.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, September 16, 2010

போலீஸ் ட்ரீட்மென்ட் பிளஸ் என்கவுன்டர்

அலறும் அவஸ்தைக் குடும்பங்கள்!

மிச்சம் இருக்கும் எங்களை நிம்மதியா இருக்கவிடக்கூடாதா?

நன்றி: ஜூவி

போலீஸ் ட்ரீட்மென்ட்' என்ற வார்த்தை பல சந்தர்ப்பங்களில் நடுக்கத்தோடு உச்சரிக்கப்படும். விதம் விதமான காக்கி சித்ரவதைகளை அனுபவித்தவர்கள் ஒரே இடத்தில் கூடி அதை வாக்குமூலமாகச் சொன்னார்கள். கேட்கும்போதே நெஞ்சு நடுங்கிவிட்டது.

மதுரை ஹென்றி டிஃபேனின் 'மக்கள் கண்காணிப் பகம்' அமைப்பு, சென்னையில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்கள் மற்றும் காவல் நிலைய விசாரணை களின்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், போலீஸ் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் கலந்துரை யாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் மதுரை அருளானந்தம் பேசினார்...

''என் மச்சினன் முருகன் மீது சில வழக்குகள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம், அவனைப் பிடித்துத் தரும்படி சொல்லி என்னையும், என் மனைவி தனலட்சுமியையும் போலீஸ் நிலையம் கொண்டுபோய் டார்ச்சர் தந்தனர். ஸ்டேஷன்ல வெச்சு, பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க. நாங்க ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சு, போலீஸ்கிட்ட முருகனே பேசினான். அப்போ, 'நான் என்ன தப்பு செஞ்சேன்? எதற்காகத் தேடுறீங்க, ஏன் அவங்களை கஸ்டடியில வெச்சிருக்கீங்க?'ன்னு முருகன் கேட்டிருக்கான். போலீஸ்காரங்க, 'உன்கிட்ட சின்ன விசாரணை இருக்கு. வந்துட்டுப் போ'ன்னு கூப்பிட... அடுத்த நாள் முருகன் வந்ததும்தான், எங்களை அனுப்பினாங்க.

அடுத்த ரெண்டு நாள் அவனை அடிச்சு, உதைச்சு, சித்ரவதை செஞ்சாங்க. அவன் சுய நினைவை இழந்துட்டான்.

திடீர்ன்னு ஒரு நாள் மதுரை தெப்பக்குளத்துக்குக் கொண்டுபோய் முருகனையும் கவியரசுவையும், என்கவுன்ட்டர்னு சொல்லி சுட்டுட்டாங்க. என் மாமியார் (முருகனின் அம்மா) குருவம்மா, 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்புல இதுபத்தி புகார் கொடுத்தாங்க. அவங்க இந்த உண்மையை சொல்ல ஒரு பிரஸ்மீட் வெச்சாங்க. இந்தத் தகவல் அப்படியே பத்திரிகைகளுக்குப் போனதால், போலீஸ§க்குக் கோபம். திரும்பவும் போலீஸ் டார்ச்சர்... மனைவி தனலட்சுமியை தங்கத் தோடு திருடியதா அரெஸ்ட் பண்ணி, ஜெயில்ல போட்டாங்க. என் மாமியாரை, 'நீ உடனடியா மதுரையைவிட்டு வெளியே போ'ன்னு தொந்தரவு பண்றாங்க. முருகனைத்தான் கேட்பார் இல்லாம கொன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு மிச்சம் இருக்கிற எங்களையும் நிம்மதியா விட மாட்டேங்கிறாங்களே!''

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி கமலா: ''அவங்களை என்கவுன்ட்டரில் கொல்லப்போறதா தகவல் கிடைச்சதும் நாங்க கர்நாடக மாநிலம் பெல்லாரி பக்கம் தலைமறைவு ஆயிட்டோம். ஆனா, எப்படியோ விஷயம் தெரிஞ்சு, தமிழக போலீஸ் அங்கே வந்தது. அங்கே இருந்து தப்பி ஹோஸ்பெட் போனோம். நானும் கணவரும் செல்போனில் பேசியதை வெச்சு டிரேஸ் செய்து போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சிடுச்சு. ஜூலை 31-ம் தேதி வரை அவங்க கர்நாடகாவில்தான் இருந்தாங்க. ஆனா, அடுத்த நாள் காலையில தமிழ்நாட்டில் அவங்களை சுட்டுக் கொன்னதாத் தகவல் வந்தது.

இதன் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கு. அவர் வற்புறுத்தலால்தான் பெரிய போலீஸ் அதிகாரியே நேரில் வந்து இந்த என்கவுன்ட்டரை பண்ணினாரு. இது தொடர்பா கேஸ் போட்டிருக்கோம். நாங்க நிச்சயம் ஜெயிப்போம்!''

செங்கோட்டையைச் சேர்ந்த அய்யப்பன்: ''மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும், உரிமையைப் பெற்றுத்தர நான் போராடுவதால், உள்ளூர் போலீஸ§க்கு என் மீது கோபம். கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி என்னைக் கைது செய்து, இரவு 11 மணி முதல் 3 மணி வரை அடித்து உதைச்சாங்க. அப்புறம், செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினாங்க. அதுக்கு முன்னாடி அரசு டாக்டர் ஒருத்தர்கிட்ட என்னைக் காட்டி, நல்லா இருக்கிறதா சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டாங்க. ஆனால், நான் மாஜிஸ்திரேட்கிட்ட நடந்ததைச் சொல்லி, காயங்களைக் காட்டினேன். போலீஸ் அந்த போலி சர்ட்டிஃபிகேட்டை மாஜிஸ்திரேட்கிட்ட கொடுக்க... அவர் ஏற்க மறுத்து, அந்த டாக்டர் உடனடியாக ஆஜராகணும்னு உத்தரவிட்டார். டாக்டரிடம், 'போலீஸ் என்ன சொன்னாலும் அப்படியே செய்வீங்களா?'ன்னு கேட்டுத் திட்டினார். பின்னர் எனக்கு மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவிட்டார். அதுக்கப்புறம் ஜாமீனில் வந்தேன்.

ஆனாலும் தொடர்ந்து போலீஸ் டார்ச்சர். பயந்து சொந்த ஊருக்கே போகவில்லை. என் குழந்தை என்னைப் பார்க்கணும்னு அழுவதாக மனைவி செல்போனில் சொன்னார். 'போய்ப் பார்க்கலாமே' என்று போனேன். வீட்டுக்குப் போன அஞ்சாவது நிமிஷத்திலேயே போலீஸ் வந்து, கைது செஞ்சது. இப்போ, வெளியில் வந்த பிறகும் தொடர்ந்து டார்ச்சர்தான்...''

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சித்ரவதை அனுபவங்களைச் சொல்லி முடிக்க, ஹென்றி டிஃபேனிடம் பேசினோம், ''தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் 25 போலி என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. காவல் நிலைய மரணங்கள் 46 நடந்திருக்கு. இப்படி பலவித சித்ரவதைகள் தமிழ்நாட்டில் நடந்துட்டு இருக்கு. இதைத் தடுப்பதற்கு முறையான சட்டம் வேண்டும்!'' என்றார் அவர்!

- பா.பிரவீன்குமார்
படங்கள்: வி.செந்தில்குமார்

No comments: