தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை மார்க்க அரங்கம், சமுதாய அரங்கம் - அரசியல் அரங்கம் என பிரிவுகளாக நடைப்பெற்றது தலைமையுரையாற்றி பேசிய தமுமுக மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக விளங்கும் தமுமுக பணிகள் இன்னும் சிறப்பாக நடைப்பெற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து வரவேற்புரையாற்றிய சகோ. லால்பேட்டை அமானுல்லாஹ் தனது உரையில், வெளிநாட்டு வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்றில்லாமல், சமுதாயத்திற்கான தேவைகளில் ஒவ்வொருவர்களின் பங்களிப்பினையும் தனது உதவும் கரங்களை கொண்டு அழுத்தமாக நல்கி வரும் இயக்கம் தமுமுக தான் என்று குறிப்பிட்டார்.
மார்க்க அரங்கத்தில் முதல் நிகழ்ச்சியாக, “தியாகம் – ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய மவ்லவி. அப்துல் ஹக் ஜமாலி, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான், தியாகம் என்பதே இங்கே சுயநலன் சார்ந்து தான் இருக்கிறது, இந்த உலகில் செய்யப்படும் தியாகங்கள் என்ற பெயரில் செய்யப்படும் தியாகங்கள் எல்லாமே தியாகம் அல்ல. தியாகம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்றார்.
தொடர்ந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் – சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமுமுக அப்கேக் நகர பொருளாளர் சகோ. அப்கேக் அப்துல் மூமின், “இஸ்லாமியர்களிடையே தொழுகையில் இருக்கும் சமத்துவம், மற்ற விஷயங்களில் இல்லாமல் போனது ஏன்?” என்று வினா எழுப்பி அனைவர்களின் சிந்தனையும் தூண்டினார். மேலும் இஸ்லாம் வலியுறுத்தும் கொள்கைகள் எல்லாம் பின்பற்றுவதற்காக தான், புறக்கணிப்பதற்காக அல்ல என்றும் வலியுறுத்தினார்.
மார்க்க அரங்கின் நிறைவுப் பகுதியாக ஒளுச் செய்வது எப்படி என்று செயல் விளக்கப் பயிற்சியினை தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ செய்து காட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களும் ஒளுச் செய்வது குறித்து சிறப்பாக செய்து காட்டினர்.
ஜும்ஆ பேருரை நிகழ்த்திய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி, மறுமையில் சுவனத்தில் நுழைவது மட்டுமே வெற்றி, சுவனத்தில் நுழைபவர்களே வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவுச் செய்தார்.
உணவு இடைவேளைக்கு பிறகு கூடிய இரண்டாம் அமர்வில் சிறப்புரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் சகோ.அப்கேக் அப்துல் அலீம், தனது உரையில், “ இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையே குர்ஆன் – ஹதீஸ் தான். இன்று தமிழகத்தில் சமுதாய மக்களிடையே இருக்கும், பாதுகாப்பு உணர்வு, தமுமுக துவங்கப்படுவதற்கு முன் இல்லை என்றார்.
நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்காக போராட்டம், மறியல், தர்ணா போன்ற அறவழி போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை, ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டால் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி, காவல்துறை - அரசு அதிகாரிகளை அணுகுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கூட மக்கள் தெரிந்திராமல் இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ், தமுமுக-வின் வருகைக்கு பிறகே மக்கள் இதுப்போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டனர்.
வாழ்வில் தன்னுடைய வறுமையை எதிர்த்து போராடும் அதேவேளையில் சமுதாயத்திற்காக தமிழ்நாட்டில் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கும் போராளிகளின் உழைப்பினை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் பெரிதும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
நம் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநலவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் எல்லாம் நம் சொந்தம் தான். அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார். வருங்கால தலைமுறை நிம்மதியாக இருக்க தமுமுக-வின் செயல்பாடுகளே காரணம் என்று குறிப்பிட்டு , அனைவர்களின் சிந்தனையையும் தூண்டி உரையினை நிறைவுச் செய்தார்.
“அரசியல் அரங்கில் நிறைவுரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி,. ம.ம.க-வின் ஒவ்வொரு அசைவும் மற்ற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.
கல்வி கற்பதற்கு இஸ்லாமியர்கள் லாயக்கு இல்லை என்று ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்டிருந்த தப்பான கற்பிதம் நெல்லை மாணவியின் ஜாஸ்மின் செய்த சாதனை மூலம் நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் நம்மிடையே வருவதற்கு நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகள் உருவாக வேண்டும், அதற்காக தமுமுக கடுமையாக உழைக்கிறது.
தமுமுக-வின் செய்தித்தாளான மக்கள் உரிமை விற்பனையில் தொய்வு ஏற்பட அனுமதிக்க கூடாது, விற்பனையை அதிகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான இயக்கம் என்று இல்லாமல் சமூகம் தாண்டிய சேவைகளை புரிவதில் ம.ம.க. முன்ணணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.
இறுதியாக சுபஹான் நன்றியுரையாற்றினார். பொதுக்குழு கூட்ட அரங்க ஏற்பாடுகளை குன்னம் ராஜ் முஹம்மது, ஆயங்குடி அப்துஸ் ஸலாம் ஆகியோரும், உணவு ஏற்பாடுகளை கொள்ளிடம் அப்துல் ரஹ்மான், கந்தகுமாரன் அமானுல்லாஹ், இராஜகெம்பீரம் சிக்கந்தர், பாட்சா பின்னத்துர் முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment