.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, June 22, 2010

செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் இனிதே நிறைவுபெற வாழ்த்துகிறோம்


பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய், என்றைக்கும் சீரிளமையாய் இருந்து வரும் தமிழ் மொழி, மத்திய அரசால் செம்மொழியென அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக தமிழக அரசின் சார்பில், ஒரு பெருவிழாவாக, கோவையில் நாளை (ஜூன் 23) முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக, உலகத் தமிழர்கள் ஒன்றினையும் விழாவாக நடைபெறவுள்ளது.

மாநாட்டில் தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 48 நாடுகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர்.

சங்ககாலத் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலான காட்சிகள் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் ஒருபுறத்தில் 21 ஆய்வரங்குகளில் கட்டுரை வாசிக்கும் நிகழ்வும், மறுபுறத்தில் தமிழறிஞர்களின் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறுவதுடன், 2,000-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

கன்னித் தமிழை, இளமை குன்றா இனிய தமிழை இன்னும் முன்னெடுக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மேன்மையடைய வேண்டும், தொன்மை மொழிக்குச் சொந்தக்காரர்களாக உள்ள தமிழ்நாட்டில் பிற மொழி மோகத்தில் உள்ளவர்களுக்கு தாய்மொழி உணர்வை, மொழிப்பற்றை வளர்க்க வேண்டும், தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்த தமிழறிஞர்களின் படைப்புகளை மக்கள் களத்துக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வருங்கால இளைய சமுதாயம் தமிழின் மேன்மையையும், பெருமையையும் உணர வேண்டுமென்பது மாநாட்டின் முக்கிய நோக்கம்.

மாநாட்டுக்கு வெளியே நடைபெறும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் இவை மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்க்கும் என்றாலும், மாநாட்டில் நிகழும் ஆய்வரங்கக் கட்டுரைகள்தான் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுவதுடன், தமிழுக்கும் பெருமை சேர்க்கும்.

மாநாட்டில் பங்கேற்பவர்கள் அனைவராலும் எல்லா ஆய்வரங்குக்கும் செல்வது என்பது முடியாத ஒன்று.

மாநாட்டில் பங்கேற்க நினைத்து பங்கேற்க முடியாதவர்களும், மாநாட்டில் பங்கேற்று அனைத்து ஆய்வரங்குகளிலும் பங்கேற்காதவர்களும் மாநாட்டின் முழுப் பயனைப் பெற வேண்டும். அந்த வகையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டுமென்று மாநாட்டுப் பணிகள், மிக விரைவாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது அதே வேகத்தில் ஆய்வுக் கட்டுரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட்டு, செம்மொழி மாநாட்டின் முழுப்பயனை அனைவரும் பெறச் செய்ய வேண்டும்.

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற வள்ளுவரின் வாக்கினைப் போல, நாம் எழுதியவைகள் தம் கைகளில் கிடைத்த மகிழ்ச்சியை நம் தமிழர் பெருமக்கள் அடைவர்.

உலகின் பல்வேறு துருவங்களிலிருந்து வந்து உயர்தனிச் செம்மொழியான தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று, எண்ணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் தமிழ்ச் சான்றோர்களை பெருமைப்படுத்துவது தமிழையும், தமிழர்களையும் பெருமைப்படுத்துவதாகும்.

அதேநேரத்தில், தமிழ் உலக அரங்கில் செம்மொழியாக பேசப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் சிந்தித்தவர்களையும் இந்த மாநாட்டில் பெருமைப்படுத்த வேண்டும்.

வாய் மூலம், எழுத்து மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு பெருமைப்படுத்த வேண்டும். மறைந்தவர்களைக் கௌரவிக்கும்பட்சத்தில் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியடையும். வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கௌரவிக்கும்பட்சத்தில் தன்னுடைய தமிழ் உணர்வுக்குக் கிடைத்த அங்கீகாரமென நினைத்து பெருமிதம் கொள்ளவும், மேலும் தமிழுக்காகப் பணியாற்றவும் ஊக்குவிக்கும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் இனிதே நிறைவுபெற நீதியின் குரல் சார்பாக வாழ்த்துகிறோம்.

No comments: