.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, June 22, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு கோவை நோக்கி வருக-கருணாநிதி அழைப்பு


சென்னை: நமது தமிழ் மொழிக்கு சிறப்புகள் சேர்க்க, தமிழ் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்ம படைத்திட வழிவகை காண்போம்! கோவை மாநகர் நோக்கி வருக வருக என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

கோவையில் நாளை தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் ஆற்றிய உரை:

கொங்கு சீமையிலே-கோவை மாநகரில் எங்கும் எழில் குலுங்கிட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நாளை (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை எழுச்சியோடு நடைபெற இருக்கிறது.

இதுவரையில் எட்டு உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்த மாநாடு- அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறுகிற மாநாடாகும்!

அதாவது, தமிழ், `செம்மொழி' என மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டபின் நடைபெறுகிற முதல் மாநாடு இது!

உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ள எனக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அவற்றுள் கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஈப்ரு, சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே, செம்மொழி எனும் தகுதியை பெற்றுள்ளன என மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இந்த வரிசையில் இன்று தமிழ் மொழி `செம்மொழி' எனும் சிறப்பைப் பெற்று; நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தந்துள்ளது.

தமிழ் மற்ற செம்மொழிகளை விடவும் மேலானதாகும். இதற்கு பல சான்றுகள் உள்ளன.

செம்மொழிகளில் லத்தீன், ஈப்ரு ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை.

கிரீக் மொழி இடையில் நசிந்துவிட்ட போதிலும், தற்பொழுதுதான் அது மேலும் வளமடைந்து வருகிறது.

சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கிலே இல்லை; சீனமொழி பட எழுத்து முறையில் உள்ளதால், அம்மொழியால் உள்ளத்து உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த இயலாது என மொழியியலார் கூறுகின்றார்கள்.

அரேபிய மொழி காலத்தால் மிகவும் பிந்தியது; பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது; இந்த செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும்போது, தமிழ் மொழி-மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும்விட உயர் தனி சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி''
தமிழ்க்குடி என- தமிழ்ச் சமுதாயத்தின்
தொன்மை- பழைமை கூறப்படுகிறது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்,

"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்''- என்று பாடி- தமிழும், தமிழர் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார்.

இலக்கிய வளத்தை பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறவுபடாத- தொடர்ச்சியான இலக்கிங்களை கொண்டுள்ளது தமிழ் மொழி!

இலக்கணத்தை பொறுத்தவரை, "தொல்காப்பியம்'' மிகச்சிறந்த இலக்கண நூலாக

எழுத்ததிகாரம்,
சொல்லதிகாரம்
பொருளதிகாரம்
-என மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. எல்லா மொழிகளிலும் எழுத்துக்களும், சொல்லுக்கும்தான் இலக்கணம் உண்டு.

ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கைக்கு அகம்-புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது உலக மொழிகளிலேயே தமிழ் மொழி ஒன்றுதான்!

இது நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப்பெரும் சிறப்பாகும்.

தமிழ் மொழி எந்த ஒரு மொழியையும் சார்ந்திருக்கவில்லை; இது, தனித்தன்மை வாய்ந்த மொழி.

தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன.

இந்த திராவிட மொழிகளுக்கெல்லாம்- மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.

இதனை நமக்கும், உலகத்திற்கும் எடுத்துச் சொன்னவர் டாக்டர் கால்டுவெல். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ள, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்னும் நூல் இந்த உண்மையை நமக்கு உரைக்கிறது.

தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை தரும் சங்க இலக்கியங்கள் உலகில் வாழும் மாந்தர் அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும் பிற அற மாண்புகளையும் உரைக்கின்றன.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்''
"தீதும் நன்றும் பிறர்தர வாரா''
"வினையே ஆடவர்க்கு உயிரே''

"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே''

"செல்வத்துப் பயனே ஈதல்''

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை''

"ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று''

போன்ற அரிய மணிவாசகங்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான அறநெறிகளை வலியுறுத்துகின்றன.

அப்படி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே- செம்மொழி என்ற சிறப்பை சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்பொழுதுதான், 2004-ம் ஆண்டில்தான்- அதுவும், மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின்னர்தான் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த பெருமையை கொண்டாடிடும் வகையில்தான் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது!

இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தருகிறார்கள்!

குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறை தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் வருகிறார்.

அவர், எல்லா தகுதிகளையும் கொண்டுள்ள தமிழ் இதுவரை, "செம்மொழி'' என அங்கீகரிக்கப்படவில்லையா? எனக் கேட்டு வருந்தி கொண்டிருந்தவர்.

அதேபோல, பின்லாந்து நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா என்னும் பேரறிஞர் வருகிறார். அவர், தனது ஆராய்ச்சி மூலம், சிந்து சமவெளி நாகரீகத்தையும், அங்கு கிடைத்துள்ள எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்து, அவை திராவிட நாகரீகத்தை சேர்ந்தவை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினை பெறவிருக்கிறார்.

இவர்களைப்போல உலகெங்கும் 49 அயல்நாடுகளிலிருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டிலே பங்கு பெறுகிறார்கள்.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகின்றனர்.

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நாளை காலையில் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும், பிற சான்றோர்களும் பங்கு பெறுகிறார்கள்.

மாலையில் தமிழின் மாண்பை விளக்கும் 40 அலங்கார ஊர்திகள் அணிவகுத்திட- ஏறத்தாழ 2 ஆயிரம் கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை படைத்திட 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு- "இனியவை நாற்பது'' எனும் வண்ணமிகு அலங்கார பேரணி நடைபெறுகிறது.

பின்னர், 24-ந் தேதி காலை முதல் 27-ந் தேதி மாலை வரை ஆய்வரங்குகள் நடைபெறுகின்றன.

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்பதை உணர்த்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கருத்தரங்கம் 25-ந் தேதி அன்று நடைபெறுகிறது.

செம்மொழித் தமிழின் மாண்பை பாடிடும் செந்தமிழ் நாட்டு கலை, பண்பாட்டு சிறப்புகளையும் புலப்படுத்திடும் அரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாட்களில் வெளிநாட்டு பார்வையாளர்களும், தமிழ் மக்களும் கண்டுகளிப்பெய்திடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டில் பங்கு பெற வருவோர் வந்து செல்ல வசதியாக- கோவை மாநகருக்கு பல்வேறு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மத்திய நிதி அமைசத்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில், மாநாடு நிறைவு விழா உரையினை நான் ஆற்றவுள்ளேன்.

தமிழ் மொழி வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை உருவாக்கிடும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நினைவாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுகிறார்.

நமது அன்னைத்தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்திட, தமிழின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள- வாழையடி வாழையாம் வருங்கால தமிழின மக்களுக்கு தங்கத் தமிழின் அறிவு செல்வத்தை செறிவுடன் தந்திட- கோவையில் கூடுகிறது- உலகத்தமிழ் செம்மொழி மாநாடு- உலகத்தகவல் தொழில் நுட்பவியல் மாநாடு!

அனைவரும் வருக, வருக

எனவே, அருமைத்தமிழக மக்களே!

நமது தமிழ் மொழிக்கு சிறப்புகள் சேர்க்க, தமிழ் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்ம படைத்திட வழிவகை காண்போம்!

கோவை மாநகர் நோக்கி வருக வருக என அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் என்றார் கருணாநிதி.
நன்றி :தட்ஸ்தமிழ்

600 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்க... தமுமுக கோரிக்கை


தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை ஐந்து நாட்கள் கோவையில் நடைபெற உள்ள நிலையில் மிகமுக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு வைக்கின்றோம்.

தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

1968ல் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டார்கள்.

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்போது நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 51 முஸ்லிம் கைதிகள் உட்பட 600 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

அரசு சார்பில் விமர்சையோடு நடைபெறும் செம்மொழி மாநாட்டு மூலமாக இவர்கள் விடுதலையானால், மனிதநேயம் கொண்டோர் அனைவரும் தமிழக முதல்வரை வாழ்த்துவார்கள் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.

செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் இனிதே நிறைவுபெற வாழ்த்துகிறோம்


பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய், என்றைக்கும் சீரிளமையாய் இருந்து வரும் தமிழ் மொழி, மத்திய அரசால் செம்மொழியென அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக தமிழக அரசின் சார்பில், ஒரு பெருவிழாவாக, கோவையில் நாளை (ஜூன் 23) முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக, உலகத் தமிழர்கள் ஒன்றினையும் விழாவாக நடைபெறவுள்ளது.

மாநாட்டில் தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 48 நாடுகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர்.

சங்ககாலத் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலான காட்சிகள் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் ஒருபுறத்தில் 21 ஆய்வரங்குகளில் கட்டுரை வாசிக்கும் நிகழ்வும், மறுபுறத்தில் தமிழறிஞர்களின் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறுவதுடன், 2,000-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

கன்னித் தமிழை, இளமை குன்றா இனிய தமிழை இன்னும் முன்னெடுக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மேன்மையடைய வேண்டும், தொன்மை மொழிக்குச் சொந்தக்காரர்களாக உள்ள தமிழ்நாட்டில் பிற மொழி மோகத்தில் உள்ளவர்களுக்கு தாய்மொழி உணர்வை, மொழிப்பற்றை வளர்க்க வேண்டும், தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்த தமிழறிஞர்களின் படைப்புகளை மக்கள் களத்துக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வருங்கால இளைய சமுதாயம் தமிழின் மேன்மையையும், பெருமையையும் உணர வேண்டுமென்பது மாநாட்டின் முக்கிய நோக்கம்.

மாநாட்டுக்கு வெளியே நடைபெறும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் இவை மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்க்கும் என்றாலும், மாநாட்டில் நிகழும் ஆய்வரங்கக் கட்டுரைகள்தான் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுவதுடன், தமிழுக்கும் பெருமை சேர்க்கும்.

மாநாட்டில் பங்கேற்பவர்கள் அனைவராலும் எல்லா ஆய்வரங்குக்கும் செல்வது என்பது முடியாத ஒன்று.

மாநாட்டில் பங்கேற்க நினைத்து பங்கேற்க முடியாதவர்களும், மாநாட்டில் பங்கேற்று அனைத்து ஆய்வரங்குகளிலும் பங்கேற்காதவர்களும் மாநாட்டின் முழுப் பயனைப் பெற வேண்டும். அந்த வகையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டுமென்று மாநாட்டுப் பணிகள், மிக விரைவாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது அதே வேகத்தில் ஆய்வுக் கட்டுரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட்டு, செம்மொழி மாநாட்டின் முழுப்பயனை அனைவரும் பெறச் செய்ய வேண்டும்.

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற வள்ளுவரின் வாக்கினைப் போல, நாம் எழுதியவைகள் தம் கைகளில் கிடைத்த மகிழ்ச்சியை நம் தமிழர் பெருமக்கள் அடைவர்.

உலகின் பல்வேறு துருவங்களிலிருந்து வந்து உயர்தனிச் செம்மொழியான தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று, எண்ணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் தமிழ்ச் சான்றோர்களை பெருமைப்படுத்துவது தமிழையும், தமிழர்களையும் பெருமைப்படுத்துவதாகும்.

அதேநேரத்தில், தமிழ் உலக அரங்கில் செம்மொழியாக பேசப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் சிந்தித்தவர்களையும் இந்த மாநாட்டில் பெருமைப்படுத்த வேண்டும்.

வாய் மூலம், எழுத்து மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு பெருமைப்படுத்த வேண்டும். மறைந்தவர்களைக் கௌரவிக்கும்பட்சத்தில் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியடையும். வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கௌரவிக்கும்பட்சத்தில் தன்னுடைய தமிழ் உணர்வுக்குக் கிடைத்த அங்கீகாரமென நினைத்து பெருமிதம் கொள்ளவும், மேலும் தமிழுக்காகப் பணியாற்றவும் ஊக்குவிக்கும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் இனிதே நிறைவுபெற நீதியின் குரல் சார்பாக வாழ்த்துகிறோம்.

Monday, June 21, 2010

கட்டப்பஞ்சாயத்துக் கொடூரங்கள்!

'கட்டப்பஞ்சாயத்து செய்வோரைச் சட்டம் இரும்புக் கரம்கொண்டு அடக்கும்' என்று அவ்வப்போது அரசாங்கம் குரல் கொடுக்கும். ஆனால், அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கும்?

கட்டப்பஞ்சாயத்துகள்பற்றி விரிவான ஆய்வு நடத்தி ஆதாரங்களைத் திரட்டி இருக்கும் மதுரை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிரைச் சந்தித்தோம். அவர் அடுக்கிய விவரங்கள் எல்லாம், இதுவரை வெளியானதைவிடவும் கூடுதல் பகீர்தான்!

'மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 167 கிராமங்களில் ஆய்வு செய்தோம். அதில், 94 கிராமங்களில் சாதி வித்தி யாசமின்றி ஒரே பஞ்சாயத்து முறையும், மற்ற கிராமங்களில், சாதிக்கு ஒரு பஞ்சாயத்தும் இருக்கிறது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடாவடித் தீர்ப்புகள் சொல்லப்படும் இந்தப் பஞ்சாயத் துகளில், பெண்களுக்காகப் பேசுவதற்கோ, கருத்து சொல்வதற்கோ உரிமை கிடையாது. இவர்கள் வழங்கும் தண்டனைகளும் வேடிக்கை, வேதனை!

பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக 88 கிராமங்களில் பஞ்சாயத்து கூடித்தான் தீர்ப்பு சொல் கிறார்கள். இதில் 12 கிராமங்களில்பெண்ணைக் கெடுத்தவனை ஊர்க் கூட்டத்தில் காலில் விழச் சொல் கிறார்கள். 50 கிராமங்களில் வெறுமனே அபராதம் மட்டும்தான். பலாத்காரம் செய்யப்பட்டவர் திருமணமாகாத இளம்பெண் என்றால், கெடுத்தவனே அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற காட்டுமிரண்டித்தனமான தீர்ப்புகள், 35 கிராமங்களில் வழங்கப்படுகின்றன. இந்த தீர்ப்பு உயர் சாதிக்காரனுக்கு மட்டும்தான். இதுவே தலித் இளைஞன் ஒருவன் மேல்சாதிப் பெண்ணைக் கெடுத்துவிட்டால், கடுமையான தண்டனையும் போலீஸ் நடவடிக்கையும் நிச்சயம் உண்டு!

விவாகரத்துப் பிரச்னைகள் இந்தக் கட்டப்பஞ்சாயத்தில் நொடியில் தீர்க்கப்படுகின்றன. வேடசந்தூர்ப் பகுதியில் சாதி இந்துப் பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்தார். இதற்காக ஒரு மாதம் கழித்து, அவர்களைப் பிடித்து கிடா வெட்டி, அதன் ரத்தத்தை இருவரின் தலையிலும் தேய்த்து, இருவரையும் பிரித்துவிட்டார்கள். தற்போது, அந்தப் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்துவிட்டனர். இப்படி, சடங்குத்தனமான தண்டனைகள் இன்னும் உண்டு... ஊர்க் கூட்டத்தில் வைத்து உலக்கையைத் தாண்டினாலோ, இரு வீட்டுக் கூரையையும் எடுத்து வந்து முறித்துப் போட்டாலோ போதும், அவர் கள் விவா கரத்து ஆனதாக அர்த்தமாம்!

இவைபோன்ற சாதிப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளால் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் பஞ்சாயத்து களை எதிர்த்து, போலீஸுக்குப் போகிற வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதாவது, 167 கிராமங்களில் இதுவரை இவர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை வெறும் 18-தான். அதிலும் 10 புகார்களே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. ஆறு வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை நடந் துள்ளது!'' என்றார்.

''இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?''

'ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து முறை உள்ளதா என்று ஆய்வு நடத்தி, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதனை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு தாலுக்காவிலும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும். கட்டப்பஞ்சாயத்துப் புகார்களுக்கான நடவடிக் கைக்காகவே மாவட்டத்துக்கு ஒரு சிறப்புக் காவல் நிலையம் தொடங்க வேண்டும். சமூகப் புறக்கணிப்பில் ஈடுபடுகிற கட்டப்பஞ்சாயத்துக் குழுக்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை தங்களது சொந்தக் கிராமத்துக்கு வர முடியாத அளவுக்குக் கடுமையான உத்தரவுகளை வெளியிட வேண்டும்!'' என்றார் கதிர்.

கற்பக விநாயகம் போன்ற எத்தனை நீதிபதிகள் கடுமையாக உத்தரவிட்டாலும், கட்டப்பஞ்சாயத்துகளின் வீரியம், வீறிடவைத்துக்கொண்டேதான் இருக்குமா?
நன்றி: ஜூவி

Sunday, June 20, 2010

தமுமுக கோரிக்கையை ஏற்று தமிழ் இணைய மாநாட்டின் அரங்கிற்கு யூனிக்கோட் உமர் தம்பியின் பெயர் சூட்டல்

தமிழக முதல்வர் கலைஞருக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கணினி தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடந்த 10.05.2010 அன்று கடிதம் எழுதினார். தமுமுகவின் கோரிக்கையை தமிழ் இணைய மாநாட்டு அரங்கு ஒன்றிற்கு உமர் தம்பியின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இதர அரங்குகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், எழுத்தாளர் சுஜாதா, சிங்கப்பூர் கோவிந்தசாமி, யாழன் சண்முக லிங்கம் ஆகியோர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

-நன்றிThursday, June 17, 2010

குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள்!

வட அமெரிக்காவின் லூஸியானா மாகாணக் கடற்கரை...

- ஷங்கர்
அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ள இந்த பெட்ரோலியத்தின் மிச்சம், இப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீதும்!

குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள், திமிங்கிலக் குட்டிகள், விதவிதமான மீன்கள்....பறவைகளும் மீன்களும் இந்த கறுப்பிலும் எண்ணெய் பிசுக்கிலும் மூச்சுத் திணறி செத்து கரையொதுங்கிக் கொண்டே இருக்கின்றன...

இன்று நேற்றல்ல... கடந்த 60 தினங்களாக நடக்கும் 'கொலை' இது. அலட்சிய அரசுகள், அக்கறையற்ற அதிபர்கள்... மோசடி அதிகாரிகள்... நேர்மையற்ற வர்த்தகர்கள்.. எல்லாருமாகச் சேர்ந்து செய்திருக்கும் பயங்கரவாதம் இது.

'9/11யைஐ விட படு மோசமான வர்த்தக தீவிரவாதம்' என நடுநிலையாளர்களும் அமெரிக்கர்களும் மனம் வெறுத்துக் கூறும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக்கிறது. ஆனால், இன்னும் நடவடிக்கை தீவிர ஏதும் எடுத்தபாடில்லை...

அப்படி என்னதான் நடந்தது?:

மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். கடந்த ஏப்ரல் 20ம் தேதி, அதாவது இரு மாதங்களுக்கு முன் இந்த எண்ணெய் கிணற்றின் முக்கிய இரும்புக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது. 11 தொழிலாளர்களும் இறந்தனர். ஆனால், அதை அப்படியே வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்.

அதற்குள் பல மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 1.47 மில்லியன் காலன் முதல் 2.52 மில்லியன் காலன் வரையிலான (1 காலன் = 3.8 லிட்டர்) எண்ணெய் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி இன்று வரை எத்தனை மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்திருக்கும் என்பதை ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள்...

விஷயம் வெளியில் தெரிந்து பெருமளவு விமர்சனங்கள் எழுந்த பிறகே அமெரிக்க அரசு தலையிட்டது. உடனே அடுத்த 24 மணி நேரத்தில், குழாய் வெடிப்பின் மீது ஒரு தொப்பி போல அமைத்து எண்ணெய் பீச்சிடுவதை நிறுத்தப் போவதாகக் கூறியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். ஆனால், அதெல்லாம் ஒருசில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்னும் வேகமாக கச்சா எண்ணெய் பீய்ச்சிக் கொண்டு வெளியேறியபடி இருக்கிறது.

இந்த நிமிடம் வரை எண்ணெய் கசிவு நிறுத்தப்படவே இல்லை. இன்றைய நிலவரப்படி, கடலில் கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான அடர்த்தியில் (density) கச்சா எண்ணெய் கலந்து நிற்கிறது.

அமெரிக்காவின் மூன்று பெரிய மாகாணங்களின் மொத்த பரப்பளவுக்கு (area) இணையான அளவு கடலில் எண்ணெய் தேங்கி நிற்கிறது. ஆனால் இதனை அப்படியே மூடி மறைத்தன பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள். ஒருநாளைக்கு 5,000 பேரல்கள்தான் கசிவதாக பிரிட்டனும், இல்லையில்லை 12,000 முதல் 20,000 லிட்டர்தான் என அமெரிக்காவும் கூறிவந்தது. ஆனால் விஞ்ஞானிகளும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தன்னிச்சையாக நடத்திய ஆய்வின் முடிவில்தான் மேற்கண்ட உண்மை தெரியவந்தது.

இந்தக் கசிவை எப்படித்தான் அடைக்கப் போகிறார்கள்?:

அது இப்போதைக்கு சாத்தியமா என்றே தெரியவில்லை என்கிறார் டாக் ஹாமில்டன். எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் இவரும் ஒருவர். "ஒரு இடத்தில் எண்ணெய்க் கசிவதாகத்தான் சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல... மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய்க் கசிந்து கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. இதை அடைப்பது கஷ்டம்" என்கிறார் ஹாமில்டன்.

சரி எத்தனை நாளைக்கு இந்த எண்ணெய் கசிவு இருக்கும்...? அந்த கிணற்றின் இருப்பு எவ்வளவு?.

இந்தக் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் தந்துள்ள பதில் 'தெரியாது'. இதுதான் விஞ்ஞானிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு இடத்தில் எவ்வளவு இருப்பு உள்ளது என்று தெரியாமலா பல பில்லியன் டாலர்களைக் கொட்டுகிறதா அந்த நிறுவனம்? பிரிட்டிஷ் பெட்ரோலியம் அப்பட்டமாக பொய் கூறுகிறது என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஒபாமா நிர்வாகம் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், இதுவரை எந்த கடுமையான நடவடிக்கையையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மீது எடுக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள்?:

டிஸ்கவரர் என்டர்பிரைஸஸ் எனும் நிறுவனம் மூலம் கடலில் கசிந்துள்ள எண்ணெய்யை சுத்திகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6,30,000 காலன் எண்ணெய்தான் கடலிலிருந்து சேகரித்து, எரிக்கப்பட்டு்ள்ளது. இந்தப் பணியில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் இரு ஒப்பந்ததாரர்கள் தங்கள் சொந்த கப்பலை ஈடுபடுத்தினாலும், இதற்கென தனி கட்டணத்தை எதிர்ப்பார்க்கிறார்களாம்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமோ இந்த சுத்திகரிப்புப் பணிக்காக 1.6 பில்லியன் டாலரை ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறது.
நடந்துள்ள பெரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு முன்னால் இந்தத் தொகை ஒரு தூசு!.

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்கும் தொழிலில் 10 நிறுவனங்கள் பல டிரில்லியன் டாலர் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன. 180 பில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளன. ஆனால் ஒரு எண்ணெய் கிணற்றின் கசிவை அடைக்க 1.6 பில்லியன் டாலர் மட்டுமே செலவிட முன்வந்துள்ளது எத்தனை பெரிய கொடுமை!.

எண்ணெய் பரவாமல் இருக்க தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர் அமெரிக்க கோஸ்ட் கார்ட் மற்றும் கடற்படையினர். ஆனால் அது ஓரளவுதான் பலன் தந்தது. கசிவின் அளவு அதிகமாக உள்ளதால் தடையைத் தாண்டி கடலில் எண்ணெய் பரவிக்கொண்டே உள்ளது.

சுத்தப்படுத்துதல், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக 17,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா நியமித்துள்ளது. பல தன்னார்வ நிறுவனங்களும் ஈடுபடத் தயாராகி வருகின்றன. ஆனாலும் உடனடிப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

இந்த எண்ணெய்க் கசிவால் லூசியானா மற்றும் மெக்ஸிகன் வளைகுடா கரையோரங்களில் வசிக்கும் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். இந்த மக்களின் அடிப்படைத் தொழிலே மீன்பிடிப்பதுதான். இனி பல மாதங்களுக்கு அந்தத் தொழிலைத் தொடவே முடியாது. பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் அடர்த்தியாகக் காணப்படுவதால், இங்கெல்லாம் மீன்கள் சரளமாக வரவே பல ஆண்டுகள் மாதங்கள் பிடிக்குமாம்.

இயற்கை வளங்கள், அந்தப் பகுதி கடற்கரைகள் என சகலமும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பின் அளவைக் கூட இன்னும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் அது எந்த அளவாக இருந்தாலும் முழுமையாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் ஈடு செய்ய வேண்டும் என இப்போது அறிவித்துள்ளார் ஒபாமா.

பாதிக்கப்பட்ட பகுதியை முழுவதுமாகப் பார்த்தபின் அவர் கூறியது இது: "பெரும் புயல், இயற்கைப் பேரிடர் காலங்களில் கூட அமெரிக்கா இப்படியொரு மோசமான பாதிப்புக்கு உள்ளானதில்லை. இது நிச்சயம் மிகப் பெரிய சவால்தான். ஆனால், கடலில் கலந்துள்ள 90 சதவிகித எண்ணெயை சுத்தப்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்குக் காரணமான நிறுவனத்தை சும்மா விட முடியாது. முழுமையான நஷ்ட ஈடு தந்தாக வேண்டும்" என்றார்.

இனி ஆயில் நிறுவனங்களுடன் அமெரிக்கா பங்குதாரராக இருக்காது.. கண்காணிப்பாளராக இருந்து இனியொரு விபத்து நடக்காமல் பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் முழங்கியுள்ளார்.

ஆனால் அவரது இந்த வார்த்தைகள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சமாதானப்படுத்தியதாகத் தெரியவில்லை. 60 நாட்கள் வரை அமைதியாக வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இன்று அவர் கூறியிருப்பது வெற்று வார்த்தைகளே என்று எதிர்க்குரல் எழுப்பியுள்ளனர் மக்கள்.

இந் நிலையில் ஆர்டிக் கடல் பகுதியில் புதிய மெகா சைஸ் எண்ணெய் கிணறுகளைத் தோண்ட ஷெல் கார்ப்பரேஷனுக்கு இரு தினங்களுக்கு முன் அனுமதி தரப்பட்டுள்ளதையும், இந்த ஷெல் நிறுவனத்திடமும் எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் மாற்றுத் திட்டம் இல்லை என்பதையும் என்னவென்று சொல்வது...!

Tuesday, June 8, 2010

இஸ்லாத்தில் ஏன் சேர வேண்டும்? தந்தை பெரியார் அவர்கள் எழுதியது


எனது 18.03.1947- ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடிஅரசு" வில் படித்த தோழர்கள் பலரில் சுமார் 10, 15- தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், 'வழவழா' என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால், அவைகளுக்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன்.

கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மதத்தின் மீது நமக்குள்ள மதவெறுப்புக் காரணமாகவே அந்த மத மக்கள் மீதும் வெறுப்படைகிறோம். இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம் இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள் (ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.

ஏன் எதிராய் இருக்கின்றது என்றால் இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்துவிடுகிறது. இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும்.

மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு - தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.
இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள்தான் உண்டு. அதுவும் உருவமற்ற கடவுள்தான்.

இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு தாழ்வுகள் கிடையாது. பிறவியின் காரணமாய் ஜாதிப்பாகுபாடும், மேன்மை - இழிவும் கிடையாது.

அதாவது, இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி), பறையன் (கடை ஜாதி) பஞ்சமன் என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையது; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இந்து (ஆரிய) மதம் என்பது, பல கடவுள்கள், பல ஜாதிகள் அதிலும் கடவுள்களால் சிருஷ்டிக்கப்பட்ட ஜாதிகள் என்கின்ற அடிப்படையைக் கொண்டது. இந்தப் பல கடவுள், பல ஜாதி என்கின்ற தன்மையால், ஆரியர்கள் (பிராமணர்கள்) நல்ல வசதியும் பயனும் அடைகிறார்கள். திராவிடர்கள் கேடும், கீழ்மையும், மனித உரிமைத் தடையும் அடைகிறார்கள். ஆதலாலேயே இஸ்லாத்தின் கொள்கை பிராமணர்களுக்கு மிகக் கேடானதாக இருந்து வருகிறது. திராவிடர்களுக்கு இஸ்லாத்தினால் நலம் ஏற்ப - இழிவு நீங்க வசதியாகிறது.

ஆகவே தான் பார்ப்பனர்கள் (பிராமணர்கள் - ஆரியர்கள்) இஸ்லாத்தை வெறுக்கச் செய்ய வேண்டியவர்களாகிறார்கள். இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால் பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இரா. பல கடவுள்களும், விக்கிரக (உருவ)க் கடவுள்களும் இருக்கமாட்டா. இந்த விக்கிரகக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும்.

இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது. ஆகவே, இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர்(திராவிடர்)களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

இஸ்லாத்தைப் போல் கிருஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம சமாஜம்; பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை.

ஏன் என்றால், கிருஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஒரு அளவுக்கு விரோதமானவை. ஆதலால், இவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் இந்து, கிருஸ்தவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல் கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். அனேக பார்ப்பனர்கள் கூட கிருஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பன சீக்கியனும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும், ஒரு அளவுக்கு ஜாதிப் பாகுபாடு) அனுசரிக்கிறான். சீக்கியரில் தீண்டப்படாத, கீழ்ஜாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை கூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்கும் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைந்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!

கிறிஸ்தவரிலும் நம் நாட்டில் தீண்டப்படாத கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிலர் படிப்பிக்கப்பட்டு உபாத்தியாயர் வேலை கொடுக்கப்பட்டிருப்பதோடு சரி என்பது அல்லாமல், மற்றப்படி அவர்களுக்குக் கிருஸ்தவரிலாகட்டும், இந்துக்களிலாகட்டும் இஸ்லாமியர்களுக்கு அளிப்பது போன்ற உரிமை கூட அளிக்கப்பட்டிருக்கவில்லை. ஆதலால் ஆரியர்கள் கிருஸ்தவம், சீக்கியம் ஆன மதங்களுடன் நேசமாக இருக்கிறார்கள். பவுத்தம், சமணம் முதலியவையும் நடப்பில் இஸ்லாத்தை வெறுப்பதால் இந்துவுடன் வேஷத்தில் உறவாடுவதால் அவைகளிடம் ஆரியருக்கு அவ்வளவு வெறுப்பு இல்லை.

எனவே, இஸ்லாம் மதம் பார்ப்பனர்களால் சுயலாபம், வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால் இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன ஆரிய அடிமைகளாலும் மூடநம்பிக்கையால் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல் இந்து மதப் பிரசாரத்தின் முக்கிய தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

இஸ்லாம் யாரால் ஏற்பட்டது? புத்தர், கிருஸ்து போன்ற மற்றொரு சீர்திருத்தவாதியால் ஏற்பட்டதே அல்லாமல் வேறு என்ன? இஸ்லாம் ஏற்பட்டது எதற்கு? என்றால், பல கடவுள் கொள்கை, உருவக் கடவுள் கொள்கை, மக்கள் பிறவி பேதக் கொள்கை ஆகியவற்றை ஒழித்து ஒரு கடவுள், ஒரு சமூகம் (ஜாதி) ஆக்குவதற்கும், மூடநம்பிக்கை, விக்கிர வணக்கத்தை ஒழித்து பகுத்தறிவுக்கு இணங்கவும் ஏற்பட்டதேயாகும்.

அராபியர் மதம், துருக்கியர் மதம் என்பது போல் இதைத் திராவிடர் மதம், அல்லது திராவிட மதம் என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. எப்படியாவது மக்கள் ஜாதிபேதம், பிறவி உயர்வு தாழ்வு, பல கடவுள், உருவ வழிபாடு ஆகியவற்றில் இருந்து விலக வேண்டும். பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்து இழிவுபட்டு தலையெடுக்க முடியாமல் இருக்கும் கேட்டிலிருந்து மீளவேண்டும் என்பதைத் தவிர வேறு கருத்து ஒன்றையும் கொண்டு நாம் இப்படிச் சொல்லவில்லை என்பதைத் திராவிடர்கள் உணரவேண்டும்.

பார்ப்பானிடம் அன்பு, பார்ப்பானிடம் நேசம் வைத்துப் பார்ப்பான் போல வேஷம் போட்டு நடித்துக் கொண்டு, சூத்திரனாக இருக்கச் சம்மதிக்கும் ஒருவன், அதுவும் திராவிடனாக இருப்பவன் இஸ்லாமியரிடம் அன்பு, நேசம், வேஷம், நடிப்பு நடித்து சூத்திரனல்லாதவனாக, திராவிடனாகவே இருப்பதில் என்ன வெட்கக்கேடு என்பது நமக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் 100- க்கு 10- பேர்களாக மக்களிடம் நேசம் பூண்டு கலந்து சுதந்திரத்தோடு, மானத்தோடு வாழ வெட்கமோ, வெறுப்போ பட்டுக் கொண்டு, 100- க்கு 3- பேராய் இருக்கும் நம்மிலும் வேறுபட்ட, நம்மை இழிவுபடுத்தும் மக்களுடன் சேர்ந்தவர்களாகச் சொல்லிக் கொண்டு, மானம் - சுதந்திரம் இல்லாமல் இழிவாழ்வு வாழ்வதற்கு மனம் சகிக்கக் காரணம் என்னவென்றால், பார்ப்பான் நம்மை இஸ்லாத்தக்கு எதிரிகளாக ஆக்கியதைப் "பேய், பிசாசு, பூச்சாண்டியாக" போதித்து இருப்பதைத் தவிர வேறு காரணம் என்ன சொல்ல முடியும்? நம்மிடத்திலே இல்லாத கெட்ட பழக்கம் இஸ்லாத்தில் என்ன இருக்கிறது? இஸ்லாத்தில் இல்லாத நல்ல பழக்கம் நம்மிடத்தில் என்ன இருக்கிறது? நாம் எந்த நல்ல காரியத்தைச் சீர்திருத்தத்தைச் செய்வதை இஸ்லாம் தடுக்கிறது?

"கையை வெட்டினாலொழிய பிழைக்க மாட்டாய்" என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். "காலை வெட்டிவிட்டாலொழிய பிழைக்கமாட்டாய்" என்றால் காலை வெட்டி விடச் சம்மதிக்கிறோம் மலஜலம் கழிக்க வேறு ஒட்டை போட வேண்டுமென்றால் போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கின்றோம், எடுத்துவிட வேண்டும் என்றால் கர்ப்பப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம்.

அப்படி இருக்க ஓர் அயோக்கியர் கூட்டம் நம்மை பிடித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம் மீது பலாத்காரத்திலும், தந்திரத்திலும் புகுத்தி இழிவுபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், எதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு எப்பொழுதுதான், எந்த வகையில்தான் மறைவது என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால் அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்.

கோபிக்கும் தோழர்களே! வேத சாஸ்திரங்களை, புராண இதிகாசங்களை நெருப்பிட்டுக் கொளுத்துவதால் சூத்திரப்பட்டம் ஒழியப் போவதில்லை. கோவில்களை இடிப்பதாலோ, விக்கிரங்களை உடைத்துத் தூள் தூளாக்குவதாலோ, சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. மறுபடியும் தோசையைத் திருப்புவது போல் பழையபடி திருப்பிவிடப் பார்ப்பனருக்குத் தெரியும், முடியும்.

திராவிடன் என்று சொல்லிக் கொள்வதால் மட்டும் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இன்றைய நிலைமையில் நான் இந்துவல்ல என்று சொல்லிக் கொண்டாலும் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இந்து மதம் லேசில் ஒழியாது. அது பச்சோந்தி போல் சுலபத்தில் சாகும் மதமல்ல. அதைச் சாகடிப்பதற்கு நம் ஆயுளும் நம் போன்றோர் ஆயுளும் கூடப் போதாது. ஆகவே, நாம் அதை (இந்து மதத்தை) விட்டு விலகுவதுதான் நம் ஆயுளில் முடியக்கூடிய காரியமாகும். அதுப்படி நாம் விலகினோமேயானால், நாம் யார் என்று சொல்லிக் கொள்ள இன்றைய நிலைக்கு ஒரு பெயர் வேண்டும். அதைப் பத்தாக உண்டாக்க வேண்டும், பரப்ப வேண்டும். அதை இன்றயை காந்தி சர்க்கார் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அதற்குச் சட்டம், சம்பிரதாயம், செலவாணி ஏற்படவேண்டும். அதற்கு உண்டான பிரதிநிதித்துவம் - உரிமை நிர்ணயித்து ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வளவும் செய்வதென்றால் பார்ப்பன எதிர்ப்புக்கும், சூழ்ச்சிக்கும், பனியாக்கள் ஆதரவுக்கும் முன்னால் சுலபத்தில் ஆகக் கூடியதா? நம் நெல்லிக்காய் மூட்டை சமுதாயத்தால் நினைக்கக் கூடியதா? என்பதையும் சிந்தியுங்கள். பிறகு இப்படி எல்லாம் இல்லாமல் இந்தக் கஷ்டங்களுக்கும், முடியாமைக்கும் ஆளாகாமல் ஏற்கனவே ஏற்பட்டு, உலகம் பூராவும் செல்வாக்கும் செலவாணியும் பெற்று, எவரும் சிந்தித்துச் சிந்தித்து ஒப்புக் கொண்டு அமுலில் இருந்து வருவதும், நமது உண்மையானதும், உரிமையானதுமான கொள்கை கொண்டதுமாய் இருக்கும் சமுதாய சமத்துவ சமயத்தை "நான் தழுவிக் கொண்டேன்" என்று சொல்லுவதில் என்ன தப்பு, என்ன கஷ்டம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாம் என்றால் உங்களுக்குக் கசப்பும், கோபமும் ஏற்படக் காரணம் என்ன? இந்து என்றால் உங்களுக்கு ஓர் இனிப்பும், திருப்தியும் ஏற்படக் காரணம் என்ன என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். அல்லது இதற்கு (உங்கள் சூத்திரப்பட்டம் இழிவு நீங்க - உங்கள் காலத்தில் நீங்க) ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள். என் அபிப்பிராயத்தை நான் சொன்னேன். உங்கள் அபிப்பிராயம் நீங்கள் சொல்லுங்கள். வாதம் பிடிவாதம் செய்து கொண்டு வம்பளத்து கொண்டே இருந்துவரும் காலம் கடத்தி நாம் சூத்திரனாக இருக்கும்படி விட்டு விட்டுச் சாவதா? இப்படியே செத்தால் பார்ப்பானுக்குத் தான் லாபம், நம் பின் சந்ததிகளால் அவனுக்குத் திவசம், தெய்வாராதனையும் கொடுக்கப்படும். ஆதலால் அவன் இதற்குச் சீக்கிரம் ஒரு முடிவேற்பட விடமாட்டான். நமக்குள் அடிதடி வரையில் கொண்டு வந்து விட்டுவிடுவான். எனவே யோசியுங்கள். தயவு செய்து ஆழ்ந்து கவலையோடு யோசியுங்கள். ஆரியமத அபிமானம் என்னும் வெறியை விட்டுவிட்டு மான அபிமானம் வைத்து யோசியுங்கள், கோபியாதீர்கள்.

சிந்தித்து ஒரு முடிவுக்கு வராமல், இஸ்லாம் மார்க்கமும், இந்து மார்க்கமும், இரு மார்க்க மக்களும் முட்டிக் கொண்டால் சட்டம், அடி, உதை, சாவு திராவிடனுக்குத்தான், பார்ப்பானுக்கு எவ்வித நாட்டமும் இல்லை என்பது மாத்திரமல்லாமல் அவருக்கு வரும்படி உண்டு. இலேசாக கோர்ட்டில் பீசு, லஞ்சம், திதி, திவசம் முதலிய வைதிகச் சடங்கு, இவைகளால் தானே ஆரியர்கள் இன்று மேல்நிலையில் வாழ்ந்து கொண்டு நம்மைத் தமது அடிமையாக வைப்பாட்டி மகன் என்பதாகச் சட்டம், சாஸ்திரம், வகுத்து இழிவுபடுத்தினான் என்பதல்லாமல் வேறு எதனால்?

ஆகவே மற்றொரு முறை சிந்தியுங்கள்.

மறுபடியும் எழுதுகிறேன்.

 - தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. ("குடிஅரசு" - 05.04.1947)

Sunday, June 6, 2010

அரசியல் சாணக்கியனின் அதிர்ச்சி வைத்தியம்

2003ம் ஆண்டு இறுதியில்.... திடீரென ஹைதராபாத் செல்கிறார் அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி. அப்போது மத்தியில் ஆண்ட பாஜக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து வந்த, மிக முக்கியமான கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்துவிட்டுத் திரும்புகிறார். நக்ஸல் பிரச்சனை குறித்துப் பேசியதாக இருவரும் சொல்கிறார்கள்.

ஆனால், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் மூளை, இந்தச் சந்திப்பின் பின்னணியை அலசி, ஆராய்கிறது. ''விரைவில் மக்களவைக்குத் தேர்தல் வரலாம்.. தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போகிறார்கள்.. இதற்குத் தான் இந்த சந்திப்பு'' என்பதை அவரது அரசியல் அனுபவம் அவருக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

அடுத்த சில நாட்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சில நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாக திமுக தரப்பு ரகசிய சந்திப்புகள் நடத்தி, கூட்டணியை உறுதி செய்து கொள்கிறது.

மத்திய உளவுப் பிரிவுகள் மோப்பம் பிடித்துவிடாதபடி இதை செய்துமுடித்துவிட்டு, சென்னையில் நிருபர்களை சந்திக்கிறார் முதல்வர் கருணாநிதி.

பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக குண்டைப் போடுகிறார்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த நிலையில், தன்னையும் கட்சியையும் பாதுகாக்க தேர்தல் வரையாவது மத்தியில் பாஜகவின் தயவு தேவை என்பதால் அங்கு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த கருணாநிதி, தேர்தலுக்கு பாஜக தயாராவதை உணர்ந்தவுடன் புயலாக வெளியேறினார்.

அப்போது தான், தேர்தலை முன் கூட்டியே நடத்தும் நம் திட்டத்தை கருணாநிதி எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார் என்பதை அத்வானி அண்ட் கோ உணர்ந்து அதிர்கிறது.

அடுத்து நடந்தது.. இந்திய அரசியலில் மாபெரும் மாற்றகள். நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக கூட்டணி தோல்வியடைவதற்கு, தமிழகத்தில் 40க்கு 40 இடங்களிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றதே முக்கியக் காரணமாக அமைந்தது.

எத்தனையே அரசியல்வாதிகள்.. எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கலாம். ஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு இணையான ஒரு தலைவர் இன்று இந்தியாவில் யாருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

அவரைப் பிடித்தவர்கள்.. பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் இந்த உண்மையை ஏற்றே ஆக வேண்டும். அதை ஏற்க மறுப்பவர்கள், பாமகவுக்கு இப்போது அவர் காட்டிக் கொண்டிருக்கும் 'அரசியல் த்ரில்லரை' பார்த்த பிறகாவது தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளலாம்.

முதல்வர் கருணாநிதியின் புத்திக் கூர்மையான அரசியல் காய் நகர்த்தலால், கிடுக்கிப் பிடியில் சிக்கியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். எந்த முடிவை எடுப்பது என்றே தெரியாமல் பெரும் குழப்பத்தில் பாமகவை தள்ளி விட்டுள்ளார் கருணாநிதி.

பெரியார், அண்ணா காலத்திலிருந்தே கருணாநிதியின் சாணக்கியத்தனம் மிகப் பிரபலமானது. எம்ஜிஆர் என்ற 'மாஸ் ஹீரோ' மற்றும் சினிமா மாயையில் தமிழகம் சிக்கியபோது மட்டும் தான் அவரது ராஜ தந்திரம் பலிக்காமல் போனது.

மற்றபடி எல்லா காலங்களிலுமே அவரது அரசியல் சாணக்கியத்தனமே வென்றுள்ளது. 1990 ஆரம்பத்தில் திமுக பலவீனமாக இருந்த காலகட்டத்தில் ராஜிவ் காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தாலும், சில முன்னணி ஊடகங்கள் உதவியோடும் ஜெயலலிதா அரசியலில் மாபெரும் வெற்றி பெற்றார்.

ஆனால், அப்போது ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் இருந்த ஆதரவு இன்று பாதி கூட இல்லை.

ஆனால், அடுத்தடுத்து 2 மக்களவைத் தேர்தல்கள், ஒரு நாடாளுமன்றத் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் என்று ஜெயலலிதாவுக்கு தொடர் தோல்விகளைத் தந்து அதிமுகவையே ஆட்டம் காண வைத்துவட்ட கருணாநிதி, இம்முறை ஆட்சிக்கு வந்தபோது இருந்ததைவிட பலமான நிலையில் இருப்பது அவரது சாணக்கியத்தனதுக்கு இன்னொரு உதாரணம்.

87 வயதில் காலடி எடுத்து வைக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர் காட்டும் அரசியல் வேகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளது.

கருணாநிதியின் ஸ்டைல்... எதிரிகளை எதிரிகளாகவே நீடிக்க விடுவதில்லை என்பது தான். எதிர்ப்பின் வலுவை பலவீனமாக்கி, தன் பக்கம் இழுத்து ஒரேயடியாக நீர்த்துப் போய் விடச் செய்வதுதான் கருணாநிதியின் ஸ்டைல். இதற்கு மிகப் பொருத்தமான உதாரணம்- மதிமுக.

தனிக் கட்சியாக பட்டிதொட்டியெங்கும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை வைதத்திருந்த வைகோவை கூட்டணிக்குக் கொண்டு வந்து, மதிமுகவின் வாக்கு வங்கியை கரைத்த பெருமைக்குரியவர் கருணாநிதி. இதன் விளைவு மதிமுகவின் அடிமட்டம் தகர்ந்து போனது. இப்போது தமிழக அரசியலில் வெறும் 3 முதல் 4 சதவீத வாக்கு பலமே கொண்டு, செல்லாக்காசாகிப் போய் ஜெயலலிதாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் வைகோ.

இதே பாணியில்தான் இப்போது பாமகவை அடித்துக் காலி செய்ய துணிந்திருக்கிறார் கருணாநிதி. இந்த வலைவிரிப்பை பாமக நிறுவனர் ராமதாஸும் புரிந்து வைத்திருக்கிறார் என்றாலும், அவரால் இந்த வலையில் இருந்து தப்ப முடியாத நிலை.

மத்தியில் சுத்தமாக அதிகாரம் இல்லை, ஒரு எம்.பி. கூட கிடையாது. 18 எம்.எல்.ஏக்கள் இருந்தும் கூட பயனில்லை. அதிமுகவுடன் முறைத்துக் கொண்டாகி விட்டது. பென்னாகரத்தில் தனித்துப் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபித்தாலும் கூட அதை முதலீடாக வைத்து லாபம் அடைய திமுகவின் உதவி தேவை என்ற நிலை.

'வன்னியர் பெல்ட்' என்று கூறப்படும் வட மாவட்டங்களில் (இங்கு மட்டும் 101 தொகுதிகள் உள்ளன) இன்னும் கூட திமுகவுக்கு சாதகமாகத்தான் பெரும்பாலான வன்னியர்கள் உள்ளனர். இது ராமதாஸுக்கும் நன்றாகத் தெரியும்.

இதனால்தான் திமுக கூட்டணியில் ராமதாஸ் இருந்தபோதும் கூட, திமுகவை எதிர்த்தே அரசியல் செய்துவந்தார். அது- தனது ஆதரவு வன்னியர்கள் திமுகவுக்குப் போய் விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தான்.

தென் மாவட்டங்கள் அதிமுக பெல்ட், வட மாவட்டங்கள் திமுக பெல்ட் என்ற நிலையில் தான் பாமக உருவாகி, திமுகவுக்கு குடைச்சலைத் தந்தது.

ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகியுள்ளது. திமுக மீண்டும் இந்தப் பகுதிகளில் பலம் பெற்றுள்ள நிலையில், கூட்டணியில் பாமக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை என்ற நிலையில் உள்ளார் முதல்வர் கருணாநிதி.

கூட்டணியில் மீண்டும் சேர்ப்போம். ஆனால் ராஜ்யசபா சீட் இப்போது இல்லை, 2013ல் தான் என்று கருணாநிதி வைத்திருப்பது மிகப் பெரிய 'செக் மேட்'. இதன்மூலம் அடுத்த சட்டசபை தேர்தல் முடிந்து, 2013 வரை பாமக அரசுக்கு எதிராகவோ, திமுகவுக்கு விரோதமாகவோ பேச முடியாது.

இப்படியே பல ஆண்டுகளுக்கு தங்களை விமர்சிக்க விடாமல், அமைதியாக இருக்க வைத்து, ஒட்டுமொத்தாக பாமகவையே காலி செய்வது தான் திமுகவின் நீண்ட கால திட்டம் என்கிறார்கள்.

ஒரு வேளை திமுகவின் 'ஆஃபரை' பாமக நிராகரித்துவிட்டு அதிமுகவுடன் சேர்ந்தாலும் கூட, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பக்கம் போக நினைக்கும் தேமுதிக ஜகா வாங்கிவிடும். இதன்மூலம் 3 முனைப் போட்டி வந்தால் அதுவும் திமுகவுக்கே பலன் தரும் என்பது முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கை.

பென்னாகரத்தில் 2வது இடத்தைப் பிடித்து வன்னியர்கள் தம் பக்கமே என்பதை பாமக நிரூபித்திருந்தாலும் கூட அத்தொகுதியின் பெரும்பாலான வன்னியர்கள் திமுகவுக்குத்தான் வெற்றிக் கனியைக் கொடுத்தனர் என்பதில் பல செய்திகள் உள்ளன. திமுகவுக்கு வன்னியர் பெல்ட்டில் இன்றளவும் செல்வாக்கு உள்ளது என்பது அதில் ஒன்று.

மேலும், தங்களது அசைக்க முடியாத வாக்கு வங்கியாக வன்னியர் சமுதாயத்தை பாமக கருதினாலும் கூட தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் பெரும் பலனைத் தராது.

மொத்தத்தில் வன்னியர் வாக்கு வங்கியை கையில் வைத்துக் கொண்டு, அந்த மக்களே எரிச்சலாகும் அளவுக்கு, 'அரசியல் சர்க்கஸ்' நடத்தி வரும் பாமகவை, அதே வழியில் சென்று முழுமையாக செயலிழக்க வைக்கும் திட்டம்தான், கூட்டணிக்குத் தயார்- ஆனால் சீட் இப்போது இல்லை.. 2013 வரை வாயே திறக்கக் கூடாது என்ற திமுகவின் அறிவிப்பு.

திமுகவும் கைவிட்டு, தேமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவும் கைவிட்டுவிட்டு, தனித்துப் போட்டி என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டால் தனது நிலைமை படுமோசமாகிவிடும் என்பதும் ராமதாசுக்குத் தெரியும்.

இதனால் தான் என்ன செய்வது என்றெ புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது பாமக. அதிர்ந்து போய் நி்ற்கிறார் ராமதாஸ்.... 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து வந்த ரிசல்டைப் பார்த்து அத்வானி அதிர்ந்தது மாதிரி...!

Thursday, June 3, 2010

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை தாக்கி 18 பேரை கொன்று இஸ்ரேல் நாசகரம்

israel  attacking flotilla

அமைதி கப்பலில் இஸ்‍ரேல் படை தாக்குதல் நடத்தி காட்சி

இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் முற்றுகையை முறியடித்து அங்கு வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களை மனிதாபிமானமற்ற இஸ்ரேல் கடற்படை தாக்கியது. இந்த கப்பல்களில் பயணம் செய்த 19 அமைதி போராளிகள் உயிர் இழந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த ஆறு கப்பல்களைக் கொண்ட இந்த விடுதலை கப்பல் குழுமத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த 700 அமைதியாளர்கள் பயணித்தனர். பாலஸ்தீனத்தின் ஆதராவளர்கள், நோபிள் பரிசு பெற்றவர்கள், பல்வேறு ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கப்பல்களில் பயணித்தனர். காஸா மீது இஸ்ரேல் போட்டுள்ள தடையை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்த கப்பல் குழு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சைப்பிரஸில் உள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து கடந்த ஞாயிறு (மே 30) புறப்பட்ட இந்த கப்பல் குழுமம் மறுநாள் பாலஸ்தீனத்தை அடைய இருந்தது.

காஸாவிற்கு உதவி ‍பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களில் ஒன்று


பன்னாட்டு கடல் எல்லையில் ‍கொடுர தாக்குதல்

விடுதலை கப்பல் குழுமம் என்று பெயரிடப்பட்ட இந்த படகுகளை திங்கள் காலை பன்னாட்டு கடல் பகுதியில் இஸ்ரேல் கடற்படை மறித்து தாக்கியது. காஸா கரைக்கு 65 கி.மீ. தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

இந்த தாக்குதல் இஸ்ரேலின் கடல் எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்றதை இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. ஆனால் தங்கள் தற்காப்பிற்காக இந்த நடவடிக்கையில் இறங்கியதாக இஸ்ரேல் கூறிக் கொண்டது.

கப்பல் குழுமத்திற்கு தலைமை தாங்கிய மார்வி மார்மரா என்ற கப்பலில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஏறும் காட்சியும் மேலே ஹெலிகாப்டர் அவர்களுக்கு பாதுகாப்பாக பறக்கும் காட்சியையும் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மார்வி மார்மரா கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீராவின் செய்தியாளர் ஜமால் எல்சாயல் இந்த நடவடிக்கையின் போது செயல்திறனுள்ள ஆயுதங்களை இஸ்ரேல் படையினர் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
கப்பலில் வந்தவர்கள் தங்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் தாங்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது. ஆனால் தங்களை இடைமறித்த உடனேயே இஸ்ரேல் படையினர் சுடத் தொடங்கியதாக இந்த கப்பல் குழும பயணத்தை ஏற்பாடு செய்த காஸா விடுதலை இயக்கத்தினர் தெரிவித்தனர். கப்பலில் சரணடைகிறோம் என்பதற்கு அடையாளமாக வெள்ளை கொடி ஏற்றப்பட்டதாகவும் பயணிகள் யாரும் எவ்வித தாக்குதலிலும் இறங்கவில்லை என்று கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தனது செய்தியாளருடன் ஒலித் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு வாயை மூடுங்கள் என்று ஹிப்ரூ மொழியில் குரல் எழுப்பபடுவதை கேட்டதாக அல்ஜஸீரா கூறியது.

கப்பல் குழுமத்தின் தலைக் கப்பலான மாவி மர்மராவின் தலைமை மாலுமியை முதலில் இஸ்ரேல் கடற்படை தொடர்பு கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறும் எங்கே செல்கிறீர்கள் என்பதை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டது. இதன் பிறகு இந்த கப்பல் குழுமத்தின் இரு மருங்கிலும் இரு இஸ்ரேல் போர் கப்பல்கள் சற்று தொலைவில் பயணிக்கத் தொடங்கின.
இதன் பிறகு இரவில் மோதலை தவிர்ப்பதற்காக கப்பல் குழுமம் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு தனது பாதையை மாற்றத் தொடங்கியது. அனைத்து பயணிகளுக்கும் உயிர்காக்கும் கவசத்தை அளித்து விட்டு அனைவரையும் கீழ் தளத்தில் இருக்குமாறு மாலுமிகள் கேட்டுக் கொண்டனர். இத்தனைக்கு பிறகும் இஸ்ரேல் அப்பாவி பயணிகளை கண்மூடித்தனமாக தாக்கியது.


இஸ்‍ரேல் தாக்குதல் நடத்தியதற்கு சற்று முன் கப்பலில் பயணம் செய்தவர்களில் சிலர்

காஸாவை நோக்கி புறப்பட்ட இந்த கப்பல்களில் 10 ஆயிரம் டன் மனிதாபிமான உதவி பொருட்கள் இருந்தன. இந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் இஸ்ரேலின் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்றும் அல்ஜஸீரா குறிப்பிட்டுள்ளது.

ஷேக் ராயித் சாலாஹ்

சேக் ராயித் சாலா


இந்த கப்பலில் பயணம் செய்த இஸ்ரேலில் இயங்கும் இஸ்லாமிய இயக்கத் தலைவர் ஷேக் ராயித் சாலாஹ் படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.
இஸ்ரேல் நடத்திய இந்த காட்டுமிராண்டி தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பயணித்து உயிர் இழந்தவர்களுக்காக மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுஷ்திக்கப்படும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.

துருக்கி, ஸ்பெயின், கிரீஸ், டென்மார்க் மற்றும் சுவிடன் ஆகிய நாட்டு அரசுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலின் தூதரை அழைத்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இஸ்தான்பலில் ஆயிரக்கணக்கானோர் பங்குக் ‍கொண்ட பிரமாண்டமான ஆர்ப்பாட்டம்


துருக்கியில் இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கப்பல் குழுமத்தை வழிமறித்து மன்னிக்க முடியாத குற்றத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது. இதன் விளைவை அது அனுபவிக்கும் என்று துருக்கியின் வெளிவிவகாரத் துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் நடை‍‍பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

லண்டன் மாநகரிலும் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்ரேலின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியா வர்ணித்துள்ளார்.
முற்றுகையிடப்பட்டு நிர்க்கதியான நிலையில் வாழும் காஸா மக்களுக்கு மனிதாபிமான ரீதியான உதவிகளை ஏந்தி வந்த கப்பல் குழுமத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஒரு அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


தாக்குதல்கள் குறித்த வீடியோ காட்சிகள்

விடுதலை கப்பல் புறப்படும் காட்சி காண இங்கே சொடுக்கவும்

http://www.youtube.com/watch?v=o6pcS0BUMiw&feature=related


விடுதலைக் கப்பல் குழும பயணக் காட்சிகளை காண இங்கே சொடுக்கவும்

http://www.youtube.com/watch?v=o-7wLDmMqd0&feature=related

பாலஸ்தீனின் மஆன் செய்தி நிறுவனம் கப்பல் தாக்கப்பட்ட தொடக்க காட்சிகள் குறித்து வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோ காட்சிகளை காண இங்கே சொடுக்கவும்

http://www.youtube.com/watch?v=MB-Mk4bFz-U&feature=player_embedded#!

