.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label பள்ளிக் கல்வித்துறை. Show all posts
Showing posts with label பள்ளிக் கல்வித்துறை. Show all posts

Thursday, July 22, 2010

கொலைக் களங்களாக மாறிவரும் பள்ளிக்கூடங்கள்!

அபினாவுக்கு 10 வயது. அப்பாவி கிராமத்துப் பிள்ளை. கூலி வேலை பார்க்கும் அடிமட்டத் தொழிலாளிக் குடும்பத்தில் இருந்து முதல் தலை முறையாகப் பள்ளிக்கூடம் போகும் சிறுமி. கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் அருகே தோட்டம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவியான அபினா, வழக்கம்போல அன்றைக்கும் பள்ளிக்குப் போனாள்.

தமிழ்ப் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியை, 'ஊஞ்சல்' என்ற வார்த்தையைக் கரும்பலகையில் எழுதிப்போட்டு, அதை ஒவ்வொருவராக வாசிக்கச் சொன்னார். எல்லோரும் வாசித்தனர். இப்போது அபினாவின் முறை. அவளால் ஊஞ்சல் என்று சொல்ல முடியவில்லை. குரல் குழறியது. 'ஊஞ்ச்சல்' எனத் தவறாக உச்சரித்தாள். கோபம் அடைந்த ஆசிரியை திரும்பத் திரும்ப 'ஊஞ்சல்' என்று உச்சரிக்கச் சொன்னார். ஏனோ, அபினாவால் முடியவே இல்லை. தவறாகவே உச்சரித்தாள்.

இதனால் கோபம் அடைந்த ஆசிரியை, "ஊஞ்சல்னு எழுதிப் போட்டதைக்கூட வாசிக்கத் தெரியலை. உனக்கு எல்லாம் எதுக்கு அஞ்சாங்கிளாஸ்? போய் ஒண்ணாங்கிளாஸ்ல படி!"என்றிருக்கிறார் கடுப்பாக.

சக மாணவ, மாணவிகள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். தமிழ் வகுப்பு முற்றுப் பெற்றது. ஆனால், அபினாவின் மன வேதனைக்கு முற்றுப்புள்ளி விழ வில்லை. அன்று முழுவதும் வகுப்பறையில் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். வீட்டுக்குப் போனபிறகும் வகுப்பறையில் நிகழ்ந்த அவமானம் அவள் மனதைப் பாரமாக அழுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நொடியில் திடீரென முடிவு எடுத்து கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டாள்.

உடம்பை தீ சுட்டுப் பொசுக்க, அவள் பெருங்குரலில் அலறினாள். ஆனால், அபினாவின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. 10 வயது பிஞ்சுப் பெண்ணின் தேகம் முழுக்கக் கரிக்கட்டையாகத் தீய்ந்து எரிந்து சரிந்தது.

இந்தக் கொடூரமான கல்வி முறை அபினாவின் உயிரைப் பலியெடுத்தது. விஷயம் அறிந்து அபினாவின் ஊராகிய நத்தம் பட்டு காலனி மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். பள்ளிக்கூடம் சென்று நியாயம் கேட்டார்கள். காவலர்களும் ஓடிவந்து விசாரணை நடத்தினார்கள். முதலில் 'அந்த டீச்சர் சொன்னதுதான் காரணம்' என்றது போலீஸ். ஆனால், வழக்குப் பதிவு மட்டும் வழக்கமான பதிவாகவே இருந்தது... 'தீராத வயிற்று வலி'யின் காரணமாக அபினா தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டதாக!

பள்ளிக்கூடம் 'கொள்ளி'க்கூடமாகும் கொடுமை புதிது இல்லை. அண்மையில் வேலூர், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில், கீர்த்தனா என்ற மாணவி இறந்துபோனாள். ஸ்பெஷல் கிளாஸுக் குச் செல்லவில்லை என்று பல மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துக் கொடுமைப்படுத்தப் பட்டதால்தான் அவள் செத்தாள் என்று புகார் எழுந்தது. மணப்பாறை புனித மரியன்னை துவக்கப் பள்ளியில் ஸ்ரீரோகிணி என்ற மாணவி இறந்ததற்குக் காரணம் ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததுதான் என்றும், அதை மறைக்க ஸ்ரீரோகிணியின் உடலை தண்ணீர்த் தொட்டியில் வீசிவிட்டனர் என்றும் கடும் புகார்கள் கிளம்பின.

இப்படி படிக்கச் செல்லும் பிஞ்சுகளைச் சித்ரவதை செய்து கொலை செய்யும் கொலைக் களங்களாக பள்ளிக்கூடங்கள் இருந்தால் எந்த நம்பிக்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது?

Monday, July 20, 2009

பள்ளிக் கல்வித்துறையில் 12,000 ஆசிரியர்கள் நியமனம் எப்போது?

பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, விரைவில் துவங்க உள்ளது. இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடித்துவிட்டதால், அந்தப் பட்டியலில் இருந்தே, தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கடந்த 15ம் தேதி சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "பள்ளிக் கல்வி இயக்ககத்தில் 6,469 ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 5,166 ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் 165 விரிவுரையாளர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் 258 ஆசிரியர்கள் என, 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில் நியமனம் செய்யப்படுவர்' என அறிவித்தார்.


இதையடுத்து, துறை வாரியாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் துவக்கியுள்ளது. ஏற்கனவே, ஒவ்வொரு துறை வாரியாக புதிய ஆசிரியர்களை தேர்வு செய்தபோது, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் வேலை வாய்ப்பு இயக்குனரகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியலைப் பெற்று, அதில் முதல் நிலையில் இருந்தவர்களைத் தேர்வு செய்தது. ஐந்து பேரில் ஒருவர் வேலை வாய்ப்பு பெற்றுவிட்ட நிலையில், பதிவு மூப்பு அடிப்படையில் மீதம் நான்கு பேர் இருக்கின்றனர். இவர்களில் இருந்து, பதிவு மூப்புப்படி ஒருவரை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால், தேர்வுப் பணிகள் விரைவாக முடியும். இப்படி, துறை வாரியாக தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பெயர்ப் பட்டியலை, அந்தந்த துறைகளிடம் ஒப்படைத்துவிட்டால், அதன்பின் பணி நியமன கவுன்சிலிங் நடக்கும்.


தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஓரிரு நாளில் துவக்கி, ஆகஸ்ட் 20ம் தேதிக்குள், தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஒப்படைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் 10ம் தேதிக்குள்ளாகவோ புதிய ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு அனைத்து துறைகளும் திட்டமிட்டுள்ளன. கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ளன. செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடும். அதற்கு முன்னதாக புதிய ஆசிரியர்களை நியமனம் செய்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும்.