்படியோ விஷயம் தெரிஞ்சு, தமிழக போலீஸ் அங்கே வந்தது. அங்கே இருந்து தப்பி ஹோஸ்பெட் போனோம். நானும் கணவரும் செல்போனில் பேசியதை வெச்சு டிரேஸ் செய்து போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சிடுச்சு. ஜூலை 31-ம் தேதி வரை அவங்க கர்நாடகாவில்தான் இருந்தாங்க. ஆனா, அடுத்த நாள் காலையில தமிழ்நாட்டில் அவங்களை சுட்டுக் கொன்னதாத் தகவல் வந்தது.

இதன் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கு. அவர் வற்புறுத்தலால்தான் பெரிய போலீஸ் அதிகாரியே நேரில் வந்து இந்த என்கவுன்ட்டரை பண்ணினாரு. இது தொடர்பா கேஸ் போட்டிருக்கோம். நாங்க நிச்சயம் ஜெயிப்போம்!''

செங்கோட்டையைச் சேர்ந்த அய்யப்பன்: ''மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும், உரிமையைப் பெற்றுத்தர நான் போராடுவதால், உள்ளூர் போலீஸ§க்கு என் மீது கோபம். கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி என்னைக் கைது செய்து, இரவு 11 மணி முதல் 3 மணி வரை அடித்து உதைச்சாங்க. அப்புறம், செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினாங்க. அதுக்கு முன்னாடி அரசு டாக்டர் ஒருத்தர்கிட்ட என்னைக் காட்டி, நல்லா இருக்கிறதா சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டாங்க. ஆனால், நான் மாஜிஸ்திரேட்கிட்ட நடந்ததைச் சொல்லி, காயங்களைக் காட்டினேன். போலீஸ் அந்த போலி சர்ட்டிஃபிகேட்டை மாஜிஸ்திரேட்கிட்ட கொடுக்க... அவர் ஏற்க மறுத்து, அந்த டாக்டர் உடனடியாக ஆஜராகணும்னு உத்தரவிட்டார். டாக்டரிடம், 'போலீஸ் என்ன சொன்னாலும் அப்படியே செய்வீங்களா?'ன்னு கேட்டுத் திட்டினார். பின்னர் எனக்கு மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவிட்டார். அதுக்கப்புறம் ஜாமீனில் வந்தேன்.

ஆனாலும் தொடர்ந்து போலீஸ் டார்ச்சர். பயந்து சொந்த ஊருக்கே போகவில்லை. என் குழந்தை என்னைப் பார்க்கணும்னு அழுவதாக மனைவி செல்போனில் சொன்னார். 'போய்ப் பார்க்கலாமே' என்று போனேன். வீட்டுக்குப் போன அஞ்சாவது நிமிஷத்திலேயே போலீஸ் வந்து, கைது செஞ்சது. இப்போ, வெளியில் வந்த பிறகும் தொடர்ந்து டார்ச்சர்தான்...''

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சித்ரவதை அனுபவங்களைச் சொல்லி முடிக்க, ஹென்றி டிஃபேனிடம் பேசினோம், ''தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் 25 போலி என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. காவல் நிலைய மரணங்கள் 46 நடந்திருக்கு. இப்படி பலவித சித்ரவதைகள் தமிழ்நாட்டில் நடந்துட்டு இருக்கு. இதைத் தடுப்பதற்கு முறையான சட்டம் வேண்டும்!'' என்றார் அவர்!

- பா.பிரவீன்குமார்
படங்கள்: வி.செந்தில்குமார்

Thursday, September 9, 2010

Eid Mubarak - ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, September 7, 2010

திருவிடச்சேரியில் வன்முறை வெறியாட்டம்: தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

“திருவாருர் மாவட்டம், திருவிடச்சேரியில் 05.09.2010 அன்று சமூக விரோதிகள் நடத்தியுள்ள வன்முறை வெறியாட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

சமூக விரோதிகள் திருவிடச்சேரி ஜமாத் தலைவரையும் அவரது மைத்துனரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதும், முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் படுகாயப்படுத்தி இருப்பதும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் இத்தகைய துப்பாக்கி கலாச்சாரத்தை அணுவளவும் சகிக்க முடியாது.

வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், வெளியூரிலிருந்து வந்த அடியாட்கள் மீதும், வன்முறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமுமுக தனது ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கிறது.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, August 21, 2010

மரங்களை வெட்டுங்கள்..மரங்களை வெட்டுங்கள்..
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Thursday, August 12, 2010

போதை: ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு...

விபத்து என்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடும்தான் என்றாலும், அது வாழ்நாளுக் கும்மறக்காது. கண்ணகிக்கு நடந்ததோ பயங்கரத்தின் உச்சம். ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு, 1 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, உயிர் பிழைத்திருக்கும் கண்ணகியின் கதி இது!

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த உமாபதி, ஒரு கார்பென்டர். கண்ணகி, இவரது மனைவி. நான்கு வயதுப் பையன் சாரதி மற்றும் ஆறு மாதக் கைக் குழந்தை சௌமியா ஆகியோருடன் மனைவியின் ஊரான மணவூருக்குச் சென்று பைக்கில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார் உமாபதி. அப்போதுதான் அந்தக் கொடுரம் நடந்தது.

"நாங்க திருமுல்லைவாயில் சி.டி.ஹெச். ரோட்டுல வந்துட்டு இருந்தோம். பைக்ல எனக்கு முன்னாடி பையன் உட்கார்ந்து இருந்தான். பின்னாடி என் மனைவி குழந்தையைக் கையில் வெச்சுக்கிட்டு உட் கார்ந்திருந்தா. நான் நார்மலான வேகத்தில்தான் ஓட் டிட்டு இருந்தேன். திடீர்னு எங்களுக்கு எதிர்ல ஒரு கார் வேகமா வந்தது. நான் வண்டியைக் கொஞ்சம் ஓரமா ஓட்டினேன். ரோட்டுல நிறைய இடம் இருந்தும் கார் எங்களை நோக்கிப் புயல் வேகத்தில் வந்தது. நான் ஹெட்லைட்டைப் போட்டு 'இதுக்கு மேல் எங்கேயும் போக முடியாது'ன்னு சிக்னல் காட்டுறேன். ஆனா, கார் நேரா வந்துட்டு இருக்கு. அதுக்கு மேல் வண்டியை லெப்ட்லயும் திருப்ப முடியாது. ஏன்னா, அந்தப் பக்கம் பெரிய கால்வாய் இருக்குது. எதிர்ல வந்த கார் கொஞ்சம்கூட வேகம் குறையாம ஸ்பீடா வந்து பொட்டேர்னு வண்டியில மோதுச்சு.

மோதுன வேகத்துல நானும் முன்னாடி உட் கார்ந்திருந்த என் பையனும் அந்தப் பக்கம் போய் தனியா விழுந்துட்டோம். கொஞ்ச நேரம் எதுவுமே புரியலை. 'நாம செத்துட்டோம், நம்ம பொண்டாட்டி புள்ளை எல்லாம் அநாதையாகிடுச்சு'ன்னு தோணுச்சு. கண்ணைத் திறந்தா, பையன் தலையில் அடிபட்டு என் பக்கத்துலயே கிடக்கான். பொண் டாட்டியையும் குழந்தையையும் காணலை. எதிர்ல பார்த்தா எங்களை மோதின காரோட டாப்ல என் மனைவியும் குழந்தையும் கிடக்காங்க. கார் நிக்காமப் போய்க்கிட்டே இருக்கு. என் வண்டி காருக்கு இடை யில மாட்டிக்கிட்டு ரோட்டுல இழுபட்டுக்கிட்டே போகுது. வண்டியில இருந்து நெருப்பு பறக்குது. காருக்கு மேல கிடந்த என் மனைவி அப்படியே வழுக்கிக்கிட்டு காரோட பின்பக்க டிக்கிக்கு வந் துட்டா. குழந்தை மட்டும் காரோட டாப்ல கிடக்கு. ஒரு கையால குழந்தையைப் பிடிச்சுக்கிட்டு தானும் கீழே விழாம என் மனைவி தள்ளாடிக்கிட்டு இருக்கா. ரோட்டுல போற, வர்றவங்க எல்லாரும் கத்துறாங்க. ஆனா, அப்பவும் அந்த கார் கொஞ்சம் கூட வேகம் குறையாம தாறுமாறா போய்க்கிட்டு இருக்கு. நான் கத்தினதைப் பார்த்துட்டு யாரோ ஒருத்தர் என் பையனை ஒரு ஆட்டோவுலயும், என்னை ஒரு ஆட்டோவுலயும் ஏத்தி, கார் போன ரோட்டுலயே அனுப்பிவெச்சார். கிட்டத்தட்ட 1 கி.மீ. தூரம் போய்ப் பார்த்தா அங்கே ஒரு பிளாட்ஃபாரத்துல கார் மோதிக் கிடக்கு. என் மனைவியும் குழந்தையும் கீழே விழுந்து அடிபட்டுக் கிடக்காங்க" - உதடுகள் துடிக்க விவரிக்கிறார் உமாபதி.

