.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, May 24, 2007

மாண்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் மீண்டார். மருத்துவர்களின் அலச்சியப்போக்கால் மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்புகள்!

மாண்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் மீண்டார்.
மருத்துவர்களின் அலச்சியப்போக்கால் மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்புகள்!

தேனி 24-05: இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர்.

உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர்.
அவரது 'உடல்' ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்திருந்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் 'உடல்' தரப்படும் என டாக்டர்கள் கூறினர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் சாந்தம்பாறையைச் சேர்ந்த ஆண்டவர் என்ற பெயர் கொண்ட இன்னொரு நபரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இந்த நிலையில், கூட்டப்பன்பேரி ஆண்டவரின் 'உடலை' ஊழியர்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மயக்கத்தில் இருந்த ஆண்டவர் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
பின்னர் டாக்டர்கள் வந்து பார்த்து ஆண்டவர் நலமடைந்து விட்டதை உறுதி செய்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரிலும் மதுரையிலும் நடந்த இருவேறு அறுவை சிகிச்சைகளில் நோயாளிகள் இறந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டாக்டர்களை போலீஸ் கைது செய்தது. டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
விளைவு?

அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன. அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டாக்டர்கள் சங்கம் அறிவித்தது.

பிரச்னை வேறொன்றுமில்லை. தவறான சிகிச்சையினாலோ, கவனக்குறைவாலோ ஒரு நோயாளி இறந்துவிட்டால் அல்லது அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர் பொறுப்பாளியா, இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சில வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்குத் தந்திருக்கிறது.

தவறான சிகிச்சை அளித்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்தால், அதே பிரிவில் உள்ள மற்றொரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு அவரது பரிந்துரைக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, எந்தவித முன்விசாரணையும் இல்லாமல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் கைது செய்யப்படக் கூடாது. இவைதான் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்.

ஓர் அரசு அலுவலரோ, காவல்துறை அதிகாரியோ தங்களது கடமையை ஆற்றும்போது ஏற்படும் தவறுகளுக்காகத் தண்டனை பெறுவதில்லை. நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட முடிவு தவறாகிவிட்டது என்று கருதி மன்னிக்கப்படும். அதே அளவுகோல் டாக்டர்களுக்குப் பொருந்தாது. காரணம், இவர்களது கவனக்குறைவால் ஏற்பட இருப்பது பொருள் இழப்பல்ல, உயிரிழப்பு!

வரவர மருத்துவம் என்பது சேவை என்கிற எண்ணம் அகன்று வியாபாரமாகி விட்டது என்பதை மறுக்க முடியாது. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்து, மேலும் பல லட்சங்கள் செலவழித்துப் படித்து, டாக்டர்களாக வருபவர்களிடம் வியாபார நோக்கம் இருப்பதில் அதிசயம் இல்லை. ஆனால், தொழிலில் அக்கறையும், கவனமும் இல்லாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

மருத்துவர்களின், மருத்துவமனைகளின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகரின் அனுபவமும், முன்னாள் நடிகை விஜியின் அனுபவமும், நினைவில் நிழலாடுகின்றன. இதுபோல் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் வெளியில் வராமல் நோயாளிகளின் மரணத்துடன் மண்ணாகி விட்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம், மருத்துவப் படிப்பு விலைபேசப்படுவதுதான். திறமையை மட்டுமே அளவுகோலாக்கி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை விட்டுவிட்டு, நன்கொடையின் அடிப்படையில் மருத்துவர்களை உருவாக்க முற்பட்டால், இதுபோல அப்பாவி மக்கள் பலபேர் உயிர்ப்பலி கொடுக்கப்படுவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இனிமேல் எந்தவொரு டாக்டரிடம் சிகிச்சைக்குப் போகும்போதும், அவர் தகுதியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவரா, இல்லை நன்கொடை மூலம் இடம்பிடித்தவரா, நாற்பது மார்க் வாங்கி எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவரா இல்லை, எண்பது மார்க் வாங்கி டாக்டரானவரா என்றெல்லாம் பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாமல் இருந்தால் சரி.

சம்பந்தப்பட்ட டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்தது தவறாக இருக்கலாம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம், நோயாளிகளைப் பரிசோதிக்க மாட்டோம், அறுவைச் சிகிச்சைகள் நடைபெறாது என்று பொதுமக்கள் மீது தங்களது ஆத்திரத்தைத் திருப்புவது எந்த வகையில் நியாயம்? கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல், பொதுநலச் சிந்தனையில்லாமல் நடந்துகொள்ளும் டாக்டர்களின் செயல் கண்டனத்துக்குரியது. மருத்துவ நெறிகளுக்கு அப்பாற்பட்டது மட்டுமல்ல, மனிதாபிமானமே இல்லாததும்கூட.
இவ்வளவையும் சொல்லிவிட்டு இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். சிகிச்சையின்போது நோயாளி இறந்ததற்காகக் கைது செய்வதென்றால் அத்தனை டாக்டர்களுமே கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான். டாக்டர்கள் கடவுளல்ல, எல்லா நோயாளிகளையும் குணப்படுத்த. டாக்டர்கள் மீது வழக்குத் தொடர்வது என்பது வேறு, எந்தவித முன்விசாரணையும் இல்லாமல் கைது செய்வது என்பது வேறு.

போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் எந்த அளவுக்குக் கண்டனத்துக்கு உரியவர்களோ அதே அளவுக்குக் கண்டனத்துக்கு உரியவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினருமே!

No comments: