‘தர்மபுரி பஸ் எரிப்புக்கு ஈடான பயங்கர சம்பவம்’ குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் விஜயகாந்த் ஆவேசம்.
சென்னை, மே 10: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: மதுரையிலும் மற்ற இடங்களிலும் திமுகவினர் நடத்திய திட்டமிட்ட வன்முறைகள் நம்மை திடுக்கிட வைத்துள்ளது.
மதுரை தினகரன் அலுவலகம், சன் தொலைக்காட்சிஅலுவலகமும் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்த கும்பல், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது. அலுவலக ஊழியர்கள் வெளியே வரமுடியாமல் 3 பேர் தீக்கிரையாகி உள்ளனர். தங்களை காப்பாற்றச் சொல்லி அவர்கள் கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர்.இச்சம்பவத்தில், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வன்முறையாளர்களுக்கு பயந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுக்கடங்காத கலவரத்தைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து வீட்டுக்குள் ஓடிஒளிந்துள்ளனர். மதுரை மாநகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. கண்ணகி மதுரையை எரித்ததை நாம் கண்டதில்லை. ஆனால், மதுரையை அழகிரி எரித்ததை இன்று தமிழ் மக்கள் அனைவரும் கண்கூடாக கண்டுள்ளனர். மதுரை நகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும்கூட, அவற்றின் கைகள் யாரால் கட்டப்பட்டு இருந்தன என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர். இன்றைய வன்முறை வெறியாட்டத்துக்கு பிறகு, மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு எவ்வாறு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோல் இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத்தண்டனை வழங்கினால்தான், சட்டம் தன் கடமையைச் செய்ததாக அர்த்தமாகும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment