.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, May 25, 2007

மதுவைத் தேடிச் சென்றவர்கள் மரணத்தைத் தழுவிய பரிதாபம்! த.மு.மு.க-வின் அவசரகால மீட்புப்பணி குழு உடனடி மீட்புப் பணியில்!!



மதுவைத் தேடிச் சென்றவர்கள் மரணத்தைத் தழுவிய பரிதாபம்!த.மு.மு.க-வின் அவசரகால மீட்புப்பணி குழு உடனடி மீட்புப் பணியில்!!


திருப்பூர், மே 24-மதுக்கடை பார் மீது பனியன் நிறுவன காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் வெளிமாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்த கூலித் தொழிலாளர்கள். சரியான அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டதால்தான் சுவர் இடிந்து விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கலைவாணி தியேட்டர் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு கடையை ஒட்டியுள்ள பாரில் 50-க்கும் மேற்பட்டோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அந்த பார், 60 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் மது குடித்து முடித்த பலரும் வெளியே போக முடியாமல் பாரிலேயே இருந்தனர்.
பாரின் ஒரு பக்கத்தில் தனியார் பனியன் கம்பெனியின் 22 அடி உயர காம்பவுண்ட் சுவர் இருந்தது. இது, 400 அடி நீளத்தில் முற்றிலும் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. மழை பெய்தபோது திடீரென்று சுவர் இடிந்து பாரின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்தது. பாரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி மண்ணோடு மண்ணாக அமுக்கப்பட்டனர். மழைக்கு பயந்து நுழைவாயிலில் ஒதுங்கியிருந்தவர்கள் சத்தம் கேட்டு அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த பொதுமக்களுடன் த.மு.மு.கவின் அவசரகால மீட்புப்பணிக் குழு உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மனித நீதி பாசரையைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மழையுடன் மின்தடையும் ஏற்பட்டதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.


தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் விரைந்து வந்து ராட்சத விளக்குகளை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. மூலம் கற்கள் அகற்றப்பட்டன. இரவு ஒரு மணி வரை மீட்புப் பணி நடந்தது. இடிபாடுகளில் சிக்கி 27 பேர் பலியாகிக் கிடந்தனர். அவர்களின் உடல்கள் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. படுகாயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சண்முகசுந்தரம் என்பவர் சிறிது நேரத்தில் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிகம் தங்கி வேலை செய்கின்றனர். மதுரை, தேனி உள்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று நடந்த பார் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலோர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இறந்தவர்களில் 20 பேரின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அஸ்திவாரம் உறுதியாக இல்லாததால்தான் அதிக எடை கொண்ட கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவர், இடிந்து விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து விசாரிக்க டி.எஸ்.பி. குழந்தைசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாரின் உரிமையாளர் கந்தசாமி, பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கந்தசாமி கைதானார். பார் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் அமையவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 பேர் மீது வழக்கு திருப்பூரில் பார் மீது சுவர் இடிந்து விழுந்து 28 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் கந்தசாமி, பனியன் கம்பெனி உரிமையாளர் சுப்பிரமணியம் ஆகியோர் மீது திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கந்தசாமி ஏற்கனவே கொலை வழக்கில் 3 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.50 ஆயிரம் நிதிஉயிரிழந்த 28 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.15 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

No comments: