வாடகை மனைவி!
நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்!!
தமிழகத்தின் குடும்பயியலை குழிதோண்டி புதைக்கும் இழிகலாச்சாரத்தை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு??
சமூக நலன் கருதி தட்டிக் கேட்க சமுதாய அமைப்புகள் முன் வருமா???
நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்!!
தமிழகத்தின் குடும்பயியலை குழிதோண்டி புதைக்கும் இழிகலாச்சாரத்தை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு??
சமூக நலன் கருதி தட்டிக் கேட்க சமுதாய அமைப்புகள் முன் வருமா???
வாயில் குதப்பிய வெற்றிலை, சாயம் போன ஜிப்பா, அக்குளில் ஒரு தோல் பை, அதற்குள் கசங்கிய ஆல்பம்..! இப்படித்தான் சில தமிழ் சினிமாக்களில் நாம் அந்தத் தொழிலின் 'புரோக்கர்'களைப் பார்த்திருப்போம்.
வாடகை மனைவிகளைப் பேசி அமர்த்தும் ஓர் இடைத்தரகரைப் பார்த்தபோது அசந்தே நின்றுவிட்டோம். அவருடைய காரும், பேரும், ஊருமெல்லாம் வேண்டாம். ஆனால், அவர் மீது வீசியது ஹைகிளாஸான வெளிநாட்டு பர்ஃபியூம். அவரே பார்ப்பதற்கு சினிமா ஹீரோ கணக்காக இருந்தார். அவர் கையோடு கொண்டுவந்த 'லேப்-டாப்'பை க்ளிக் செய்தபோது, 'பவர் பாயின்ட் பிரஸன்டேஷன்' பாணியில் அடுத்தடுத்து சில குடும்பத் தலைவிகளின் புகைப்படம் மற்றும் விவரங்கள்.
''நமக்குத் தெரிஞ்ச இன்னொருத்தர், ஃபேமிலி கேர்ள்ஸை அப்படியே வெப் கேமரா முன்னாடி பேசச் சொல்லி, இப்படி அப்படி நடக்கச் சொல்லி, அவங்களோட வீட்டில் ஒரு குடும்பத் தலைவியாக வளைய வர்ற காட்சிகளையும் அப்படியே பதிவு செஞ்சு வெச்சுருவாரு. கஸ்டமர்களுக்கு போட்டுக் காட்டும்போதே ஒருவித 'கிக்' ஆயிடும். வரிசையா பொண்ணு பார்க்கிற மாதிரி வீடு வீடா கூட்டிட்டுப் போயி காட்ட வேண்டாம் பாருங்க. லேப்-டாப் வீடியோவைப் பார்த்து நேரடியா ஒருத்தரை செலக்ட் பண்ணிக்கிட்டா... ஜோலி முடிஞ்சுது, இல்லையா?" என்றார், நாம் சந்தித்த 'லேப்-டாப்'பர்!
எப்படியோ போராடி அப்படியரு லேப்-டாப் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றோம். நம்மையும் ஒரு தொழிலதிபராகவே கூறியிருந்ததால், குறிப்பிட்ட அந்த இடைத்தரகர் வரிசையாக, ஆர்வ மாகப் போட்டுக் காட்ட ஆரம்பித்தார்.
எடுத்த எடுப்பிலேயே கம்பீரமாக காட்டன் புடவை உடுத்தியபடி எதிரில் இருந்த யாரிடமோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் காட்டினார். வீட்டுக்கு வந்திருக்கும் யாரோ ஒரு விருந்தினரிடம் பேசுவதும், இடையில் எழுந்துபோய் அவருக்கு ஒரு தட்டில் பிஸ்கட்கள் கொடுப்பதும் அதில் தெரிந்தது. இன்னொரு அறையிலிருந்து டீக்காக உடுத்தியபடி வெளியில் வந்த மனிதர்40-களில் இருந்தார். ''மேடத்தோட ஹஸ்பெண்ட்..." என்றார் இடைத்தரகர். வெளியில் கிளம்புவதாகச் சொல்லி விட்டுப் புறப்படுகிறார் அந்தக் கணவர். அதோடு காட்சி முடிகிறது.
''இந்த மேடம் ரொம்ப ஹோம்லி, சாஃப்ட்டான டைப்! டெலிகாம்ல நல்ல வேலை. பொதுவா, நார்த் இந்தியாவுல இருந்து வர்றவங்களை மட்டும் மாசக் கணக்குல ரேட் பேசி புக் பண்ணிப்பாங்க. மேடம் ரெகுலரா வேலைக்கும் போய்க்கிட்டு இருப்பாங்க. பிசினஸ் புள்ளிகளுக்கும் இங்கே பகல் நேரத்துல அவங்க வந்த வேலை சரியா இருக்கும்தானே... தினமும் சாயங்காலம் ஆனா தன்னோட சொந்த வீட்டுக்கு வர்ற மாதிரியே மேடம் வீட்டுக்குப் போயிடுவாரு!" என்று விவரித்துக்கொண்டே போனார் இடைத்தரகர்.
யார் பார்த்தாலும் சட்டென்று தப்பாகவே தெரியாத வண்ணம் அந்த சாம்பிளை எடுத்திருப்பது புரிந்தது. அந்த வீட்டையும் தனி க்ளிப்பிங்காக வைத்திருந்தார். ''தங்குறவங்களுக்கு வீடும் புடிக்கணுமில்லையா?" என்று கேட்டு அயர வைத்தார் நம்மை!
வீடியோ காட்சியில் விரிந்த அந்த வீட்டின் வாசலில்... குட்டை குட்டையான குரோட்டன்ஸ் செடிகள் அழகாய் வெட்டப்பட்டிருக்க, பெயர் தெரியாத ஏதோ ஒரு பூச்செடிகள் நீல நிறத்தில் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை அழகாக்கி வைத்திருந்தன. கேமரா அப்படியே உள்ளே நுழைய, வீட்டு ஹாலின் நடுநாயகமாக ஒரு உருளியில் அழகான ரோஸ் நிற செம்பருத்திப் பூக்கள் நீரில் பரப்பப்பட்டிருக்க, உருளிக்கு அருகில் கலைநயமிக்க சின்ன டேபிளில் மரத்தாலான நர்த்தன விநாயகர் சிலை!
இப்படிப் போகிற அந்தக் காட்சியிலும் வக்கிரமாக எதுவுமே இல்லை.
''இந்த மேடத்தோட ஹஸ்பெண்ட் பார்த்தீங்களே... அவரும் கோவை பக்கத்துல ஒரு காலேஜ்ல லெக்சரரா இருக்கார். கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லை. முதல்ல இவங்க டிபார்ட்மென்ட்ல ஒரு சின்னப் பையனோட பழக்கம் வந்துச்சு. ஹஸ்பெண்ட் கண்டிச்சாரு போல. பெரிசா சண்டை ஆயிடுச்சு. மேடம் பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர் உலகத்துக்கு பயந்து லெக்சரரே போயி மேடத்தைத் திரும்பவும் கூட்டிவந்து வச்சுக்கிட்டாரு. அதுக்கப்புறம்தான் மெதுமெதுவா இன்னொரு லேடி மூலமாக நமக்கு அறிமுகம் ஆனாங்க. புருஷன்-பொண்டாட்டி ரெண்டு பேருமே சீக்கிரமா ஒரு அண்டர்ஸ்டாண்டிங்குக்கு வந்துட்டாங்க. சும்மாங்களா... போன வருஷம்கூட ரெண்டு பேருக்கும் ஃபுல்லா யூரோப் டூருக்கு நம்ம கஸ்டமர் ஒருத்தரே ஏற்பாடு பண்ணாருங்களே..!" என்று சிரித்தார் இடைத்தரகர்.
நமக்குத் தடதடவென்று உடம்பு உலுக்கிப் போட்டது. அப்படியரு முகம்... அப்படியரு நடை உடை பாவனையில்... 'இவர்களா இப்படி!' என்ற படுகௌரவத் தோற்றத்தில் இருந்தார்கள் அந்தப் பெண்மணியும் கணவரும்.
இதே போன்ற பிசினஸில் சில மாதங்கள் இருந்து விட்டு, தற்போது அது பிடிக்காமல் ஒதுங்க நினைக்கும் ராஜன் என்பவரையும் நாம் இதே லிங்க்கை வைத்து சந்தித்தோம்.
கரூர் காந்தி கிராமத்தில் உள்ள ஒரு பெண்மணியின் கதையை அவர் சொன்னபோது, வேதனையாக இருந்தது.
''கரூர் பக்கத்துலதான் அதோட ஊர். அப்பா கிடையாது, அம்மா மட்டும்தான். அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோகவும் சித்தி வீட்டுல இருந்துதான் டிகிரி முடிச்சிது. அப்பத்தான் பஸ்ல போறப்ப, வர்றப்ப ஒரு பையனை பார்த்து லவ் பண்ணியிருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பனியன் கம்பெனியில சூபர்வைஸரா மாசம் நாலாயிரம் சம்பளம் வந்துச்சு அந்தப் பையனுக்கு. அதை வெச்சு எதுவுமே செய்யமுடியாத நிலையில்தான் தன்கூடப் படிச்ச கோயம்புத்தூர் பொண்ணு ஒருத்தி மூலமா இந்த விஷயம் தெரிஞ்சுகிட்டு, அப்ரோச் பண்ணுச்சு. இப்ப அது ரேஞ்சுக்கு மாசம் குறைஞ்சது இருபதாயிரம் ரூபாயாச்சும் கிடைக்குது!" என்றவரிடம், ''காதல் கணவர் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்?" என்றோம்.
''காதல் - கத்தரிக்காயெல்லாம் கல்யாணம் ஆன கொஞ்ச காலத்துக்குதான் சார். அதுக்கப்புறம் ஒவ் வொரு ஆம்பளைக்குள்ளே இருக்கிற ஒவ்வொரு மைனஸா வெளியில வருது. இந்த பையன் செமத்தியா குடிப்பான் போல. காசு கிடைக்குதுன்னதும் மெதுமெதுவா புரிஞ்சு, அமைதியாயிட்டான்! கான்ட் ராக்ட்ல தங்குற ஆளுங்க வீட்டுக்குள்ள இருக்கிற நேரத்துல, தண்ணியடிச்சிட்டு வந்து தகராறு பண்ணக் கூடாது... அது மட்டும்தான் அவனுக்கு கண்டிஷன்!" என்றார் ராஜன் சாதாரணமாக!
இந்த விவகாரம் குறித்து நமக்கு முதல் க்ளூ கொடுத்த, கடந்த இதழில் கட்டுரையின் ஆரம்பத்தில் நம்மோடு பேசிய கோவிந்தன் என்ன சொல்கிறார்?
''எங்க டிரஸ்ட் சார்பா நாங்க கள ஆய்வு செஞ்சப்ப - காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களில்தான் இந்த 'வாடகை மனைவி' கலாசாரம் படுவேகமாகப் பரவுவது புரிந்தது. இந்த நகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொழில்துறை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டவை. வெளி மாநில ஆட்கள் வந்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தங்கி தங்கள் பிசினஸை கவனிக்கும் இடங்கள். இந்த நகரங்களில் வசிக்கும் ஒரு சில வில்லங்க விபசார புரோக்கர் களின் புத்தியில் உதித்ததுதான் இந்த 'வாடகை மனைவி' கான்செப்ட். இந்த ஊர்களில் இருக்கும் விபசார புரோக்கர்கள் பணத் தேவையிலோ, பணத்தாசையிலோ உள்ள தம்பதியை வெகு அழகாகப் பேசி இதற்கு வளைக்கிறார்கள்.
பெரும்பாலும், பெண்களை மட்டுமே முதலில் சந்திக்கும் இந்த கும்பல், தங்களது ஆசை வலையை பக்குவமாக விரிக்கும். சிக்குபவர்கள் முதலில் கணவருக்குத் தெரியாமல்தான் இதில் இறங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் விஷயம் தெரியும்போது, குடும்ப மானத்துக்கு பயந்து சகித்துக்கொள்ளும் முடிவுக்கு வரும் கணவர்கள், காலப்போக்கில் இதை வருமான வழியாகவே பார்க்க ஆரம்பித்து, முற்றிலுமாக சும்மா இருந்துவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் மட்டுமின்றி, அவருடைய கணவரும் பிசினஸ் புள்ளியை நேரில் பார்த்துப் பேசி சம்மதித்தால்தான் 'கான்ட்ராக்ட்' ஓகே ஆகும் என்கிற இடங்கள்கூட உண்டு!" என்ற கோவிந்தன்,
''இரண்டு காரணங்கள்தான் இந்த கலாசாரச் சீரழிவுக்கான காரணிகள். ஒன்று... மாறிவிட்ட நமது கலாசாரப் பழக்கவழக்கம். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளும் நம்மில் பலர், குடும்ப தாம்பத்ய விஷயத்திலும் மெள்ள மெள்ள மேற்கத்திய நாகரிகத்துக்கு மாறத் தொடங்கியிருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.
இன்னொரு காரணம்... அளவுக்கதிகமான பணத்தாசை. முன்பெல்லாம் வீடுகளில் ஒரு டி.வி. இருப்பதே அதிசயமாக இருக்கும். இப்போது ரூமுக்கு ஒரு டி.வி. என்றும் சின்ன கார் - பெரிய கார் என்று இரண்டு கார் இருக்க வேண்டும் என்றும் நடுத்தரக் குடும்பங்களே ஆசைப்படுகிற நிலைமை வந்துவிட்டது. அஞ்சாமல் கடன் வாங்குவது... அடைக்க முடியாமல் சிக்கித் தவிப்பது என்று பாடாய்ப் படும் குடும்பங்களைத்தான் இடைத்தரகர்கள் சுலபமாக இனம் கண்டு வளைக் கிறார்கள்.
இதெல்லாம் போக, 'பாதுகாப்பான உறவு' என்று சொல்லித்தான் பிசினஸ் புள்ளிகளை இந்த கான்ட்ராக்ட் விவகாரத்தில் வீழ்த்துகிறார்கள். ஆனால், ஹெச்.ஐ.வி. வராது என்ற உத்தரவாதம் இங்கும் கிடையாது. இவர்களுக்கெல்லாம் இதன் பாதிப்பு இப்போது தெரியாததால், விஷயம் பெரிதாக வெளியே வரவில்லை. இன்னும் நாலைந்து வருடங்கள் கழித்து இந்த பாதிப்பை உணர்ந்து, அப்போது அலறுவார்கள்.
இதன் விபரீதங்களை உணர்ந்து, இந்த மாதிரியான 'வாடகை மனைவி' கலாசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், அவர்களாகவே அதை விட்டு விலக வேண்டும். அரசாங்கமும் இந்த விபரீதத்தைக் கண்டுபிடித்து, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் கவுன்சிலிங்குகளை வழங்க வேண்டும். பாலியல் தொழில் செய்வோருக்குத் தரப்படுகிற எல்லாவிதமான விழிப்பு உணர்வையும் இது போன்ற பெண்களுக்கும் தந்தாக வேண்டும். இந்தக் கலாசாரச் சீரழிவை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால்... அது நினைத்துப் பார்க்கமுடியாத விபரீதங்களில் போய் முடியும்!" என்றார் கோவிந்தன்.
நன்றி: ஜூனியர் விகடன்
-மு. தாமரைக்கண்ணன்
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்
-மு. தாமரைக்கண்ணன்
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்
1 comment:
கிளுப்பா கிளுப்பா இருக்கு இந்த பதிவு அதுவும் உங்க பதிவோட லேபிள் ம்ம்ம்ம்ம்ம்ம்.
அந்த பத்திரிக்கையின் நோக்கமும் இந்த பதிவின் நோக்கமும் மக்களை எச்சரிக்கை படுத்துவதற்க்காக எழுதப்பட்டதல்ல,தலைப்பை பார்த்தவுடம் வாங்கி/வந்து படிப்பார்கள்.
தங்கள் நோக்கத்தை நிறைவேற்றியவர்களில் நானும் ஒருவன் ;)
Post a Comment