.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, September 30, 2009

தமிழ்நாடு மின்சாரா வாரியத்தின் அலட்சியம்! வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின் கம்பம்.

தமிழ்நாடு மின்சாரா வாரியத்தின் அலட்சியம்!
வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின் கம்பம்.

நடவடிக்கை எடுக்குமா மின்சாராவாரியம்?

வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின்கம்பம்.

தேதி: 30-09-2009
அடைதல்

கோட்ட உதவி மின் பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின்சாரா வாரியம்,
சிக்கல்,
இராமநாதபுரம் மாவட்டம்.


பொருள்: தவறுதலாக நிறுவப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றி உரிய இடத்தில் ஊன்றுவது சம்பந்தமாக.

இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் கிராமம் ஆண்டிச்சிகுளம் சாலையில் அருந்ததியர் காலனிக்கு வடக்குப் பகுதியில் பட்டா எண்: 548, புல எண்: 129ல் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கமும் வீடுகள் அமைந்திருக்க அதன் நடுவே 13 அடிச்சாலை செல்கிறது மின்சாரா வாரியத்தின் மூலம் மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன தெருவின் தொடக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மின் கம்பம் சரியாகவும் அதற்கடுத்து நிறுவியுள்ள மின் கம்பம் தெருவின் நடுவிலும் நிறுவப்பட்டுள்ளது (பார்க்க படம்) அந்தத் தெருவில் வசிப்பவர்கள் வாகனங்களின் மூலம் பொருள்கள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.

எனவே மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் தவறுதலாக நிறுவப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி முறையாக அதன் உரிய இடத்தில் நிறுவித்தர வேண்டுமாய் அங்கு வசிக்கும் பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

கிராம மக்களின் சார்பாக
எம். ஹூஸைன் கனி
சிக்கல்.

நகல்கள்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள்,
மாண்புமிகு தமிழக மின்சார துறை அமைச்சர் அவர்கள்,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், இராமநாதபுரம்,
கோட்ட மின் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு மின்சாரா வாரியம், பரமக்குடி,
ஊராட்சி மன்றதைலைவர் அவர்கள், சிக்கல்.

Sunday, September 27, 2009

நான் ஏன் புஷ்ஷின் மீது செருப்பை வீசினேன்.

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.


முன்தாஜர் அல் ஜெய்தி
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.

எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்ஸபலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்ஸ ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடுஸ எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.

ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.

என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்

நன்றி . .போராட்டம் வலைப்பதிவு

Wednesday, September 9, 2009

மோடி அரசு நடத்திய இன்னொரு போலி என்கவுண்டர்!

அகமதாபாத்: நரேந்திர மோடி அரசு நடத்திய இன்னொரு போலி என்கவுண்டர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜெஹான். இவர் மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர். இவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜிஷான் ஜௌஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அதிகாலையில் அகமதாபாத் அருகே போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நான்கு பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். குஜராத் கலவர சம்பவம் தொடர்பாக மோடியை சுட்டுக் கொல்ல ஊடுறுவியர்கள் என்று அப்போது போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் இது போலி என்கவுண்டர், திட்டமிட்ட படுகொலை என்று அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

அப்போதைய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வன்சாரா மற்றும் காவல்துறை அதிகாரிகளே இந்த கொடூரமான கொலைக்குக் காரணம் என்றும் மாஜிஸ்திரேட் தமங் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சோராபுதீன் என்பவரை போலி எண்கவுண்டர் செய்து கொலை செய்த வழக்கில் சிக்கி வன்சாரா உள்ளிட்ட போலீஸார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்கது.

இஷ்ரத் ஜெஹான் வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம், 3 உயர் போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை முன்பு நியமித்தது. இந்த விசாரணைக் குழு, தனது விசாரணையின்போது இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலியான முறையில் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டுபிடித்தது.

