.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, July 23, 2010

மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம். மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை!

வை வெறுமனே உள்ள செய்திகள் அல்ல;

மனதின் ஆன்மாவைத் தொட்டு நியாயம் கேட்கும் நீதியின் குரல்!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம். அன்று திங்கள்கிழமை. மனுநீதி நாள் முகாம். மக்கள் பரபரப்புடன் தங்கள் மனுக்களை அளித்துக்கொண்டு இருந்தனர். அந்த வரிசையில் ஒரு சிறுவன் கையில் மனுவுடன் தன்னந்தனியாக நின்றுகொண்டு இருக்கிறான். கலெக்டர் சகாயத்தின் கவனம் முழுக்க அந்தச் சிறுவன் மீதே இருந்தது.

"நான் அந்தப் பையனையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அவன் முறை வந்ததும் மனுவை என் கையில் தந்தான். கிறுக்கலான கையெழுத்து அதுல. அதை வாங்கி வெச்சுக்கிட்டு, 'என்னப்பா பிரச்னை'ன்னு கேட்டதும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். 'என் பேர் நவீன். நான் கபிலர் மலையில இருந்து வர்றேன். ஆறாங்கிளாஸ் படிக்கிறேன். எங்க வீட்டுல நான், அம்மா, அப்பா, ரெண்டு தங்கச்சி. வீட்டுல எங்க அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. 10 நாளைக்கு முன்னாடி எங்க அம்மா பக்கத்து வீட்டு ஆள்கூட ஓடிப்போயிடுச்சு. அதுல இருந்து எங்க அப்பா என்னைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொல்லி, தங்கச்சிகளுக்கு சமைச்சுப் போடச் சொல்லிட்டாரு. எனக்குப் படிச்சுப் பெரிய போலீஸ் ஆகணும்னு ஆசை. எப்படியாச்சும் எங்க அம்மாவைக் கண்டுபிடிச்சு எங்க அப்பாகூடச் சேர்த்துவெச்சுடுங்க சார்'னு அழுதான்.

ஒரு சின்னப் பையன்கிட்ட இருந்து அப்படி ஒரு புகாரை எதிர்பார்க்கவே இல்லை. அவனைச் சமாதானப்படுத்தி மதிய சாப்பாட்டுக்கு என்கூட வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போனேன். 'கவலைப் படாதே, உங்க அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நிச்சயம் போலீஸ் ஆகலாம்'னு நானும் என் மனைவியும் அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவெச்சோம். உடனே, சமூக நலத் துறையில சொல்லி நவீனின் அம்மாவைத் தேடுற முயற்சிகளை முடுக்கிவிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு செய்தித்தாளைப் பார்த்தா... அதிர்ச்சி! 'மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம். மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை'ன்னு செய்தி. கீழே தங்கச்சிகளோடு நவீன் இருக்குற போட்டோ! 10 வயசுப் பையனுக்குப் பிரச்னையைத் தீர்க்க கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்கணும்னு தெரிஞ்சிருக்கு. ஆனா, அவனோட அப்பாவுக்கு? நாலஞ்சு நாள் எனக்குத் தூக்கமே புடிக்கலை. அந்தக் குழந்தைங்க முகத்தைப் பார்த்தா யாருக்காச்சும் கொல்ல மனசு வருமா? அதுவும் விஷம் கொடுத்துக் கொன்னுட்டு, தூக்குல வேற தொங்கவிட்டு இருக்கான். 'நான் போலீஸ் ஆகணும் சார்'னு சொன்ன நவீனோட வார்த்தைகள் இப்பவும் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு!"

நன்றி:விகடன்

No comments: