.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, June 6, 2010

அரசியல் சாணக்கியனின் அதிர்ச்சி வைத்தியம்

2003ம் ஆண்டு இறுதியில்.... திடீரென ஹைதராபாத் செல்கிறார் அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி. அப்போது மத்தியில் ஆண்ட பாஜக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து வந்த, மிக முக்கியமான கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்துவிட்டுத் திரும்புகிறார். நக்ஸல் பிரச்சனை குறித்துப் பேசியதாக இருவரும் சொல்கிறார்கள்.

ஆனால், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் மூளை, இந்தச் சந்திப்பின் பின்னணியை அலசி, ஆராய்கிறது. ''விரைவில் மக்களவைக்குத் தேர்தல் வரலாம்.. தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போகிறார்கள்.. இதற்குத் தான் இந்த சந்திப்பு'' என்பதை அவரது அரசியல் அனுபவம் அவருக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

அடுத்த சில நாட்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சில நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாக திமுக தரப்பு ரகசிய சந்திப்புகள் நடத்தி, கூட்டணியை உறுதி செய்து கொள்கிறது.

மத்திய உளவுப் பிரிவுகள் மோப்பம் பிடித்துவிடாதபடி இதை செய்துமுடித்துவிட்டு, சென்னையில் நிருபர்களை சந்திக்கிறார் முதல்வர் கருணாநிதி.

பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக குண்டைப் போடுகிறார்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த நிலையில், தன்னையும் கட்சியையும் பாதுகாக்க தேர்தல் வரையாவது மத்தியில் பாஜகவின் தயவு தேவை என்பதால் அங்கு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த கருணாநிதி, தேர்தலுக்கு பாஜக தயாராவதை உணர்ந்தவுடன் புயலாக வெளியேறினார்.

அப்போது தான், தேர்தலை முன் கூட்டியே நடத்தும் நம் திட்டத்தை கருணாநிதி எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார் என்பதை அத்வானி அண்ட் கோ உணர்ந்து அதிர்கிறது.

அடுத்து நடந்தது.. இந்திய அரசியலில் மாபெரும் மாற்றகள். நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக கூட்டணி தோல்வியடைவதற்கு, தமிழகத்தில் 40க்கு 40 இடங்களிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றதே முக்கியக் காரணமாக அமைந்தது.

எத்தனையே அரசியல்வாதிகள்.. எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கலாம். ஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு இணையான ஒரு தலைவர் இன்று இந்தியாவில் யாருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

அவரைப் பிடித்தவர்கள்.. பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் இந்த உண்மையை ஏற்றே ஆக வேண்டும். அதை ஏற்க மறுப்பவர்கள், பாமகவுக்கு இப்போது அவர் காட்டிக் கொண்டிருக்கும் 'அரசியல் த்ரில்லரை' பார்த்த பிறகாவது தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளலாம்.

முதல்வர் கருணாநிதியின் புத்திக் கூர்மையான அரசியல் காய் நகர்த்தலால், கிடுக்கிப் பிடியில் சிக்கியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். எந்த முடிவை எடுப்பது என்றே தெரியாமல் பெரும் குழப்பத்தில் பாமகவை தள்ளி விட்டுள்ளார் கருணாநிதி.

பெரியார், அண்ணா காலத்திலிருந்தே கருணாநிதியின் சாணக்கியத்தனம் மிகப் பிரபலமானது. எம்ஜிஆர் என்ற 'மாஸ் ஹீரோ' மற்றும் சினிமா மாயையில் தமிழகம் சிக்கியபோது மட்டும் தான் அவரது ராஜ தந்திரம் பலிக்காமல் போனது.

மற்றபடி எல்லா காலங்களிலுமே அவரது அரசியல் சாணக்கியத்தனமே வென்றுள்ளது. 1990 ஆரம்பத்தில் திமுக பலவீனமாக இருந்த காலகட்டத்தில் ராஜிவ் காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தாலும், சில முன்னணி ஊடகங்கள் உதவியோடும் ஜெயலலிதா அரசியலில் மாபெரும் வெற்றி பெற்றார்.

ஆனால், அப்போது ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் இருந்த ஆதரவு இன்று பாதி கூட இல்லை.

ஆனால், அடுத்தடுத்து 2 மக்களவைத் தேர்தல்கள், ஒரு நாடாளுமன்றத் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் என்று ஜெயலலிதாவுக்கு தொடர் தோல்விகளைத் தந்து அதிமுகவையே ஆட்டம் காண வைத்துவட்ட கருணாநிதி, இம்முறை ஆட்சிக்கு வந்தபோது இருந்ததைவிட பலமான நிலையில் இருப்பது அவரது சாணக்கியத்தனதுக்கு இன்னொரு உதாரணம்.

87 வயதில் காலடி எடுத்து வைக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர் காட்டும் அரசியல் வேகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளது.

கருணாநிதியின் ஸ்டைல்... எதிரிகளை எதிரிகளாகவே நீடிக்க விடுவதில்லை என்பது தான். எதிர்ப்பின் வலுவை பலவீனமாக்கி, தன் பக்கம் இழுத்து ஒரேயடியாக நீர்த்துப் போய் விடச் செய்வதுதான் கருணாநிதியின் ஸ்டைல். இதற்கு மிகப் பொருத்தமான உதாரணம்- மதிமுக.

தனிக் கட்சியாக பட்டிதொட்டியெங்கும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை வைதத்திருந்த வைகோவை கூட்டணிக்குக் கொண்டு வந்து, மதிமுகவின் வாக்கு வங்கியை கரைத்த பெருமைக்குரியவர் கருணாநிதி. இதன் விளைவு மதிமுகவின் அடிமட்டம் தகர்ந்து போனது. இப்போது தமிழக அரசியலில் வெறும் 3 முதல் 4 சதவீத வாக்கு பலமே கொண்டு, செல்லாக்காசாகிப் போய் ஜெயலலிதாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் வைகோ.

இதே பாணியில்தான் இப்போது பாமகவை அடித்துக் காலி செய்ய துணிந்திருக்கிறார் கருணாநிதி. இந்த வலைவிரிப்பை பாமக நிறுவனர் ராமதாஸும் புரிந்து வைத்திருக்கிறார் என்றாலும், அவரால் இந்த வலையில் இருந்து தப்ப முடியாத நிலை.

மத்தியில் சுத்தமாக அதிகாரம் இல்லை, ஒரு எம்.பி. கூட கிடையாது. 18 எம்.எல்.ஏக்கள் இருந்தும் கூட பயனில்லை. அதிமுகவுடன் முறைத்துக் கொண்டாகி விட்டது. பென்னாகரத்தில் தனித்துப் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபித்தாலும் கூட அதை முதலீடாக வைத்து லாபம் அடைய திமுகவின் உதவி தேவை என்ற நிலை.

'வன்னியர் பெல்ட்' என்று கூறப்படும் வட மாவட்டங்களில் (இங்கு மட்டும் 101 தொகுதிகள் உள்ளன) இன்னும் கூட திமுகவுக்கு சாதகமாகத்தான் பெரும்பாலான வன்னியர்கள் உள்ளனர். இது ராமதாஸுக்கும் நன்றாகத் தெரியும்.

இதனால்தான் திமுக கூட்டணியில் ராமதாஸ் இருந்தபோதும் கூட, திமுகவை எதிர்த்தே அரசியல் செய்துவந்தார். அது- தனது ஆதரவு வன்னியர்கள் திமுகவுக்குப் போய் விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தான்.

தென் மாவட்டங்கள் அதிமுக பெல்ட், வட மாவட்டங்கள் திமுக பெல்ட் என்ற நிலையில் தான் பாமக உருவாகி, திமுகவுக்கு குடைச்சலைத் தந்தது.

ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகியுள்ளது. திமுக மீண்டும் இந்தப் பகுதிகளில் பலம் பெற்றுள்ள நிலையில், கூட்டணியில் பாமக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை என்ற நிலையில் உள்ளார் முதல்வர் கருணாநிதி.

கூட்டணியில் மீண்டும் சேர்ப்போம். ஆனால் ராஜ்யசபா சீட் இப்போது இல்லை, 2013ல் தான் என்று கருணாநிதி வைத்திருப்பது மிகப் பெரிய 'செக் மேட்'. இதன்மூலம் அடுத்த சட்டசபை தேர்தல் முடிந்து, 2013 வரை பாமக அரசுக்கு எதிராகவோ, திமுகவுக்கு விரோதமாகவோ பேச முடியாது.

இப்படியே பல ஆண்டுகளுக்கு தங்களை விமர்சிக்க விடாமல், அமைதியாக இருக்க வைத்து, ஒட்டுமொத்தாக பாமகவையே காலி செய்வது தான் திமுகவின் நீண்ட கால திட்டம் என்கிறார்கள்.

ஒரு வேளை திமுகவின் 'ஆஃபரை' பாமக நிராகரித்துவிட்டு அதிமுகவுடன் சேர்ந்தாலும் கூட, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பக்கம் போக நினைக்கும் தேமுதிக ஜகா வாங்கிவிடும். இதன்மூலம் 3 முனைப் போட்டி வந்தால் அதுவும் திமுகவுக்கே பலன் தரும் என்பது முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கை.

பென்னாகரத்தில் 2வது இடத்தைப் பிடித்து வன்னியர்கள் தம் பக்கமே என்பதை பாமக நிரூபித்திருந்தாலும் கூட அத்தொகுதியின் பெரும்பாலான வன்னியர்கள் திமுகவுக்குத்தான் வெற்றிக் கனியைக் கொடுத்தனர் என்பதில் பல செய்திகள் உள்ளன. திமுகவுக்கு வன்னியர் பெல்ட்டில் இன்றளவும் செல்வாக்கு உள்ளது என்பது அதில் ஒன்று.

மேலும், தங்களது அசைக்க முடியாத வாக்கு வங்கியாக வன்னியர் சமுதாயத்தை பாமக கருதினாலும் கூட தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் பெரும் பலனைத் தராது.

மொத்தத்தில் வன்னியர் வாக்கு வங்கியை கையில் வைத்துக் கொண்டு, அந்த மக்களே எரிச்சலாகும் அளவுக்கு, 'அரசியல் சர்க்கஸ்' நடத்தி வரும் பாமகவை, அதே வழியில் சென்று முழுமையாக செயலிழக்க வைக்கும் திட்டம்தான், கூட்டணிக்குத் தயார்- ஆனால் சீட் இப்போது இல்லை.. 2013 வரை வாயே திறக்கக் கூடாது என்ற திமுகவின் அறிவிப்பு.

திமுகவும் கைவிட்டு, தேமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவும் கைவிட்டுவிட்டு, தனித்துப் போட்டி என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டால் தனது நிலைமை படுமோசமாகிவிடும் என்பதும் ராமதாசுக்குத் தெரியும்.

இதனால் தான் என்ன செய்வது என்றெ புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது பாமக. அதிர்ந்து போய் நி்ற்கிறார் ராமதாஸ்.... 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து வந்த ரிசல்டைப் பார்த்து அத்வானி அதிர்ந்தது மாதிரி...!

No comments: