.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, May 10, 2007

பெண்களைப் புரட்டியெடுத்த போலீசார். இன்னொரு கொடியன்குளமான கூமாப்பட்டு.

பஞ்சபட்சி சாஸ்திரத்தின்படி, ஒரு கோழியால் கூமாப்பட்டி கிராமமே அல்லோலகல்லோலப்படப்போகிறது’ என்பதை எந்த ஜோதிடருமே சொல்லவில்லை போலிருக்கிறது. அங்கே ஒரு கோழியால் கோஷ்டிமோதல் உருவாகி, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து, தடியடியில் ஒரு பெண்ணும் பலியாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுபத்து மூன்று பேர் கைதாகி, ஏராளமான பெண்களும், குழந்தைகளும் போலீஸ் கையால் அடி, உதை வாங்கி... இத்தனைக்கும் காரணம் ஒரு கோழி.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோயில் என்ற ஊரிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் உள்வாங்கி இருக்கிறது கூமாப்பட்டி. தலித் மக்கள் கணிசமாக வாழும் கிராமம் இது. கடந்த 29_ம் தேதி இரவு ரமணி என்ற தலித் ஒருவர், மோட்டார் பைக்கில் அங்கு சென்றிருக்கிறார். அவரது பைக்கில் ஆனந்தம்மாள் என்பவரது கோழி அடிபட்டு இறந்து போனது. ஆனந்தம்மாளும், ரமணியும் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் என்று தலித்துகளின் இருவேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு வலுக்க, விரைவில் அது இரு தரப்பினருக்கும் இடையில் அடிதடி, சொத்து நாசம் என்ற அளவுக்குப் பரிணாம வளர்ச்சியடைந்தது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் இருதரப்பினரும் முட்டி மோதிக்கொள்ள முயன்றபோது, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தில் எழுபத்து மூன்று பேரைக் கைது செய்தது போலீஸ். அந்தக் கிராமத்தில் உள்ள தலித் ஆண்கள் எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட, அதன்பிறகு ஒருவழியாக அமைதி ஏற்பட்டிருக்குமே என்றால், அதுதான் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பின் பலியான ஒரு பெண், போலீஸ் தடியடியால் பலியானதாகப் புகார்கள் எழும்ப, இரவோடிரவாக போலீஸார் இந்தக் கிராமத்துக்குள் புகுந்து, பெண்களையும், குழந்தைகளையும், போட்டுப் புரட்டி எடுத்ததாக மற்றொரு புகாரும் கிளம்பியுள்ளது.

போலீஸ் தடியடியில் பலியானதாகக் கூறப்படும் அறுபது வயது லட்சுமியை, கடந்த 4_ம் தேதி நாம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே சந்தித்துப் பேசியிருந்தோம். நாம் போயிருந்தபோது அவரால் பேசவே முடியவில்லை. ‘‘அவரை போலீஸார் அடித்து லத்தியால் நெஞ்சில் குத்தினாங்க!’’ என்றார் அருகில் இருந்தவர். அன்றிரவே லட்சுமி இறந்து போனார் என்று கேள்விப்பட்டதும் நமக்கே அதிர்ச்சி.

இதையடுத்து கூமாப்பட்டி, அதன் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமங்களுக்கு நாம் சென்றோம். கிராமத்தின் நடுவே போலீஸ் வேன் நின்றது. ஆண்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே தென்பட்டது. லட்சுமியின் மரணத்தால் கிராமத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. நம்மிடம் பேசவே கிராமத்தவர்கள் பயந்தார்கள்.
இறந்து போன லட்சுமியின் மகள் பொன்மாடத்தி, மகன் மாடசாமி ஆகியோரிடம் பேசினோம்.

‘‘எங்க தம்பி முத்து மாடனை போலீஸார் அடிச்சு இழுத்துக்கிட்டுப் போகும்போது, கம்பு ஊன்றி நடக்கும் எங்க அம்மா அதைத் தடுக்கப் பார்த்திருக்காங்க. போலீஸார் எங்க அம்மாவைக் கீழே தள்ளி அடிச்சிருக்காங்க. சம்பவத்தன்று நாங்க ஊரில் இல்லை. எங்க அம்மா இறந்த பிறகுதான், அவங்க ஆஸ்பத்திரியில் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது!’’ என்றனர் அவர்கள் வேதனையுடன்.
அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவி செல்வி, நம்மிடம் பேச முன் வந்தார்.

‘‘பொங்கல் வைத்துச் சாமி கும்பிடுவது தொடர்பாக அன்றைக்கு ராத்திரி காலனியில் கூட்டம் போட்டிருந்தோம். அப்போது மடமடவென்று போலீஸார் வந்து எங்களை ரவுண்ட் கட்டினாங்க. ‘அரிவாளோடு போய் தகராறு பண்ணத்தானே கூட்டம் போடுறீங்க!’ என்று மிரட்டி எல்லோரையும் கைது செய்யப் போனாங்க.

பத்தாவது படிக்கும் என் மகன் பகத்சிங்கை போலீஸார் இழுத்துப் போன போது ‘அவன் படிக்கிற பிள்ளை,விட்டிருங்கய்யா’ என்று நான் கெஞ்சினேன். என்னை எட்டி இடுப்பில் உதைத்த போலீஸ் அதிகாரி ‘அடிங்கடா’ என்று உத்தரவிட்டார்.

போலீஸார் கம்பாலும், துப்பாக்கியைத் திருப்பியும் ஆம்பிளை, பொம்பிளை அத்தனை பேரையும் விரட்டி விரட்டி அடிச்சாங்க.
ஆம்பிளைகள் எல்லாம் காட்டுக்குள் ஓடி விட்டதால், போலீஸாரின் கோபம் பெண்கள் மீது திரும்பியது. பெண்களின் இடுப்புக்குக் கீழே யாரிடமும் காட்ட முடியாத இடத்தில் அடித்தனர்.

போலீஸார் அடித்ததில் ஒரு பெண்ணுக்கு மூன்று மாத கர்ப்பம் கலைந்து விட்டது. அதோடு ராத்திரியிலும் வீடு வீடாகப் புகுந்து தொந்தரவு செய்தாங்க. இதெல்லாம் ராத்திரி இரண்டு மணி வரை நடந்திச்சு. உயிருக்குப் பயந்து இந்த ஊரில் இருக்கிறோம். காட்டுக்கு ஓடிப் போன எங்க வீட்டுக்காரங்க எப்போது திரும்பி வருவாங்கன்னு தெரியலை’’ என்றார் செல்வி. அப்போது அங்கு வந்த சித்திரவடிவு என்பவர், தனது தொடையில் ஏற்பட்ட காயத்தைக் காண்பித்தார்.
போலீஸ் வழக்குப் போட்டு விடுமோ என்ற பயத்தில், அடி வாங்கிய பெண்களில் பலர் சிகிச்சைக்கே செல்லவில்லை. பத்துக்கு மேற்பட்டோர் மட்டும் துணிந்து விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். பல பெண்களை போலீஸார் மிரட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர விடாமல் செய்தது தனிக்கதை.

ஊருக்கு வெளியே நாம் சந்தித்த செல்வியின் கணவர் சடையன் ‘‘என் பையன் உள்பட ஒன்பது பையன்களை போலீஸார் பிடித்துப் போய் ஜெயிலில் அடைச்சிட்டாங்க’’ என்றார் கலக்கத்துடன்.
சமூகநீதி மாணவர் பேரவையின் மாநில அமைப்பாளரான சி. பாஸ்கரனிடம் பேசினோம்.

‘‘இது கொடியன்குளம் போல ஒரு மோசமான சம்பவம்!’’ என்று ஆரம்பித்தவர், ‘‘இரு தலித் பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது உண்மைதான். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அது ஓய்ந்து போய் விட்டது. இந்தப் பகுதி மக்கள் அரசு மற்றும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர்கள். ஆகவே, அவர்களைப் பழிதீர்க்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக போலீஸார் பயன்படுத்தி, இரவில் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள். மூடப்பட்டிருந்த வீட்டுக் கதவுகளை ஓங்கி உதைத்துத் திறந்து, அந்த இரவில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஒரு வயதுக் குழந்தை கர்ப்பிணிப்பெண் உள்பட பாரபட்சமில்லாமல் எல்லோருக்குமே அடி, உதை விழுந்திருக்கிறது. காயமடைந்த லட்சுமி இறந்துபோக, அவருடன் இருந்த அவரது மகனை சிறையில் போட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை நடத்திய போலீஸார் மீது அரசு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார் பாஸ்கரன் சூடாக.

இந்தப் பிரச்னையில் கைதானவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம்.
‘‘கூமாப்பட்டி தகராறு இரவு ஏழு மணிக்கே முடிந்து போன நிலையில், போலீஸார் பத்தரை மணிக்கு மேல் வந்து கிராமத்தைப் பந்தாடியிருக்கிறார்கள்.

கூமாப்பட்டி உள்பட மூன்று தலித் கிராமங்களில் முந்நூறு போலீஸார் புகுந்து பெண்களின் சேலைகளை உருவியும், மர்ம உறுப்புகளில் அடித்தும் காயப்படுத்தியுள்ளனர். ‘அப்பாவிகளான எங்களைக் கைது செய்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டிய முத்துலட்சுமி என்ற பெண்ணை உடனடியாகக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார் அவர்.

‘‘கூமாப்பட்டியில் நடந்த இருபிரிவினருக்கிடையேயான மோதலின்போது, அம்மச்சியாபுரத்தில் இருந்து சுமார் ஐம்பது பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்ததாகவும், அவர்கள் நடத்திய கல்வீச்சில் மூன்று போலீஸார் காயமடைந்ததாகவும், அதன்பிறகுதான் போலீஸார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு ரவுண்ட் சுட்டதாகவும் திருவில்லிபுத்தூர் தாசில்தார் பாலு என்பவர் கூறியதாக நாம் கேள்விப்பட்டோம்.

மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரிடம் பேசினோம்.
‘‘நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். லட்சுமி என்ற மூதாட்டி எப்படி இறந்தார் என்பது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்குப் பிறகே தெரியவரும்!’’ என்றார் அவர்.
லட்சுமியின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், கடந்த 6_ம் தேதி அந்த உடல் இருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணக்கிடங்குக்குத் திடீரென வந்தார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.

‘‘தலித் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட லேசான தகராறு முடிந்து போன நிலையில், அன்றிரவு போலீஸார் வீடு வீடாகப் புகுந்து சுமார் நூறு பெண்களின் மார்பகம், மர்ம உறுப்பு போன்றவற்றைத் தாக்கியுள்ளனர். லட்சுமியின் மரணத்தை, கொலை வழக்காகப் பதிவு செய்யவேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சம்பவம் நடந்து இத்தனை நாளாகியும் இன்னும் ஆர்.டி.ஓ. இந்தப் பக்கமே வரவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்தக் கட்டத்துக்கு அரசு எங்களைத் தள்ளிவிடக்கூடாது’’ என்றார் அவர்.

ஒரு கோழியால் ஏற்பட்ட தகராறில் மூன்று குக்கிராமங்கள் இப்படிக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பது பரிதாபம்தான்.
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்.

No comments: