.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, September 17, 2008

தமிழக முதல்வர் கருணாநிதி முஸ்லிம்களின் பாதுகாவலரா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

தமிழக முதல்வர் கருணாநிதி முஸ்லிம்களின் பாதுகாவலரா?

ஒரு நபரை, ஒரு மாநிலத்தின் முதல்வரை விமர்ச்சனம் செய்வதென்றால் அவருடைய நிரைகளையும், குறைகளையும் இணைத்து சுட்டிக்காட்டுவதே தர்மம். அதனடிப்படையில் மற்ற ஆட்சியாளர்களைவிட தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலுள்ள இன்றைய ஆட்சி பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. பல புதிய தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் தமிழகத்திற்குள் கொண்டு வந்து புரட்ச்சி செய்துள்ளதென்பது உண்மை.



முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்.



இருப்பினும் தமிழகத்தை ஆண்ட எந்த ஆட்சியாளரும், தமிழக முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி, ஓரவஞ்சனைப் போக்கோடு நடத்தத் தவறியதில்லை என்பதே வரலாறு. அந்த வரிசையில் மற்றவர்களைவிட முஸ்லிம் சமூகத்திற்கு அதிகம் கடமைப்பட்டுள்ள தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், முஸ்லிம் சமூகத்திற்கு தொடர்ந்து பட்டை நாமம் போடுவதையும், முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி சட்டி சட்டியாக அல்வா கொடுப்பதிலும், முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதிலும் சாதனை படைத்துள்ளார் என்பதும் யாராலும் மறுக்க இயலாத பேருண்மை.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளுக்கடைகளின் மூலம் தமிழக அரசு வருட வருவாயாக பெற்றது 4750 கோடிகள். அதன்பின்னர் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆட்சியின் துவக்கத்தில் அது 8000 கோடியாக உயர்ந்து, இன்றைய நிலவரப்படி இது இன்னும் பரினாம வளர்ச்சி பெற்று குடிகாரர்களால் அரசுக்கு வரும் வருமானம் 10000 கோடிரூபாய்கள் என்று அறிகிறோம். இதில் குடிகாரர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் 10 வகையான புதிய சரக்குகளை அரசு டாஸ்மார்க் கடைகளில் அறிமுகப்படுத்துகிறார் முதல்வர் கருணாநிதி. எனவே வரும் ஆண்டுகளில் அரசுக்கு வருமானம் 12 கோடியைத் தாண்டும். பிறகு ரேசன் கடைகளில் 1 ரூபாய்க்கு 2 கிலோ அரசி என்று போட்டுவிட்டு மக்களை திசைதிருப்பிவிடுவார் கருணாநிதி. ஒரேயடியாக, அரசியோடு சேர்த்து குடிமக்களுக்கு சிரமமில்லாமல் ரேசன் கடைகளிலேயே சாராயத்தையும் ஊற்றிவிட்டால் இன்னும் விற்பனை அதிகமாகும், அரசு மேலும் இலாபமடையலாம். இப்படி நாட்டில் குடிகாரர்களை ஊக்குவித்து, தமிழக குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவருவதிலும் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் சாதனை சாதனை படைக்க நினைத்துவிட்டார் போலும்.


இதற்காகவேண்டியா உயிரைப் பணயம் வைத்து தேர்தல் பணியாற்றி பதவியில் நாம் அமர்த்தினோம்?. நினைப்பதற்கே வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. 'நான் சிறுபான்மை சமுதாயத்தின் பாதுகாவலன், முஸ்லிம்களின் உற்றதோழன். முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு தீங்கு என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நடைபெறும்' - இது எங்கோ கேட்ட குரலல்ல, நம் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் பழைய சூளுரைகள். கடந்த 1997ம் ஆண்டு கருணாநிதி அவர்களின் ஆட்சியில் கோவை கலவரத்தின் போது 19 அப்பாவி முஸ்லிம்களை, சங்பரிவார வெறியர்கள் அரசின் காவல்துறையும் இணைந்து கொன்று குவித்து பிணமாக்கியது தனிவிஷயம்.


அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 19 அப்பாவி முஸ்லிம் குடும்பங்களையோ, கலவரத்தில் கோடிக்கணக்கான தங்கள் சொத்து சுகங்களை இழந்த முஸ்லிம் மக்களையோ கண்டுகொள்ளாமல், முஸ்லிம்கள் குண்டு வைத்தார்கள் என முதியவர்கள், நோயாளிகள், பள்ளிமாணவர்கள், தெருக்கடைக்கு டீ குடிக்கப்போனவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை விசாரணைக் கைதிகளாக கோவை சிறையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வாட்டி வதைத்தவர்தான் இந்த முத்தமிழ் அறிஞர் முதல்வர் கருணாநிதி. அதில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்நாளில் 11 வருடங்களை சிறைகளிலேயே இன்றும் தொலைத்துக் கொண்டு இருப்பதை நாடே அறியும். தீவிரவாதிகள் என்ற அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு நிம்மதி இழந்து நிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று சிறைகளில் வைத்து பாதுகாக்கின்றாரா கருணாநிதி? இதற்குத்தான் தன்னை முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று சொன்னாரா? எந்த அரசியல் கட்சிகளாலும், தலைவர்களாலும், முஸ்லிம் சமுதாயத்திற்கு பாதுகாப்பில்லை. ஏன் அந்த தலைவர்கள் கூட அடுத்தவர்களின் பாதுகாப்பில்தான் உள்ளனர்.


எனவே முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு படைத்த அல்லாஹ் போதுமானவன்.


இதற்கிடையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் விதமாக முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மற்றுமொரு துரோகத்தைச் செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 7 வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் சுமார் 1405 பேரை தமிழகச் சிறைகளிலிருந்து விடுவித்துள்ளார்.


குற்றவாளிகள் என்று சிறையில் அடைக்கப்பட்டோர் திருந்தி வாழ்வதற்காக வாய்ப்பளித்து அவர்களை விடுவிக்கும் அதிகாரம் மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு, அதை நாம் மறுக்க வில்லை. முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுவித்த 1405 ஆயுட்கைதிகள் செய்த குற்றங்களையும், அவர்கள் கழித்த தண்டனைக் காலங்களையும் ஒப்பிடும்போது, தமிழகச் சிறைகளில் 11 வருடங்களாக வாடும், கோவை அப்பாவி சிறைவாசிகள் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அரசு விடுதலை செய்வதற்கு முழு தகுதியானவர்கள். விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளைவிட தமிழக அரசு விடுவிப்பதற்கு அதிகவாய்ப்புகளும், காரணங்களுமுள்ள கோவை குண்டுவெடிப்பு நிகழ்வில் பொய் வழக்கு போடப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் தமிழக முதல்வர் கருணாநிதி புறக்கணித்தது ஏன்? அவர்களை அலட்சியம் செய்தது ஏன்? விடுதலை செய்யப்பட்ட 1405 கைதிகளில் பெரும்பான்மையோர் முஸ்லிம் அல்லாதவர்களே.



விடுதலைசெய்யப்பட்டவர்கள்



  • அவர்களில் பட்டப் பகலில் பிறரை வெட்டிக்கொலை செய்த கொலைகாரர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சியோர் என்று பலரும் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தை அதிரச்செய்த மதுரை பெண் கவுன்ஸிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதாகி சிறைசென்றவர்களும் இதில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் அடியாட்களான இவர்களை, உச்சநீதிமன்றம் சமுதாய மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று அறிவித்தது. சென்னை உயர்நீதிமன்றம் அந்த குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது.



இத்தகைய கொடும் குற்றவாளிகளெல்லாம் விடுதலை செய்யப்படும் போது, தாங்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றாலும், அந்த தண்டனை காலத்தைவிட அதிகமான காலங்கள் (11 வருடங்கள்) சிறையில் வாடி வதங்கிவிட்ட முஸ்லிம் சிறைவாசிகளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டது வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது.


இதற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அது இவ்வருடம் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படவேண்டிய கைதிகளின் பட்டியலை தமிழக அரசு அனைத்து சிறைகளிலும் கடந்த ஆகஸ்ட் மாதமே எடுக்கத் தொடங்கியது. அப்போதுதான் தினமலர் போன்ற துவேஷப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தவ்பீக் என்பவரை சர்வதேச தீவிரவாதியாகக் காட்டி தொடர்ந்து பதட்டமான செய்திகளை வெளியிட்டு அரசுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தன. ஒருவேளை அதற்காகத்தான் தமிழக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை இந்த பட்டியலில் இணைக்க தயக்கம் காட்டியிருக்கிறதோ என்று சந்தேகிக்கிறோம்.


எனினும் தினமலர் போன்ற பார்ப்பன வெறிபத்திரிக்கையின் அரசுவிரோதப் போக்கை கண்டு அஞ்சாமல், தமிழக முஸ்லிம் சிறைவாசிகளின் மறுவாழ்வை கவனத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்ட 1405 நபர்களோடு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 11 வருடங்கள் சிறையிலுள்ள அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

  • கலைஞர் அவர்களே! வழக்கம்போல முஸ்லிம் சமுதாயத்திற்கு இழைக்கப்டும் அநீதிகளுக்கெதிரான இந்த நீதியின் குரலை செவிமடுக்காமல் அலட்சியம் செய்தால், வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தங்களுக்கு பாடம்புகட்டி தக்க பரிசளிப்பதைத் தவிர எம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வேறு வழியில்லை என்பதை முன்னறிவிப்பாக சொல்லிக்கொள்கிறோம்.

தமிழக முதல்வர் அவர்களே! நீங்கள் தமிழகத்திலுள்ள அனைத்து மதுபாணக்கடைகளையும் இழுத்து மூடிவிட்டு, தமிழகச் சிறைகளில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்துவிட்டு பின்னர் நான் முஸ்லீம்களின் தோழன்! முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று கூறுங்கள். தமிழக முதல்வர் செய்வாரா? குறிப்பு:- இங்கு தமிழக முதல்வரை பற்றிய சில உண்மைகளை எழுதியுள்ளதால் மற்ற அரசியல்வாதிகள் அனைவரும் உத்தமர்கள் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் துரோகம் செய்தவர்களே!. நாம் பார்த்த வரையில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

1 comment:

mmmsdk said...

This article is nice /can be posted in TMMK official site?