.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, August 12, 2010

போதை: ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு...

விபத்து என்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடும்தான் என்றாலும், அது வாழ்நாளுக் கும்மறக்காது. கண்ணகிக்கு நடந்ததோ பயங்கரத்தின் உச்சம். ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு, 1 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, உயிர் பிழைத்திருக்கும் கண்ணகியின் கதி இது!

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த உமாபதி, ஒரு கார்பென்டர். கண்ணகி, இவரது மனைவி. நான்கு வயதுப் பையன் சாரதி மற்றும் ஆறு மாதக் கைக் குழந்தை சௌமியா ஆகியோருடன் மனைவியின் ஊரான மணவூருக்குச் சென்று பைக்கில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார் உமாபதி. அப்போதுதான் அந்தக் கொடுரம் நடந்தது.

"நாங்க திருமுல்லைவாயில் சி.டி.ஹெச். ரோட்டுல வந்துட்டு இருந்தோம். பைக்ல எனக்கு முன்னாடி பையன் உட்கார்ந்து இருந்தான். பின்னாடி என் மனைவி குழந்தையைக் கையில் வெச்சுக்கிட்டு உட் கார்ந்திருந்தா. நான் நார்மலான வேகத்தில்தான் ஓட் டிட்டு இருந்தேன். திடீர்னு எங்களுக்கு எதிர்ல ஒரு கார் வேகமா வந்தது. நான் வண்டியைக் கொஞ்சம் ஓரமா ஓட்டினேன். ரோட்டுல நிறைய இடம் இருந்தும் கார் எங்களை நோக்கிப் புயல் வேகத்தில் வந்தது. நான் ஹெட்லைட்டைப் போட்டு 'இதுக்கு மேல் எங்கேயும் போக முடியாது'ன்னு சிக்னல் காட்டுறேன். ஆனா, கார் நேரா வந்துட்டு இருக்கு. அதுக்கு மேல் வண்டியை லெப்ட்லயும் திருப்ப முடியாது. ஏன்னா, அந்தப் பக்கம் பெரிய கால்வாய் இருக்குது. எதிர்ல வந்த கார் கொஞ்சம்கூட வேகம் குறையாம ஸ்பீடா வந்து பொட்டேர்னு வண்டியில மோதுச்சு.

மோதுன வேகத்துல நானும் முன்னாடி உட் கார்ந்திருந்த என் பையனும் அந்தப் பக்கம் போய் தனியா விழுந்துட்டோம். கொஞ்ச நேரம் எதுவுமே புரியலை. 'நாம செத்துட்டோம், நம்ம பொண்டாட்டி புள்ளை எல்லாம் அநாதையாகிடுச்சு'ன்னு தோணுச்சு. கண்ணைத் திறந்தா, பையன் தலையில் அடிபட்டு என் பக்கத்துலயே கிடக்கான். பொண் டாட்டியையும் குழந்தையையும் காணலை. எதிர்ல பார்த்தா எங்களை மோதின காரோட டாப்ல என் மனைவியும் குழந்தையும் கிடக்காங்க. கார் நிக்காமப் போய்க்கிட்டே இருக்கு. என் வண்டி காருக்கு இடை யில மாட்டிக்கிட்டு ரோட்டுல இழுபட்டுக்கிட்டே போகுது. வண்டியில இருந்து நெருப்பு பறக்குது. காருக்கு மேல கிடந்த என் மனைவி அப்படியே வழுக்கிக்கிட்டு காரோட பின்பக்க டிக்கிக்கு வந் துட்டா. குழந்தை மட்டும் காரோட டாப்ல கிடக்கு. ஒரு கையால குழந்தையைப் பிடிச்சுக்கிட்டு தானும் கீழே விழாம என் மனைவி தள்ளாடிக்கிட்டு இருக்கா. ரோட்டுல போற, வர்றவங்க எல்லாரும் கத்துறாங்க. ஆனா, அப்பவும் அந்த கார் கொஞ்சம் கூட வேகம் குறையாம தாறுமாறா போய்க்கிட்டு இருக்கு. நான் கத்தினதைப் பார்த்துட்டு யாரோ ஒருத்தர் என் பையனை ஒரு ஆட்டோவுலயும், என்னை ஒரு ஆட்டோவுலயும் ஏத்தி, கார் போன ரோட்டுலயே அனுப்பிவெச்சார். கிட்டத்தட்ட 1 கி.மீ. தூரம் போய்ப் பார்த்தா அங்கே ஒரு பிளாட்ஃபாரத்துல கார் மோதிக் கிடக்கு. என் மனைவியும் குழந்தையும் கீழே விழுந்து அடிபட்டுக் கிடக்காங்க" - உதடுகள் துடிக்க விவரிக்கிறார் உமாபதி.

இவர்களை மோதிவிட்டு நிற்காமல் பறந்த கார், கொஞ்ச தூரத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த கண்ணன் என்பவரை மோதித் தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தது. காரின் மீது ஒரு பெண் ணும் குழந்தையும் பதறித் துடிப்பதைப் பார்த்ததும் இளைஞர்கள் சிலர் டூ-வீலரில் காரைத் துரத்தி இருக் கின்றனர். அதில் ஒருவர் வேகமாக வந்து காரின் மீது இருந்த குழந்தையை மட்டும் லாகவமாகத் தூக்கி காப் பாற்றிவிட்டார். அதன் பிறகும் நிற்காத கார், கடைசி யில் ஆவடி டேங்க் ஃபேக்டரி அருகே இருந்த பிளாட்ஃபாரத்தில் மோதி நின்றது. டமால் என்று மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டார் கண்ணகி. பெருங்கூட்டமாக ஓடிவந்த மக்கள் கோபத்தில் அந்தக் காரை அடித்து தலைகுப்புறக் கவிழ்த்தார்கள்.

கடுமையான போதையில் காரை ஓட்டியவர், திருநின்றவூர் வளர்மதி நகரைச் சேர்ந்த சிவா என்ற இன்ஜினீயர். அவருடன் வேப்பம்பட்டைச் சேர்ந்த ரமணா என்பவரும் காரில் இருந்திருக்கிறார். மக்க ளின் கோபத்தில் சிக்கி அடித்து நொறுக்கப்பட்ட இவர்கள் இப்போது சிறையில் இருக்கின்றனர்.

"அவங்க பாட்டுக்கும் போதையைப் போட்டுட்டு மோதிட்டுப் போயிடுவாங்க சார். நான் குடும்பத்தோடு அடிபட்டுக்கிடக்கேன். ஏதோ ஹெல்மெட் போட்டுஇருந்ததால், உயிர் தப்பிச்சேன். என் பொண்டாட்டிக்கு உடம்பு முழுக்க எலும்பு முறிவு. ரெண்டு குழந்தைகளுக்கும் தலையில அடி. எனக்கு கால், இடுப்பு, முதுகு எல்லா இடத்துலயும் அடி. எல்லோரையும் அட்மிட் ஆகச் சொல்றாங்க. எல்லோரும் ஆஸ்பத்திரியில இருந்தா ஒண்ணும் பண்ண முடியாதே. அதான் மத்தவங்களைச் சேர்த்துட்டு நான் மட்டும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கலாம்னு இருக்கிறேன்.

நான் கார்பென்டர் வேலை பார்க்குறேன் சார். வேலைக்குப் போனாத்தான் அன்னிக்கு சாப்பாடு. இடிச்சுத் தள்ளிட்டு அவங்க பாட்டுக்கும் போயிட்டாங்க. இதுவரைக்கும் யாரும் என்னான்னுகூட எட்டிப் பார்க்கலை. இருக்கிற நிலைமையைப் பார்த்தா இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஆஸ்பத்திரி யைவிட்டு எங்கேயும் போக முடியாதுபோல. என்ன பண்றதுன்னு புரியலை" - வேதனையின் சொற்கள் வெளிப்படுகின்றன உமாபதியிடம் இருந்து.

இப்போது, இந்த நிமிடம்கூட எத்தனையோ பேர் உடல்கொள்ளாப் போதையுடன் 'அதெல்லாம் போயி டலாம்' என டூ-வீலரையோ, காரையோ ஓட்டத் தொடங்கி இருப்பார்கள்.

போதை... ஏதும் அறியா அப்பாவிகளின் வாழ்க்கை யையும் சிதைக்கிறது என்பதை உணர்வீர்களா?

நன்றி: விகடன்

பாரதி தம்பி
படம்: 'ப்ரீத்தி' கார்த்திக், ஓவியங்கள்:ஹரன்

1 comment:

சி.பி.செந்தில்குமார் said...

போதை அழிவின் பாதை.குடி உயிரைக்குடி.இந்த தத்துவத்தை வெச்சு உபயோகமா ஒரு பதிவு