அல்ஜஸீரா செய்தியை காண இங்கே சொடுக்கவும்

http://www.youtube.com/watch?v=xFEBbDkyrqQ&feature=player_embedded


தாங்கள் தாக்கப்பட்டதினால் கப்பல் பயணிகளை தாக்கியதாக கூறியுள்ள இஸ்ரேல் இராணுவம் பின்வரும் வீடியோவை வெளியிட்டது

http://www.youtube.com/watch?v=XAMFnu8ZBwk&feature=player_embedded

இந்த வீடியோவில் காயமடைந்த இரண்டு இஸ்ரேல் வீரர்கள் காட்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களது நிலை எப்படி உள்ளது என்பது படத்தில் தெளிவாக இல்லை. மேலும் கப்பலில் இருந்த ஆயுதங்கள் இருந்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் இப்படத்தில் கல்லாங்கோல், ஒரு மெல்லிய இரும்பு தடி, ஒரு பிளாஸ்டிக் பையில் கோலிகள் ஆகியவை தான் 'ஆயுதங்களாக' காட்சி அளிக்கின்றன. துப்பாக்கிகளையோ அல்லது கத்திகளையோ கூட கப்பலில் இருந்ததாக இஸ்ரேலினால் காட்ட இயலவில்லை.


- சுவனத்தின் செல்வன்

Wednesday, June 2, 2010

கோடிகோடியாக கரியாகும் மக்கள் பணம்! அதிரவைக்கும் ஆடிட் ரிப்போர்ட்!

- சுதாங்கன்

நன்றி : ஜூவி

ழைய மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட தமிழ் நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? உதாரணமாக, வடுவூர் துரைசாமி அய்யங்கார்நாவல்கள்? 'ஆம்' என்றால், உங்களுக்கு இந்தக் கட்டுரையின் விஷயங் களும் நிச்சயம் பிடிக்கும். சுவாரஸ்யம் கொடி கட்டும் கற்பனைக் கதைகளையும் மிஞ்சும் உண்மைகள் இவை!

தமிழக அரசின் நிதி நிர்வாகம், ஒவ்வொரு இலாகாவின் செயல்பாடுகள், ஒதுக்கப்பட்ட பணம், செலவழித்த முறைகள் குறித்து, மத்திய அரசின் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் வினோத் ராய் (COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA) ஓர் அறிக்கை வெளியிடுவார். பட்ஜெட் புத்தகங்களைப்போல பெரிய அளவில் உள்ள இந்த அறிக்கையின் தமிழாக்கத்தைப் படிப்பது பெரும் கொடுமை. இந்தத் தமிழைப் படித்துப் புரிந்துகொண்டு ப்ளஸ்-டூ தேர்வில் தமிழ் பாடத்துக்குப் பதிலாக இதன் பொழிப்புரையை எழுதும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண்கள் கொடுத்துவிடலாம். ஆனால், ஆழ்ந்து படித்தால் சோகங்களைக்கூட மெகா சீரியல் வழியாக மட்டுமே பார்க்கப் பிடித்த நமக்கு, இது ஒரு கண்ணீர்க் காவியம்தான்.

வருங்கால அரசியல் தலைவர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் சம்பாதிக்க எத்தனை வழிகள் உண்டு என்று 'சுயமுன்னேற்றத்துக்கான வழிகாட்டி'யாகவே பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை. பல்வேறு துறைகளின் நிதி நிர்வாகத்தை அலசி ஆராய்ந்திருக்கும் இந்த அறிக்கையின் சில பகுதிகள் மட்டும் இங்கே...

அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இந்த அறிக்கை விஷயத்தில்தான் எத்தனை ஒற்றுமை. இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்யும்போதும், இந்த அறிக்கைகளை மதித்ததே இல்லை. இரண்டு ஆட்சிகளிலும் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடியப்போகும் முதல் நாள்தான் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைப்பார்கள். எதிர்க் கட்சிகளின் சரங்களில் இருந்து தப்பிக்க அது ஒரு சமாளிப்பு டெக்னிக்!

இந்த முறை சட்டமன்றக் கூட்டத் தொடர் மே மாதம் 14-ம் தேதி முடிந்தது. தணிக்கை அதிகாரி மார்ச் 5-ம் தேதி வெளியிட்ட அறிக்கை, கூட்டத் தொடர் முடிகிற சமயத்தில்தான் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. 2001--2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கிய நிதிக் குளறுபடிகள் அப்படியே இந்த ஆட்சியிலும் தொடர்கிறது என்பதையே அறிக்கை நமக்குப் புரியவைக்கிறது.

முதலில் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு. அங்கு இருந்தே அறிக்கையைத் தொட(ங்க) லாம்...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்:

பொது வினியோகத் திட்டத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை விவசாயிகள், மத்திய நிறுவனங்களிடம் இருந்து இந்தத் துறை கொள்முதல் செய்யவேண்டும். நெல் உமியைக் களைந்து அரிசியாக்கி, பொருட்களைப் பாதுகாத்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பிவைப்பது இந்தத் துறையின் முக்கியப் பணி. 2004--2005 முதல் 2008--2009 வரையிலான இதன் பணிகள் தணிக்கைக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது.

இது பொதுச் சேவைக்கான துறை. இதில் ஏற்படும் இழப்புகளைச் சரிக்கட்ட மாநில அரசு மானியம் அளிக்கும். மார்ச் 31, 2008 வரை இந்த நிறுவனத்தில் வரவைவிட செலவு 6,358 கோடி ரூபாய் அதிகம். இதற்கு முக்கிய காரணம் - பல்வேறு செலவுகளைத் திரும்பப் பெறுவதில் மெத்தனம் காட்டியது. கொள்முதல் செய்த நெல்லை உமி நீக்கி அரிசி யாக்குவதற்கு மத்திய அரசு உதவித் தொகை அளிக்கிறது. அந்த உதவித் தொகையான 96.57 கோடி ரூபாயைக் கேட்டுப்பெற யாருக்கும் நேரம் இல்லை.

சந்தையில் நெல்லுக்கு அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும். ஆனால், விவசாயி களிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தயார் நிலையில் இல்லை. பொது வினியோகத்துக்கு எவ்வளவு நெல் தேவை என்று இந்த நிறுவனத்துக்குத் தெரியும். ஆனால், அதைவிட மிகக் குறைவான நெல் கொள்முதல் அளவையே தனது இலக்காக வைத்துக்கொண்டது இந்த நிறுவனம். இதனால், சந்தையையும் விலை ஏற்றத்தாழ்வுகளையும் சீர்படுத்தக்கூடிய வாய்ப்பு பறிபோனது. அப்படியே செய்தாலும், அதை வாங்கிப் பாதுகாக்க தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது.

தமிழ்நாடு மின்சார வாரியம்:

இதன் நஷ்டம் 3,512 கோடி ரூபாய். இந்த வாரியத் தின் தணிக்கை குறிப்பு மட்டுமே 14 பக்கங்கள். மின்சாரப் பற்றாக்குறை என்பதைவிட இந்தத் துறை முறையான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பாதுகாக்கவோ, பெருக்கவோ, எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது புரியும். இதன் நஷ்டங்களுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது மின்வெட்டு. அதற்கு இது ஒரு சின்ன சாம்பிள்... கோதையாறு நீர் மின் நிலையம். இதன் மின் உற்பத்தி திறன் 60 மெகா வாட். இதில் உள்ள சுழலி அச்சுத்தண்டு பழுதானது. இந்த உபகரண உற்பத்தியாளருக்கும் வாரியத்துக்கும் ஏதோ பிரச்னை. ஜூன் 2004-ல் (அ.தி.மு.க. ஆட்சி) தொடங்கி, இப்போது 2009 வரை அது தீர்ந்த பாடில்லை. இதனால், வாரியத்துக்கு 74.45 கோடி இழப்பும், 386 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி யும் இல்லாமல் போனது. இதனால், 60 மெகா வாட் திறனுள்ள இந்த மின் நிலையத்தின் திறன் 36 மெ.வா. குறைந்தது. ஒரு மின் நிலையத்தின் கதியே இதுவென்றால் மற்றவை..?

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்:

இந்த நிறுவனத்துக்கு ஏழு போக்குவரத்துக் கழகங்கள்... 20,104 பேருந்துகள் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 196.96 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். தணிக்கைக்கான காலகட்டத்தில் இதன் வருவாய் 5,053 கோடி. 2004--05 முதல்

2008-0-9 வரை தணிக்கை செய்யப்பட்டது. இதன் நஷ்டம் 3,884.99 கோடி. சரி, இந்த இழப்பை இந்தக் கழகம் எப்படிச் சமாளிக்கிறது? ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குத் தரவேண்டிய தொகை 969.99 கோடி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான நஷ்டஈடு 158.15கோடி. இதையெல்லாம் தராமல் வைத்துக் கொண்டு தங்கள் தேவைகளைச் சமாளிக்கிறார்கள்!

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை:

தேசிய ஊரக நல்வாழ்வு இயக்கம், குறிப்பாக கிராமப்புற மக்களின் சுகாதாரம், அதன் முன்னேற்றத்துக்காக இந்திய அரசால் எல்லா மாநிலங்களிலும் 2005 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக மாநில அளவிலான அடிப்படை சர்வேக்கள் முடிந்துவிட்டன. ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள இந்தத் தகவல்கள் தொகுக்கப்படவில்லை.

2008--09 வரை மத்திய அரசில் இருந்து மாநில சங்கம் பெற்ற தொகை 965.57 கோடி. இதில், 359 கோடி (37%) செலவிடப்படாமல் இருந்தது. தனியார் மயக்கவியல் சிறப்பு மருத்துவர், குழந்தை நல சிறப்பு மருத்துவர், பிரசவமானதுமே குழந்தைகளைக் கவனிப்பதற்கான சிறப்பு வசதிகளுக்காக இந்த நிதி சரியாகப் பயன்படுத்தபடவில்லை.

இதைச் சோதிக்க தணிக்கைக் குழுவால் ஏழு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அங்கே 62 கோடி ரூபாய் செலவு செய்யப் படாமலே இருந்தது.

2006-09 காலகட்டத்தில் இந்த நிதியில் இருந்து 5,395 கோடி வேறு திட்டங்களுக்குப் பயன் படுத்தப்பட்டது. மாநிலத்தில் 47 சதவிகித ஆய்வக உதவியாளர்களின் பணியிடங்கள் காலியாகவே இருந்தன. ஓட்டுனர்கள் 22 சதவிகிதம் மற்றும் மருந் தாளர்கள் 12 சதவிகிதம் இடங்கள் காலி.

பல்வேறு கொள்முதல் முகாம்களுக்கு மருந்து வாங்க முன்பணம் கொடுக்கப்பட்டது. இதில், இன்று வரை 92.22 கோடி ரூபாய்க்கு கணக்கே வரவில்லை!

மொத்தத்தில் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளில் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்தத் தணிக்கை அறிக்கை. இதில் இருந்து ஏழை கிராம மக்களின் சுகாதாரம்பற்றி அறிக்கைகளில் கவலைப்படும் அளவுக்கு அரசாங்கம் தன் செயல்முறையில் கவலைப்படவில்லை என்றே கருதவேண்டி உள்ளது.

தொழில் துறை:

இந்திய சர்க்கரை உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள். இதில் 16, அரசின் கூட்டுறவுத் துறையைச் சார்ந்தவை. இவற்றில் மூன்று பழுது!

மார்ச் 2008 வரை 15 கூட்டுறவு ஆலைகளில் இழப்பு 1,475 கோடி. குறிப்பிட்ட சில ஆலைகளில் இருந்து மற்ற ஆலைகளுக்குச் சர்க்கரையை அனுப்பிய போக்கு வரத்துச் செலவினால் ஏற்பட்ட இழப்பு 1.25 கோடி.

சர்க்கரை உற்பத்தியில் தொழில்நுட்பம் சரியாக இல்லாததால், கரும்பில் இருந்து பெறவேண்டிய அளவுக்கான சர்க்கரையைப் பிழிந்தெடுக்க முடிய வில்லை. இதனால், இழப்பு 12.97 கோடி. சர்க்கரை ஆலைகளைச் சரியாகப் பராமரிக்காததால் இழப்பு 4.35 கோடி.

சேலம் ஓர் உதாரணம்... இங்கே வடிப்பகம் (டிஸ்டிலரி) இழப்பு மட்டுமே 13.46 கோடி.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:

திருவான்மியூர், கொட்டிவாக்கம் கிராமங்களில்(!) அரசுக்குச் சொந்தமான 49.19 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 26-.62 ஏக்கரை தகவல் தொழில்நுட்பம்அதனைச் சார்ந்த சேவைகளுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைப் பெற விரும்பும் நிறுவனங்களில், யார் அதிக முன்பணம் செலுத்துகிறார்களோ... அவர்களுக்கே முன்னுரிமை. 99 வருடக் குத்தகைக்கு நிலம் அளிக்கப்படும். இதைக் கொடுப்பது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம். இந்த நிலத்துக்கு, சதுர அடிக்கு 5,757 ரூபாயாக அளிக்க முன்வந்த டி.எல்.எஃப். நிறுவனத்தை தன் பங்காளியாக தொழில் வளர்ச்சிக் கழகம் தேர்ந்தெடுத்தது. இது நடந்தது செப்டம்பர் 2007-ல். இதை ஏற்றுக்கொண்ட அரசு, பிப்ரவரி 2008-ல் அந்த நிறுவனத்துக்குத் தெரிவித்தது. அந்த நிறுவனமும் அதே ஆண்டு மே மாதம் மொத்த குத்தகைத் தொகையான 725.33 கோடியை அரசு கணக்கில் செலுத்தியது. இனிதான் அறிக்கையில் வேதனையான சுவாரஸ்யம்...

வழக்கமாக இதுபோன்ற நிலங்களுக்கு அதன் மதிப்பு, அருகில் உள்ள குடியிருப்பு நிலங்களின் வழிகாட்டுதல் விலையைவிட இரண்டு மடங்காக இருக்க வேண்டும். இந்த நிலத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு மனைகளின் வழிகாட்டுதல் விலை சதுர அடிக்கு 3,520 ரூபாய். அப்படியானால் டி.எல்.எஃப் வாங்கிய நிலத்தின் விலை சதுர அடிக்கு 7,040 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் கொடுத்த விலையோ 5,757தான். இதனால் அரசுக்கு இழப்பு - அந்த நிறுவனத்துக்கு லாபம் - 148.88 கோடி. இந்த நிலத்தில் மீதம் உள்ள 25.27 ஏக்கரை இன்னொரு கூட்டுக் பங்காளியான டாட்டா ரியாலிட்டிஸ் மற்றும் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் என்ற மும்பை நிறுவனத்துக்குக் கொடுக்க முடிவானது. இதுவும் அதே காலகட்டமான பிப்ரவரி 2008-ல்தான். அவர்கள் சதுர அடிக்கு 12,050 ரூபாய் வழங்கினார்கள்.

ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வதற்கான விதிமுறைகளைப் பின்பற்றியே இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாக அரசு டிசம்பர் 2009-ல் தெரிவித்தது. முதல் நிறுவனத்துக்கு குடியிருப்பு பகுதியின் வழிகாட்டுதல் விலைக்கு அளித்த அரசு, டாட்டா நிறுவனத்துக்குத் தொழில் பகுதிக்கான வழிகாட்டுதல் விலையை எப்படித் தீர்மானித்தது? இதற்கு அரசு கொடுத்த பதிலை ஏற்க முடியாது என்கிறது அறிக்கை.

இதேபோல்தான், டைடல் பார்க் பகுதியில் 2001-ல் அ.தி.மு.க. அரசு, அசண்டாஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்தான் முடிவானது. அதிலும், அ.தி.மு.க-வின் தவறான ஒப்பந்தத்தையே பின்பற்றியது தி.மு.க. அரசு. இதனால், அரசுக்கு இழப்பு 9.75 கோடி.

இதில் பல இலாகாக்கள் தணிக்கைக் குழுவின் சந்தேகங்களுக்கு பொறுப்பாகப் பதிலளிப்பதே இல்லையாம். குறிப்பாக, அரசு கேபிள் நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அது, இன்னும் கணக்கே காட்டவில்லை. அதேபோல, செய்யாத கணினி வேலைக்கு எல்காட் நிறுவனத்தில் ஒன்பது கோடி பாழ்!

இந்த அறிக்கையில் இன்னும் பல இலாகாக்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அரசு பணம் எப்படிப் போனால் நமக்கென்ன என்கிற மனோபாவம் ஆண்ட - ஆளுகிற கட்சிகளுக்கு இருப்பதாகவே இதன் சாராம்சம் காட்டுகிறது. இன்னும் ஊன்றிப் படித்தால், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பணத்தை அள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிற வருங்கால அரசியல்வாதிகள் இந்த அறிக்கையை கையில் வைத்துக்கொண்டால் எங்கெல்லாம் சுரண்டலாம் என்பதைச் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம்!

Tuesday, June 1, 2010

டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம்


துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த விபத்து மாபெரும் தவி்ர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை 'ஆட்டோ பைலட்' கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார்.

அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றிடத்தில் (air pocket) நுழைந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை ஆட்டோ பைலட் சிஸ்டமும் தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துவிட்டது.

இதையடுத்து அந்த விமானம் 5,000 அடி கீழே குதித்தது. விமானத்தை துணை விமானி கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

இதையடுத்து டாய்லெட்டில் இருந்து ஓடிவந்த பைலட், பாஸ்வேர்டைப் போட்டு காக்பிட்டின் கதவைத் திறக்கவே 2 நிமிடங்களாகியுள்ளது. அதற்குள் விமானம் நிலைதடுமாற ஆரம்பித்துள்ளது.

ஒரு வழியாக கதவைத் திறந்து தனது சீட்டுக்குத் தாவிய விமானி, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதற்குள் 3 நிமிடங்கள் ஆகிவிட்டன. இந்த நேரத்துக்குள் விமானம் மேலும் 2,000 அடி கீழே பாய்ந்துள்ளது.

அது போயிங் 737 ரக விமானமாகும். அதில் 118 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவி்ல்லை.

இந்த விமானம் தான் பறக்க வேண்டிய உயரத்திலிருந்து கீழே இறங்கியதால், எதிரே வந்த ஒரு விமானத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் இரு விமானங்களின் விமானிகளும் அதைத் தவிர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட்டும், துணை பைலட்டும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்டோ பைலட் சரியாக செயல்படவில்லை என்று இரு விமானிகளும் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.