தங்களது சுய நலத்துக்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இஷ்ரத் உள்ளிட்டோரை சுட்டுக் கொன்றதாகவும், பதவி உயர்வு பெறுவதற்காகவும், இந்தக் கொலைகளை செய்து முதல்வர் நரேந்திர மோடியிடம் நற்பெயரை சம்பாதிப்பதற்காகவும் இந்த என்கவுண்டரை திட்டமிட்டு நடத்தியதாகவும் விசாரணைக் குழு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் கொடூரக் கொலைகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளையும் நீதிபதி 2 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். வன்சாரா தவிர, என்.கே.அமீன் (இவரும் சோராபுதீன் வழக்கில் கைதானவர்), அகமதாபாத் போலீஸ் கமிஷனர் கே.ஆர்.கெளசிக், பி.பி.பாண்டே, தருன் பரோட் மற்றும் சில மூத்த காவல்துறை அதிகாரிகளே இந்த போலி என்கவுண்டருக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதியின் தீர்ப்பின் விவரம்...

குற்றப் பிரிவு போலீஸார் இஷ்ரத் மற்றும் 3 பேரை மும்பையிலிருந்து 2004ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கடத்தி அகமதாபாத் கொண்டு வந்துள்ளனர். நான்கு பேரையும் ஜூன் 14ம் தேதி இரவு தங்களது கட்டுப்பாட்டு இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

ஆனால் ஜூன் 15ம் தேதி அதிகாலையில், அகமதபாத்துக்கு வெளியே உள்ள கோதார்பூர் பகுதியில் வைத்து என்கவுண்டரில் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் அதற்கு முதல் நாள் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள்தான் இஷ்ரத் இறந்திருக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலீஸ் தரப்பு வாதத்தை பொய்யாக்குவதாக அமைந்தது.

தங்களது சதித் திட்டத்தை உண்மையானது போல காட்டுவதற்காக இஷ்ரத்தின் இறந்த உடலை தொடர்ந்து சுட்டு ஏராளமான தோட்டாக்களை உடலில் செலுத்தியுள்ளனர் போலீஸார்.
இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்துமே போலீஸார் போட்ட செட் ஆகும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தண்டிக்க வேண்டும் - இஷ்ரத் குடும்பம்

அப்பாவியான தங்களது மகளை திட்டமிட்டுக் கொன்று விட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஷ்ரத்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகமதாபாத் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போலி என்கவுண்டர் அல்ல-குஜராத் அரசு:

இதற்கிடையே, இஷ்ராத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில் கொல்ல்படவில்லை என்று குஜராத் அரசு மறுத்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையையும் அது நிராகரித்துள்ளது.

இதுகுறித்து குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெய நாராயணன் வியாஸ் கூறுகையில், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் தமங் வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது, அவசர கதியிலானது இது.

இதை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம். சட்டத்தின் பார்வையில் இது மிகவும் மோசமான கருத்து.

இதே வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து அதன் விசாரணைக் காலம் இந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை உள்ள நிலையில், எப்படி நீதிபதி தமங் இப்படி ஒரு கருத்தைக் கூறலாம் என்று தெரியவில்லை என்றார் வியாஸ்.

Friday, September 4, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்: தமுமுக இரங்கல்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

ஆந்திர முதல்வர் வை. ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெஇகொப்டர் விபத்தில் உயிர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. தனது அற்பணிப்பு மிக்க சேவைகளினால் பெரும் மக்கள் ஆதரவை பெற்ற தலைவராக வை.எஸ்.ஆர் விளங்கினார். 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தஇன் போது ஆட்சிக்கு வந்தால் முஸ்இம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அதனை நிறைவேற்றியவர் வை.எஸ்.ஆர். இவ்வாறு அவர் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய பிறகு அது பெரும் சட்டசிக்கலை எதிர்நோக்கிய போது அதனை சாதுரியமாக தீர்த்து இடஒதுக்கீடு பயனை ஆந்திர முஸ்லிம்கள் அனுபவிக்க அவர் வழிவகுத்ததை என்றென்றும் முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவில் நிறுத்திக் கொள்ளும். அவரது மக்கள் ஆதரவு செயல்களின் காரணமாக தான் அவர் மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றார். சீரிய முதல்வரை இழந்து வாடும் ஆந்திர மக்களுக்கும் வை.எஸ்.ஆரின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

(எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்)
தலைவர் தமுமுக
ஒருங்கிணைப்பாளர் மனிதநேய மக்கள் கட்சி