போதைக்காக உயிரை பணயம் வைக்கும் பாம்புக்கடி பயங்கரம்!
விபரீத மரணங்களுக்கு முன் தடுத்துநிறுத்துமா தமிழகஅரசு?
`ஸ்..ஸ்... ஸ்...' சீற்றத்துடன் அந்தக் குட்டிப் பாம்பு நாக்கை நீட்டி உதட்டை முத்தமிடத் துடிக்கிறது... ஒவ்வொரு முறை சீறும் பொழுதும் விஷம் துளித் துளியாய், அரிசி போன்ற அதன் பற்களில் நுனியில் தேங்குகிறது.
நன்றி: குமுதம் 12/11/2008
பாம்பைக் கையில் பிடித்திருப்பவர் கொஞ்ச நேரம் அதன் போக்கில் வளைய, நெளிய விட்டுவிட்டு, சட்டென தன் இருவிரல்களுக்கிடையில் அதன் தலையை கிடுக்கிப்போல் இறுக்கிப் பிடிக்கிறார். பாம்பின் உடம்பும் வாலும் கைகளில் பின்னிப் பிணைய, கருநிற நாக்கு எதிரில் இருப்பவரின் உதட்டை மோப்பம் பிடிக்கிறது.
பாம்பைக் கையில் பிடித்திருப்பவர், ``பார்ட்டி... பைட்டுக்கு ரெடியா?'' என்று கேட்க, எதிரில் இருப்பவர் சில வினாடிகள் இமைக்காமல் அந்தப் பாம்பையே வெறிக்கப் பார்க்கிறார். பின் மெல்ல தன் கீழ் உதட்டை இடதுகையால் கீழ் நோக்கி இழுக்க, உட்புற உதட்டின் மென்மையான பகுதியில் சடக்கென ஒரு கடி. குட்டிப்பாம்பு குறி வைத்து அந்த இடத்தில் தன் பற்களை பதிய வைத்ததும் பார்த்துக்கொண்டிருந்த நமக்கு குப்பென வியர்த்தது.
கடிபட்டவர் கண்களை மூடி, சுவரோரம் கால்களை நீட்டி சாய்கிறார். முத்து முத்தாய் முகத்தில் வியர்வைத் துளிர்க்க, கைகளும் கால்களும் தளர்ந்து போகிறது. தலைக்கேறிய விஷம் மூளை நரம்புகளின் முடிச்சுகளை அறுத்தெறிய மரணத்திற்கு மிக நெருக்கத்தில் சென்ற இதயம், சில வினாடி நின்று பின் சீராகத் துடிக்கிறது... துவண்டு விழுந்த தலை கொஞ்சம் நிமிர்கிறது. நமக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
``எல்லாம் ரெண்டு நிமிஷத்துல சரியாகிடும்'' என்று பதட்டமில்லாமல் சொல்லிய பாம்புக்காரர், பக்கவாட்டில் துளைகள் போடப்பட்ட ஒரு டிஃபன் கேரியரில் அந்தப் பாம்பை விட்டார். ஒன்றரையடி நீளமே இருந்த அந்த விஷப்பாம்பு அதில் சுருண்டுப் படுத்துக்கொண்டது.அவர் சொன்னது மாதிரியே கடிபட்டவர் ஐந்து நிமிடங்களில் ஒரு பரவசமானப் புன்னகையுடன் நம்மை நிமிர்ந்து பார்த்தார். தள்ளாட்டமின்றி எழுந்து நின்றவர் பர்ஸில் இருந்து 2500 ரூபாயை எடுத்து பாம்புக்காரரிடம் கொடுக்க, பாம்பைக் கொண்டு வந்தவர் பணத்துடன் புறப்படத் தயாரானார். அதற்குள் வெளியில் மழை பிடிக்க, தயங்கி நின்ற அவரிடம் அப்பாவியாய் பேச்சைக் கொடுக்க, அவரும் சில தகவல்களைக் கக்கினார்.
``ச்சும்மா ஊசி குத்தினா மாதிரி இருக்கும். அப்புறம் தேள் கொட்டிய விறுவிறுப்பு ரெண்டு நிமிஷம் இருக்கும். உடம்பெல்லாம் கொஞ்ச நேரம் அனல் பறக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐஸ் கட்டி மாதிரி ஒரு குளுமை தெரியும்... அப்புறம் குஷிதான். ரெண்டு நாளைக்கு இந்தப் போதை தலைக்கேறி நிற்கும். ளி.ஞி (ஓவர்டோஸ்) ஆயிடுச்சின்னா மட்டும் உசிர் போயிடும்! பிரவுன் சுகர், ஹெராயின் இப்படி எந்த போதையும் ஏறாதவர்கள்தான் இந்த பைட்டுக்கு வருவாங்க.
நானும் போதைக்கு அடிமையாகி பைட் போட்டுக்க வந்தவன்தான். அப்புறம் இந்தப் பாம்புகளுக்குச் சொந்தக்காரர் ஆண்ட்ரூஸ்கிட்ட வேலைக்குச் சேர்ந்துட்டேன். அவர் வெளிநாட்டுக்காரர். அஞ்சாறு பாம்பு வச்சிருக்கிறார். ஒரு பாம்போட விலை 25000 ரூபாய்க்கு மேல... `பிளாக் மாம்பா'ன்னு இந்தப் பாம்பைச் சொல்வாரு. ஒவ்வொரு பாம்புக்கும் ஒரு கண்ணாடித் தொட்டி வச்சு வளர்க்கிறார். கறையான், பூரான், புழு, பூச்சி இதான் சாப்பாடு.
முதல்ல இந்தப் பாம்பை வெளிநாட்டுல இருந்துதான் கொண்டு வந்தாங்க. ஆனா இப்போ இங்குள்ள காட்டுல பிடிக்கறதா சொல்றாங்க. ஒரு பாம்பை வச்சு ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பைட் போடலாம். அவ்வளவுதான். ஒரு பாம்பு சாதாரணமா எட்டு வருஷம் இருக்கும். பைட் போட்டா ஒன்றரை வருஷத்துல செத்துரும். இது குட்டிப் பாம்பு, பெரிய பாம்பு எட்டடி இருக்கும். குட்டிப் பாம்பு விஷம்தான் ராஜபோதை. பெரிசு கடிச்சா மேல போயிட வேண்டியதுதான்'' என்று முட்டி வலிக்கு தைலம் விற்பவர் மாதிரி சரளமாகச் சொல்லிவிட்டு பைக்கில் பறந்துவிட்டார்.
சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் ஒதுக்குப்புறமான இடங்களில் வீடுகளை வாடகை எடுத்து கஸ்டமர்களை அங்கு வரச்சொல்லி இந்த ஸ்நேக் பைட் பரவலாக நடக்கிறதாம்.
நாம் பார்த்தபோது பைட் போட்ட விக்கி, இரண்டு வருஷமாக இதைச் செய்து வருகிறாராம். அவரைப் போல் இந்தப் பழக்கத்திற்கு அடிமையான அவரது நண்பர்கள் பதினான்கு பேர் இதனாலேயே இறந்தும்விட்டார்களாம். ``ஆனாலும் என்னால் விடமுடியவில்லை!'' என்று அப்பாவியாகச் சொல்லும் விக்கி பார்ப்பது டிரைவர் வேலைதானாம்.
``போதை வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் இப்படி பாம்பின் விஷத்தோடு விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது. செய்யவே கூடாது! சிறிது விஷம்கூட சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளையும் செயலிழக்கச் செய்யும் ஆபத்து உண்டு'' என்கிறார் பொது மருத்துவர் விஜயலட்சுமி.
சின்னதா சிகரெட்டில் ஆரம்பிக்கும் போதை கடைசியாக விஷத்தில் போய் நிற்கும் இந்த விபரீதத்தை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த மரணக் கடிக்காக பணக்கார வீட்டுப் பிள்ளைகள் முதல் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் வரை இளைஞர்கள் பலியாகிறார்கள் என்றதும் உறைந்த ரத்தம் ஓடவே இல்லை! .
இந்த பாம்புக்கடி போதையை உரிய முறையில் தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் விஷச்சாராய மரணத்திற்கு அடுத்து விஷகடி மரணங்கள் அதிகரிக்கும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.
பாம்புச்சரக்கு!
No comments:
Post a Comment