.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, May 26, 2007

வரிந்து கட்டும் சங்கராச்சாரியார்கள்!

வரிந்து கட்டும் சங்கராச்சாரியார்கள்!

சங்கராச்சாரியார்கள் நால்வர் பெங்களூரில் கூடி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்பற்றி விவாதித்தனராம். இதுபற்றி துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த ஜி மகராஜ் கூறியுள்ள கருத்து 'தினமணி'யில் வெளிவந்தது (சென்னை, 24.5.2007, பக்கம் 5) அச்செய்தி வருமாறு:

'ஆதிசங்கராச்சார்யர் ஏற்படுத்திய நான்கு பீடங்களின் சங்கராச்சாரியார்கள் கூட்டம் பெங்களூரில் அண்மையில் நடந்து முடிந்தது.
இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை. பாலத்தை இடிப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும். அப்படியிருந்தும் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.
இதுபோல் நான்கு சங்கர மடத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம். பாலத்தை இடிக்காமல், வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபணை இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். இந்தப் பாலத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புகைப்படம் எடுத்துள்ளது. ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.

இந்திய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களிலும் இந்தப் பாலம் இன்னும் வலுவுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கடலுக்கு அடியில் 6 அடி கீழே இது கட்டப்பட்டுள்ளது. அதிக குளிர்ச்சி நீரையும், அதிக வெப்ப நீரையும் தாங்கக் கூடியது இந்தப் பாலம். இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பாலத்தை இடிக்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் நாட்டுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறார் மத்திய அமைச்சர் பாலு.''
இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டத்தை முடக்குவதற்கு அறிவு ஆராய்ச்சிக்கு முன் நிற்க முடியாத புராண இதிகாச மூட நம்பிக்கை சமாச்சாரத்தைக் கொண்டு வந்து குறுக்கே போடுகின்றனர் சங்கராச்சாரியார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமா - அதுவும் இந்து மதம் என்றாலே முழுக்க முழுக்கப் புராணக் குப்பைகள்தானே? நவீன அறிவியல் உலகத்தில் இந்தப் புராணங்கள் எல்லாம் காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை, இல்லையென்றால், கொளுத்தப்பட வேண்டியவைகளே தவிர, பின்பற்றப்பட வேண்டியவையல்ல.

பூமியை பூமாதேவியென்றும், தண்ணீரைக் கங்காதேவியென் றும், காற்றினை வாயு பகவான் என்றும் கூறும் இந்து மடாதிபதிகள், பூமி மீது கால்வைத்து நடக்கலாமா? பூமிமீது மல ஜலம் கழிக்கலாமா? என்ற எளிமையான கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டுமே!

இரண்டாவதாக உண்மைக்கும் மாறான தகவல்களைத் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானக் கூடம் ராமன் பாலம் இருப்பதாகக் கூறுகிறது என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யையே திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

நாசா இணைய தளத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். ராமன் பாலம் என்றோ, 17 லட்சம் ஆண்டு களுக்கு முற்பட்டது என்றோ எந்த இடத்திலும் அவர்கள் சொல்ல வில்லை.

'இன்டோலிங்க் காம், வைஷ்ணவ நிறுவன நெட் ஒர்க்' என்னும் பார்ப்பன அமைப்பு ஒன்று நாசா கூறியதாகத் தவறான தகவலைத் தந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு இத்தகு அமைப்புகள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் ராமனால் கட்டப்பட்டது இந்த பாலம் என்று கதைக்கிறார்களே - -பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் இருந்தானா என்பதற்கு முதலில் பதில் கூறட்டும்!

இன்றைக்கு மத்திய அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலுமீது சேற்றைவாரி இறைக்கும் இந்தச் சங்கராச்சாரியார்கள் அமைச்சரைச் சந்தித்து, ராமன் பாலம் குறித்து விளக்கம் பெற்று, அதனை ஏற்றுக் கொண்டனர் என்கிற செய்தி இதற்கு முன் வெளிவந்ததே! இந்த நிலையில் அமைச்சர்மீது அவதூறு பேசுவதும், ராமன் பாலம் பற்றிப் பேசுவதும் அறிவு நாணயம்தானா?

இவர்கள் நீதிமன்றம்தான் போகட்டும், வீதிமன்றம்தான் வரட்டும், அவர்களை அந்தந்த இடத்தில் சந்திக்க தமிழ்நாட்டு மக்களும் தயார்! தயார்!!

நன்றி: விடுதலை நாளிதழ் 25-05-2007

No comments: