.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, July 22, 2010

கொலைக் களங்களாக மாறிவரும் பள்ளிக்கூடங்கள்!

அபினாவுக்கு 10 வயது. அப்பாவி கிராமத்துப் பிள்ளை. கூலி வேலை பார்க்கும் அடிமட்டத் தொழிலாளிக் குடும்பத்தில் இருந்து முதல் தலை முறையாகப் பள்ளிக்கூடம் போகும் சிறுமி. கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் அருகே தோட்டம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவியான அபினா, வழக்கம்போல அன்றைக்கும் பள்ளிக்குப் போனாள்.

தமிழ்ப் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியை, 'ஊஞ்சல்' என்ற வார்த்தையைக் கரும்பலகையில் எழுதிப்போட்டு, அதை ஒவ்வொருவராக வாசிக்கச் சொன்னார். எல்லோரும் வாசித்தனர். இப்போது அபினாவின் முறை. அவளால் ஊஞ்சல் என்று சொல்ல முடியவில்லை. குரல் குழறியது. 'ஊஞ்ச்சல்' எனத் தவறாக உச்சரித்தாள். கோபம் அடைந்த ஆசிரியை திரும்பத் திரும்ப 'ஊஞ்சல்' என்று உச்சரிக்கச் சொன்னார். ஏனோ, அபினாவால் முடியவே இல்லை. தவறாகவே உச்சரித்தாள்.

இதனால் கோபம் அடைந்த ஆசிரியை, "ஊஞ்சல்னு எழுதிப் போட்டதைக்கூட வாசிக்கத் தெரியலை. உனக்கு எல்லாம் எதுக்கு அஞ்சாங்கிளாஸ்? போய் ஒண்ணாங்கிளாஸ்ல படி!"என்றிருக்கிறார் கடுப்பாக.

சக மாணவ, மாணவிகள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். தமிழ் வகுப்பு முற்றுப் பெற்றது. ஆனால், அபினாவின் மன வேதனைக்கு முற்றுப்புள்ளி விழ வில்லை. அன்று முழுவதும் வகுப்பறையில் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். வீட்டுக்குப் போனபிறகும் வகுப்பறையில் நிகழ்ந்த அவமானம் அவள் மனதைப் பாரமாக அழுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நொடியில் திடீரென முடிவு எடுத்து கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டாள்.

உடம்பை தீ சுட்டுப் பொசுக்க, அவள் பெருங்குரலில் அலறினாள். ஆனால், அபினாவின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. 10 வயது பிஞ்சுப் பெண்ணின் தேகம் முழுக்கக் கரிக்கட்டையாகத் தீய்ந்து எரிந்து சரிந்தது.

இந்தக் கொடூரமான கல்வி முறை அபினாவின் உயிரைப் பலியெடுத்தது. விஷயம் அறிந்து அபினாவின் ஊராகிய நத்தம் பட்டு காலனி மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். பள்ளிக்கூடம் சென்று நியாயம் கேட்டார்கள். காவலர்களும் ஓடிவந்து விசாரணை நடத்தினார்கள். முதலில் 'அந்த டீச்சர் சொன்னதுதான் காரணம்' என்றது போலீஸ். ஆனால், வழக்குப் பதிவு மட்டும் வழக்கமான பதிவாகவே இருந்தது... 'தீராத வயிற்று வலி'யின் காரணமாக அபினா தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டதாக!

பள்ளிக்கூடம் 'கொள்ளி'க்கூடமாகும் கொடுமை புதிது இல்லை. அண்மையில் வேலூர், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில், கீர்த்தனா என்ற மாணவி இறந்துபோனாள். ஸ்பெஷல் கிளாஸுக் குச் செல்லவில்லை என்று பல மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துக் கொடுமைப்படுத்தப் பட்டதால்தான் அவள் செத்தாள் என்று புகார் எழுந்தது. மணப்பாறை புனித மரியன்னை துவக்கப் பள்ளியில் ஸ்ரீரோகிணி என்ற மாணவி இறந்ததற்குக் காரணம் ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததுதான் என்றும், அதை மறைக்க ஸ்ரீரோகிணியின் உடலை தண்ணீர்த் தொட்டியில் வீசிவிட்டனர் என்றும் கடும் புகார்கள் கிளம்பின.

இப்படி படிக்கச் செல்லும் பிஞ்சுகளைச் சித்ரவதை செய்து கொலை செய்யும் கொலைக் களங்களாக பள்ளிக்கூடங்கள் இருந்தால் எந்த நம்பிக்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது?

No comments: