.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, May 16, 2007

மத்திய அமைச்சராக ராதிகா செல்வி 'புரோட்டோகாலை' (விதி) மீறிய தமிழக அரசு.

'புரோட்டோகாலை' (விதி) மீறிய தமிழக அரசு


சென்னை: மத்திய அமைச்சராக ராதிகா செல்வி பதவியேற்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது 'புரோட்டோகாலை' (விதி) மீறிய செயல் என கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் யாரேனும் பதவியேற்பதாக இருந்தால் அதுகுறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகைதான் வெளியிடும். ஆனால் புதிய மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராதிகா செல்வியின் பதவியேற்பு குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

18ம் தேதி காலை 9.30 மணிக்கு ராதிகாசெல்வி பதவியேற்பார் என்றும் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட வேண்டிய ஒரு அறிவிப்பை, அத்துமீறி தமிழக அரசு வெளியிட்டது தவறு, இதன் மூலம் புரோட்டோ காலை தமிழக அரசு மீறி விட்டது என்று கூறப்படுகிறது.

சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியுமான ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்கிறார்.

மத்திய அமைச்சரைவயில் நேற்று முக்கிய மாற்றங்கள் நடந்தன. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பு ஏ.ராசாவுக்கு மாற்றப்பட்டது. அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையை பிரதமர் தன் வசம் வைத்துக் கொண்டார்.

உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதி, வனத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டார்.

இதுதவிர புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி நியமிக்கபப்ட்டுள்ளார். தயாநிதி மாறன் ராஜினாமாவில் குறைந்த ஒரு இடத்தில் ராதிகா செல்வி சேர்க்கப்பட்டுள்ளார். இணை அமைச்சராக அவர் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இவருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.
கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி, சென்னையில் போலீஸாரால் எண்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவிதான் ராதிகா செல்வி.

பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரை அப்படியே திமுக இழுத்துக் கொண்டு திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் நிறுத்தியது. ராதிகா வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் நாடார் சமுதாயத்தினரின் ஓட்டுக்களும் கணிசமாக திமுகவுக்குத் திரும்பியது. ராதிகாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நாடார் சமூகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக தலைமை அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் நாடார் சமூகத்தினர் இடையே திமுக மீது அதிருப்தி நிலவி வந்தது.
இந்த அதிருப்தி அலையைப் பயன்படுத்தித்தான் சரத்குமார் புதிய கட்சி தொடங்குவதற்கான அடிப்படை வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்த நிலையில்தான் சரத்குமாருக்கு செக் வைக்கும் விதமாக ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பேன்: ராதிகா

இதற்கிடையில் முதல்வர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன் என மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டள்ள ராதிகா செல்வி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்தில்லை.
மத்திய அமைச்சர் பதிவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என அவர் கூறினார்.

No comments: