.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, September 15, 2008

டெல்லி குண்டுவெடிப்பு; தமுமுக கண்டனம்

டெல்லி குண்டுவெடிப்பு; தமுமுக கண்டனம்
Source: http://www.tmmk.in/news/999679.htm

குண்டுவெடிப்புகளைத்தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சரும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரும் பதவி நீக்கப்படட தமுமுக கோரிக்கை
குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை
நமது நாட்டின் தலைநகரம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற மிக மோசமான தொடர் குண்டு வெடிப்புகளைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் குண்டுவெடிப்பில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் விரைவில் குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பத் தமுமுக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றது.



டெல்லியில் நேற்று மாலை பொதுமக்கள் திரளாகக் கூடும் இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் நிச்சயமாக காட்டுமிராண்டிகளேயாவார்கள். கடுகளவு மனிதநேயமும் இல்லாமல் அப்பாவி மக்களைக் கொல்லும் நோக்கில் இந்தப் படுபாதக செயல்களைச் செய்த உண்மை குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.


தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு நகரங்களில் டெல்லியில் நடைபெற்றது போன்ற குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளன. இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்கள் என்று கூறிச் சிலர் கைதுச் செய்யப்படுகிறார்கள். இருப்பினும் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதினால் தான் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. குண்டுவெடிப்புகள் தொடர்பாக அனுப்பபடும் மின்னஞ்சல்களின் அடிப்படையில் யூகங்கள் வெளியாகி விசாரணைகள் நடைபெறுகின்றன. அதிலும் கூட அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு நடைபெற்ற போது மின்னஞ்சல் நவிமும்பையில் அபிசேக் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இருந்து கென்னட் ஹேவுட் என்ற அமெரிக்கர் ஒருவரால் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அமெரிக்கர் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளில் உண்மை குற்றவாளிகள் கைதுச் செய்யப்படாமல் அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதே தொடர் அசம்பாவிதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த நிலை ஏற்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணனும் தான் காரணமாக உள்ளார்கள். இந்த இருவரும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனப் பிரதமரைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழகத்தில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவைத்தவர்கள் முஸ்லிம் அமைப்பினர் அல்ல. மராட்டிய மாநிலம் நான்டெட்டில் இருமுறை குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது பஜ்ரங் தள அமைப்பினர் இறந்துள்ளனர். கடந்த ஜுலை மாதம் தானே, பான்வெல், வார்சி போன்ற ஊர்களில் பொது இடங்களில் குண்டு வெடித்த போது மாராட்டிய காவல்துறை சனாதன் சான்ஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுச் செய்துள்ளது. சமீபத்தில் கான்பூரில் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்து பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இருவர் உயிர் இழந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் அதில் முழுப் பலனையும் பெறுவதற்காகப் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சக்திகள் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளை ஏன் நடத்தியிருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும். குஜராத் முதல்வர் மோடி முன்கூட்டியே டெல்லியில் குண்டுவெடிக்கும் என்று தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். இதே நேரத்தில் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைதுச்செய்யப்பட்டோரை விசாரித்த போது டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக அவர்களிடமிருந்து எந்தவொரு குறிப்பும் கிடைக்கவில்லை என்று அஹ்மதாபாத் காவல் இணை ஆணையாளர் ஆசிஸ் பாட்டியா குறிப்பிட்டுள்ளார். எனவே டெல்லி குண்டுவெடிப்புக் குறித்து ஒரு தலைபட்சமாக விசாரிக்காமல் பல்வேறு கோணங்களில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விசாரித்து உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

No comments: