.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Thursday, July 22, 2010

அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களை சிதைக்கும் மனித மிருகங்கள்

அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களுக்கு நேரும் கும்பாவுருட்டி குரூரம்

ஆடையை அவிழ்த்து... அம்மணமாக நிற்கவைத்து...

''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''

''ஐயோ வேணாம் சாமீ...''

''ஏய், விடுடி... துணியை விடுடி...''

''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''

''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''

இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர் வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களை யும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது. இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் 'அன்வேஷணம்' (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட... விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

சட்டசபையில் இதுபற்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுத்துள்ளார், கேரள காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-வான சதீஷன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்களால் அந்தப் பெண்கள் அனுபவித்த சித்ரவதையைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன குரூரம்! அப்பாவிப் பெண் களிடம் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் கோபமாகித்தான் சட்டமன்றத்தில் இந்த விஷயத் தைப் பேசினேன். இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்டவர்களை எப்படி அரசாங்க வேலையில் வைத்திருக்கிறார்களோ? கம்யூனிஸ்ட் அரசால் இந்த மாநில நிலை எப்படி சீரழிந்துபோய் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை! இன்னும் பலர் இதேபோல கொடூரமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றி எல்லாம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், போராட்டத்தில் இறங்குவோம்...'' என கொதித்தார்.

அந்த வக்கிர கும்பலின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட செங்கோட்டைவாசி ஒருவர், ''ரெண்டு மாசம் முந்தி என் மனைவியுடன் கும்பாவுருட்டி அருவிக்குப் போனேன். அப்ப 'வன சம்ரக்ஷண சமிதி' உறுப்பினர்கள் எங்களைப் பார்த்த பார்வையே சரியில்லை. அங்கிருந்து நாங்கள் காட்டுக்குள் நடந்து போகும்போது பின்னாலேயே வந்த வர்கள் என்னை மிரட்டி, 'இவ யாரு? தமிழ்நாட்டில் இருந்து தள்ளிட்டு வந்துருக்கியா?'ன்னு அசிங்கமா கேட்டாங்க. 'இவ என் மனைவி'ன்னு சொன்னதும், ஒருத்தன் என் கன்னத்தில் 'பளார்'னு அடிச்சான். இன்னொருத்தன் என் மனைவியின் சேலையைப் பிடிச்சு இழுக்க... நாங்க ரெண்டு பேரும் கதறினோம். நல்லவேளையா, அந்த சமயத்தில் நாலஞ்சு தமிழ் ஆட்கள் அருவியில் குளிக்கறதுக்காக, தூரத்தில் வந்ததால், எங்களை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. தப்பிச்சோம், பொழைச்சோம்னு உடனே கிளம்பிட்டோம். இது பத்தி தென்மலை போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனா, அவங்க அதை வாங்கலை. கோர்ட், கேஸ்னு அலையணுமேன்னு அந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிட்டோம்...'' என்றார், இன்னும்கூட அதிர்ச்சி விலகாமல்.

அருவிக்கு நம்முடன் வந்திருந்த மலையாளப் பத்திரிகை நண்பர் ஒருவர், ''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களை தொடர்ந்து மோசமாத்தான் நடந்துறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னே தென்காசிப் பெண் ஒருத்தரின் புருஷனைக் கட்டிவெச்சு, அவரின் கண்முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்கு இந்த கும்பல். 10 நாளு முன்னே, ஒரு பெண்னை ஓட ஓட விரட்டி இருக்காங்க. புகார் கொடுத்தால் அசிங்கம்னு எல்லாரும் போயிடறதால, இவங்களோட அட்டூழியம் தொடர்ந்துகிட்டிருக்கு. மரத்தில் ஏறி உட்கார்ந்துகிட்டு, பெண்கள் துணி மாத்தறதை எல்லாம் மறைஞ்சிருந்து செல்போனில் படம் பிடிக்கும் அக்கிரமமும் நடக்குது. கும்பாவுருட்டி மட்டுமில்லாமல் பாலருவியிலும் இதே நிலைமைதான். நாங்க பல தடவை போலீஸாரிடமும் வனத் துறை அதிகாரிகளிடமும் இதுபத்தி புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை...'' என்று ஆதங்கப்பட்டார்.

கேரள வனத் துறை அமைச்சர் பினாய் விஷ்வத்தி டம் பேசியபோது, ''கும்பாவுருட்டி சம்பவம் பற்றிய தகவல் கிடைச்சதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கேன். இதுவரை எங்களுக்கு ஒரு புகார்கூட வரலை. ஆனாலும் காத்திருக்காமல், இதுபத்தி போலீஸாரும் வனத் துறை அதிகாரிகளும் இணைஞ்சு விசாரணை நடத்தறாங்க. தற்போது வன சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த ரெண்டு பேரைப் பிடிச்சு விசாரிக்குது போலீஸ். யார் தவறு செஞ்சி ருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கும். நாங்க இதை அரசியல் பிரச்னையா பார்க்காம, சமூக அவலமாகவே நினைச்சு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்பதில் கவனமாக இருப்போம்!'' என்று உறுதி கொடுத்தார்.

'வனத் துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் இந்த மிருகங்களை உடனே வேட்டையாடியாக வேண்டும் கேரள அரசு!

நன்றி: ஜூவி.

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

Monday, June 21, 2010

கட்டப்பஞ்சாயத்துக் கொடூரங்கள்!

'கட்டப்பஞ்சாயத்து செய்வோரைச் சட்டம் இரும்புக் கரம்கொண்டு அடக்கும்' என்று அவ்வப்போது அரசாங்கம் குரல் கொடுக்கும். ஆனால், அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கும்?

கட்டப்பஞ்சாயத்துகள்பற்றி விரிவான ஆய்வு நடத்தி ஆதாரங்களைத் திரட்டி இருக்கும் மதுரை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிரைச் சந்தித்தோம். அவர் அடுக்கிய விவரங்கள் எல்லாம், இதுவரை வெளியானதைவிடவும் கூடுதல் பகீர்தான்!

'மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 167 கிராமங்களில் ஆய்வு செய்தோம். அதில், 94 கிராமங்களில் சாதி வித்தி யாசமின்றி ஒரே பஞ்சாயத்து முறையும், மற்ற கிராமங்களில், சாதிக்கு ஒரு பஞ்சாயத்தும் இருக்கிறது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடாவடித் தீர்ப்புகள் சொல்லப்படும் இந்தப் பஞ்சாயத் துகளில், பெண்களுக்காகப் பேசுவதற்கோ, கருத்து சொல்வதற்கோ உரிமை கிடையாது. இவர்கள் வழங்கும் தண்டனைகளும் வேடிக்கை, வேதனை!

பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக 88 கிராமங்களில் பஞ்சாயத்து கூடித்தான் தீர்ப்பு சொல் கிறார்கள். இதில் 12 கிராமங்களில்பெண்ணைக் கெடுத்தவனை ஊர்க் கூட்டத்தில் காலில் விழச் சொல் கிறார்கள். 50 கிராமங்களில் வெறுமனே அபராதம் மட்டும்தான். பலாத்காரம் செய்யப்பட்டவர் திருமணமாகாத இளம்பெண் என்றால், கெடுத்தவனே அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற காட்டுமிரண்டித்தனமான தீர்ப்புகள், 35 கிராமங்களில் வழங்கப்படுகின்றன. இந்த தீர்ப்பு உயர் சாதிக்காரனுக்கு மட்டும்தான். இதுவே தலித் இளைஞன் ஒருவன் மேல்சாதிப் பெண்ணைக் கெடுத்துவிட்டால், கடுமையான தண்டனையும் போலீஸ் நடவடிக்கையும் நிச்சயம் உண்டு!

விவாகரத்துப் பிரச்னைகள் இந்தக் கட்டப்பஞ்சாயத்தில் நொடியில் தீர்க்கப்படுகின்றன. வேடசந்தூர்ப் பகுதியில் சாதி இந்துப் பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்தார். இதற்காக ஒரு மாதம் கழித்து, அவர்களைப் பிடித்து கிடா வெட்டி, அதன் ரத்தத்தை இருவரின் தலையிலும் தேய்த்து, இருவரையும் பிரித்துவிட்டார்கள். தற்போது, அந்தப் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்துவிட்டனர். இப்படி, சடங்குத்தனமான தண்டனைகள் இன்னும் உண்டு... ஊர்க் கூட்டத்தில் வைத்து உலக்கையைத் தாண்டினாலோ, இரு வீட்டுக் கூரையையும் எடுத்து வந்து முறித்துப் போட்டாலோ போதும், அவர் கள் விவா கரத்து ஆனதாக அர்த்தமாம்!

இவைபோன்ற சாதிப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளால் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் பஞ்சாயத்து களை எதிர்த்து, போலீஸுக்குப் போகிற வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதாவது, 167 கிராமங்களில் இதுவரை இவர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை வெறும் 18-தான். அதிலும் 10 புகார்களே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. ஆறு வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை நடந் துள்ளது!'' என்றார்.

''இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?''

'ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து முறை உள்ளதா என்று ஆய்வு நடத்தி, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதனை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு தாலுக்காவிலும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும். கட்டப்பஞ்சாயத்துப் புகார்களுக்கான நடவடிக் கைக்காகவே மாவட்டத்துக்கு ஒரு சிறப்புக் காவல் நிலையம் தொடங்க வேண்டும். சமூகப் புறக்கணிப்பில் ஈடுபடுகிற கட்டப்பஞ்சாயத்துக் குழுக்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை தங்களது சொந்தக் கிராமத்துக்கு வர முடியாத அளவுக்குக் கடுமையான உத்தரவுகளை வெளியிட வேண்டும்!'' என்றார் கதிர்.

கற்பக விநாயகம் போன்ற எத்தனை நீதிபதிகள் கடுமையாக உத்தரவிட்டாலும், கட்டப்பஞ்சாயத்துகளின் வீரியம், வீறிடவைத்துக்கொண்டேதான் இருக்குமா?
நன்றி: ஜூவி

Monday, May 24, 2010

பெண்களே! எச்சரிக்கை....

னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளை

கிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.

தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!

தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.

பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.

''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!

''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.

''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.

அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.

சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.

அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண்களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!

தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.

''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.

'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!

இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.

ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.

ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.

ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.

இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.

'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்.

- த.கதிரவன்
நன்றி: ஜூவி

Tuesday, April 6, 2010

அமெரிக்காவில் நித்தியானந்தாவின் லீலைகள்

நித்திய ஆனந்தாவுக்கு எதிராக, 'பிளாக்மெயில்' சீடர் தர்மானந்தா ஒரு பக்கம்

குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க... 'குடைச்சல் நம்பர் டூ'வாக கடல் தாண்டி குபீரென்று பாய்ந்திருக்கிறது புது தோட்டா! இது அச்சு அசல் அமெரிக்க பிரஜை ஒருத்தரின் கைங்கரியம்! அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர்!

கலிஃபோர்னியாவில் அட்டார்னி ஜெனரல் ஜெரி ப்ரவுனுக்கு இவர் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலில், அதிரடியாக பல குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது!

'ஐயா அட்டார்னி ஜெனரல் அவர்களே,

நித்தியானந்தா என்ற சாமியார் அமெரிக்காவில் பல கிளைகள் வைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பலே மோசடிகள் செய்து வருகிறார். நித்தியானந்தா ஃபவுண்டேஷன், லைஃப் ப்ளிஸ் ஃபவுண்டேஷன், நித்ய யோகா, வேதிக் டெம்பிள், தியானபீடம் ஃபவுண்டேஷன் என்று அவர் பலவகையிலும் நிறுவி பல குற்றங்கள் செய்து வருகிறார். அதையெல்லாம் நீங்கள் விசாரித்து உரிய தண்டனையை அவருக்குத் தரவேண்டும். அதற்கான பக்கா சாட்சியாக நானே வந்து எல்லாம் சொல்லத் தயார்! 2003-ம் வருடம் தொடங்கி, ஆறு வருடங்கள் அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் என்ற முறையில் எனக்கு பல ரகசியங்கள் தெரியும்...' என்கிறது, இந்த டக்ளஸ் மெக்கெல்லர் எழுதியதாகச் சொல்லப்படும் கவரிங் லெட்டர்!

எல்லாம் போச்சு சாமியாராலே!

செக்ஸ் க்ரைம், மோசடிகளோடு சேர்த்து 'ஹவாலா' டைப்பிலான 'மணி லாண்டரிங்' விவகாரத்திலும் நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி திகில் கிளப்புகிறது இந்தக் கடிதம். 'அந்த சாமியாராலேதான் என் வேலை போச்சு. என்னைவிட்டு என் பொண்டாட்டிபோயிட்டா! இப்ப நான் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிக்கிறேன் அவராலே! தேவைப்பட்டா இந்தியாவின் எந்த கோர்ட்டிலும் போய் நின்றுகூட இதைப் பற்றியெல் லாம் நான் விவரமாகச் சொல்லத் தயார்' என்று போட்டுத் தாக்குகிறது அந்தக் கடிதம்!

நித்ய பிரபாவாகிய நான்...

வெள்ளைக்கார குடைச்சல் பார்ட்டி தன் கடிதத்தோடு கொடுத்திருக்கும் நீளமான டாகு மென்ட்டில் விவகாரம் செம ஹாட்டாகவேவிவரிக்கப் பட்டிருக்கிறது.

''2003-ம் வருஷத்துலதான் எனக்கு நித்தியானந்தா அறிமுகமானாரு. இந்து மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டால அவரோட ஐக்கியமானேன். என் பெயரை 'நித்ய பிரபா' என்றே சாமியார் மாத்தி வெச்சாரு. அமெரிக்காவுல அவர் ஆசிரமம் தொடங்கியபோது, அதுல டெலிபோன் ஆபரேட்டர் வேலையில தொடங்கி அத்தனை வேலைகளையும் நானே செஞ்சுருக்கேன். நித்திய ஆனந்தாவுக்கு விசா கிடைக்காத சமயத்துல நான்தான் பெரும் முயற்சி எடுத்து அவருக்கு அமெரிக்காவுக்கு விசா கிடைக்க ஏற்பாடு செஞ்சேன்.

எனக்கு சொந்தமான 'சான்ஜோஸ்' வீட்டிலும் நித்தியானந்தா தங்குவாரு. அந்த சமயத்துல அமெரிக்காவை சேர்ந்த பல இளம் பெண்கள்அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. முதலில் எனக்கு இதெல்லாம் தப்பா தோணவே இல்ல.

ஆனால், நான் நித்திய ஆனந்தாவோடு இப்படி இழைவது என் மனைவிக்கு ஏனோ பிடிக்கலை. அவரைவிட்டு விலகி வரும்படி அந்த மகராசியும் பல தடவை சொன்னா... நான்தான் பாவி, கேட்காமப் போயிட்டேன். அதனால அவ டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டா. அவளுக்கு ஏன் நித்தியானந்தாவைப் பிடிக்கலன்னு அப்ப எனக்கு தெரி

யலை...'' என்று புலம்பும் அந்த டக்ளஸ் மெக்கெல்லர் கடிதம்... ஜிலுஜிலுப்பாக மேற்கொண்டு போகிறது.

யார் அந்த நடிகை..?

''2007-ம் ஆண்டு நித்தியானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிஃபோர்னியாவுக்கு கூட்டிட்டுவந்தாரு. சினிமாவுல எனக்கு பெருசா ஈடுபாடு இல்லை. அதனால அவங்க பேருஎனக்கு நினைப்பில் இல்லே. ஆனா, திருமணம் செய்தவங்கன்னு மட்டும் தெரியும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கியிருந்தாங்க. அந்த நடிகைக்கும் நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததைநான் புரிஞ்சுக்கிட்டேன். அதைப்பத்தி அவரிடமே கேட்டேன். 'கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்'னு என்கிட்ட சிரிச்சுக்கிட்டே சொன்னாரு...'' என்று சொல்லும் புகார் கடிதம்,

''பிறகு ஆசிரமத்துக்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுக் கிட்டதையும் என்னால உணர முடிஞ்சுது. பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ மறுக்கவோ இல்லை'' என்று கலாய்க்கிறது!

அடங்காத ஆசை...

மேற்கொண்டு சொல்லப்படுகிற குற்றச்சாட்டு, தூக்கிப்போட வைக்கிற ரகம்!

''கலிஃபோர்னியாவின் ஒரு பகுதியில் சனாதன் தர்மா கோயில் என்று ஒன்று இருக்கு. இந்த கோயில்ல நித்தியானந்தாவோட பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே சகல வசதிகளோட கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக் காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது. பயிற்சிப் பட்டறை நடக்குற சமயத்துல அடிக்கடி ரெஸ்ட் எடுக்க அந்த அறைக்குள்ள போயிடுவாரு. அமெரிக்காவுல வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும் அந்த அறைக்குள் அனுமதி. தமிழ்ப் பெண்கள் மீது அவருக்கு அப்படி ஓர் அடங்காத ஆசை!

அந்த அறைக்குள்ள போனா என்ன நடக்கும்ணு என்னைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பெண்களும் விருப்பப்பட்டுத்தான் போயிட்டு வருவாங்க.

அதேபோல, மான்ட்க்ளேயர் ஏரியாவுலதான் வேதிக் டெம்பிள் இருக்கு. அங்கேயும் கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே நித்தியானந்தாவுக்கு ஓர் அறை உண்டு. இந்த அறையின் சாவி அவரது உதவியாளரான மா நித்ய கோபிகாகிட்ட இருக்கும். அமெரிக்க

என்.ஆர்.ஐ-யான நித்ய கோபிகாவோட ஒரிஜினல் பெயர் வித்யா விஸ்வநாதன்.

அந்த வேதிக் டெம்பிளுக்குள்ள இருக்கிற சொகுசு அறைக்கு யாரெல்லாம் போகவேண்டும் என முடிவெ டுக்கும் அதிகாரம் நித்ய கோபிகா கையிலதான் இருந் தது. விதவிதமான பெண்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான வேலையை செய்ததே கோபிகாதான்!'' என்று குபீர் கிளப்புகிறது அமெரிக்க குடைச்சல் புகார்.

தயாராக மூன்று பெண்கள்...அதோடு விட்டால்தானே..!

''நித்தியானந்தாவின் ஆன்மிக போதனை களில் நம்பிக்கை கொண்டு அவரிடம் வந்துசேர்ந்த கலிஃபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த மூன்று பெண்களை வலுக் கட்டாயமாக பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் அவர். அந்தப் பெண் களிடம் விசாரித்தால் நிச்சயமாக புகார் கொடுக்க முன்வருவார்கள். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டு,

''இந்தியாவில் ஒரு விதமான போதனைகளை செய்யும் இந்த சாமியார், அமெரிக்காவில் மட்டும் கிளுகிளு பாலிஸியைத்தான் ஓப்பனாக போதிப்பார். 'உலகத்துக் கான அத்தனை பலன்களையும் செக்ஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே பெற்றுத் தரமுடியும். அதற்கான ஆராய்ச்சியில்தான் நான் இறங்கியிருக்கிறேன். அதோடு, எந்தப் பிரச்னைகளையும் செக்ஸ் மூலம் தீர்க்க முடியும் என்பதை நான் உணர்ந் திருக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்வார் சாமியார்'' என்று பத்த வைக்கிறது!

வயிற்று வலி... விளக்கு ஒளி!

நம்மூர் கிளுகிளு கதைகளில் வருகிற மாதிரியே ஒரு எபிஸோடையும் எடுத்து விடுகிறார் இந்தடக்ளஸ் மெக்கெல்லர். ''ஒருநாள் இரவு நான் ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். அப்போது கதவுகள் மெள்ளத் திறந்திருக்க... எட்டிப் பார்த்தேன். உள்ளே தீப விளக்கின் வெளிச்சத்தில் இரண்டு பெண்கள் முழு நிர்வாணமாக இருக்க... அவர்களுடன் ஆனந்த நிலையில் இருந்தார் நித்திய ஆனந்தா. எல்லாம் முடியும் வரை(?) அமைதியாகக் காத்திருந்தேன்.

தாண்டவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தவர், 'அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் தீராத வயிற்று வலி இருந்திருக்கு. அதை சரி பண்ணுவதற்குத்தான் இந்த சிகிச்சை கொடுத்தேன். அதனாலதான் மின்சார லைட் இல்லாம தீப விளக்கு வெளிச்சத்தில் அவங் களுக்கு சக்தி கொடுத்தேன். இனி அவங்களுக்கு வயித்து வலியே இருக்காது' என்று சிரித்தபடி சொன்னார், சான்ஸை பயன்படுத்திய சாமியார். எனக்குத் தெரிஞ்சு அமெரிக்காவுல மட்டும் ரெண்டு வருஷத்துல எப்படி யும் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நித்தியானந்தா இப்படி ஆனந்த டிரீட்மென்ட் கொடுத்திருப்பாரு.

உலகம் முழுக்க இப்போ அவரோட லீலைகளைப் பத்தி பிரச்னைகள் கிளம்பியிருக்கு. அதனாலநாங்களும் இங்கே நடந்த சம்பவங்களை உங்களோட கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம். நீங்க நடவடிக்கை எடுங் கய்யா...'' என்று கலிஃபோர்னிய அட்டார்னி ஜென ரலுக்கு எழுதப்பட்ட கடிதம் பவ்யமாக முடிகிறது.

விதவை பெண் வில்லங்கம்...

சேலம் மாவட்டத்தில் ஒரு ஏரியாவிலுள்ள வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் விதவை ஒருவரையும் சாமியாருக்கு எதிராக உசுப்பிவிட முடியுமா என்று அவருக்கு எதிரான பார்ட்டிகள் தீவிரமாக முயல்கின்றன. இந்த எதிர்த் தரப்பு பார்ட்டிகள் சொல்வது இதைத்தான் -

''கணவன் இழந்த பெண் அவர். தனிமை சோகம் தாளமுடியாமல் மனஆறுதல் தேட சாமியாரின் பிடதி ஆசிரமத்துக்குப் போனார். பிடதி ஆசிரமத்திலேயே ஒரு கட்டத்தில் சேர்ந்தும்விட்டார். வழக்கம்போல எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க... ஒரு நாள் தியான மண்டபத்தில் அந்த பெண்ணின் மீது கைகள் படர்ந்திருக்கிறது.

அன்று இரவே பள்ளியறை பூஜைக்கு அந்தப் பெண் அழைக்கப்பட்டிருக்கிறாள். பள்ளியறைக்குள் சாமியார் கொடுத்த டிரீட்மென்ட்டை பெண்ணால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். அடுத்த நாளே ஆசிரமத்திலிருந்து கிளம்பி, சொந்த ஊருக்குத் திரும்பி விட்டாராம். அந்த விதவைப் பெண் எந்த நேரமும் புகார் கொடுத்து பிரச்னையைக் கிளப்புவார் என சாமியார் தரப்பும் பயந்தது. அந்தப் பெண்மணியும் கிட்டத்தட்டஅந்த மூடில்தான் இருந்திருக்கிறார். இதற்கிடையில், சி.டி விவகாரம் வெளியாவதற்கு முன்பு சாமியார் தன் பரிவாரங்களோடு சேலம் வந்தபோது, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து மனமுருக மன்னிப்பு கேட்டுவிட்டார். மறுபடியும் ஆசிரமத்துக்கு வரும்படி அழைப்பும் விடுத்தாராம். அந்தப் பெண் மறுத்து விட்டார். ஆனால், தைரியமாக வெளியில் வந்து புகார் தரும்படி நாங்கள் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறோம்...'' என்கிறார்கள் இந்த எதிர்பார்ட்டிகள்.

வயசென்ன சாமீ?

இருக்கிற வில்லங்கங்கள் போதாதென்று, நித்திய ஆனந்தாவின் வயசு விவகாரத்தை வைத்தும் சிலர் பிரச்னை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். விசா வில் ஒரு தேதி, பாலிடெக்னிக்கில் படித்தபோது ஒரு தேதி என்று அவர் மாற்றிக் கொடுத்திருப்பதாக சில ஆதாரங்களை எடுத்துக் காட்டும் அவர்கள்... 'சமீபத் தில் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சில கோர்ட் ஆவணங்களில் வேறொரு தேதி இருக் கிறது. இதெல்லாம் சட்டத்துக்குச் செய்கிற துரோக மில்லையா?' என்று கொளுத்திப் போட... எட்டு திசையிலிருந்து வரும் பந்துகளில் எதை எப்படித் தடுத்து ஆடுவது என்று இன்னும் தீவிரமான சட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளார் நித்திய ஆனந்தா!

''டக்ளஸ் மெக்கெல்லரை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது'' என்று கூறும் முன்னாள் ஆசிரமவாசிகள், அவர் இணையதளத்தில் வைத்துள்ள விவரமான 'பிளாக் ஸ்பாட்'டை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நித்திய ஆனந்தா ஆசிரம நிகழ்வுகள் தொடர்பான எக்கச்சக்க வீடியோ படங்கள் ('அந்த மாதிரி' எதுவும் இல்லை!), சாமியார் பற்றிய கடும் விமர்சனங்கள் என்று விவரமாகவே தொகுத்து வைத்துள்ளார் இந்த அமெரிக்க அதிரடி மச்சான்!

''2007 நித்யானந்தா நடத்திய பயிலரங்கத்தில் கலந்து கொண்ட போது 'திடீர் முக்தி' கொடுக்கிறேன் பேர்வழி...என்று அவர் சில கண்கட்டு வித்தைகளை நடத்தினார். சாம்பிராணி நெருப்பில் போதை திரவியங்களை கலந்து மயக்கத்தை ஏற்படுத்தியிருப்பாரோ என்று இப்போது தோன்றுகிறது'' என்று இவர் தன் புகாரில் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் போதை மருந்து குற்றம் செமத்தியான கடுமையோடு டீல் செய்யப்படும் என்பதால், ஆசிரம தரப்பு ரொம்பதான் கவலையோடு இதை கவனிக்கிறதாம்.

ஏதோ சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்ததுபோல, ''நான் அவரிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். என்னைப் போல பல அமெரிக்க பக்தர்களையும் நித்தியானந்த சாமியார் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்'' என்றும் தன் புகாரில் புலம்பியிருக்கிறாராம் மெக்கெல்லர்.

- மு.தாமரைக்கண்ணன், கே.ராஜாதிருவேங்கடம்

நன்றி: ஜூவி

Saturday, March 20, 2010

கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!

கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!

வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!!

தடுத்து நிறுத்த முன் வருமா தமிழக அரசு!!!

நன்றி: ஜூவி

நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி விபரீதத்தால், கடந்த வாரம் பள்ளிப்பாளையம் ஏரியாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்!

பள்ளிப்பாளையம் பகுதியில் தறி ஓட்டும் தொழிலாளர்கள் அதிகம். ஏழ்மையில் இருக்கும் இவர்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்குவது சகஜம். அப்படிப் பணம் வாங்கிய ஒரு பெண்மணி தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் போக... அவரது வயதுக்கு வந்த மகளையே வட்டிக்கு பதிலாகத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள்! அந்தப் பெண்ணை சீரழித்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு காசு பார்த்தும் இருக்கிறார்கள். சினிமா வில்லத்தனத்தையே ஜுஜுபி ஆக்கும் இந்தக் கொடூரர்களைத் தட்டிக் கேட்கப் போய்த்தான் பரிதாபமாகக் கொலையானார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தோழரான வேலுச்சாமி.

தட்டிக் கேட்க ஆளில்லாமல் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி விசாரிக்கப் புறப்பட்டபோது தலை சுற்றியது. முன்பு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதற்கு எதிராகப் போட்ட சட்டம் சுத்தமாக செத்துப் போய்விட்டதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

அரசியல் செல்வாக்கில் ஈரோடு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தைச் சேர்ந்த கிரிகோரி என்பவர், ''விவசாயிகளுக்கு விதைப்புல தொடங்கி அறுவடை வரைக்கும் காசு நீட்டுறது கந்து வட்டிப் பேர்வழிங்க தான். இங்கே 'மைக்ரோ'ல ஆரம்பிச்சு 'மேக்ரோ' வரைக்கும் வட்டி பிசினஸ் சக்கைப்போடு போடுது. நாள் வட்டி, வார வட்டின்னு பல டைப். இதுல ஒரு தவணை கட்டத் தவறினாலே, வட்டி குட்டி போடும். விவசாயிகளுக்கு நிலத்தின் பேர்ல கந்து வட்டிக்கு பணம் தந்து, கட்டமுடியாம அபகரிச்சு பல நூறு ஏக்கருக்கு அதிபதியா மாறிய ஆசாமிகள் இங்கே ஏராளம். நிலத்தை பறிகொடுத்த விவசாயி, அதே நபர்கிட்ட அதே நிலத்தை குத்தகைக்கு எடுத்து உழைக்கிற கொடுமையும் நடந்துகிட்டிருக்குது. இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எக்கச்சக்கமா இருக்கிறதால எதுவும் பண்ண முடியல...'' என்றார்.

அபராத வட்டி.. செடி வேர் அடி..!

கடம்பூர், தாளவாடி போன்ற மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதற்கென்றே கோவை, நீலகிரியைச் சேர்ந்த ஒரு டீம் இருக்கிறது. சந்தை கூடும் நாட்களில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்த சந்தையன்று வட்டியை வசூலிக்க வருவார்கள். இரண்டு மூன்று தவணைகள் வட்டி தவறினால், அபராத வட்டி போடுவதுடன், கடன் வாங்கியவரின் முதுகில் காட்டுச் செடி வேரினால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனங்களும் நடக்கிறதாம்!

ராத்திரி நேரம்... நடு வீட்டில்...

சேலம் மார்க்கெட் ஏரியா கந்து வட்டி கொடூரங்கள் ரொம்ப கொடுமை..! ''காலையில 1,000 ரூவா கொடுப்பாங்க. சாயந்திரம் வீட்டுக்குப் போறப்ப 1,100 ரூவாயா திருப்பிக் கொடுக்கணும். ஒருநாள் லேட்டானாலும் அந்த 100 ரூவாய்க்கும் சேர்த்து வட்டி போட்டுருவாங்க. 1,000 ரூவா கடன் வாங்கியிருந்தா... மாசம் 3,000 ரூவா வட்டி மட்டுமே கட்டியாகணும். கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா, கடன் கொடுத்த ஆளு பொழுது சாய்ஞ்சா கடைக்காரரோட வீட்டுக்குப்போய் நடு வீட்டுல சேரைப்போட்டு உட்கார்ந்துக்குவாரு. ராத்திரி 11 மணி வரைக்கும் உட்கார்ந்து இருந்துட்டு, கிளம்பி வந்துடுவாரு. கடைக்காரரு வீட்டுக்கு வர்றதுக்கே 10 மணியாகும். அப்படி இருக்கும்போது தெனமும் ஒரு ஆம்பளை வீட்டுக்கு வந்துட்டுப் போறதை பார்த்தா அக்கம்பக்கத்துல என்ன நினைப்பாங்க, சொல்லுங்க? இப்படி டார்ச்சர் செஞ்சு வசூலிக்கறது சகஜம்!'' என்றார் மார்க்கெட் கடைக்காரர் ஒருவர்.

''சேலம் மாநகராட்சியில வேலை பார்க்குற துப்புரவு தொழிலாளர்களை மட்டுமே குறிவச்சு ஒரு கும்பல் செயல்படுது. வட்டிக்குப் பணம் கொடுத்துட்டு, அவங்களோட ஏ.டி.எம். கார்டை வாங்கிக்குவாங்க. ஒவ்வொரு மாசமும் சம்பளம் போட்டதும் வட்டிப் பணத்தை எடுத்துக்கிட்டு அக்கவுன்ட்ல மிச்சம் பணம் இருந்தா... அதை சம்பந்தப்பட்டவங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க. கார்டு அவங்க கையிலதான்!'' என்றார் ஒரு மாநகராட்சி ஊழியர்.

கொள்ளை போகும் பொருட்கள்..!

கேரளா, குஜராத், உ.பி., என்று மற்ற மாநிலத்த வரும், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டினரும்கூட வாழும் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை இன்னும் அதிகம். ''தெரு முனையில நின்னுகிட்டு பணம் கொடுக்கிற கந்து வட்டிக்காரனுங்க எண்ணிக்கைதான் இங்கே அதிகம். எந்த டாக்குமென்ட்டும், ஆதாரமும் இல்லாம பணம் தர்றதால இவர்களை கடவுளா நினைக் குறாங்க பாவப்பட்ட மக்கள். பனியன் பிசினஸ்ல பணப்பட்டுவாடா ஒழுங்கா நடக்காம எங்கேயாச்சும் சிக்கிடுச்சுன்னா... நிலையை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கித்தான் ஆகணும்... வட்டியும், அசலும் தவறுனா வீட்டுக்கு வந்து டி.வி., பைக்குன்னு கண்ல பட்டதை தூக்கிட்டுப் போயிருவாங்க...'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த மணி.

தொடர்கதையாகும் கொடுமைகள்..!

கந்து வட்டி கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் தமயந்தி, ''ராசிபுரத்துல ஒரு கும்பல் வட்டிக்கு பணம் கொடுத்துட்டு கட்ட முடியாதவங்க வீட்டுக்கு போய் உட்கார்ந்துக்குவாங்க. மது பானங்களை கொண்டுவந்து வீட்டுலேயே வெச்சு குடிக்கிறது... வீட்டுல இருக்குற பொண்ணுங்களை தரக்குறைவா பேசுறதுன்னு நடக்குற அநியாயங்கள் எல்லாம் உச்சகட்டக் கொடுமை. இதனால, ராசிபுரத்துல தற்கொலை வரைக்கும் போய், காப்பாத்தப்பட்டவங்க பலர் இருக்காங்க. பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகள்ல, விசைத்தறி ஓட்டும் குடும்பங்கள் நிறைய. அங்கெல்லாம் திருப்பிக் கட்ட முடியாதவங்க வீட்டுப் பொம்பளைங்களை பாலியல்ரீதியா துன்புறுத்தும் கொடுமைகளை இன்னும் தடுத்து நிறுத்தவே முடியல. கந்து வட்டி கொடூரர்களுக்கு போலீஸ்காரங்களே பக்கத்துணையா நிற்குறாங்க. ஏன்னா, அவங்களுக்கு மாசம் தவறாம மாமூல் கொடுத்துடுறாங்க...'' என்று வேதனைப்பட்டார்.

கொடுமைகள் குறைஞ்சிருக்காம்..!

''மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசிடமிருந்து தாராளமான நிதி உதவி கிடைப்பதால், கந்து வட்டி கொடுமைகள் இங்கே மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது!''- என்று தான் கலந்துகொள்ளும் விழாக்களில் சொல்லி பெருமைப்படும்நாமக்கல் தொகுதி எம்.பி-யும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சருமான காந்திசெல்வனை தொடர்பு கொண்டோம். ''நான் பர்சனலா இந்த விவகாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சு விசாரிச்சுட்டுத்தான் பேசுறேனே தவிர, மேடை அலங்காரத்துக்காக எதையும் பேசல. பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு ஏரியாக்கள்ல ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்த கந்து வட்டி பிசினஸ், இப்போ ஒடுங்கி இருக்குது. இதுக்கு முக்கியக் காரணம்... கடந்த நாலஞ்சு வருஷங்கள்ல தமிழக அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வெகுவான நிதிஉதவி வழங்கி ஊக்குவிச்சு இருப்பதுதான்...'' என்றார் அவர்!

விஷச் செடி... மூலிகைச் செடி..!

மேற்கு மண்டல ஐ.ஜி-யான சிவனாண் டியிடம் பேசினோம். ''சமீபத்துலதான் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கேன். இதில் ஈடுபட்டிருக்கிற கிரிமினல்களை கூடிய சீக்கிரமே ஒழிச்சுக் கட்டுவேன். அதோடு, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களையும் இங்கே செயல்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையாவது நல்ல கல்வியோடு நிமிரும்போது, கந்துவட்டி போன்ற ஆபத்தான வலையில் விழாமல் இருப்பார்கள். அதோடு, நல்ல தொரு வேலையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தை இன்னல்கள் இல்லாமல் காப்பாற்றுவார்கள். ஒரு விஷச் செடி யைப் பிடுங்குகிற அதேசமயம், ஒரு நல்ல மூலிகைச் செடியை வைக்கிற மாதிரி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வசதியுள்ளவர்கள் தாராளமாக முன்வரவேண்டும்'' என்று தொலைநோக்கோடு பேசினார் ஐ.ஜி.

அனைத்துக்கும் மேலாக, 'இரக்கமற்ற கந்து வட்டிக் கும்பல்களுக்கு அடைக் கலம் தரக்கூடாது என்று' அரசியல் கட்சித் தலைவர்கள் ஆணை போடுவது முக்கியம்! ஒளிய இடம் இல்லாவிட்டால் விஷப் பாம்புகளை அடித்துப் போடுவது காவல் துறைக்குப் பெரிய வேலையாக இருக்காது!

நன்றி: ஜூவி

-- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார்

Monday, July 27, 2009

குடும்பங்களைக் கூறுபோடும் லேகிய டாக்டர்கள்

குறிப்பு: இந்தக்கட்டுரை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைக்காகவுமே தவிற கிளுகிளு அல்ல நமது நோக்கம். விகடனில் படித்தது நீதியின் குரல் வாசகர்களுக்காக....
________________________________________________
'இளமை இதோ இதோ!' என்று சிறகு அடித்துப் பறக்கும் பருவத்தில்தான் மனதை உருட்டிப் புரட்டும் சஞ்சல சுனாமியும் இளைஞர்களைப் பாடாய்ப்படுத்தும். சமயங்களில் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத 'உடல் இயக்கச் சிக்கல்'களை அவர்கள் மனம் திறந்து பேசுவது 'அஜால் குஜால்' வார்த்தைகளில் ஊரை ஏமாற்றும் போலி லேகிய வியாபாரிகளிடம்...

27 வயது சந்திரசேகருக்கு இளமைப் பருவத்துக்கே உள்ள விடலைப் பழக்க வழக்கங்கள் உண்டு. ஒருநாள் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்துப் பதறுகிறார். தனது திறமையைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் செல்கிறார். முதல் அனுபவம் பெரிய ஏமாற்றமாக முடிய... யோசிக்காமல் விளம்பரத்தில் வசீகரித்த வைத்தியரிடம் ஓடுகிறார். 'ஸ்பெஷல் செட்' என்று டப்பா நிறைய கேப்சூல்களைக் கொடுத்து 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார் வைத்தியர். வருடக் கணக்கில் மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வீட்டில் சந்திரசேகருக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்க, வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்துகொள்கிறார்.

அந்த லாரி டிரைவரின் மனைவிக்கு 'கணவன் தன்னைப் போதுமான அளவுக்கு திருப்திப்படுத்துவது இல்லை' என்று ஆதங்கம். கணவனை செவ்வாய்க்கிழமை அந்தக் குறிப்பிட்ட லாட்ஜுக்கு அழைத்துச் செல்கிறார். லாரி டிரைவரே மேற்கொண்டு தொடர்கிறார்... ''அந்த டாக்டர்(!) என் சம்சாரம் முன்னாடியே என்னை நிர்வாணப்படுத்திச் சோதிச்சாரு. 'உங்களுக்கு இருக்குறது சின்ன சிக்கல்தான். இதுக்கு மூணு மண்டலம் களிம்பு தடவுங்க. தூங்கப் போறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி இந்த லேகியத்துல ஒரு உருண்டை சாப்பிடுங்க'ன்னு சொல்லி 3ஆயிரம் ஃபீஸ் வாங்கிட்டாரு. வாராவாரம் செக்கிங் போக வர்ற இருந்தப்ப, என் சம்சாரம் அந்த ஆளுகூட ரொம்ப நெருக்கம் ஆயிட்டா. இப்போ என் பொண்டாட்டி என்கூட இல்லை. அதுக்குக் காரணம் அந்தப் படுபாவி. என்னை மாதிரி எத்தனையோ குடும்பங்களை அவன் சீரழிச்சு இருக்கான். வெட்கம், மானத்துக்குப் பயந்து நான் யார்கிட்டயும் சொல்லலை!''

இவர் கதை இப்படி என்றால் கொளத்தூர் மகேந்திரனுடையது வித்தியாசமானது. ''நான் சினிமாவில் லைட்மேனா வேலை பாக்குறேன். அதிக எடையை ஏற்றி, இறக்குவதால் 12 வருஷமாகவே எனக்கு முதுகுவலி. எந்த மருத்துவமும் பலன் இல்லை. அப்பதான் ஒரு சேட்டிலைட் சேனல்ல திருவாங்கூர் சித்த வைத்தியசாலை விஜயகுமாரோட நிகழ்ச்சி பார்த்தேன். அவர்கிட்ட போய் நின்னேன். 'மூணு மாசம் ட்ரீட்மென்ட். மாசம் 50 ஆயிரம் ரூபாய் ஃபீஸ். பூசணிக் காய், பாவக்காய் ஆகாது. காபி, டீ கூடாது. மது, சிகரெட் கூடவே கூடாது. தங்கபஸ்ப பவுடர்லாம் கொடுத்தாரு. மூணு மாசத்துக்குப் பிறகும் அதே நிலைமைதான். கேட்டால், 'கண்டிப்பா குணமாகும்னு நான் கான்ட்ராக்ட்ல கையெழுத்தா போட்டு ருக்கேன்!'னு எகத்தாளம் பேசுனார். நம்ம உடம்பு வாகுக்கு ஒத்துக்கலைன்னு நினைச்சு ஒன்றரை லட்ச ரூபாய் போனாப் போகட்டும்னு அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்!'' பத்திரிகை, டி.வி-க்களில் வரும் பந்தா விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, பண பண்டல்களுடன் வந்து போலி வைத்தியர்களிடம் சிக்கிச் சீரழிந்த குடும்பங்கள் எத்தனையோ!
தாம்பத்திய நிகழ்வுகளில் இயல்பான ஆரம்பக் கூச்சத் தயக்கங்களுக்குப் பயந்து பதறி, இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் தஞ்சம் புகுந்தால்... அதோகதிதான். மனைவியுடன் சிநேகமும் புரிதலும் ஏற்பட்டால் மழை மேகமாக விலகிவிடும் சிக்கல்களுக்கு அவர்களின் வைத்திய முறைகள் இருக்கின்றனவே... தங்கபஸ்பம், லேகியம், களிம்பு, அக்குளில் வைத்துக்கொள்ளும் மாத்திரை... என அஜால் குஜால் வைத்தியர்களின் வைத்திய முறைகள் அத்தனையும் விபரீத வில்லங்கங்கள். பழக்கத்தில் மறைந்துவிடக் கூடிய சின்ன பிரச்னைகளை இவர்களின் 'வைத்திய முறை'கள் விஸ்வ ரூபமாக்கி தம்பதிகளிடையே மனஸ்தாபங்களை உண்டாக்கிவிடுகின்றன.

இது போன்ற லேகிய வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த், ''எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டோம்னு சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல ஏராளமான ஆளுங்க பலரை ஏமாத்திட்டு இருக்காங்க. ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு லேகிய மருந்துகள் கொடுத்து, 'உனக்கு எல்லாம் சரியாயிடுச்சு. இனி நீ தைரியமா கல்யாணம் பண்ணிக்கலாம்'னு சொல்லி அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் பரவக் காரணமா இருக்காங்க. அவங்ககிட்ட ஏமாந்தவங்களைத் தேடிப் பிடித்து திரும்ப மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குன்னு புரியவெச்சோம். அது சம்பந்தமான டாக்குமென்ட்ரியை லோக்கல் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பியதும், அந்த லேகிய வியாபாரிகள் பக்கமிருந்து எனக்குக் கொலை மிரட்டல்கூட வந்தது. ஆனா, அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படலை.

தமிழ்நாடு முழுக்க இது மாதிரி டுபாக்கூர் போலி டாக்டர்கள் 900 பேர் இருக்காங்க. அவங்களைப் பத்தி நான் தயாரிச்சுட்டு இருக்கும் பட்டியல் தயாரானதும் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் சேர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்!'' என்றார்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் எழிலன் கூறுகையில், ''ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ட்ரன்ஸ் தேறி சைக்காலஜி, அனாடமி, பயோ கெமிஸ்ட்ரி என மருத்துவக் குழு அங்கீகரித்த பாடங்களை 4 ஆண்டுகள் படித்து 5-வது வருடம் மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவங்கள் பெற்ற பிறகே நாங்கள் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறுகிறோம். 'ராஜராஜ சோழனுக்கே வைத்தியம் பார்த்தவர் எங்கள் பாட்டன். பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பார்த்து வருகிறோம்' என்பார்கள். 'சோழனுக்கு வைத்தியம் பார்த்ததற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்டால் காதில் விழாதது போல வேறு வேலை பார்க்கச் சென்றுவிடுவார்கள்.

உடனடி நிவாரணம் தேவைப்படும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு இவர்கள் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். ஆனால், நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும் முடக்கு வாதம், பிறவி ஊனம் போன்றவற்றுக்கு வைத்தியம் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். அந்த சிகிச்சைகளில்தானே கொள்ளை கொள்ளையாகப் பணம் பறிக்க முடியும்.

தமது வீட்டில் ஒருவர் நீண்ட நாட்கள் நோய் குணம் அடையாமல் போராடினால், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றுதான் குடும்ப உறுப்பினர்களிடம் பெரும் போராட்டம் நடக்கும். எதை விற்றாவது அவரைக் காப்பாற்ற முயல்வார்கள். அந்தப் பாசத்தைப் பணமாக்கும் இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!'' என்று எச்சரிக்கிறார்.

ஒரு முறையேனும் கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியாது. அது போலத்தான் தாம்பத்யமும். ஆரம்பத் தள்ளாட்டங்கள் இதிலும் சகஜம்தான். அதைத் தம்பதிகள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். உடலின் கோளாறுகளுக்கு நிவாரணம் தேட தகுந்த மருத்துவர்களோ, நிபுணர்களோதான் பக்கபலமாக இருப்பார்கள். ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால்கூட ஏ.சி, டி.டி.எஸ், குஷன் ஸீட் என்று வசதிகளைப் பட்டியலிடுபவர்கள், தங்கள் உடல் பராமரிப்புக்கும் அத்தகைய கவனத்தைச் செலுத்துவதுதானே சரி!
நன்றி: விகடன்