இவர்களை மோதிவிட்டு நிற்காமல் பறந்த கார், கொஞ்ச தூரத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த கண்ணன் என்பவரை மோதித் தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தது. காரின் மீது ஒரு பெண் ணும் குழந்தையும் பதறித் துடிப்பதைப் பார்த்ததும் இளைஞர்கள் சிலர் டூ-வீலரில் காரைத் துரத்தி இருக் கின்றனர். அதில் ஒருவர் வேகமாக வந்து காரின் மீது இருந்த குழந்தையை மட்டும் லாகவமாகத் தூக்கி காப் பாற்றிவிட்டார். அதன் பிறகும் நிற்காத கார், கடைசி யில் ஆவடி டேங்க் ஃபேக்டரி அருகே இருந்த பிளாட்ஃபாரத்தில் மோதி நின்றது. டமால் என்று மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டார் கண்ணகி. பெருங்கூட்டமாக ஓடிவந்த மக்கள் கோபத்தில் அந்தக் காரை அடித்து தலைகுப்புறக் கவிழ்த்தார்கள்.

கடுமையான போதையில் காரை ஓட்டியவர், திருநின்றவூர் வளர்மதி நகரைச் சேர்ந்த சிவா என்ற இன்ஜினீயர். அவருடன் வேப்பம்பட்டைச் சேர்ந்த ரமணா என்பவரும் காரில் இருந்திருக்கிறார். மக்க ளின் கோபத்தில் சிக்கி அடித்து நொறுக்கப்பட்ட இவர்கள் இப்போது சிறையில் இருக்கின்றனர்.

"அவங்க பாட்டுக்கும் போதையைப் போட்டுட்டு மோதிட்டுப் போயிடுவாங்க சார். நான் குடும்பத்தோடு அடிபட்டுக்கிடக்கேன். ஏதோ ஹெல்மெட் போட்டுஇருந்ததால், உயிர் தப்பிச்சேன். என் பொண்டாட்டிக்கு உடம்பு முழுக்க எலும்பு முறிவு. ரெண்டு குழந்தைகளுக்கும் தலையில அடி. எனக்கு கால், இடுப்பு, முதுகு எல்லா இடத்துலயும் அடி. எல்லோரையும் அட்மிட் ஆகச் சொல்றாங்க. எல்லோரும் ஆஸ்பத்திரியில இருந்தா ஒண்ணும் பண்ண முடியாதே. அதான் மத்தவங்களைச் சேர்த்துட்டு நான் மட்டும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கலாம்னு இருக்கிறேன்.

நான் கார்பென்டர் வேலை பார்க்குறேன் சார். வேலைக்குப் போனாத்தான் அன்னிக்கு சாப்பாடு. இடிச்சுத் தள்ளிட்டு அவங்க பாட்டுக்கும் போயிட்டாங்க. இதுவரைக்கும் யாரும் என்னான்னுகூட எட்டிப் பார்க்கலை. இருக்கிற நிலைமையைப் பார்த்தா இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஆஸ்பத்திரி யைவிட்டு எங்கேயும் போக முடியாதுபோல. என்ன பண்றதுன்னு புரியலை" - வேதனையின் சொற்கள் வெளிப்படுகின்றன உமாபதியிடம் இருந்து.

இப்போது, இந்த நிமிடம்கூட எத்தனையோ பேர் உடல்கொள்ளாப் போதையுடன் 'அதெல்லாம் போயி டலாம்' என டூ-வீலரையோ, காரையோ ஓட்டத் தொடங்கி இருப்பார்கள்.

போதை... ஏதும் அறியா அப்பாவிகளின் வாழ்க்கை யையும் சிதைக்கிறது என்பதை உணர்வீர்களா?

நன்றி: விகடன்

பாரதி தம்பி
படம்: 'ப்ரீத்தி' கார்த்திக், ஓவியங்கள்:ஹரன்

Thursday, August 5, 2010

நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்!

சிந்தனைக்கு சில...!
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்

பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

- ...சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.

பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.

எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.

விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.

யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.

அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.

உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்

வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.

உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்றவனாவான்.

தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்
சமாதானப்படுத்த முயல வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்

சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்:


பிரிண்ட் செய்ய விரும்புவோர் இந்த லிங்கை பயன்படுத்திக் கொள்ளவும்.

Wednesday, August 4, 2010

‘We’ not ‘They’ are looting waqf properties | TwoCircles.net

‘We’ not ‘They’ are looting waqf properties

By Rehan Ansari, TwoCircles.net,

[Part 3 of Special Series on waqf properties in Maharashtra]

Mumbai: In June 1798, Nawab Ayaz Ali Khan might not have donated a garden of 1549 Sq.Mt. for a burial ground if he knew that it will not be used for the purpose and later trustees will sell a part of it because they are unable to bear the maintenance charges.

There are many waqf properties in Maharashtra, and in the entire country, which have been sold by Muslim trustees themselves for personal gains. Take some cases from Maharashtra in brief:Hebat Jung Masjid, Patna [TCN Photo: Mudassir Rizwan]

Nearly 1100 Sq.Mt. waqf land, registered under Bombay Public Trust Act as B-96 and in Maharashtra Wakf Act, 1995, MSBW/MUM/-87/-08 was sold to a builder for redevelopment for Rs.11 lacs and 2 flats of 560 Sq.Ft.

The story in Kausa, Mumbra of Thane district is very interesting. About 52 acres of wakf land was leased to a Non-Muslim farmer and he used to farm there for the last 50 years. He used to donate one third of his earning to the mosque but when he fell ill and thought he will die he returned the land to the trust.

Locals alleged that Trustees have sold the property worth Rs 280 crore for a meager amount through which they are earning only Rs.18000 per month.

Whereas Chief Trustee Abdul Gani denied that the trust had so much property. He said, “We have leased this property to one Azaad Ghare, and he had sub leased it to others for which we have no information.”

Locals complained it to the Wakf Board, met with the Wakf Minister, Mr. Arif Nasim Khan and then with the Chief Minister of Maharashtra Mr. Ashok Chavan with all the proof but in vain.

The Wakf Board CEO, Mr. S.S. Ali Qadri first issued NOC and after the complaint then reissued notice to stop the work on the wakf land but locals alleged that the signature on both the documents is different.

Besides, the 221 Sq. Yard land having C.S.NO. 791 of Moosa Haji Hasham Charitable Trust PTR No. B-352 (Mumbai) is situated at Khetwadi, Girgaum. It has Ground plus one floor structure having 8 shops and 9 rooms which are all rented. This was sold for Rs. 83 lacs to Shri Jethmal Jain.

Sayaadi Abdul Kadir Hakimuddin Saheb Fateha Trust PTR No. B-1092 (M) sold its property bearing C.S.NO. 1252 which is of 126 Sq.Yard. The Trust sold it for Rs.15 lacs to Sterling Enterprises. The property is recorded in Schedule 1. It is a Ground plus 3 story building and in a dilapidated condition.
According to the Wakf Act 1995 all the B’ Series wakf properties automatically comes under the Wakf whether registered with the wakf board or not.

Asia’s largest tower is coming up on the wakf land at Churni Road, South Mumbai. Sources have also told that Haji Zakariya Haji Ahmed Patel Trust has sold its wakf property in Malad, a western suburb of Mumbai. A wakf property in Sewri, an eastern suburb, has also been sold.

300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது.

தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர்  உமரி

மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி

Sunday, August 1, 2010

உங்களது வாக்கை பதிவு செய்யவும்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இதில் உள்ள இணைப்பை http://twocircles.net/polls/tcn_person_year_2010.html கிளிக்கி அதில் வரும் பக்கத்தில் உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


- நீதியின் குரல்

Saturday, July 31, 2010

சென்னையில் ஒரு போபால்? அதிர்ச்சியூட்டும் ஒரு நேரடி ரிப்போர்ட்...

நன்றி: வினவு.காம்

வினவு குறிப்பு: சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.

அதிர்ச்சியில் உறைந்து போனோம்!

மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.

கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.

நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும், ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.

கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.

நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!

‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும் நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.

இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும், வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !

ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.

என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.

இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து, தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள் உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.

விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?

மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”

இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.

ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.

மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!

எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.

இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.

சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளரின் சாலரி ஸ்லிப்.

தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப் பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை. கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங், பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ, வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.

காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள் வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.

அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே. பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும் தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.

இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள். இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.

காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம் இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம் என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8 தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800 கழிக்கப்படுகிறது.

தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட் நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும், நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான் இவர்கள் தருகிறார்களாம்.

நோக்கியா சுரண்டலுக்கு அடியாள் வேலை செய்யும் தி.மு.க!

இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடினார்கள். தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில் நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும், தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும் வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க. அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.

வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன் மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின் சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில் கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.

ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.

சென்னையில் ஒரு போபால்?

இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.

விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால் இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது? அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா நிர்வாகத்துக்கு தெரியாது?

தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்!

அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்? ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?

இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும் இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.

உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம், எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க; மறுக்கப்படுகின்றன.

சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில் என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும் வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.

இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல் அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.

நோக்கியாவின் காலன் ட்யூன்!

நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன. புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால் இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.

கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத் தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.

நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான் உணருவோம்.

காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.

______________________________________________________________________________________

கட்டுரை, புகைப்படங்கள், கள ஆய்வு – வினவின் செய்தியாளர்கள் குழு, சென்னை.